Chapter 05
வானத்தில் வேறொரு நிலவு வருமோ…?
என்மனதினில் வேறொரு நினைவு வருமோ…?
‘வராதவன்.. வந்திருக்கிறாய்..’ இது ஒன்றுதான் லலிதாவின் வீட்டிலுள்ளவர்கள் வாயிலிருந்து வந்தது. மித்ரனுக்கு தன் பெயரே மறந்து போய்.. அந்த வார்த்தைகள் தான்.. தன் பெயரோ என்று சந்தேகமே வந்துவிட்டது. எல்லோரும் அவனைக் கொண்டாடினார்கள். உபசரிப்பில் மூழ்கி எழுந்த மித்ரன்.. மதிய உணவிற்குப் பின்.. நன்றாகத் தூங்கி எழுந்தான். மாலையில் காபி டிபனை ஒரு கை பார்த்து விட்டு.. ஆற்றை வேடிக்கை பார்த்துவிட்டு வருவதாக லலிதாவிடம் சொல்லி விட்டு வெளியே நடந்தான்.
மாலை வெயில் இதமாக அவனைத் தொட்டு விளையாடியது. கிராமத்திற்கு வெகு அருகில் துள்ளலுடன் ஓடிக் கொண்டிருந்தது ஆறு.. அவனைக் கண்டதும்.. அலைகள் சந்தோசத்துடன் கரை மோதின. கரையில் அடர்த்தியாக வளர்ந்திருந்தன நாணல்கள்,
தண்ணீரை விட்டு விலக மனமில்லாமல்.. காதலன் காதலியைத் தொட்டு விளையாடுவது போலத் தண்ணீரைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. கரையோர செடிகளின் இடையே தவளையின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
படித்துறையில் யாருமில்லை. மித்ரன் படித்துறையில் கால்பதித்து ஆற்றங்கரையின் அந்தி நேரத்து அழகை ரசித்துப் பார்த்தான். கரையோரத்தில் இருந்த தென்னந்தோப்பு – அடர்த்தியாக இருந்த மரத்தின் கிளைகள் – படித்துறைக்கு குடை பிடிப்பது போல கிளை விரித்துப் பரந்திருந்தது.
மித்ரன்.. படித்துறையின் பக்காவட்டுச் சுவரில்.. கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்தான். ஆற்றின் நீர்.. சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது. வானத்தில்.. பறவைகள் கூட்டுக்குத் திரும்ப கூட்டம் கூட்டமாக தென்னந்தோப்புகளை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. மித்ரன் அமர்ந்திருந்த படித்துறையை ஒட்டிய மரத்தின் மீது பறவைகள் வந்து அமரத் தொடங்கின.
பறவைகளின் சத்தம்.. ஒரு கலவையாக.. பாட்டுப் போல மித்ரனுக்கு கேட்டது. அவன் அந்த ஒலியையும்.. ஆற்றங்கரையின் அந்த அந்தி நேரத்துச் சூழலையும் மிகவும் ரசித்து அனுபவித்தான்.
‘தேங்க் யு விஸ்வம்..’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
‘அவன்hல்தானே.. இந்தக் கிராமத்தின் அழகை ரசிக்க இப்படி ஒரு ஓய்வான மனநிலையோடு வர முடிந்தது…’ என்று மித்ரன் நினைத்துக் கொண்டான்.
தெலைவினில் படகு வருவது தெரிந்தது. ஏனோ மித்ரனுக்கு வாய் விட்டுப் பாட வேண்டும் போல இருந்தது. ஆளரவமில்லாத அந்த அந்தி நேரத்தின் ஆற்றங்கரையின் சூழ்நிலை கொடுத்த தைரியத்தில்.. அவன் வாய் விட்டுப் பாடினான்.
“அமைதியான நதியினிலே ஓடும் – ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்..
காற்றினிலும்.. மழையினிலும்..
கலங்க வைக்கும்.. இடியினிலும்..
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாடும்…”
அவனது பாடலைக் கேட்ட ஆற்று நீர்.. படித்துறையின் மீது மோதித் தன் பாராட்டைத் தெரிவித்துக் கொண்டது.. கரையோரமாக அடர்ந்திருந்த நாணல்கள்.. மித்ரனின் கருத்தைக் கவர்ந்தன.
“ஆற்றங்கரை மேட்டினிலே…
ஆடிநிற்கும் நாணலது..
காற்றடித்தால் சாய்வதில்லை…
கனிந்த மனம் வீழ்வதில்லை..”
தன் போக்கில் உரக்க.. நாணல்களைப் பார்த்துப் பாடிக் கொண்டிருந்த மித்ரனின் முதுகுக்குப் பின்னாலிருந்து.. ‘கலீர்’ என்ற – பெண்ணின் சிரிப்பொலி கேட்டது..
மித்ரன் சட்டென்று பாட்டை நிறுத்திக் கொண்டான். சுற்று முற்றும் பார்த்தான். யாரையும் காணவில்லை…
“என்னடா இது.. ஒரு பெண் சிரித்தது போலச் சிரிப்புச் சத்தம் என் காதில் விழுந்ததே.. அது பிரமையா..” வாய்விட்டு சொல்லிக் கொண்டே எழுந்து நின்றான்.
லேசான சலங்கையொலி கேட்டது.
“ஒரு வேளை மோகினிப் பிசாசோ…” என்று சொல்லியவனின் பார்வையில் படித்துறையை ஒட்டியிருந்த அரசமரத்தின் அடியிலிருந்த பிள்ளையாரின் சிலை கண்ணில் பட்டது..
அரச மரத்தின் அடியில் சிமிண்ட் மேடை இருந்தது. அதில் கம்பீரமாக வீற்றிருந்தார் பிள்ளையார்.
“கோவில் இருக்குமிடத்தில் மோகினிப் பிசாசு வராதே…” என்று அவன் தாடையைத் தடவியபடியே.. தனக்குத்தானே பேசிக் கொள்ள.. இப்போது சிரிப்பு சத்தம் வலுத்தது.
பிள்ளையார் வீற்றிருந்த அரச மரத்தின் பின்னாலிருந்து சிரிப்புச் சத்தம் கேட்க.. மித்ரன் மரத்தைச் சுற்றிப் பின்பக்கமாக எட்டிப் பார்த்தான். பார்த்தவனின் விழிகள் வியப்பால் விரிந்தன.
பாவாடை தாவணி அணிந்த அழகிய பெண்ணொருத்தி இடுப்பில் குடத்துடன்.. வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.
மித்ரனின் பார்வையை உணர்ந்ததும்.. அவள் சிரிப்பை அடக்கிக் கொள்ள முயன்றாள். ஆனாலும் பாவம் மித்ரன் அடித்த கூத்தைக் கண்டவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை போல..
வாயைப் பொத்திக் கொண்டு மரத்தின் பின்னாலிருந்து வெளிப்பட்டு படித்துறையில் இறங்கினாள்.
இப்போது மித்ரனால் அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது. ஒல்லியான தேகம். மஞ்சளை அரைத்துப் பூசியது போன்ற நிறம். வட்ட வடிவ முகத்தில் அழகான பெரிய கண்கள். பார்த்தவுடன் மித்ரனின் கருத்தைக் கவர்ந்தது அவளுடைய நீண்ட கூந்தல்தான்.
அவ்வளவு நீண்ட பின்னலை உடைய பெண்ணை அவன் அதற்கு முன்னால் பார்த்தது இல்லை..
சென்னையின் நாகரிகப் பெண்கள்.. முடியை வெட்டி விட்டிருப்பார்கள். மித்ரனின் தங்கை மைதிலியும் அதைத்தான் செய்திருந்தாள். மற்றபடி மித்ரனின் குடும்பத்து பெண்களிடம் நீண்ட கூந்தல் இருக்கவில்லை.
படித்துறையின் கடைசிப் படியில் நின்று கொண்டு.. மித்ரனை ஓரக்கண்ணால் பார்த்தபடி தனக்குள் பொங்கிச் சிரித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் பின்னல்.. முழங்கால்களைத் தாண்டி.. தொங்கிக் கொண்டிருந்தது.
புன்னைவனத்தில் இப்படியொரு பேரழகியைச் சந்திக்கப் போவதை அறியாதவனாக இருந்த மித்ரன்.. அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையை உணர்ந்த அந்தப் பெண் குடத்தில் ஆற்று நீரை நிரப்பி.. இடுப்பில் வைத்துக் கொண்டு வெட்கத்துடன் தலைகுனிந்தபடி.. படியில் ஏறினாள். மித்ரன் நின்று கொண்டிருந்த மரத்தடிக்கு வந்தவள்.. மேடைமீது ஏறி பிள்ளையாரின் மேல்.. குடத்திலிருந்து நீரை ஊற்றினாள்.
அவனைக் கடந்து மீண்டும் படித்துறைக்கு போகும் போது ‘கலுக்’ கென்று வாய் பொத்தி சிரித்தாள்.
அவள் எதை நினைத்துச் சிரிக்கிறாள்..? தன் பாட்டை நினைத்தா.. இல்லை பேச்சை நினைத்தா.. என்ற யோசனையுடன் அவளிடமிருந்து பார்வையை விலக்க முடியாமல் பார்த்துக் கொண்டே நின்றான் மித்ரன்.
மூன்று குடம் தண்ணீர் ஊற்றியதும் அவள் ஆற்றோரமாக இருந்த செடிகளில் இருந்த பூவைப் பறித்துக் கொண்டு வந்து பிள்ளையாரின் தலையில் சூடினாள். மேடையில் இருந்த கல் விளக்கில் எண்ணெயை ஊற்றி.. திரியைத் தூண்டி விட்டு விளக்கேற்றி வணங்கினாள். பின்னர் குடத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
போவதற்கு முன்னர்.. மித்ரனை ஜாடையாகப் பார்த்து பொங்கிச் சிரித்து விட்டுத்தான் போனாள்.
இவ்வளவு அழகான பெண்.. நினைத்து நினைத்து சிரிக்கும்படி பேசிவைத்து விட்டோமே என்று தன்னைத் தானே நொந்து கொண்டு மித்ரன் நின்றபோது படகுத் துறையில் படகு வந்து நின்றது..
“யாரைத் தம்பி.. அப்படிப் பார்க்கறீங்க…” என்று வினவியபடி.. படகுக்காரன் இறங்கினான்.
“அதோ அந்தப் பெண்ணைத்தான்..” என்றான் மித்ரன். தூரத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணைப் பார்த்த படகுக்காரன்..
“ஓ.. தேவிப்பாப்பாவைச் சொல்கிறீர்களா.. ஆமாம் தம்பி.. நீங்க ஏன்.. அந்தப் பெண்ணை இந்தப் பார்வை பார்க்கறீங்க..?” என்று கேட்டான்.
“இது என்னங்க வம்பாய் போச்சு.. பார்க்கக் கூடக் கூடாதா…?”
“ஆமாம்.. இது கிராமம் தம்பி.. வயசுப் பெண்ணை இப்படிப் பார்க்கக் கூடாது..”
‘வயதுப் பெண் மட்டும் என்னைப் பார்த்து அப்படி சிரிக்கலாமா…?’
மித்ரன் மனதில் நினைத்ததைக் கேட்கவில்லை..
“என்ன ராமையா.. யாருகூட பேசிக்கிட்டு இருக்கே..” யாரோ ஒருவர் படகுத் துறைக்கு வந்தார்.
“நம்ம சிவப்பிரகாசம் ஐயாவோட மகன்கிட்டத்தான் பேசிக்கிட்டு இருக்கேன்..” என்னவோ.. காலம்காலமாய் பழகியதைப் போலக் கூறிக்கொண்டே படகில் ஏறிக் கொண்டார் ராமையா…
மித்ரனின் உதடுகளில் லேசான புன்னகை படர்ந்தத. இதுதான் கிராமம் என்று அவனுக்குத் தோன்றியது. அந்தப் புன்னகையுடன் வீட்டிற்குப் போனான்.
பக்கத்து வீட்டுப் பெண்மணியுடன்.. வாசல் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கோதாவரி, அவனைப் பார்த்ததும் சிரித்தாள். பக்கத்து வீட்டுப் பெண்.. மரியாதையுடன் எழுந்து நின்று கொண்டாள்.
“என் பேரன் தான். வேறு யாருமில்லை…” கோதாவரி அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொன்னாள்.
“அக்கா மகன் வரப் போவதாக லலிதா சொல்லிக் கொண்டிருந்தாளே.. அந்தத் தம்பியா…”
“ஆமாம்.. மெட்ராஸில் பெரிய என்ஜினீயர்…”
கிராமங்களில் எதுவும் தனிப்பட்டதில்லை – வீட்டுக்கு வரும் விருந்தாளி உள்பட என்று நினைத்துக் கொண்டான் மித்ரன். அந்தப் பெண்ணைப் பார்த்து மரியாதைக்காக ஒரு சின்னச் சிரிப்பை உதிர்த்து விட்டு வீட்டுக்குள் சென்றான்.
“எப்படியிருக்கு மித்ரா.. எங்கள் புன்னை வனம்..” சமையலறையில் வேலையாக இருந்த லலிதா வினவினாள்.
“அட்டகாசம் சித்தி.. ஆனால் ஒன்று.. எனக்குத்தான் யாரையும் தெரியமாட்டேன் என்கிறது. ஆனால்.. இந்த ஊரே என்னைப் பற்றி விசாரிக்கிறது..”
“நாளையிலிருந்து விசாரிக்காது..”
“ஏன்…?”
“விடிவதற்குள் நீ யார், உன் பெயர் என்ன, உன் ஊர் எது.. உத்தியோகம் எங்கே, இந்த ஊரில் இன்னும் எத்தனை நாள்களுக்கு நீ தங்கப் போகிறாய் என்கிற முழுவிவரமும் இந்த ஊருக்குத் தெரிந்திருக்கும்.”
“என்னவோ போங்க.. இந்தக் கிராமத்தின் பழக்கவழக்கம் இன்னும் எனக்கு பிடிபடவில்லை…”
“அது பிடிபட நாளாகும்..”
“ஏன் சித்தி.. வயதுப் பெண் ஒருத்தி என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள். அது தப்பில்லையாம். பதிலுக்கு அவள் ஏன் இப்படிச் சிரிக்கிறாள்ன்னு நான் பார்த்தால்தான் தப்பாம்..”
“யார் சொன்னது…?”
“ஓடக்காரன்…”
“ராமய்யாவா…?” லலிதா சிரித்தாள்.
“அவனேதான்..” மித்ரனும் சேர்ந்து சிரித்தான்.
“அது சரி.. அது எந்தப் பெண்…?”
“யாருக்குத் தெரியும்..? ஏதோ.. தேவின்னு பெயராம்..”
“தேவியா..? பெரிய வீட்டுப் பெண்.. அவள் தேவையில்லாமல் யாரிடமும் பேசமாட்டாளே.. உன்னைப் பார்த்து எப்படிச் சிரித்தாள்..?”
“இதை.. அவளிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும்..”
மித்ரன்.. சமையலறை மேடை மேல் சுவாதீனமாக ஏறி உட்கார்ந்து bhகண்டான். உறவினர்களைப் பற்றி பேச்சு திசை மாறியதில் அவளை சற்று நேரத்தில் மறந்து விட்டான்.
Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.