Chapter 09
தீபாதரனை ஒளியில் பெருமாளைப் பார்த்த கௌசல்யா மனம் உருக வேண்டிக் கொண்டாள்..
‘நாராயணா.. வைதேகிக்கு கல்யாணம் ஆகப் போகிறது அவ.. புக்காத்தில் சந்தோசமா வாழனும்..’
வேண்டி முடித்தவள் கன்னத்தில் போட்டுக் கொண்டு.. கற்பூர ஜோதியைத் தொட்டு வணங்கினாள்.. குங்குமப் பிரசாதம் வாங்கிய பின்.. கோவில் பிரகாரத்தை வலம் வந்த போது..
‘என்னடி வேண்டிக்கிட்ட..?” என்று வைதேகி கேட்டாள்..
‘பெருமாள்கிட்ட வேண்டிக்கிட்டதை வெளியே சொல்லுவாளா..?”
‘அப்படியென்னடி.. எனக்குத் தெரியாத ரகசியத்தை பெருமாள்கிட்ட வேண்டிக்கிட்ட..?”
‘எனக்கும் பெருமாளுக்கும் ஆயிரம் இருக்கும்.. நோக்கென்னடி வந்தது.. கோவிலுக்கு வந்தோமா.. பெருமாளை சேவிச்சோமான்னு.. வாய் பேசாம இருக்கனும்.. அதை விட்டுட்டு.. சும்மா.. நொய்.. நொய்யுன்னு.. காது ஜவ்வை கிழிக்கக் கூடாது..”
‘அடேங்கப்பா.. என்னா கறாரா பேசறடி..”
அவர்கள் பிரகாரத்தின் முனையில் திரும்பிய போது.. செந்தில் அங்கே.. அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்ததைப் போல நின்று கொண்டிருந்தான்..
அவனைப் பார்த்ததும்.. வைதேகியின் முகம் மாறியது..
‘வைதேகி.. உன்னிடம் பேசனும்..” அவன் வழியை மறித்தான்..
‘என்னிடம்.. என்ன பேசப் போகிற..? நோக்கும் நேக்கும் என்ன சம்மந்தம்..?” வைதேகி உதாசீனமாக அவனைப் பார்த்தபடி நடையை விரைவு படுத்தினாள்..
‘நில்லு வைதேகி..” அவன் கண்கள் சிவந்திருந்தன..
‘எதுக்கு நிற்கனும்..?” வைதேகி அவனை கண்டு கொள்வதாகவே இல்லை..
கௌசல்யாவுக்கு செந்திலைப் பார்க்க பாவமாக இருந்தது..
‘என்னன்னுதான் கேளேண்டி..” என்று வைதேகியிடம் சொன்னாள்..
‘அவனுக்கு நீ சிபாரிசா..?” வைதேகி முறைத்தாள்..
‘அப்படித்தான் வைச்சுக்கேயேன்.. என்னதான் சொல்கிறார்ன்னு ஒரு நிமிசம் நின்று நீ கேட்டால்.. குறைஞ்சா போயிடுவே..?” கௌசல்யா நின்று விட்டாள்..
வைதேகி.. தயங்கி நின்றாள்.. அந்த தயக்கம் செந்திலுக்கு தைரியத்தைக் கொடுக்க.. அவன் கண்களில் ஒளிவந்தது..
‘உனக்குக் கல்யாணமாமே..?”
‘நிச்சயதார்த்தம் நடக்கப் போறது.. இப்ப போய் இந்தக் கேள்வியை கேட்கிறயே.. நீயென்ன மண்டூகமா..,”
‘ஏனிப்படி முகத்திலடித்ததைப் போல பேசுகிறா.. இவ..?’ கௌசல்யாவிற்கு கோபம் வந்தது..
ஆனால்.. கோபப் பட வேண்டிய செந்தில்.. கோபப்படவில்லை.. மாறாக.. கெஞ்சுகிற தொணியில் பேச ஆரம்பித்தான்..
‘எனக்கு என்ன குறை வைதேகி..?”
‘இதை என்கிட்ட ஏன் கேட்கிற..”
‘ஏன்னு.. உனக்குப் புரியலையா..?”
‘நீ மக்கு பிளாஸ்திரியேதான்.. அதில் சந்தேமேயில்லை.. புரியாமல்தானே கேட்கிறேன்.. ? இதில் கேள்வியென்ன வேண்டிக் கிடக்கு..?”
‘உனக்கு ஏன் வைதேகி என்னைப் பிடிக்காமல் போனது..?”
இந்த நேரடியான கேள்வியால் தாக்கப்பட்ட வைதேகி உதடுகளைக் கடித்துக் கொண்டாள்..
கௌசல்யாவோ.. தூக்கிவாரிப் போட்டவளாய்.. தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றும்.. முற்றும் பார்த்துக் கொண்டாள்..
‘பிடிக்கலைன்னா.. பிடிக்கலை.. அதுக்கு காரணம் சொல்லனும்கிற அவசியம் நேக்கு இல்லை…”
‘நான் உன் மேல் உயிரையே வைச்சிருக்கேன் வைதேகி..”
‘நான் வைக்கலையே..”
‘அதுதான் ஏன்..?”
‘உன்கிட்ட படிப்பில்லை.. வேலையில்லை.. இப்ப என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறவர்கிட்ட.. இந்த இரண்டுமிருக்கு..”
செந்திலின் முகம் விழுந்து விட்டதை பரிதாபத்துடன் கவனித்தாள் கௌசல்யா..
‘என்னிடம் பணமிருக்கு.. சொத்து இருக்கு.. தொழில் இருக்கு..”
‘எனக்கு அது வேணாமே..”
‘உன்னை நான் மகாராணியைப் போல வைத்துக் கொள்வேன் வைதேகி..”
‘இதை மகாராஜா சொல்லனும்.. நீ சொல்லப்படாது..”
‘என் காதலை நினைத்துப் பார்..”
‘அது என்ன தேவைக்கு..?”
‘வருசக் கணக்காய் உன்னை லவ் பண்ணுகிறேன் வைதேகி..”
‘நானா வந்து உன் லவ் பண்ணுன்னு சொன்னேன்..”
‘என் காதலுக்கு மதிப்பில்லையா..?”
இந்தக் கேள்விக்கு ஏனோ.. வைதேகியால் பதில் சொல்;ல முடியவில்லை..
அவளுக்குத் தெரியும்.. செந்தில் அவளை உண்மையாகக் காதலித்தான்.. அவள் பார்த்தாலும்.. பார்க்காவிட்டாலும்.. பிடிவாதமாக பின் தொடர்ந்தான்.. மழைக்கு ஏங்கும் சாதகப் பட்சியைப் போல.. அவளது காதலுக்காக ஏங்கி நின்றான்..
என்றாவது ஒரு நாள்.. அவளது மனம் மாறும் என்று காத்துக் கிடந்தவனுக்கு.. அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்ட செய்தி பேரிடியாக இருந்தது..
அவனால்.. அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அவளிடம் மன்றாடினாலாவது அவள் மனம் இரங்காதா.. என்று தைரியத்துடன் வழி மறித்து விட்டான்..
‘என் காதல் விழலுக்கு இறைத்த நீரா வைதேகி..”
‘இதை என்னிடம் ஏன் கேட்கிற..? நெல்லுக்கு நீர் இறைச்சால் அதில் பயனிருக்கும்.. நீ புல்லுக்கு நீர் இறைச்சே.. அதுக்கு நான் என்ன பண்ண..?”
‘இரக்கமில்லாமல் பேசாதே..”
‘இதில் இரக்கப்பட என்ன இருக்கு..? என்னைக்காவது ஒருநாள்.. உன் பார்வைக்கு பதில் பார்வை பார்த்திருப்பேனா..?”
‘எப்படிப் பார்ப்பாய்..? நீ தான் கணக்குப் போட்டு என் காதலை தட்டிக் கழிச்சவளாச்சே.”
கசப்புடன் கூறினான் செந்தில்.. அது துளிக்கூட வைதேகியை பாதித்ததாகத் தெரியவில்லை..
‘கால்குலேசன் இல்லம லைப்பை பேஸ் பண்ண முடியாது.. அதைத் தப்புன்னு கையாயலாகாதவாதான் சொல்லுவா.. வாடி கௌசி போகலாம்..”
வைதேகி.. கௌசல்யாவை இழுத்துக் கொண்டு விரைந்தாள்.. வீட்டுக்குப் போகும் வழியில் இருவருமே பேசிக் கொள்ளவில்லை..
அன்று இரவு.. உணவு நேரத்தின் போது.. வைதேகியைக் காணோம்.. அவளைத் தேடி மொட்டைமாடிக்குச் சென்றாள் கௌசல்யா.. தனியாக.. சுற்றுச் சுவரில் சாய்ந்து.. வானத்தை வெறித்துக் கொண்டிருந்த வைதேகியின் கன்னத்தில் – கண்ணீர் கோடிட்டிருந்தது.. அந்த இருட்டிலும் தெளிவாக கௌசல்யாவிற்கு தெரிந்தது..
‘வைதேகி..” அவளின் தோள் தொட்டாள் கௌசல்யா..
‘ம்ம்ம்..” அவசரமாக கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள் வைதேகி..
‘அழுதியா.. என்ன..?” கவலையுடன் கேட்டாள் கௌசல்யா.
‘இல்லியே..” வைதேகி.. முகம் திருப்பிக் கொண்டாள்..
‘பொய் சொல்லாதே..”
‘பொய்யில்லைடி கௌசி.. நிஜமாவே நான் அழலை.. நான் ஏன் அழனும்..?”
கௌசல்யாவிற்கு வைதேகி புரியாத புதிராக இருந்தாள்.. அப்போதும் சரி.. அடுத்து வந்த நாள்களிலும் சரி.. எதற்காக தனிமையில் உட்கார்ந்து கண்ணீh ;விட்டாள் என்பதை வைதேகி சொல்லவே இல்லை..
‘நான் பார்ததேன்ங்க..அவ அழுதுகிட்டுத்தான் இருந்தா.. நான் போனதும் கண்ணைத் துடைச்சா.. ஆனா.. கடைசி வரைக்கும் அதை ஒப்புக்கவே மாட்டேன்கிறா.. இல்லேன்னு சாதிக்கிறா..”
கௌசல்யா சக்திவேலிடம் இதைக் கூறியபோது.. அவன் தோள்களைக் குலுக்கினான்..
‘கடலோட ஆழத்தைக் கூடக் கண்டு பிடித்து விடலாம்.. ஆனால்.. பெண்களோட மன ஆழத்தைக் கண்டுபிடிக்க யாராலும் ;முடியாதுன்னு பெரிய.. பெரிய.. ஆள்களே சொலல்லியிருக்கிறாங்க..”
இதைக் கேட்டதும் கௌசல்யாவிற்கு சுர்ரென்று கோபம் பொத்துக் கொண்டு வந்தது..
‘அது எப்படி.. நீங்க அப்படிச் சொல்லலாம்..?” என்று வரிந்து கட்டிக் கொண்டு சக்திவேலிடம் சண்டைக்குப் போனாள் அவள்..
‘இது என்னடி வம்பாப் போச்சு.. நான் கேள்விப்பட்டதைத்தானே சொன்னேன்..?” என்றான் அவன்..
‘என்னத்தை கேள்விப் பட்டேள்..?”
‘விடுடி.. இப்ப அதுதான் பெரிய விசயமா..?”
‘வேற எதுதான் பெரிய விசயம்..?”
‘செந்தில் மலேசியாவிற்கு போயிட்டான்.. எனக்கு அது தான் பெரிய விசயம்..”
கௌசல்யா மலைத்துப் போனாள்.. அவளறிந்த வகையில் செந்தில்.. அவர்களின் ஊரைத் தாண்டி.. எங்கேயும் போனதில்லை.. அவன்.. மலேசியாவிற்கு போய் விட்டானா..?
‘அங்கே எதுக்குப் போனான்..?”
‘தொழில் பண்ணவாம்..”
‘அதை இங்கேயிருந்து பண்ணக் கூடாதா..?”
இதற்கு உடனடியாக சக்திவேல் பதிலைச் சொல்லவில்லை.. சற்று நேரம் மௌனமாக இருந்தவன்.. பின்.. மெதுவாக குரலில் கூறினான்..
‘இங்கேயிருந்தால்.. உன் அக்காவின் கல்யாணத்தை பார்க்க வேண்டி வருமே.. அதை அவனால் தாங்கிக்க முடியும்ன்னா நினைக்கிற..?”
அதற்காகவா அவன் நாட்டை விட்டு போனான்..?
செந்திலின் அந்த காதலை நினைத்து கௌசல்யாவின் மனம் வேதனைப் பட்டது..
அவனே சொன்னதைப் போல.. அவன் பணக்காரன்.. அவனை விடச் சிறப்பாக அந்த மனோஜிடம் எதைக் கண்டாள் வைதேகி?
கௌசல்யா மனம் பொறுமினாள்..
அந்த மனோஜிடம் வைதேகி எதைக் கண்டாள் என்று கௌசல்யாவிற்கு தெரியவில்லை.. ஆனால் அந்த மனோஜ்.. ஒருநாள் .. சக்திவேலும்.. கௌசல்யாவும் தனியே நெருக்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை கண்டு விட்டான்.
வைதேகியுடன் அவனுக்கான திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.. திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருந்த நேரம் அது..
திருமண அழைப்பிதழ்களை வாங்கிச் செல்வதற்காக வந்திருந்தவன்.. மைத்துனியாகப் போகிறவளை.. அவளுடைய காதலனுடன் பார்த்து விட்டான்..
சக்திவேலிடம் கௌசல்யா குறும்பாக எதையோ பேசி வைக்க.. அவன் அவள் காதைத் திருகினான்.. சிரித்துக் கொண்டே திரும்பிய கௌசல்யா.. எதிரே வந்து நின்ற மனோஜைக் கணடதும்.. அந்த சிரிப்பு மறைந்தவளாய்.. பதட்டத்துடன் எழுந்து நின்றாள்..
அவர்கள் இருவரையும் குற்றவாளிகளைப் போல பார்த்த மனோஜ்..
‘யார் இவன்..?” என்று கௌசல்யாவிடம் கேட்டான்..
‘அதைக் கேட்க நீ யார்..?’ என்ற கோபம் மனதில் பொங்கினாலும்.. அதை அடக்கிக் கொண்டு
‘என்னுடன் வேலை பார்க்கிறவர்.. ” என்று பதில் சொன்னாள் கௌசல்யா..
‘கூட வேலை பார்க்கிறவனுடன்.. பார்க்கில் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறே..?”
மனோஜின் கேள்வியில் ஒரு வித கொச்சைத்தனம் இருந்ததை உடனடியாக உணர்ந்து விட்டாள் கௌசல்யா..
வைதேகியிடன் எதிர்காலத்தை நினைத்து அவளுக்கு கவலையாக இருந்தது..
Reviews – Aarathanai / ஆராதனை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.