Chapter 01
ஆற்றங்கரை அருகினிலே…
அணைத்து கதை பேசி விட்டான்..
கடற்கரைச் சாலையில் காரோட்டுவது மித்ரனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.. அதுவும் காலை வேளைகளில் காரோட்டுவதை விரும்பி ரசிப்பான். நீலச்சேலையை விரித்து விட்டது போன்ற கடலின் பரப்பு.. சேலையின் பூ வேலைகள் செய்தது போன்ற.. வெண்ணிற அலைகளின் அணிவகுப்பு. காலை நேரத்தில் ஜாகிங் செல்பவர்கள்.. நடைப்பயிற்சி செய்பவர்கள் என்று கண்ணுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் காட்சிகள் ஒருபுறம் அவன் மனதைக் குளிரச் செய்தால் – கடல் காற்றும் முகம் வருடிச் செல்லும் சுகம் அவன் மனதைக் குளிரச் செய்யும்.
காலை நேரத்தில் காணும் மணிதர்களின் முகத்தில்தான் எத்தனை உற்சாகம்..? அன்றுதான் பூத்த புது மலர்போல பள்ளி செல்லும் சிறுவர், சிறுமி முதல் சாலையில் நடக்கும் வயோதிகத் தம்பதிகள் வரை அனைவரின் முகத்திலும் அன்றைய நாளை வரவேற்கும் குதூகலம் தெரியும். அதைப் பார்ப்பதில் மித்ரனுக்கு விருப்பம் அதிகம்.
அவனருகிலிருந்த செல்ஃபோன் அழகான பாடல் ஒன்றைப் பாடி அவனது கவனத்தை ஈர்த்தது. எடுத்து எண்களைப் பார்த்தான். ‘விஸ்வம் அழைக்கிறான்.’ என்றது ஃபோன். பேசினான்.
“சொல்லுடா…”
“இப்ப நீ எங்கேயிருக்கிற மித்ரா..?”
“காருக்குள்…”
“ஜோக்..? பட்.. நான் அதை ரசித்துச் சிரிக்கும் மூடில் இல்லை… ஸோ.. உன் ஜோக்கைத் தூக்கி.. கடலில் போடு..”
“அது எப்படி நான் பீச்ரோட்டில் இருக்கிறேன் என்பதை நீ கரெக்டாக கண்டுபிடித்த…?”
“உன்னைப் பற்றித்தான் எனக்கு தெரியுமே.. சென்னையின் மற்ற இடங்களில் நீ காரோட்டினால் சோழவரம் கார் ரேஸில் ஓட்டுவது போல ஓட்டுவாய்.. அதையே பீச் ரோட்டில் ஓட்டினால் திருவாரூர் தேர் போல இல்ல ஓட்டுவாய்..”
“ஹா… ஹா…”
“சிரிக்காதே.. எனக்கு இங்கே பற்றி எரிகிறது…”
“ஐஸ்வாட்டரை ஊற்றி அணை.. நீயும் சிரிக்க மாட்டாய்.. சிரிக்கிறவனையும் விட மாட்டாய்ன்னா
என்ன அர்த்தம்..? காலையிலேயே உனக்கு என்னடா ஆச்சு..?”
“நேரில் வா சொல்கிறேன்..”
“இப்ப நீ எங்கே இருக்கிற…?”
“எல்லாம் கம்பெனியில்தான்…”
“தோடா.. இதாண்டா உலக அதிசயம். எனக்குப் பின்னால் ஆடி அசைந்து வருகிறவன் இன்றைக்கு எனக்கு முன்னாலேயே ஆபிஸ் போய் உட்கார்ந்து விட்டாயா…?”
“உன்னைத் தேடித்தான் சீக்கிரம் வந்தேன்..”
“நானென்ன உன் காதலியா…? நண்பேன்டா…”
“ப்ச்ச்.. இதுவரை காதலித்துத் தொலைக்கவில்லை.. இனிக் காதலிக்க வழியுமில்லை..”
விஸ்வம் அலுத்துக் கொண்டதைக் கேட்ட மித்ரனின் சிரிப்பு அதிகமானது… அவன் சிரித்துக் கொண்டே.. காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.
“இது வரை… உன்னை யாரும் காதலித்துத் தொலைக்கவில்லைன்னு சொல்லு.. பிளேட்டை மாற்றிப் போடாதே..”
“இரண்டும் ஒன்றுதானே…”
“இரண்டும் வேறு வேறு…”
“சரி.. அப்படியே வைத்துக்கொள். நீ காலகாலத்தில் கம்பெனிக்கு வந்து சேரு…”
“பீச் ரோட்டைத் தாண்டி விட்டேன்.. எண்ணி ஆறே நிமிடங்களில் அங்கே வந்து விடுவேன்.”
சொன்னது போலவே.. மிகச் சரியாக ஆறாவது நிமிடத்தில் மித்ரனின் கார்.. ‘சோனா கம்ப்யூட்டர் சொலுசன்’ என்று நியான் எழுத்துக்கள் மின்னிய கட்டிடத்தின் வளாகத்தில் நுழைந்தது..
“என்ன விஸ்வம்.. ஏன் டென்சனா இருக்கிறாய்…?”
“என்னத்தைச் சொல்ல..? என் வீட்டில் கல்யாணம் பேசுகிறாங்கடா…?”
“யாருக்கு…?”
“எனக்குத்தான்…”
“உனக்கா..? ஐயோ.. பாவம்..”
“என்னைத்தானே பாவம் என்கிறாய்…?”
“இல்லை.. உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகும் பெண்ணைப் பாவம் என்றேன்..”
“டேய்ய்ய்…”
“விடுடா.. விடுடா.. இப்ப விசயத்துக்கு வா.. கல்யாணம் பேசினால்.. போய் பெண்ணைப் பார்.. பிடித்திருந்தால் கல்யாணம் பண்ணிக்கொள்…”
“நான் யாருடா..?”
“இது கூட உனக்குத் தெரியாதா..? ம்ஹூம்.. நீ விஸ்வம்.”
“கடுப்படிக்காதே…”
“அதை நீ எனக்குச் சொல்கிறாயா..? நேரம்டா…”
“ம்ச்ச்.. நான் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர்…”
“ஓ.. நீ அதைச் சொல்கிறாயா…? ஆமாம்.. ஆமாம்.. அதற்கென்ன இப்போது…?”
“என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவள் எப்படி இருக்க வேண்டும்…?”
இதைக் கேட்ட விஸ்வம்.. ஜீன்ஸ்.. கார்கோ காட்டன் சர்ட்.. கூலிங்கிளாஸ்.. நுனிநாக்கில் மீட்டர் இங்கிலிஷ் என்று அல்ட்ரா மாடர்னாக இருந்தான்..
அவனை விசித்திரமாகப் பார்த்த மித்ரன்.. சிரித்தான்.
“ஏண்டா காலையிலிருந்து இப்படிச் சிரித்து என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கறே..”
“இப்படிக் கேள்வி கேட்டால்.. சிரிக்காமல்.. என்னை என்ன செய்யச் சொல்கிற…? உனக்கு வரும் வொய்பைப் பற்றி.. நீதானே கற்பனை செய்து பார்க்க வேண்டும்.. என்னைக் கேட்டால்.. நான் சிரிக்காமல் வேறென்ன செய்ய…?”
“சிரித்தது போதும் மித்ரா.. நான் சொல்வதைக் கவனி..”
“கவனித்தால் போச்சு.. நீ சொல்லு…”
“எனக்கு வரப் போகிறவள்.. என்னைப் போல் சாப்ட்வேர் இன்ஜினீயராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.”
“ஏன்.. வேலை பார்க்கும் பெண்கள்.. உனக்கு கழுத்தை நீட்டமாட்டேன்னு சொல்லிட்டாங்களா..?”
மித்ரனை விஸ்வம் முறைத்த முறைப்பில் அனல் பறந்தது.. மித்ரன் இருகைகளையும் உயர்த்தினான்.
“ஓகே.. ஓகே.. நான் சரண்டர் ஆயிட்டேன். கோபத்தை விட்டுவிட்டு மேலே சொல்லு..”
“டேய்.. பி.ஈ.படித்த பெண்ணாக இல்லா விட்டாலும்.. ஏதாவது ஒரு டிகிரி படித்த பெண் எனக்கு வொய்பாய் வரணும்னு நான் நினைப்பேனா.. மாட்டேனா..”
“நினைப்பாய்தான்…”
“சென்னையில் பிறந்து வளர்ந்த பெண்ணாக இல்லாவிட்டாலும் ஒரு மதுரையோ திருச்சியோ கோயம்புத்தூரோ..”
“ஏன் தமிழ்நாட்டிலிருக்கும் அத்தனை சிட்டிகளின் பெயரையும் ஒப்பித்து விடேன்.. இப்போது நீ என்னதான் சொல்ல வருகிறாய்…?”
“டவுனில் பிறந்து வளர்ந்த பெண்ணாக அவள் இருக்க வேண்டாமா…? பஸ் கூடப் போகாத பட்டிக்காட்டுப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டுமா…?”
“அடப் பாவமே.. அப்படியொரு பெண்ணையா உனக்குப் பார்த்திருக்கிறாங்க…” மித்ரன் பரிதாபப்பட்டான்.
“ஆமாண்டா.. ஆமாம்…” விஸ்வம் சோகமாக கூறினான்.
காலையிலேயே விஸ்வம் சோககீதம் வாசித்தற்கான காரணம் இப்போது மித்ரனுக்கு விளங்கி விட்டது.
விஸ்வம்.. சுடிதார் போடும் பெண்களையே.. ‘பட்டிக்காடு’ என்று சொல்லுவான். அவனுக்குப் போய்.. பஸ் போகாத ஊரில் மனைவி அமைவதா…?
“ம்ஹூம்.. இதைத்தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்ன்னு பெரியவங்க சொல்லி வைத்திருக்கிறாங்களா…?”
“என்னிடம் எந்தப் பெரியவங்களும் வந்து இதைச் சொல்லி வைக்கவில்லை…”
“நான் கேள்விப் பட்டிருக்கிறேன்டா..”
“இப்போ.. என்னிடம் அடிபடப் போகிறாய்…”
“ஓகே.. அந்தப் பேச்சை விட்டு விடுவோம். எந்தப் பெரியவங்க, எதைச் சொன்னால் நமக்கென்ன..? நாம் உன் வுட்பியின் ஊரைப் பற்றிப் பேசலாம்..”
“என் வுட்பியின் ஊரா..? நீ முடிவே பண்ணி விட்டாயா…?”
“அப்போ.. இன்னும் கல்யாணம் முடிவாக வில்லையா..?”
விஸ்வம்.. இமைக்காமல் மித்ராவைப் பார்க்க.. மித்ரன் மீண்டும் கரங்களை உயர்த்தினான்.
“ஏண்டா.. என் வேதனையைப் பார்த்தால் உனக்கு வேடிக்கையாக இருக்கிறதா…?”
“கல்யாணம்தான் முடிவாகவில்லையே.. அப்புறம் ஏன் நீ கவலைப்படுகிறாய்…?”
“இது ஏறக்குறைய முடிவான ஒன்றுதான் மித்ரா..”
“விளங்கச் சொல்லு.. இல்லைன்னா ஆளை விடு.. நீ இப்படியே பேச.. நான் எதையாவது சொல்லிவைக்க.. நீ கனல்வீசும் பார்வையை என் மேல் வீச.. எனக்கு இது தேவைதானா..? இத்தனை வருச பிரண்ட்ஷிப்பை.. மூழ்காத ஷிப்பே நம் பிரண்ட் ஷிப்தான்னு கொண்டாடிக் கிட்டு இருக்கோம். அதை மூழ்க வைத்து விடாதே..”
“மித்ரா… அரசலாறுன்னு ஒரு ஆறு ஓடும் கிராமத்தைப் பற்றி.. நீ அடிக்கடிச் சொல்வாயே..”
“ஆமாம்.. அது என் சித்தியின் ஊர்.. பட்.. நான் ஒருதடவை தான் போயிருக்கிறேன். அதுவும் என் சித்தியின் கல்யாணத்தின் போதுதான்…”
மித்ரனின் தாய் அன்ன பூரணியின் கடைசித் தங்கை லலிதாவிற்கு திருமணம் ஆனபோது.. மித்ரன் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தான்.. சிறுவயது முதல் விளையாட்டுத் தோழியாக இருந்த சித்தியின் மேல் அவனுக்கு பாசம் அதிகம் உண்டு.. லலிதாவிற்கும் மித்ரன் என்றால் கொள்ளைப் பிரியம். அவளைத் திருமணம் செய்து கொடுத்திருந்தது – ‘அரசலாறு’ என்ற ஆற்றோரமாக அமைந்த ‘புன்னை வனம்’ என்ற கிராமத்தில்…
லலிதாவின் திருமணத்தின்போது அந்த ஆற்றில் – படகில் பயணம் செய்துதான் பெண்ணை அழைத்துப் போனார்கள். அந்த ஊரில் ஒருவாரம் தங்கியிருந்தான் மித்ரன்.. பச்சைப் பசேலென்ற பசுமையான வயல்களும் ஆற்றங்கரையோரமாக அமைக்கப்பட்டிருந்த படித்துறையும்.. ஊரின் நடுவிலிருந்த பெருமாள் கோவிலும்.. இன்னும் அவன் நினைவுகளில் மிதந்தன.
“ஊருன்னா அதுதாண்டா ஊர்.. என்ன ஒரு காற்று.. என்ன ஒரு பசுமை.. ஊரோரமாய் ஓடும் ஆறுன்னு அங்கிருப்பவர்கள்.. இயற்கையை அனுபவித்து, ரசித்து வாழ்கிறாங்கடா.. அவங்க கொடுத்து வைத்தவங்க..”
இது விஸ்வத்திடம்.. மித்ரன் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். அதைத்தான் விஸ்வம் இப்போது நினைவு படுத்துகிறான்.
“பென்ட்டாஸ்டிக் வில்லேஜ் டா அது. என்னால்தான் அங்கே போக முடியாமல் போய்விடுகிறது. சித்திக்கு அதில் ரொம்ப வருத்தம். ஒவ்வொரு தடவையும் அங்கே போகணுமுன்னு புரோக்ராம் பிக்ஸ் பண்ணி வைத்திருப்பேன். கடைசி வினாடியில் அது கேன்ஸலாகி விடும். அந்த ஊருக்கு என்ன..? நீயேன் அதைப் பற்றிப் பேசுகிற…?”
“அந்த ஊரில் இருக்கும் பெண்ணைத்தான் என் தலையில் கட்டிவைக்க.. என் வீட்டில் முடிவு செய்திருக்கிறாங்க…”
“ஈ ஸிட்…?”
மித்ரன் ஆச்சரியமாக நண்பனை நோக்கினான். ஆறோடும் அந்தக் கிராமத்தில் அதைவிட அதிகமான ஆச்சரியங்களை அவன் சந்திக்கப் போகிறான் என்பதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.
Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.