Chapter 08

0Shares

‘தின ஒலி..’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்த  கட்டிடத்திற்குள் கால் வைக்கும் போது கௌசல்யா பயந்தாள்..

சிறு சிறு மரத்தடுப்புகள் தனித்தனியாக பிரிக்கப் பட்டிருக்க.. ஒவ்வொரு மரத்தடுப்பும்.. ஒரு திறந்த வெளி அறையைப் போல இருந்தது.. அந்தப் பகுதிக்குள் பொருத்தப் பட்டிருந்த கம்பூட்டர்களையும்.. அவற்றின் முன்னாலிருந்த சுழல் நாற்காலிகளையும்.. அதில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தவர்களையும் பார்க்கும் போதே அவளது கால்கள் பின்னிக் கொண்டன..

‘ஓடி விடலாமா..?” என்று திரும்பி விட்டாள்..

அவளது நிலை புரிந்தவனாக சக்திவேல் அவளை அதட்டினான் “என்ன யோசிக்கிற.., ஓடிவிடலாமுன்னா..?”

இவன் எப்படி அவளின் மனதை இவ்வளவு சரியாக கணித்து வைக்கிறான் என்றிருந்தது அவளுக்ககு..

‘எனக்கு வேலை வேணாம்..” அவள் மெல்லிய குரலில் முரண்டினாள்..

‘ஏன்.. வேண்டாம்..?” அவன் புருவங்களை உயர்த்தினான்.

‘சொல்லத் தெரியலை..” அவளுக்கு கண்களில் நீ முட்டியது..

அவனால்..  அவளைப் புரிந்து கொள்ள முடிந்தது..

வீட்டிலும் நான்கு சுவர்கள்.. கல்லூரிகளிலும் நான்கு சுவர்கள் என்று குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து வந்தவள் அவள்.. வெளியுலகத்தைப் பார்த்திராவளின் முன்னால்.. பரபரப்பாக இயங்கும் பத்திரிக்கை உலகத்தைத் திடீரென்று காட்டினால் பயந்து போய் விட மாட்டாளா..?

‘இதோ பார் கௌசி..”

அவள் அவனை மிரட்சியுடன் பார்த்தாள்.. அவன் மிருதுவான குரலில் அவளுக்கு தைரியமளிக்கும் வகையில் பேசத் தொடங்கினான்.

‘இங்கே வேலை பார்க்கிற எல்லோரும்.. வேலைக்கு சேர்ந்த புதிதில் உன்னைப் போல பயந்தவங்கதான்.. இப்ப தைரியமாக வேலை பார்க்கிறாங்களா.. இல்லையா..?”

‘அவாள்ளாம்.. பழகினவாளா இருப்பா..”

‘யாரும்.. யாரோடும் பழகலை.. இங்கே வந்து வேலையைக் கத்துக்கிட்டு வெளியுலகத்தைத் தெரிஞ்சுக்கிட்டவங்கதான்..”

‘தைரியசாலியாய் இருக்காளே..”

‘ம்ம்.. அந்த தைரியம் உனக்கும் வரும்..”

‘எனக்கென்னவோ நம்பிக்கை வரலை..”

‘நீ என்னை நம்புகிறயா.. இல்லையா..?”

அவன் ஆழமான குரலில் வினவியதும்.. அவள் சட்டென்று அவன் முகம் பார்த்தாள்..

‘நம்பாமலா.. உங்க பின்னால் வந்திருக்கிறேன்..?”

‘அப்புறம் எதக்கு இந்த பயம்..? நான் உன் கூடவே இருப்பேன்.. அதை நினைச்சுப் பார்.. மத்த பயமெல்லாம் பறந்து விடும்..”

பறந்து தான் விட்டது .. சக்திவேல் அவளருகிலேயே இருப்பான் என்ற ஒன்றே அவள் மனதிற்கு உற்சாகத்தையும்.. தைரியத்தையும் தர.. அவள் கலக்கம் அகன்றவளாக அவனைப் பார்த்து புன்னகைத்தாள்..

‘அப்பாடி.. ஒரு வழியாய் சிரிச்சசுட்ட.. வா.. அஸோஸிNட்டைப் பார்க்கலாம்..

ஏஸி அறையில்.. இதமான நறுமணத்துடன் குளிர் பரவியிருந்தது.. அவர்களை அமரச் சொன்ன சுந்தரமூர்த்தி.. கௌசல்யாவின் சான்றிதழ்களைப் பார்த்தார்..

‘இப்பத்தான் காலேஜ் முடிச்சிருக்காங்க போல இருக்கே சக்தி..”

‘ஆமாம் சார்..”

‘எக்ஸ்பீரியன்ஸோ.. அடிஷனல் குவாலி- பிகேசனோ இல்லை..”

‘உண்மை தான் சார்..”

‘அப்புறம் எப்படி.. இங்கே வேலை கொடுக்க முடியும் சக்தி?”

‘சார் நான் இவளை டிரெயின் பண்ணுகிறேன்..”

‘ஊ’Pம்.. அது சரிவராது.. இது பத்திரிக்கை நடத்துகிற இடம்.. வேகம் வேண்டும்.. இவங்க சின்னப் பெண்.. ஜர்னலிசத்திற்கும் இவங்களுக்கும் ரொம்ப தூரம்..”

‘ப்ளீஸ் சார்.. நான் n’ட் ஆபிஸில் பேசிட்டேன்..”

‘தெரியும்.. எனக்கும் அங்கேயிருந்து போன் வந்தது.. பட் என்னோட ஒபினியனும் இதில் முக்கியமில்லையா..?”

‘ஐ நோ சார்.. பட்.. ஷி இஸ் மை வுட்பி..”

‘உங்க வுட்பியா..?”

சுந்தரமூர்த்தி ஆச்சரியத்துடன் கௌசல்யாவைப் பார்த்தார்.. அவள் லஜ்ஜையுடன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்..

‘அதனால்தான் நான் இவ்வளவு வாதாடுகிறேன்.. நான் இவளுக்கு வேலை சொல்லிக் கொடுக்கிறேன் வார்.. ப்ளீஸ்.. பிலிவ் மீ..”

அவளுக்காக அவன் கெஞ்சும் தொனியில் பேசிக் கொண்டிருந்ததை வியப்புடன் பார்த்தாள் கௌசல்யா..

அவளுக்கு அவனது குண இயல்பைப் பற்றி மிக நன்றாகத் தெரியும்.. அவன் ஒரு வணங்காமுடி.. நிமிர்ந்து நிற்பவன்.. கம்பீரமாய் பேசுபவன்..

அப்படிப்பட்டவன் அவளுக்காக தன் உயரத்திலிருந்து இறங்கி வந்து பேசுவது அவளை மிகவும் பாதித்தது..

‘ஐ கேன் மேனேஜ் சார்..” அவள் சுந்தர மூர்த்தியைப் பார்த்துக் கூறினாள்..

அதுவரை பேசாமல் அமர்ந்திருந்தவள் திடீரென்று இப்படிக் கூறியதும்.. சுந்தர மூர்த்திக்கு என்ன சொல்வதென்று தொரியவில்லை..

‘நான் வேண்டுமானால் கரெஸ்ஸில் ஜர்னலிசம் படித்துக் கொள்கிறேன் சார்..”

‘அதுக்கில்லைம்மா..”

‘எக்ஸ்பீரியன்ஸ் பத்தித்தானே சொல்கிறீங்க.. வேலை செய்தால்தானே எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்..? எனக்கு யாருமே வேலை கொடுக்காவிட்டால்.. எங்கிருந்து சார்.. எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்..?”

‘பேசுவது கௌசல்யாதானா..?’

சக்திவேல் ஆச்சரியத்துடன் இமை கொட்டினான்..

‘இதைப் பாருடா.. கூண்டுக்கிளி.. போட்டுத் தாக்குவதை…’

தன் காதலியின் திடீர் உத்வேகத்தை ரசித்தான் அவன்..

சுந்தர மூர்த்தியின் இதழ்களில் புன்னகை தோன்றியது..

‘வெல்.. பத்திரிக்கைத் துறைக்கு இதைப் போல புத்திசாலித்தனமான கேள்விகள்தான் தேவை.. அந்த வகையில் நீங்க தேறிட்டீங்க.. யு ஆர் அப்பாயின்டென்ட்..”

சந்தோசமாக.. சக்திவேலின் பின்னால்.. வண்டியில் ஏறி அமாந்தவளுக்கு அப்போதுதான் வீட்டின் நினைவு வந்தது..

‘போச்சு…” கையை உதறினாள்..

‘என்னாச்சு..” சக்திவேல் அலட்டிக் கொள்ளாமல் கேட்டான்..

‘அப்பாகிட்ட என்னான்னு சொல்ல..?”

‘எதைச் சொல்கிற..?”

‘வேலை கிடைத்த விவரத்தை.. என்னான்னு சொல்ல..?”

‘பைத்தியமாடி நீ..?

‘ஏன்..? நீங்க பைத்தியக்காரியைத்தான் இத்தனை நாளும் காதலிச்சேளா..? நான்…  பைத்தியமா.. இல்லையான்னு.. நோக்குத் தெரியாதாக்கும்..?”

‘நேக்குத் தெரியறது இருக்கட்டும்.. உனக்கு ஏன் நாக்கு இப்படிக் குளறுது..?”

‘குளறுதா..?”

‘ஆக்சுவலாய் இதை உளறுதுன்னுதான் சொல்லனும்..”

‘ராமா.. என்னைக் கேலி பண்ண நல்ல நேரம் பார்த்தேள் போங்கோ..”

‘எங்கேடி போகச் சொல்கிற..?”

‘எங்கே போறது..? வீட்டுக்குத்தான் போயாகனும்..”

‘வேணாம்ன்னா சொல்லு.. இப்படியே வண்டியை விடறேன்..”

‘எங்கே..”

‘வண்டி போகிற போக்கில போகலாம்.. வருகிறாயா..?”

‘பெருமாளே.. நீ சோதிக்கிறது பத்தாதுன்னு.. இந்த மனுசனும் என்னைச் சோதிக்கிறாரே…”

‘எதுக்குடி இப்ப அலட்டிக்கிற…? வேலை கிடைச்சிருக்கிறது எவ்வளவு சந்தோசமான விசயம்..? இதைச் சொல்ல யாராவது பயந்து நடுங்குவாங்களா..?”

‘நான் நடுங்குவேன்..”

‘அதுதான் உன்னை பைத்தியக்காரின்னு  சொன்னேன்..”

‘  இப்படியே பேசிக் கொண்;டிருந்தேள்ன்னு வையுங்க..”

‘என்னடி செய்வ..?”

‘ஓடுகிற வண்டியில இருந்து குதிச்சிருவேன்..”

‘அது எதுக்கு வேஸ்டா.. நான் வண்டியை நிறுத்துகிறேன் நீ குதி..”

‘விளையாடாதீங்கோ…”

‘நீயும்.. நானும் சின்னப் பப்பா.. அதுதான் உன்கூட விளையாடிப் பார்க்க ஆசைப் படுகிறேன்.. அடச்சீ.. இறங்கு..”

‘ஏன் கோபப்படறேள்..?”

‘எதை வைச்சு நான் கோபப் படுகிறேன்னு சொல்கிற..?”

‘இறங்க சொல்கிறேளே..”

‘உன் வீடு வந்துருச்சு.. தெரு முக்கில் இறக்கி விடலாமுன்னு இறங்கச் சொன்னேன்.. இல்லை.. மாட்டேன்.. என் வீட்டு வாசலில்தான் இறங்குவேன்னு நீ அடம் பிடிக்கிற போல இருக்கு.. வா.. உன் ஆசைப்படி .. உன் வீட்டு வாசலில் இறக்கி விடறேன்..”

‘ஐயையோ.. வேறு வினையே வேண்டாம்..”

கௌசல்யா அலறிக் கொண்டு வண்டியை விட்டு இறங்கினாள்.. யாரும் பார்த்து விட்டார்களோ என்ற பதட்டம் அவள் முகத்தில் தெரிய..

‘யாரும் பார்க்கலை..” என்றான் சக்திவேல்..

‘வரேன்..” அவள் வேக நடையுடன் விரைய ஆரம்பித்தாள்..

‘எங்கே வருகிற..?” அவன் வம்புக்கு இழுத்தான்..

‘போயிட்டு வரேன்னு சொன்னேன்..” அவள் குரல் காற்றில் கலந்தது..

சிட்டாக அவள் பறந்து விட.. அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சக்திவேலின் மனம் இனித்தது..

‘இத்தனை நாழியாய் எங்கேடி போயிருந்த..?” ஆணடாள் கோபக் குரலில் அதட்டினாள்..

‘அம்மா…” கௌசல்யா.. தாயின் புதிதான கோபத்தைக் கண்டு திகைத்தாள்..

‘சர்டிபிகேட் வாங்கிட்டு வர நாழியாயிருச்சுன்னு கதை சொல்லாதே.. உன்னோட காலேஜில் படிக்கிறவா எல்லாம்.. அப்பவே ஆத்துக்கு வந்து சேர்ந்துட்டா.. நீ மட்டும் தான் இத்தனை நாழி கழிச்சு.. ஆடி.. அசைஞ்சு வர்ற.. எங்கேடி போன..?”

அதுவரை இளைய மகளை அதட்டியிராத ஆண்டாள் அதட்டினாள்..

‘விடுடி.. குழந்தைக்கு ஏதாவது ஜோலியிருந்திருக்கும்..”

மூக்குக் கண்ணாடியை சரிசெய்தபடி ராமாமிர்தம்.. இளைய மகளுக்காக பரிந்து பேசினார்..

‘நீங்க சும்மா இருங்கோண்ணா.. இதில நீங்க தலையிடாதேள் வயசுக்கு வந்த பொண்ணு.. ஆத்துக்கு திரும்ப இத்தனை நாழியாச்சுன்னா.. என்ன விவரம்ன்னு எனக்குத் தெரிஞ்சுக்கனும்..”

ஆண்டாள் கொந்தளிக்க.. கௌசல்யா.. மௌனமாக தன் வேலை நியமன உத்தரவை எடுத்து நீட்டினாள்..

‘என்னடி இது..?”

‘அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்..”

‘என்னது.. ஏண்ணா.. இதைக் கேட்டேளா..?”

ராமாமிர்தம் யோசனையுடன் மகளைப் பார்த்தார்..

‘கௌசி இங்கே வா..”

  கௌசல்யா அவரருகே சென்றாள்..

‘அந்த ஆர்டரைக் கொடு..”

கொடுத்தாள்.. ராமாமிர்தம் அதை வாங்கிப் பார்த்தார்..

‘இது பெரிய வேலையாச்சே.. உனக்கெப்படி கிடைச்சது..?”

‘என் பிரண்ட ஒருத்தியோட தோப்பனார் ரெக்கமென்டேசனில் கிடைச்சதுப்பா..”

‘ஆண்டாள்.. இவளை வையாதே..”

‘இவ செஞ்சுட்டு வந்திருக்கிற காரியத்துக்கு கொஞ்சச் சொல்கிறேளா..?”

‘புரியாமல் பேசாதேடி.. இந்தக் காலத்தில் வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்பு.. அதிலயும்.. இவ்வளவு நல்ல வேலை கிடைக்கிறது பெரிய வரம்..”

‘இப்ப.. இவ வேலைக்குப் போய் சம்பாதிச்சுப் போட்டுத்தான் நாம உட்கார்ந்து சாப்பிடனுமாக்கும்..?”

‘அவ காலில் அவ.. நிற்பாளே.. நமக்கு அதுதாண்டி வேனும்..”

‘பொம்பனாட்டிகளுக்கு எதுக்குன்னா சுயசம்பாத்தியம்..?”

‘தப்புக் கணக்கு போடாதேடி.. பொம்மனாட்டி- களுக்குத்தான சுய சம்பாத்தியம் வேனும்..”

அன்று ராமாமிர்தம் சொல்லிய வார்த்தைகள்.. அர்த்தமுள்ள வார்த்தைகள் என்று..  பிற்காலத்தில் பலமுறை ஆண்டாள் நினைத்திருக்கிறாள்.. அந்த வேலை மட்டும் இல்லாமிலிருந்தால்.. கௌசல்யா என்னவாகியிருப்பாளோ..? நல்ல வேளையாக… ராமாமிர்தம் அவளைக் காப்பாற்றி விட்டார்…

0Shares

Reviews – Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link