Chapter 07
நெய்யின் நறுமணம்.. வீடெங்கும் வியாபித்திருந்தது.. அறைக்குள் வைதேகியை அலங்கரித்துக் கொண்டிருந்த கௌசல்யா..
‘ம்ம்.. ‘h..” என்று நெய் வாசனையை மோப்பம் பிடித்தாள்..
‘இப்படி வாசனை பிடிக்கிறதுக்குப் பதிலா.. சமையல் கட்டுக்குப் போய்.. சூடா சொஜ்ஜியையும்.. பஜ்ஜியையும்.. உள்ளே தள்ள வேண்டியதுதானே..” வைதேகி.. தன் நெற்றிப் பொட்டைச் சரி செய்தபடி கூறினாள்..
‘போனேனே.. ஆனா..அம்மாதான் எதையும் தொட விடமாட்டேன்னு என்னை விரட்டிட்டா..” கௌசல்யா.. முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்..
‘போகுது விடு..அதுக வந்துட்டுப் போனதுக்கப்புறம்.. எல்லாம் நமக்குத்தானே..” வைதேகி தங்கையை சமாதானப் படுத்தினாள்..
‘எதுக..? என்று கேட்டபடி அறைக்குள் வந்தாள் ஆண்டாள்..
‘மாட்டிக்கிட்டேண்டி..” வைதேகி சன்னமான குரலில் முணுமுணுத்தாள்.
‘பொண்ணாப் பிறந்தவளுக்கு அடக்கம் இருக்கனும்.. அதிலும் முக்கியமா நாவடக்கம் இருக்கனும்.. இப்படி பெண் பார்க்க வருகிற மனுஷாளை ‘அதுக’ன்னு சொல்றியே.. இந்த வாய்தானே நாளைக்கு கலயாணம் பண்ணின்டு.. புக்காத்துக்கு போன பின்னாலும் இருக்கும்..?” ஆண்டாள் தாளிக்க ஆரம்பிக்க..
‘ஏம்மா.. எப்பவும் இருக்கிற கண் .. மூக்குத்தானே.. புக்காத்துக்கு போன பின்னாலும் இருக்கும்.. ஆம்படையான் ஆத்துக்குப் போனா புது வாயும்.. புது முகமும் வந்துருமா என்ன..?” என்று சந்தேகம் கேட்டாள் வைதேகி..
‘அதுதானே பார்த்தேன்.. என்னடா வாயடக்கி.. பெத்தவ சொல்றதை என் பெரிய பெண் கேட்கிறாளேன்னு ஆச்சரியப்பட்டுப் போனேன்டி வைதேகி.. ம்’Pம்.. நோக்கு என்ன சொன்னாலும் மண்டையில ஏறாது.. பிறந்தாத்துல எல்லாத்தையும் பொறுத்துக்குவோம்.. புக்காத்து மனுஷா.. இந்த வாய் நீளத்தை பொறுத்துக்குவாளோ..?” ஆண்டாள் வறுத்தெடுத்தலை அடுத்து ஆரம்பித்தாள்..
‘அவ.. விளையாட்டுக்குத்தானேம்மா சொன்னா..?” கௌசல்யா தமக்கைக்காக பரிந்து கொண்டு வந்தாள்..
‘விளையாட்டுப் பேச்சையெல்லாம் மூட்டை கட்டி பரணில் போட்டு விட்டு.. பெண்ணாய்.. லட்சணமா.. சபையில் வந்து நிற்கச் சொல்லு.. கலயாணமாகி ஆம்படையானோட ஆத்துக்குப் போனா.. புது முகம்.. புது வாய்தான் வரனும்.. அதுதான் பிறந்தாத்து மனுஷாளுக்கு இவ வாங்கிக் கொடுக்கிற கௌரவம்..” ஆண்டாள் பொரிந்து தள்ளி விட்டு உள்ளே விரைந்து விட்டாள்..
‘நீ ஒன்னும் மனதில் வைத்துக்காதேடி வைதேகி..” தமக்கையை சமாதானப் படுத்த முயன்றாள் கௌசல்யா..
அவளோ அழகு காட்டிச் சிரித்தாள்..
‘கல்யாண வயசில.. அம்மாவை மனதில் வைத்துகிட்டு நான் என்னடி பண்ணப் போறேன்..? பெண் பார்க்க வரப் போகிற மாப்பிள்ளையின் முகம் லட்சணமாய் இருந்ததுன்னு வைய்யி.. அந்த மூஞ்சியை மனதில் வைத்துக்கிட்டு அலைகிற வயசுடி எனக்கு..”
‘வைதேகி.. நீ இருக்கிறாயே.. ” கௌசல்யா வாய் பொத்தி அதிசயித்தாள்..
பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையின் பெயர் மனோஜாம்.. ஆள் பார்க்க அழகாகத்தான் இருந்தான்.. காபியோடு பிரசன்னமான வைதேகியை.. உச்சந்தலை முதல்.. உள்ளங்கால் வரை.. துகிலுரிக்கும் பார்வையை பார்த்து வைத்தான்.. அவனது பார்வை துளைக்கும் பார்வையாக இருக்க.. ஏனோ.. கௌசல்யாவிற்கு முதுகுத் தண்டு ஜில்லிட்டது..
ஆனால் வைதேகிக்கு மனோஜை பிடித்து விட்டது..
‘எனக்கென்னவோ.. அவரைப் பார்த்தால் பயமாய் இருக்குடி..” மனதை மறைக்காமல் சொன்னாள் கௌசல்யா..
“கல்யாணம் பண்ணிக்கப் போறது நீயா.. இல்லை நானா?” வைதேகி அதற்கும் விளையாட்டாகச் சிரித்தாள்..
‘இல்லைடி வைதேகி.. என் மனசில் ஏதோ பட்சி சொல்லுது..” கௌசல்யா விடாமல் மன்றாடினாள்..
‘அந்தப் பட்சிக்கு பட்சணம் போட்டு அடக்கி வை.. ஆள் பார்க்க ஜம்முன்னு இருக்கார்.. பேங்க் ஆபிஸர்.. நாத்தனார்.. மாமியாரெல்லாம் பார்க்க நல்ல டைப்பா.. இருக்கிறா.. நேக்கும் அவரை ரொம்பப் பிடிச்சுப் போச்சு.. இதில நீயேண்டி புகுந்து.. குட்டையைக் குழப்புற..?” வைதேகி அவள் வாயை அடைத்து விட்டாள்..
இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சக்திவேல் அமைதியாக இருந்தான்.. ஏதோ ஓர் யோசனையில் அவன் இருப்பது புலப்பட..
‘என்ன ஆச்சு..?” என்று புரியாமல் கேட்டாள் கௌசல்யா..
‘ஒன்றும் இல்லை.. உன் சர்டிபிகேட்டுகளை வாங்கிட்டாயா..? ” சக்திவேல் பேச்சை மாற்றினான்..
‘ஆச்சு.. அந்தக் காரணத்தைச் சொல்லித்தானே இன்னைக்கு வெளியே வர முடிஞ்சது.. இல்லைன்னா.. எனக்கு பைத்தியமே பிடிச்சிருக்கும்.. இந்த ஒரு மாசமாய் உங்களைத் தனியாப் பார்த்துப் பேச முடியாம நான் தவிச்ச தவிப்பிருக்கே.. அப்பப்பா.. அதை.. வார்த்தையில சொல்ல முடியாது.. “
கௌசல்யாவின் முகத்தில் அந்தத் தவிப்பு வெளிப்பட.. கனிவோடும் காதலோடும் அவளைப் பார்த்தான் சக்திவேல்..
‘தெரியும்..” என்றான் ஒற்றைச் சொல்லாய்..
‘எப்படித் தெரியும்?” அவள் புருவம் தூக்கினாள்..
‘நீ சொல்லித்தான் தெரியனுமா கௌசி.. அதே தவிப்பை அனுபவிக்கிற எனக்கு அது தெரியாதா..?”
அவள் கைவிரல்களோடு தன் விரல்களைப் பிணைத்துக் கொண்டே சக்திவேல் கூறினான்..
கௌசல்யா நகர்ந்து.. அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.. மயிலிறகு ஒன்று சக்திவேலின் மனம் வருடிச் சென்றது.. அவன் காதலுடன் தலைதிரும்பி.. தன் காதலியின் உச்சந்தலையில் முகம் புதைத்தான்.. அவளது கூந்தலின் வாசனையை நுகர்ந்தவனின் மனம் சிறகை விரித்தது..’
‘உச்சிதனை முகர்ந்தால் – கர்வம்
ஓங்கி வளருதடி.. ”
சக்திவேல் பாடியதைக் கேட்மதும்.. அவள் தலை சாய்த்தவண்ணம் அவளது விழிகளை உயர்த்தி அவன் முகம் பார்த்தாள்..
‘அதுதான் எப்பவும் இருக்குதே.. புதுசாய் வரணுமாக்கும்..?”
‘எதுடி..?”
‘கர்வம்.. அப்பப்பா.. என்ன தெனாவெட்டு.. என்னா திமிர்.. சரியான ஜல்லிக்கட்டுக் காளைதான் போங்கோ..”
அவளின் வார்த்தைகளில்.. அடங்காத அந்த ஜல்லிக் கட்டுக் காளையை தன் விழியசைவில் கட்டிப் போட்டிருக்கும் பெருமிதம் தெரிந்தது..
அவனுக்கும் அது புரிந்தது.. அவன் இன்னும் நெருக்கமாக அவள் பக்கம் நகர்ந்து அமர்ந்து.. அவளது தோளைச் சுற்றிக் கையை போட்டுக் கொண்டான்..
‘கௌசி..”
‘ம்ம்ம்..”
‘எங்க ஆபிஸில் வேலைக்கு சேர்ந்துடறியா..?”
அவனது கேள்வியில்.. அவள் மிரண்டு விழித்தாள்..
‘நீங்க பத்திரிக்கை ஆபிஸில்தானே வேலை பார்க்கிறேள்..?”
‘ஆமாம்.. அதுக்கென்ன..?”
‘பொம்மனாட்டிக்கு அந்த உத்தியோகம் சரிப்படுமோ..?”
‘என் பொண்டாட்டிக்கு சரிப்படும்..”
அவனது அழுத்தமான வார்த்தைகளில் அவளது விழிகளில் தெரிந்த மிரட்சி அகன்றது.. சம்மதமாய் தலை அசைத்தாள்..
சக்திவேல் எழுந்து கொண்டான்.. அவள் ஏமாற்றத்துடன் முகம் பார்த்தாள்..
‘அதுக்குள்ள கிளம்பனுமா..?”
‘ஆமாம்.. ஆறுமணிக்குள்ள எங்க ஆபிஸ் n’ட்டை பார்த்து விடனும்..”
‘உங்க ஆபிஸிற்கு போகிறோமா..?”
‘ஊம்.. உன் சர்டிபிகெட் கையில் இருக்கில்ல.. அப்புறம் எதுக்கு பயம்..?”
‘நான் முன்னே.. பின்னே.. வேலை கேட்டுப் போனதில்லை.. நேக்கென்னவோ பயமாயிருக்கு..”
‘நானிருக்கிறேன் கௌசி..”
‘அப்பா.. அம்மாவுக்கு சொல்ல வேண்டாமா..?”
‘வேலை கிடைத்ததும் சொல்லிக்க..”
‘அவங்களுக்குத் தெரியாமல் நான் உங்க ஆபிஸிற்கு வருவதா? எனக்கென்னமோ இது சரியாப் படலை..”
சக்திவேல் முகம் இருக.. வண்டியை விட்டுக் கீழே இறங்கினான்.. கல்லைப் போல் கடினமாகி விட்ட அவன் முகத்தை கலவரத்துடன் பார்த்தாள் கௌசல்யா..
‘என்மேல் கோபமா..?”
‘உன் மேல் கோபப்பட நான் யார்..? எனக்கென்ன உரிமையிருக்கு..?”
அவன் சொந்தமில்லாத குரலில் பேசியதும் கௌசல்யாவின் கண்களில் நீர் தளும்பி விட்டது..
‘ஏன் இப்படிப் பேசறேள்..?” நாத் தளுதளுக்க கேட்டாள்..
‘நீ வேற.. நான் வேறேன்னு ஆகிப் போனதுகப்புறம்.. வேற எப்படிப் பேசச் சொல்கிற..?”
‘ஏன் என்னைப் புரிஞ்சுக்க மாட்டேன்னு பிடிவாதமாய் பேசறேள்?”
சக்திவேல் அவள் முகத்தையே தீர்க்கமாகப் பார்த்தான்..
‘உன் அக்காவின் கல்யாணம் முடிவாகிவிட்டது.. இல்லியா..?”
‘ஆமாம்.. அதுக்கென்ன..?”
‘வேலையில்லாமல் ;நீ வீட்டிலிருந்தா..அடுத்து உடனடியா உனக்குப் மாப்பிளை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்களா.. மாட்டாங்களா..?”
அப்படியொன்று இருப்பது புலப்பட.. கௌசல்யா யோசித்தாள்.. அவள் முகத்தில் பிரகாசம் தெரிய..
‘ஏன் இப்படி நீங்க நினைக்கப் படாது..?” என்று கேட்டாள்..
‘எப்படி நினைக்கப் படாது..?” அவன் நிதானமாகக் கேட்டான். வழக்கமாக அவளது பேச்சு வழக்கை அவன் கேலி செய்தால் அவள் சிணுங்குவாள்.. ஆனால்.. இருந்த தீவிரத்தில் அவள் அவனது கேலிப் பேச்சை கவனிக்கவில்லை..
‘நமக்கு லைன் கிளியராகுதோல்லியோ..?”
சக்திவேலின் கண்கள் மின்னின…
‘என்னடி சொல்ற?”
‘ம்ம்.. என்கிட்டக் கேளுங்கோ.. இதை நான் சொல்லாமலேயே நீங்க உங்க மண்டையில் ஏத்தியிருக்கனும்..”
‘எல்லாம் ஆல்ரெடி.. மூளையில் பதிவாகிருச்சு..”
‘அப்புறமென்னவாம்.. எங்காத்தில.. எனக்கு மாப்பிளை தேடினா நீங்க வந்து பெண் கேளுங்கோ..”
‘உடனே உன்னைக் கொடுத்து விட்டுத்தான் .. உன் அப்பா மறு வேலை பார்ப்பாரா..?
சக்திவேலின் கேள்வியில்.. அவள் திகைத்தாள்’
‘அப்படியா சொல்கிறேள்..?” என்று குழந்தையாய் கேட்டாள்..
‘ஆமாம்.. கௌசி.. பேச்சு வழக்கே.. உனக்கும்.. எனக்குமிருக்கிற ஜாதி வித்தியாசத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்குதே.. உன் அப்பா எப்படி.. உன்னை எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பார்..?”
‘அதுக்காக.. நான் உங்களைவிட்டுவிட்டு.. வேறொருத்தனுக்கு கழுத்தை நீட்டுவேனா..? என்னப் பேச்சுப் பேசறேள்..? தெரிந்துதான் பேசறேளா..?” அவளின் வார்த்தைகள் கோபமாய் வெளிப்பட்டன..
அந்த நொடி.. மிகவும் அற்புதமான நொடியாக சக்திவேலுக்கு இருந்தது..
கௌசல்யாவின் வார்த்தைகளில் தொனித்த கோபத்தில்.. சக்திவேல்.. அவள் மேல் கொண்ட காதலின் வெற்றி தெரிந்தது..
உண்மையான காதல் ஆத்மார்த்தமானது.. அது காலம் முழுவதும்.. ஒருவனையே ஆராதிக்கும் தன்மை கொண்டது.. அந்த ஆராதனையை கௌசல்யா வெளிப்படுத்தினாள்..
தீயில் விரல் பட்டால்.. அதன் சூடு தாங்காமல் கை அணிச்சையாய் இழுத்துக் கொள்வதைப் போல.. வேறொருவனை மனதாலும் நினைக்க முடியாத தன் நிலையை கௌசல்யா அனிச்சையாக வெளிப் படுத்தி விட்டாள்..
‘எனக்கு இது போதும்..’ சக்திவேல் நினைத்துக் கொண்டான். கள்ளங்கபடமில்லாத அவளின் பிள்ளை முகத்தை தன் கைகளில் ஏற்றி.. அவளது விழிகளுக்குள் உற்றுப் பார்த்தவன்.. அவள் நெற்றியில் முத்தமிட்டு.. தன்னோடு இறுக்கிக் கொண்டான்..
‘ஆனாலும் கௌசி.. உன் வீட்டில் அவ்வளவு ஈஸியாக நம் காதலை ஏத்துக்க மாட்டாங்க..”
‘அவங்க ஏத்துக்கலைன்னா.. நான் வேறொருத்தனை என் ஆம்படையானா ஏத்துக்க மாட்டேன்..”
‘என்ன செய்வ..?”
‘உங்க பின்னாடி வந்து விடுவேன்..”
சக்திவேலின் அணைப்பு இன்னும் இறுகியது.. அவனது காதலி அடுத்தடுத்து தந்த மனநிறைவுகளால் .. அவன் மனம் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது..
‘அப்படியொரு நெருக்கடி வந்தா.. நீயும்.. நானும் கலந்து பேசிக்க சந்தர்ப்பம் வாய்க்க வேண்டாமா..?”
‘ம்ம்..”
‘அதுக்குத்தான் சொல்றேன்..என் ஆபிஸில் வேலைக்கு சேர்ந்து விடு.. தினமும் ஆபிஸில் பார்த்துக்கலாம்.. பேசிக்கலாம்.. நம் எதிர் காலத்தை தீர்மானிக்கலாம்..
அவன் சொன்னதைப் போலவே.. அவர்கள் ஒருநாள் கலந்து பேசினார்கள்.. அவர்களின் எதிர்காலத்தை தீர்மானித்தார்கள். அதன் முடிவில் சேர்ந்து பயணித்தவர்கள்.. திசை மாறும் பறவைகளாய் ஆளுக்கொரு திசையில் பிரிந்தார்கள்..
Reviews – Aarathanai / ஆராதனை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.