Chapter 10
மனோஜின் பார்வை.. ஓர் வித அலட்சியத்துடன் சக்திNலின் மீது படிந்தது..
‘ஆமாம்.. உன்கிட்ட அப்படி என்ன இருக்குன்னு.. இந்தக் குட்டி உன் பின்னால வந்திருக்கிறா..?” என்று அவன் கேட்டு வைக்க.. சக்திவேலுக்கு கண்மூடித்தனமான கோபம் வந்து விட்டது..
‘மரியாதையாய் பேசுங்க..”
எதிரே நிற்பவன் தன் காதலியின் அக்காவுக்கு கணவனாகப் போகிறவன் என்ற நினைவில் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு பேசினான்..
‘ஏண்டா.. கூட வேலை பார்க்கிற குட்டியைத் தள்ளிக்கிட்டு வந்திருக்கிற.. உனக்கெல்லாம் எதுக்குடா மரியாதை..?”
‘குட்டி.. கிட்டின்னு பேசின.. மரியாதை கெட்டுவிடும்..”
கௌசல்யாவின் கண் ஜாடைக்கு கட்டுப் படாமல் எகிறிவிட்டான் சக்திவேல்..
அவனும்தான் எவ்வளவு நேரத்துக்கு வெறுமனே பல்லை மட்டும் நறநறவென கடித்துக் கொண்டு பொறுமையாக இருக்க முடியும்..?
மைத்துனியாக வரப் போகும் பெண்ணை ‘குட்டி..’ என்று விளிப்பவன் மனதில் எத்தகைய வக்கிரம் இருக்கக் கூடும் என் கவலைப் பட்டான் சக்திவேல்..
அப்படிப்பட்ட ஒருவன் கௌசல்யாவிற்கு உறவினன் ஆவதா..?
ஒருவார்த்தையிலேயே அவர்கள் இருவரையும் கலங்கடித்து விட்ட மனோஜ்.. அப்படியே போய் தொலைந்திருக்கலாம்..
அதைவிட்டு விட்டு.. அடுத்தடுத்த வார்த்தைகளைப் பேசி.. அவனது குணாதியசத்தை அவர்களுக்கு புரிய வைக்க ஆரம்பித்து விட்டான்..
‘என்னடா.. சவுண்டு விடறே? பொம்பள முன்னால உதார் காட்ட நினைக்கிறியா..?”
‘குட்டி.. பொம்பள.. இதைத் தவிர வேற வார்த்தைகளே உன் வாயில் வந்து தொலைக்காதா..? இவளின் அக்காவைக் கல்யாணம் பண்ணிக்க போகிறடா.. நினைவிருக்கா..?”சக்திவேல் என்னவோ…
‘உன் மைத்துனியாகப் போகிறவளிடம் மரியாதையாய் பேசித் தொலைடா மடையா..’ என்ற அர்த்தத்தில்தான் பேசி வைத்தான்..
ஆனால்.. அதற்கு மனோஜ் சொன்ன பதிலைக் கேட்டு கௌசல்யாவிற்கு மயக்கமே வந்து விட்டது..
‘அந்தக் கொடுமையை ஏண்டா நினைவு படுத்தற? இவளோட அக்காவைப் பார்க்கிறதுக்கு முன்னாடி இவளை நான் பார்த்திருதேன்னா.. இவளைத்தான் கல்யாணம் பண்ணியிருப்பேன்.. என்ன செய்கிறது.. ? விதி விளையாடி விட்டது.. சரி.. எங்கே போய் விடப் போறா.. மச்சினிச்சிதானே.. நாள.. பின்ன ஒரு நாள் நமக்குன்னு வாய்க்காமலா போகும்ன்னு மனசை தேத்திக்கிட்டு இவ அக்காகாரி கழுத்தில தாலியைக் கட்ட தயாராகிக்கிட்டு இருந்தா.. நீ.. பட்ட பகலில் இவ கூட பார்க்கில் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிற.. இந்தக் கொடுமையை நான் எங்கேடா போய் சொல்ல..?”
‘டேய்ய்ய்..”
சக்திவேல் அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவனாக.. மனோஜின் மேல் பாய்ந்து விட்டான்…
அவர்கள் கட்டிப் புரண்டு சண்டை போட.. கூட்டம் கூடிவிட்டது.. கௌசல்யா பதறிப் போனாள்..
‘சக்தி.. வேண்டாம்.. விட்டு விடுங்க..” என்று மன்றாடினாள்..
‘அதைத்தான் நானும் சொல்கிறேன் கௌசி.. இவன் உன் அக்காவிற்கு வேண்டாம்.. விட்டு விடுங்க..” சக்திவேல் ரௌத்திரம் குறையாதவனாக மூச்சிரைத்தான்..
‘இதுக்கு மேலேயும்.. இவனுக்கு வைதேகியை கல்யாணம் பண்ணி வைக்க நான் விட்டு விடுவேனா..? அதை நான் பார்த்துக்கறேன்..”
‘நீங்க வாங்க..”
கௌசல்யா.. சக்தி வேலை விலக்கி இழுத்துக் கொண்டு போய்விட.. சட்டையில் இருந்த புழுதியைத் தட்டி விட்டுக் கொண்ட மனோஜ் உஷாரானான்..
விளைவு..?
கௌசல்யா வீட்;டிற்குப் போன போது.. மனோஜ் யுhலில் இருந்த சோபாவில் கால் மேல்.. கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்க.. அவன் எதிரில் குற்றவாளியைப் போலத் தலையைக் குனிந்தபடி ராமாமிர்தம் நின்று கொண்டிருந்தார்..
‘இவன் முன்னால அப்பா ஏன் இப்படி நிற்கிறார்..?’
அங்கே எதுவோ சரியில்லை என்று அவளுக்குத் தெரிந்து விட்டது..
வீட்டின் உள்புறம் திரும்பிப் பார்த்தாள்.. அழுது சிவந்த கண்களுடன் ஆண்டாள்.. கதவு மறைவில் நின்றிருக்க.. வைதேகியின் முகமே தெரியவில்லை..
மனோஜை அருவெருப்புடன் பார்த்தபடி உள்ளே செல்ல அடியெடுத்து வைத்தாள் கௌசல்யா..
‘நில்.. ” கர்ஜித்தார் ராமாமிர்தம்..
‘அப்பா.. ?” கௌசல்யா திகைத்தாள்..
‘எங்கே போய் விட்டு வருகிற..?” ராமாமிர்தம் உஷ்ணமாகக் கேட்க..
‘போட்டுக் கொடுத்து விட்டான்..’ என்று புரிந்து கொண்டாள் கௌசல்யா..
பந்திக்கு முந்துவதைப் பற்றித்தான் அவள் கேள்விப் பட்டிருக்கிறாள்.. பற்ற வைப்பதற்கும் முந்த வேண்டும் என்று.. அன்று அவளுக்கு புரிய வைத்தான் மனோஜ்..
இனி என்ன சொன்னாலும்.. தன் பேச்சு எடுபடாது என்ற நிராசையுடன் மௌனித்தாள் கௌசல்யா..
‘ஏன் பேசாமல் நிற்கிற.. பதில் சொல்லு..” உக்கிரத்துடன் ராமாமிர்தம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே..
‘எப்படி மாமா பதிலைச் சொல்வாங்க.. இவங்கதான் இந்த ஆத்தின் மானத்தை கப்பலேத்தி அனுப்பி விட்டு வருகிறாங்களே.. அதைப்பத்தி உங்ககிட்;ட வாயைத் திறக்க முடியுமோ..?” என்று ஊடுவால் ஒட்டினான் மனோஜ்..
கௌசல்யா நெற்றிக் கண்ணைத் திறக்காத குறையாய் அவனை முறைத்துப் பார்த்தாள்..
அடுத்த நொடியில் அவள் கன்னத்தில் ‘பளார்.. ‘ என்ற அறை விழுந்தது..
‘அப்பா..!!!! … “
கன்னத்தைப் பிடித்தபடி சிலையாக நின்று விட்டாள் கௌசல்யா.. அதுவரை ராமாமிர்தம் அவளை கை தொட்டு அடித்ததில்லை.. அன்று அடித்து விட்டார்..
அவர் அடித்த அடியில் மனம் வலித்ததைவிட.. அந்த அடியை மனோஜின் முன்னால் அடித்ததால் அதிகமாக மனம் வலிக்க.. கன்னத்தை பிடித்துக் கொண்டு சிலையாக நின்று விட்டாள் கௌசல்யா..
‘எவ்வளவு தைரியமிருந்தால்.. என் முன்னாலேயே மாப்பிள்ளையை இந்த முறை.. முறைப்பாய்.. இதைச் செய்பவள்.. வேறு எதைத்தான் செய்ய மாட்டாய்..?”
‘அப்பா..”
‘ச்சீ.. உன் வாயால் என்னை அப்படிக் கூப்பிடாதே.. வேலைக்குப் போகிறதாக ஆத்தில் சொல்லிட்டு.. பக்கத்து வீட்டு கடன்காரனோட.. பார்க்கில் கூத்தடிச்சிருக்கிற.. போறவா.. வர்றவா.. எல்லாம்.. உங்களை வேடிக்கை பார்த்திருக்கா..”
‘அப்படி இந்தக் கடன்காரன் சொன்னானா..?’
‘அகஸ்மாஸ்த்தாய் அங்கே வந்த நம்மாத்து மாப்பிளை இப்படி.. பட்டப் பகலில்.. பயாஸ் கோப்பு காட்டுறது யாருன்னு யதார்த்தமாய் பார்த்திருக்கிறார்..”
‘யாரு.. ? இவன்.. யதார்த்தமாய் பார்த்தானா..? நீங்க வேற.. இவன் பதார்த்தமா பார்த்து வைச்சான்ப்பா..’
‘உன்னை அப்படியொரு நிலைமையில் பார்த்ததும் இவருக்கு தூக்கி வாரிப் போட்டிருக்கு… “
‘எப்படியொரு நிலைமை… ?’
‘உனக்குப் புத்தி சொல்ல வந்தா.. நீ இவரைத் தூக்கியெறிஞ்சு பேசியிருக்கிற… “
‘ம்’Pம்.. தூக்கி எறிந்து விடாலாமுன்னு தான் ஓடோடி வந்தேன்.. எங்கே.. அதுக்குள்ள இந்த நாதாரி முந்திக்கிட்டானேப்பா..’
‘போதாக்குறைக்கு.. அந்தத் தடியனை விட்டு.. மாப்பிளையை அடிக்க வைச்சிருக்க..”
‘அப்பா.. நான் தலையிட்டதால்தான் இவன் கைகால் பிழைத்தது.. இல்லைன்னா.. இவன் பேசின பேச்சுக்கு.. என் சக்தி.. கையைக் காலை முறித்து.. இவனோட முப்பத்திரண்டு பல்லையும் தட்டி கையில் கொடுத்திருப்பார்.. அது தெரியாம பேசறேளே..’
‘நம்மாத்து மாப்பிள்ளை மேல.. இன்னொருத்தன் கை.. வைக்க.. நீ அதை வேடிக்கை பார்த்துவிட்டு வந்திருக்கிற.. உன்னை என்ன செய்தால் தேவலாம்..?”
‘வேறென்னப்பா செய்ய…? நானும் என் பங்குக்கு இவனை நாலு அறை விட்டிருக்கலாமுன்னு சொல்ல வர்றீங்களா..?’
‘போதும் நீ வேலைக்குப் போய் கிழிச்சது.. நாளையில் இருந்து .. ஆத்துப் படியைத் தாண்டின.. காலை முறிச்சு போட்டு விடுவேன்..”
அதுவரை ராமாமிர்தம்.. மகளை அர்ச்சிப்பதை காது குளிரக் கேட்டுக் கொண்டிருந்த மனோஜ்.. நல்லவன் போலப் பேச ஆரம்பித்தான்..
‘இங்கே நடந்ததை நான் எங்காத்தில் சொன்னா.. இந்தக் கல்யாணமே நின்னுடும் மாமா..”
ஆண்டாள் பலமாக விசும்ப.. ராமாமிர்தம் பதறிப் போய் மனோஜை கையெடுத்துப் கும்பிட்டார்..
‘ஐயையோ மாப்பிளை.. அப்படி மட்டும் நடந்தா.. நாங்க குடும்பத்தோட விஷம் குடிச்சுருவோம் மாப்பிளை.. வேண்டாம்.. இந்தக் கல்யாணத்தை நிறுத்திராதீங்க.. உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கறேன்..”
‘அதெப்படி மாமா.. நாளைக்கே நீங்க மனசு மாறி உங்க சின்ன மகளை அவனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தாலும் கொடுப்பீங்க.. நாளைக்கு என்ன நடக்குமுன்னு யாரு கண்டா?”
‘இல்ல மாப்பிள்ள…”
‘ஒருவேளை.. அப்படி நடந்து விட்டால்.. என்னை அடித்தவன் எனக்கு சகலையாகி விடுவான்.. காலம் பூராவும் அவன் முகத்தை நான் பார்க்க வேண்டியதாகி விடும்.. ஒரு உறையில் ரெண்டு கத்தி இருக்க முடியாது மாமா.. ஒரே வீட்டில் .. நானும்.. அவனும் பெண்ணெடுக்க முடியாது..”
மனோஜ் சரியான இடத்தில் அடித்து விட்டான்.. கௌசல்யா துடித்துப் போய் தகப்பனாரைப் பார்த்தாள்..
‘இவன் பேச்சைக் கேட்டு.. அப்பா எதுவும் வாக்குறுதியைக் கொடுத்து விடாமல் இருக்கனுமே…’ அவள் மனம் துடித்தது..
அவளது பயம் உண்மையாகி விட்டது.. எது நடக்கக் கூடாது என்று கௌசல்யா பயந்தாளோ.. எது நடந்துவிடும் என்று அஞ்சினாளோ.. அது நடந்தே விட்டது..
‘அந்த எண்ணமே உங்களுக்கு வேண்டாம் மாப்பிள்ளை.. கௌசல்யா.. அந்தப் பயல் இருக்கும் திசைப் பக்கம் கூட இனித் திரும்பிப் பார்க்க மாட்டாள்..” என்று ராமாமிர்தம் சொல்லி விட்டார்..
மனோஜ் அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை..
‘அதெப்படி மாமா.. அவன் உங்க பக்கத்து ஆத்தில்தான் குடியிருக்கிறானாமே.. அவன் பக்கம் திரும்பிப் பார்க்காமல் உங்க மகளால் எப்படி இருக்க முடியும்..?”
‘அந்த ஆத்தின் சொந்தக்காரன் என் பிரண்டு தான் மாப்பிளை.. அவனை பக்கத்தாத்தை விட்டு காலி பண்ண வைக்க நானாச்சு.. நீங்க கவலையை விடுங்க..”
‘ஆனா.. உங்க மகளும்.. அவனும்.. ஒரே ஆபிஸில்தான் குப்பை கொட்டுகிறாங்களாமே..”
‘அவனை வேலை மாறுதல் வாங்கிக்கிட்டு.. இந்த ஊரை விட்டே போக வைக்கிறேன்..”
இதைக் கேட்;ட மனோஜ் புருவங்கள் முடிச்சிட ராமாமிர்தத்தை இமைக்காமல் பார்த்தான்.. அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் அவர் பரிதவித்தார்..
Reviews – Aarathanai / ஆராதனை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.