Chapter 04
இது நினைக்க மட்டுமே தெரிந்தமனம்..
இதற்கு மறக்கத் தெரியாது…
கும்பகோணத்தில் ரயிலை விட்டு இறங்கிய மித்ரன்.. டாக்ஸியைப் பிடித்தான். ஆற்றங்கரையில் டாக்ஸியை அனுப்பிவிட்டு – சுழித்தோடும் ஆற்றின் கரையில் நின்று கொண்டு நீரைப் பார்த்தான்.
இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு.. பருவப் பெண்ணின் குதூகலத்துடன் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது நதி.. தொலைவில் படகு ஒன்று நீரில் மிதந்து வந்து கொண்டிருந்தது.. மித்ரன் நதியோரம் நடந்தபடி.. படகுக்காக காத்திருந்தான்.
பச்சைப் பசேலென்ற வயல் வெளி.. பசும் போர்வையை அந்தப் பிரதேசம் முழுவதும் போர்த்தி விட்டது போல.. காணும் இடங்களிலெல்லாம் பசுமைதான் தெரிந்தது.. ஆற்றங்கரையின் இருபக்கமும் அடர்ந்திருந்த தென்னந்தோப்புகளை.. தூரத்திலிருந்து பார்க்கும் போதே.. மனது லேசாக மாறுவதை உணர்ந்தான் மித்ரன்..
நீரின் குளுமையைத் தாங்கிய ஈரப்பசை கொண்ட குளிர்ந்த காற்று அவன் முகத்தில் மோதியது. பயணக் களைப்பு – இருந்த இடம் தெரியாமல் மறைவதை மித்ரன் வியப்புடன் உணர்ந்தான்.
படகுத்துறையில் கூட்டம் அதிகமில்லை. படகு அருகில் வந்ததும்.. மித்ரன் படகில் ஏறிக் கொண்டான். நீரைக் கிழித்துக் கொண்டு.. படகு செல்ல ஆரம்பித்தது.. மித்ரன் அந்த அனுபவத்தை மிகவும் ரசித்தான். படகின் ஓரமாக குனிந்து நீரில் கைகளை விட்டு அளைந்தான். படகின் மீது நீரின் அலைகள் மோதி விலகுவதைக் காணக்காண அவனுக்கு தெவிட்டவேயில்லை..
ஆற்றங்கரையின் ஓரமாக இருந்த நாணல்கள் அவனை ‘வா’வென்று வரவேற்பது போல் அசைந்து ஆடின.
“ஊருக்கு புதுசுங்களா..?” துடுப்பைக் போட்டுக் கொண்டிருந்த படகுக்காரன் வினவினான்.
“ஆமாம்…”
“புன்னை வனத்தில் யார் வீட்டுக்குப் போகிறீங்க..?”
“சிவப்பிரகாசத்தின் வீட்டிற்கு…”
“அவருக்கு நீங்க என்னவாகணும்..?”
‘நீ இதையெல்லாம் எதற்குக் கேட்கணும்..?’ வாய் வரை வந்த வார்த்தைகளைத் தடுத்து நிறுத்திக் கொண்டான் மித்ரன்.
இது கிராமம். இவர்கள் கிராமத்து மனிதர்கள். இங்கே ரகசியம் பேணப்படுவது இல்லை. ‘அடுத்தவரின் அந்தரங்கத்தில் தலையிடக்கூடாது. அது நாகரிகம் இல்லை.’ என்பதெல்லாம் இவர்களது அறிவிற்கு எட்டாத விசயங்கள்.
இந்த படகுக்காரனுக்குத் தெரியாமல் புன்னை வனத்திற்குள் ஒரு பறவைகூட நுழைய முடியாது என்று நினைத்துக் கொண்டவன் புன்னகையுடன் படகுக்காரனுக்கு பதில் சொன்னான்.
“நான்.. அவருடைய மனைவியின் அக்கா மகன்..”
“சுத்திவளைச்சு ஏன் மூக்கைத் தொடறீங்க.. அவருக்கு நீங்க மகன் முறையாகணும். அதைச் சொல்லி விட்டுப் போவிங்களா… என்னமோ போங்க.. இந்தக் காலத்து இளவட்டப்பசங்களுக்கு ஒத்தைவரியில் பதில் சொல்லத் தெரியல.. அதிலயும் நீங்க பட்டணத்துக்கார ஆளு போல இருக்கு.. உங்களுக்கு எங்களைப் போல அளவாப் பேசத் தெரியாதுதான்…”
‘ம்ஹூம்.. முதலில் நீ மூச்சை விடாமல் பேசித் தொலைக்கும் இந்த தொணதொணப்பை நிறுத்துய்யா.. குறைவாய் பேசுவதைப் பற்றி நீ சொல்லி நான் கேட்கணுமுன்னு என் தலையில் எழுதிவைத்திருக்கு. எல்லாம் அந்த விஸ்வம் பயலால் வந்தது…’
படகு அக்கரையைத் தொட்டு விட்டது. பைகளை எடுத்துக் கொண்டு இறங்க முடியாமல் மித்ரன் தடுமாறினான்.
“நீங்க முதல்ல இறங்குங்க தம்பி.. நான் பையை எடுத்துத் தரேன்..” படகுக்காரன் கூறினான்.
“தேங்க்ஸ்…” மித்ரன் இறங்கிக் கொள்ளவும் – படகு ஆடியது.
லாவகமாய் பைகளை எடுத்து மித்ரனிடம் கொடுத்து விட்டு.. படகை ஓட்ட ஆரம்பித்தான் படகுக்காரன்..
ஆற்றங்கரை மணல் வெள்ளைநிறப் பொடிப்பொடி கற்களுடன் பளபளத்தது. டிராவல் பேக்குகளை இருபக்க தோளிலும் மாட்டிக் கொண்டு ஊருக்குள் நடந்தான் மித்ரன். எதிரே சிவப்பிரகாசம்.. வேக நடையுடன் வந்தார்..
“நேத்துத்தான் மதினியிடமிருந்து ஃபோன் வந்துச்சு.. பையைக் கொடு.. உடம்புக்கு சரியில்லையாமே.. இப்ப எப்படி இருக்கு..” என்று.. வேக மூச்சுடன் விசாரித்தார்.
“பயப்படும்படி ஒன்றுமில்லை சித்தப்பா.. வொர்க்லோடு அதிகம்.. ஜஸ்ட் ஃபார் எ சேன்ஜ் வெளியூருக்குப் போய் வாங்கன்னு டாக்டர் சொன்னார். நம்ம ஊரு நினைவுக்கு வந்தது. கிளம்பி வந்துவிட்டேன்..” என்றான் மித்ரன்.
தெருமுனையிலேயே லலிதாவின் மகனும்.. மகளும் ஓடிவந்து மித்ரனைக் கட்டிக் கொண்டார்கள்..
“நீங்க வருவீங்கன்னு அம்மா சொன்னதும் நான் ராத்திரி முழுவதும் தூங்கவேயில்லை அண்ணா…” என்றான் பத்துவயது அருண்.
“பொய்.. இவன் கும்பகர்ணன் போலக் குறட்டை விட்டுக் கொண்டு தூங்கினான். நான்தான் விடியும் வரை விழித்திருந்தேன்..” என்று தமையனுக்கு பழிப்புக் காட்டினாள் எட்டு வயது அபிநயா.
பைகள் இரண்டையும் சிவப்பிரகாசம் வாங்கிக் கொள்ள.. இரண்டு குழந்தைகளும்.. இரண்டு பக்கமும்.. கையைப் பிடித்துக் கொண்டு வர அந்தத் தெருவில் நடந்தபோது.. சித்தி குடும்பத்தின் வரவேற்பை நினைத்து மித்ரனின் நெஞ்சம் நிறைந்திருந்தது.
“என்னண்ணே.. வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காப்புல இருக்கு..”
வழி நெடுக விசாரணைகள். முகமெல்லாம் பெருமையுடன் மலர சிவப்பிரகாசம்.. எல்லோரிடமும்…
“எங்க லலிதாவின் அக்கா மகன்.. சென்னையில் பெரிய கம்ப்யூட்டர் இன்ஜினீயர்.. ஒரு மாதம் எங்க வீட்டில் விருந்தாளியாக வந்திருக்கிறான்..” என்று சொல்லிக் கொண்டே.. மித்ரனை அழைத்துக் கொண்டு போனார்.
வீட்டு வாசலில் லலிதா காத்திருந்தாள். சிறுவயதில் பாவாடை தாவணியுடன்.. சிறுவனான தன்னைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு.. ஊரைச் சுற்றி வந்த சித்தியா இவள்.. என்று எப்போதும் ஏற்படும் வியப்பு.. அப்போதும் மித்ரனுக்கு தோன்றியது..
பழைய லலிதா குறும்பும்.. கண்களில் சிரிப்புமாக வளைய வந்தவள். அவளுக்கு கால்கள் தரையில் பாவாது.. எப்போதும் தாவிக்குதித்து ஓடிக் கொண்டிருப்பாள்.
இப்போதைய லலிதாவின் முகத்தில் மென்மையும்.. கண்களில் சாந்தமும் குடி கொண்டிருந்தன. அந்த அதிகாலை வேளையிலும் குளித்து ஈரத்தலையை தளர்வாக விரிய விட்டு, கூந்தலின் நுனியில் சிறிதாகக் கொண்டையிட்டு.. நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டின் மேலும் கூந்தலின் வகிட்டிலும் குங்குமம் இட்டு மங்களகரமாகக் காட்சியளித்தாள்.
வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் என்பதை அவள் கையிலிருந்த கோலமாவுக் கிண்ணம் உணர்த்தியது. வாசலில் பரந்து விரிந்திருந்த புள்ளிக் கோலத்தை ஆர்வத்துடன் பார்த்தான் மித்ரன்…
‘இதெல்லாம் சென்னையில் பார்க்க முடியாது..’
“வாடா மித்ரா.. இப்போத்தான்.. என் வீட்டிற்கு வர உனக்கு வழி தெரிந்திருக்கா…?” என்று வரவேற்றாள் லலிதா.
“என்ன செய்ய சித்தி.. வேலை அதிகம்…”
“ஒரு வழியாய் உன்னை இந்த ஊருக்கு வரவைக்க.. உனக்கு ஒற்றைத் தலைவலி வரணும்னு விதிச்சிருக்கு. உள்ளேவா…”
‘ஒற்றைத் தலைவலியா..? வெறும் தலைவலி. எப்போது ஒற்றைத்தலைவலியாய் மாறியது…!’ குழம்பிப் போனான் மித்ரன்.
‘எனக்கு வந்திருப்பதே பொய்த்தலைவலி. அது இரட்டைத் தலைவலியாக இருந்தால் என்ன.. இல்லை.. ஒற்றை தலைவலியாக இருந்தால் என்ன..? ஏதோ ஒரு தலைவலின்னு விட்டு விட்டுப் போக வேண்டியதுதானே’
கிராமத்துப் பாணியில்.. வாசலுக்கு முன்னே.. நிறைய இடம் விட்டுக் கட்டப்பட்டிருந்த சிவப்பிரகாசத்தின் மாடிவீட்டை வேடிக்கை பார்த்த வண்ணம்.. உள்ளே நுழைந்தான் மித்ரன்.
ஹாலில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து.. காபி குடித்துக் கொண்டிருந்தார் தண்டாயுதபாணி – சிவப் பிரகாசத்தின் அப்பா.. எழுபது வயதானாலும்.. திடகாத்திரமாய் – ஆரோக்கியமாய் இருந்தார்.
“வாப்பா.. மித்ரா.. பிரயாணம் சௌகரியமாக இருந்துச்சா…?” மித்ரனைக் கண்டதும் வரவேற்றார்.
“நோ பிராப்ளம் தாத்தா…” சென்னையில் பேசும் நினைவில் ஆங்கிலத்தில் பேசிவிட்டோமே.. என்று மித்ரன் நாக்கைக் கடித்துக் கொண்ட போது..
“தட்ஸ் குட்…” என்று அவனை அதிரவைத்தார் தண்டாயுதபாணி.
“என்ன பார்க்கிற..? நான் அந்தக்காலத்து எஸ்.எல்.ஸி. இப்ப எல்லாம் நீங்க என்ன இங்கிலீஷ் பேசறீங்க.. நாங்க பேசின இங்கிலீஷ்.. வெள்ளைக்காரன் விட்டுட்டுப் போன இங்கிலிஷ்…” பெருமையாக தன் நரைத்த மீசையை முறுக்கி விட்டுக் கொண்டார் அவர்.
“மித்ரா…” லலிதா அழைக்கும் குரல் கேட்டதும் பின்பக்கமாய் போனான்.
“முதலில் காபியைக் குடி.. அப்புறமாய்.. மாடியிலிருக்கும் ரூமிற்குப் போகலாம்..” மித்ரனின் கையில் காபித்தம்ளரைக் கொடுத்தாள்.
சமையலறையின் அருகேயிருந்த அந்த அறையில் போடப்பட்டிருந்த சாப்பாட்டு மேஜையின் முன்னாலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு.. காபியை குடிக்க ஆரம்பித்தான் மித்ரன்..
“யாருடாப்பா அது.. லலிதாவின் அக்கா மகனா..? அப்பப் பார்த்தது. அடையாளமே தெரியாமல் வளர்ந்துட்ட.. ஊர்ல உன் அம்மா, அப்பா, தங்கச்சியெல்லாம் சௌக்கியமா..?” என்று வினவியவாறு சமையலறையின் உள்ளேயிருந்து லலிதாவின் மாமியார் கோதாவரி வெளியே வந்தார்.
‘ஃபைன் பாட்டி..!’ என்று சொல்ல வாயெடுத்தவன், தண்டாயுதபாணியின் தாக்குதலை நினைவுக்கு கொண்டு வந்து..
“எல்லோரும் சௌக்கியமாய் இருக்காங்க பாட்டி…” என்றான் வெகு சமர்த்தாக.
மித்ரனை அழைத்துக் கொண்டு மாடியேறினாள் லலிதா.. மாடி பால்கனியில் இருந்து பார்த்தால் ஆறு.. வெகு அருகில் ஓடிவது போல.. அழகாகத் தெரிந்தது.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல் வெளியின் பசுமை தெரிந்தது. ஊருக்கே நடுவே இருந்த பெருமாள் கோவிலின் கோபுரம் தெரிந்தது.
“தினமும் கோபுர தரிசனம் கிடைக்குது சித்தி உங்களுக்கு.. நீங்க கொடுத்து வைத்தவங்க தான்..” மித்ரன்.. மாடி பால்கனியின் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து கொண்டு கூறினான்.
“நிஜம்தாண்டா…” லலிதா கோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டே மாடியறையின் கதவைத் திறந்தாள்.
உள்ளே கட்டிலில் புது மெத்தை போடப்பட்டிருந்தது. புதிய மெத்தை விரிப்புகளும்.. தலையணைகளும் இருந்தன..
“எனக்காக இவ்வளவு தூரம் சிரமப் படணுமா சித்தி..” மித்ரன் சங்கடப்பட்டான்.
“இது சிரமமாடா.. நீ என் வீட்டில் வந்து ஒருமாதம் இருக்கப்போவது எனக்கு எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா..? வராதவன் வந்திருக்கிற.. உன்னை – ராஜா மாதிரி கவனிச்சுக்கலைன்னா.. நானெல்லாம் எப்படிடா உன் சித்தின்னு சொல்லிக்குவேன்..” லலிதா பரிவுடன் அவனைப் பார்த்தாள்.
அவனுக்காக தயார்படுத்தப்பட்டிருந்த அறையில் தன் பைகளை வைத்த மித்ரன் கட்டிலில் கால் நீட்டிப் படுத்தான்.
Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.