Chapter 12

0Shares

கௌசல்யாவின் முகத்தில் தெரிந்த துயரம் வார்த்தைகளில் சொல்ல முடியாததாக இருந்தது.. குற்றுயிராய் கிடக்கும் அடிபட்ட பறவையின் பார்வையை அவளிடம் கண்ட சக்திவேலின் இதயம் கனத்தது..

‘வந்து விடு கௌசி.. என்னோடு வந்துவிடு.. நாம் எங்கேயாவது போய் விடலாம்.. உன் முகமும்.. என் முகமும் தெரியாத ஒரு இடத்தில் புதியதொரு முகவரியை உருவாக்கிக் கொண்டு வாழலாம்..’

சொல்லத்தான் நினைத்தான் சக்திவேல்.. ஆனால் அதைச் சொல்லிப் பயனில்லை என்பதை அறிந்து கொண்ட பின்பு வார்த்தைகளை விரயமாக்குவதில் என்ன லாபம் என்ற நினைவு அவனைத் தடுக்க.. வாய் மூடி மௌனித்தான்..

‘பேசமாட்டேளா..?” கௌசல்யா பிரியப் போகும் பரிதவிப்புடன் கேட்டாள்..

‘என்னடி பேச..? எதைப் பேச..? அதான் என்னை வாயிருந்தும் ஊமையா ஆக்கிட்டயேடி.. இனியும் பேச நமக்குள் என்ன பாக்கியிருக்கு..?”

‘நான் மட்டும சந்தோசமா உங்களை வழியனுப்பறதாய் நினைக்கிறேளா..?”

நெஞ்சில் நிரடும் நெருஞ்சி முள்ளின் வலியைத் தாங்கிக் கொள்ளும் வேதனையோடு கௌசல்யா வினவினாள்..

‘வழியனுப்பனும்னு முடிவு பண்ணிட்டே..அதை நீ சந்தோசமாய் செய்தால் எனக்கென்ன..? இல்லை சங்கடத்துடன் செய்தால் எனக்கென்ன..? நீ என்னை வழியனுப்புகிறது அனுப்புகிறதுதானே..”

அவனது துளைக்கும் கேள்விகள் குறி தவறாமல் அவளது நெஞ்சத்தை துளைத்தன..

‘மத்தளத்திற்கு இரண்டு பக்கமும்.. இடி…’

அவள் கண்களை மூடி அசையாமல் நின்றாள்..

அவளின் அந்தப் தோற்றம் சக்திவேலின் இதயத்தை உலுக்கியது..

இதைப் பார்க்கவா அவள் மேல் உயிரை வைத்து அவன காதலித்தான்..?

‘கலங்காதே கௌசி..”

‘நீங்க கலங்கலையா..?”

‘நான் தாங்கிக் கொள்வேன்.. நீ தாங்கிக்க மாட்டாய்..”

‘உங்க பிரிவையே தாங்கிக்க போகிறேன்.. இதைத் தாங்கிக்கிறவ வேற எதை தாங்க மாட்டேன்..?”

‘திரும்ப எப்ப சந்திப்பது..?”

‘விதியிருந்தால் பார்க்கலாம்…”

விதியின் கட்டளைப்படி அன்று பிரிந்து சென்றவர்கள்.. ஆறு வருடங்கள் கழித்து சென்னையில் சந்தித்திருக்கிறார்க்ள..

அவனை மீண்டும் பார்க்க விதியிருந்தும்..கையில் மூன்று வயது பூஜாவோடு அவள் அவனைப் பார்த்தாள்..

‘கௌசிக்..’  என்று தன் மகன் பெயரை அவன் அவளிடம் சொன்னான்..

இதுதான் விதியா..?

சக்திவேல் முரடன் தான்.. கோபக்காரன்தான்.. யாருக்கும் அஞ்சாத நெஞ்சம் கொண்டவன்தான்..

ஆனால்அவன் கௌசல்யாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு பக்கத்து வீட்டைக் காலி செய்து கொண்டு போனான்..

அந்த  மாத இறுதியிலேயே அந்தியூர் காட்டுப் பக்கம் செய்திகளை சேகரிக்கும் பணிணை ஏற்றுக் கொண்டு மாறுதலாகிப் போனான்..

கௌசல்யா சொன்ன சொல்லுக்காக.. காற்றோடு கலந்து மறைந்து போனான்.. 

 அவள் வாழ்வில் அவனது நினைவுகளின் நிழல்களை மட்டும் விட்டுவிட்டு.. நிஜத்தை மறைத்து பிரிந்து போனான்..

கௌசல்யா மனம் இறுகிப் போனாள்..

‘ஸாரிடி கௌசி.. என்னால்தானே இவ்வளவும்..” வைதேகி விசும்பி அழுதாள்..

கௌசல்யா சுதாரித்தாள்.. இரண்டு நாள்களில் திருமணத்தை வைத்துக் கொண்டு.. வைதேகி குற்ற உணர்ச்சியால் தவித்தால் அவளது திருமண வாழ்வை எப்படி எதிர் கொள்வாள்..?

‘போடி மண்டு.. நீயென்னடி செய்வ..?”

‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறவர்தானே உன் காதலை பிரித்தார்..?”

இதற்கு என்ன பதிலைச் சொல்வது..? அதுதான் உண்மை.. அதைச் சொன்னால் வைதேகி எப்படி மனம் இசைந்து கணவனுடன் வாழ்வாள்..? காலமெல்லாம் அந்த குற்ற உணர்வு அவளைக் கரையானைப் போல அரித்துத் தின்று விடாதா..?

‘அவரிடத்தில் யாரிருந்தாலும் இiத்தான் செய்திருப்பாங்க..”

மனதை கல்லாக்கிக் கொண்டு கௌசல்யா இதைக் கூறினாள்.. தங்கையின் முகத்தையே கூர்ந்து பார்த்த வைதேகியின் முகத்தில் லேசான புன்னகை மலர்ந்தது..

‘உன்னைக் குழந்தைன்னு நினைச்சிருந்தேண்டி.. ஆனா நீ பெரிய மனுஷின்னு நிரூபிச்சிட்ட..”

‘பின்னே நான் பெரிய மனுஷியில்லையா..?”

‘பெரிய மனுஷிதாண்டி.. என்னை விட .. ஏன் இந்த ஆத்தில் இருக்கிறவாளை விடவும் நீதாண்டி பெரிய மனுஷி..”

குரல் தழுதழுக்க கௌசல்யாவைக் கட்டிக் கொண்டாள் வைதேகி..

அவளது அணைப்பின் இறுக்கத்தில் தங்கையின் தியாகத்தைப் புரிந்து கொண்ட நெகிழ்வு இருந்தது..

ராமாமிர்தம்.. வைதேகியின் திருமணத்துக்காக குறித்திருந்த சுபயோக.. சுப நாளும் வந்தது..

மனோஜின் கரம் பற்றி.. அவனது தாலியைக் கழுத்தில் வாங்கிக் கொண்டு அவன் மனைவியானாள் வைதேகி..

அன்றைக்கு இரவு சாந்தி முகூர்த்தம்.. மறுநாள் காலையில் வைதேகியின் முகத்தில் மலர்ச்சியில்லாதது ஆண்டாளின் கண்களில் பட்டுவிட்டது..

‘மாப்பிள்ளை உன்னிடம்  பிரியமாகத்தானே நடந்துக்கிறார்..?” லஜ்ஜையுடன் மகளை விசாரித்தாள் அவள்..

இதைவிட நாசுக்காக எப்படி மகளிடம் ஒரு தாயால் அவளது மண வாழ்க்கையைப் பற்றிக் கேட்க முடியும்..?

‘ம்ம்ம்..”

இந்த ‘ம்ம்ம்’ ற்கு என்ன அர்த்தம்..?

 ஆண்டாள் தலை கவிழ்ந்தாள்.. தனிமையில் அதற்கு மேல் மகளுடன் பேச அவளாலும் முடியவில்லை.. சுற்றிலும் உறவினர் கூட்டமிருக்க.. வைதேகி கணவனுடன் கிளம்பிப் போய் விட்டாள்..

சகோதரியைப் போலில்லாமல் ஒரு தோழியின் சிநேகிதத்தைக் காண்பித்த வைதேகியின் பிரிவு அடுத்த அடியாக கௌசல்யாவின் நெஞ்சில்  விழுந்தது..

கூட விளையாட தமக்கையும் இல்லாமல்.. கூடி வாழ காதலனும் இல்லாமல் தனித்து நின்றாள் கௌசல்யா..

நல்ல வேளையாக அவளது வேலை அவளுக்கு துரத்தும் நினைவுகளிலிருந்து விடுதலை அளித்தது..

இருபத்தி நான்கு மணி நேரத்தில் எட்டு மணி நேரம் வேலை என்றால்.. அதை பத்து மணியாக்கி.. தன் வேலைப் பளுவை அதிகரித்துக் கொண்டாள் கௌசல்யா..

‘சூப்பர் ஆர்ட்டிகல் கௌசல்யா.. கீப் இட் அப்..”

‘கிரேட் கௌசல்யா.. யு டிட் இட்..”

‘குட் ஜாப் கௌசல்யா.. யு அசீவ் இட்..”

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்.. சுந்தரமூர்த்தியின் வாயால் திறமையான நிருபர் என்ற பாராட்டு..

கௌசல்யா சாதித்தாள் .  தன் துறையில் காலூன்றி விட்டாள்.. சுந்தரமூர்த்தியிடம் சொன்னபடி.. தபால் மூலம் இதழியல் படிப்பையும் படிக்க ஆரம்பித்த விட்டாள்..

அப்போதுதான் அவளுக்கு அலுவலக முகவரிக்கு வைதேகியிடமிருந்து முதல் கடிதம் வந்நதது..

‘வைதேகியா கடிதம் போட்டிருக்கிறா..?’

கௌசல்யாவின் புருவங்கள் உயர்ந்தன. கணவன் வீட்டிற்குப் போன பின்பு… கௌசல்யாவிடம ;செல் போனில் கூட வைதேகி பேசுவதில்லை..

கௌசல்யா போன் பண்ணினாலும் .. ‘ம்ம்.. ‘ என்ற முணுமுணுப்புடன் போனை அணைத்து விடுவாள்..

அப்படிப்பட்ட வைதேகியிடமிருந்து கடிதம் வந்தவுடன் மனம் படபடக்க.. கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் கௌசல்யா.. 

‘எப்படியிருக்கிறாய் கௌசி..?’

உனக்கென்ன.. நீ நன்றாகத்தான் இருப்பாய்.. அம்மா.. அப்பா.. நம் தெருவிலிருக்கிறவா.. அப்புறம் ஊரிலிருக்கிறவான்னு அத்தனை பேரின் மத்தியில் அருமையாய் இருப்பாய்..

நான் அப்படியில்லை.. தனிமையில் இருக்கிறேன்.. என் வீடு நிறைய ஜனங்கள் இருக்கிறார்கள்.. ஆனால் எனக்கென்று யாரும் இல்லை.. என் கணவன் உட்பட..

உனக்குத் தெரியுமா கௌசி..? இந்த வீட்டில் யாரும் என்னுடன் பேசுவதில்லை.. என் கணவனும் மற்றவர்களுக்கு எதிரில் என்னுடன் பேசுவதில்லை.. மற்றவர்கள் இல்லாத தனியறையில் பேசுகிறார்.. நிறையப் பேசுகிறார்.. அந்தப் பேச்சுக்கள் எனக்கு நரகத்தின் வாசலை அடையாளம் காட்டுகின்றன்..

ஒரு மனிதனின் மனதிற்குள் இத்தனை வக்கிரமா..? அவர் முகத்தில் தெரியும் அழகு.. அகத்தில் இல்லை கௌசி.. அதில் இருப்பது அழுக்கும் .. சாக்கடையும்தான்..

என்னிடம்  இல்லாத எது உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவனிடம் இருக்கிறது  என்று கேட்டான் செந்தில்..

படிப்பும்.. வேலையும் இருக்கிறது என்று நான் சொன்னேன்.. உனக்கும் அது தெரியும் தானே ..

 அந்தப் படிப்பு இவருக்கு எதைக் கொடுத்திருக்கிறது?  மற்றவர்கள் முன்னால்.. கண்ணியவனாக நடிக்கும் வேசத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது..

அந்த வேலை இவருக்கு எதைக் கொடுத்திருக்கிறது..? நான் அப்படித்தாண்டி.. இதுதான் என் உண்மையான முகம்.. ஊருக்கு நான் காட்டுவது பொய் முகம்.. அதுக்கு இப்ப என்னாங்கிற..? இஷ்டமிருந்தால் என் காலடியில் கிட.. இல்லைன்னா.. வீட்டை விட்டு வெளியில் போ.. என்று நாக் கூசாமல் சொல்லும் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது..

என் படுக்கையiறியன் நான்கு சுவர்கள் அறியும் வேதனைகளையும்.. அந்தரங்க அவமானங்களையும் நீ அறிய நேர்ந்தால் தாங்க மாட்டாய்..

நாணயத்திற்கு மறுபக்கம் ;உண்டு.. உனக்கும்.. எனக்கும் தெரியும்..

மனிதருக்கும் மறுபக்கம் உண்டா..? அதில் இத்தனை விகாரங்கள் உண்டா..?

அப்பா அம்மாவிடம் இந்தக் கடிதத்iத்க காண்பிக்காதே.. இதைப் பற்றிச் சொல்லவும்.. சொல்லாதே.. இது என் மேல் ஆணை…

மரணம் என்பது மிகப் பெரிய விடுதலை என்பதை இந்த திருமணம் எனக்கு உணர்த்தியிருக்கிறது..  வைதேகி..

0Shares

Reviews – Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link