Chapter 06
தூது சொல்ல யாருமில்லை..
துன்பம் நீங்க.. நீ.. துணை வரவுமில்லை…
அவள் வீட்டுக்குள் சென்று குடத்தை வைத்த பின்னும் பொங்கிச் சிரித்தாள். அவள் மனதிற்குள் அவன் பாடிக் கொண்டிருந்த காட்சி தோன்றியது.
எத்தனை இயல்பாக பாடினான்..? என்னவோ, மேடையில் உட்கார்ந்து கச்சேரி பண்ணுகிறது போல.. ஒரு கையால் தொடையில் தாளம் போட்டுக் கொண்டு மறுகையை மெய்மறந்து விரித்துக் கொண்டு.. அனுபவித்துப் பாடிக் கொண்டிருந்தானே.. அவன் பாட்டை யார் ரசித்ததாம்..? அந்த நாணல்களும் நதி நீரும் ரசித்ததா..?
தனியாக அமர்ந்து பாடிக் கொண்டிருந்தவனின் பாடலில் குறுக்கிட மனமில்லாமல் அவன் மரத்தின் பின்னால் மறைந்து கொண்ட போது.. அவன் நாணல்களுடன் பேசுவது போல.. அவற்றைப் பார்த்து கைநீட்டி பாடியதைக் கேட்டதும் அவள் சிரித்து விட்டாள்.
அவள் சிரிப்பொலியைக் கேட்டதும், அவன் எழுந்து தனக்குத்தானே பேசிக் கொண்டதை நினைத்துப் பார்த்தவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..
‘அவன் யாராக இருக்கும்..? இந்த ஊருக்கு எப்போது வந்தான்..? ஊரோடு ஒட்டாத களையோடு இருக்கிறானே..’
யோசனையுடன் உள்ளே சென்றவளைப் பார்த்த அவளுடைய அம்மா சிந்தாமணி,
“என்னம்மா.. பிள்ளையாருக்கு விளக்கேற்றி விட்டு வந்தாயா..?” என்று கேட்டாள்.
“செய்து விட்டேன்ம்மா..”
“ஏன் சிரித்துக் கொண்டிருக்கிறாய்…?”
“ஒன்றுமில்லையே…”
“சரி.. போய் நம் சாமி மடத்தில் விளக்கேற்று…”
“சரிம்மா…”
உள்ளே செல்லும் மகளைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவள்..
“சிந்தாமணி…” என்று கணவன் அழைத்ததும் –
“என்னங்க..” என்று முன்பக்க ஹாலுக்கு விரைந்தாள்.
ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்த கந்தசாமி.. அருகிலிருந்த அவருடைய தம்பி ராசசாமியிடம் ஆழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார். ராமசாமியின் மனைவி திலகா.. தீவிரமான முகபாவனையுடன் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஓட்டமும் நடையுமாக வந்த சிந்தாமணியைத் திரும்பிப் பார்த்து விட்டு,
“இதோ அக்காவும்.. வந்தாச்சு..” என்றாள்.
“என்ன திலகா..? என்ன விசயம்…?”
“மெட்ராஸிலிருந்து ஃபோன் வந்திருக்காம் அக்கா.”
“நிசமாலுமா.. என்ன சேதியாம்..?”
“மாப்பிள்ளைக்கு வேலை அதிகமாம்..”
“பின்னே.. என்ஜினீயராச்சே…”
“அதனால் அவருக்குப் பொண்ணு பார்க்க வர நேரம் இல்லையாம்…”
“இதென்னடி.. இப்படியொரு குண்டைத் தூக்கிப் போடற…?”
“ஆனா.. அவரைப் பெத்த உங்க அண்ணனும், அண்ணன் பொண்டாட்டியும் கீறின கோட்டை மாப்பிள்ளை தாண்டமாட்டாராம்..”
“அதைத்தான் என் அண்ணன் சொல்லிட்டாரே..”
“இந்தக் கல்யாணம் நடப்பது உறுதிதானாம்.. அதில எந்தவித மாற்றமும் இல்லையாம்..”
“அப்பனே.. பிள்ளையாராப்பா.. காப்பாத்திட்ட…”
“இருக்கா.. இன்னும் முக்கியமான விசயத்தை நான் சொல்லவே இல்லியே..”
“சொல்லும்மா…”
“மாப்பிள்ளையோடு பட்டணத்தில் வேலைபார்க்கிற பிரண்டு ஒருத்தர்.. இந்த ஊருக்கு வந்திருக்கிறாராம். ஒரு மாதம் இந்த ஊரில்தான் இருப்பாராம்.”
“நம்ம வீட்டுக்கு வருகிறாரா…?”
“இல்லையாம்க்கா.. நம்ம சிவப்பிரகாசம் அண்ணன் இருக்காரில்லையா.. அவரு வீட்டுக்கு வந்திருக்கிறாராம்.”
“அவருக்கும் என் அண்ணன் மகனின் பிரண்டுக்கும் என்ன சம்பந்தம்…?”
“அவருக்கு வாக்கப்பட்டு வந்திருக்கும் லலிதாவோட கூடப்பிறந்த அக்காள் மகன்தான், நம்ம மாப்பிள்ளையோட பிரண்டாம்..”
“இதைப்பாரு. அங்கே சுத்தி.. இங்கே சுத்தி.. நம்ம சிவப்பிரகாசம் அண்ணனோட மதினியா மகன், நம்ம மாப்பிள்ளையோட தான் வேலை பார்க்கிறாரா…”
“ஆமாக்கா.. அதைத்தான் மாப்பிள்ளையைப் பெத்தவங்க சொல்லியிருக்கிறாங்க. மாப்பிள்ளை நாளைக்கு அவரோட பிரண்டு ஊருக்குப் போனதும்.. நம்மைப் பத்தியும்.. நம்ம குடும்பத்தைப் பத்தியும் அவருடைய பிரண்டு கிட்ட விசாரிப்பாரா.. இல்லையா..?”
“கட்டாயம் விசாரிப்பார்..”
“அதனால அவருடைய பிரண்டு இங்கே வந்து போகும் போது நல்ல விதமா பழகச் சொல்லி.. மாப்பிள்ளை வீட்டில சொல்கிறாங்க..”
“அதுவும் நியாயம்தானே…” நீட்டி முழக்கிய சிந்தாமணி கந்தசாமியைப் பார்த்து…
“எதுக்குக் கூப்பிட்டிங்க…?” என்று கேட்டாள்.
“அதைத்தான் திலகா இந்நேரம் வரைக்கும் உன் காதில் ஓதினாளே.. அதுக்குத்தான் கூப்பிட்டேன்..!” என்றபடி எழுந்து கொண்டார் அவர்.
“அண்ணனுடன் போய் விட்டு வரேண்டி..” திலகாவைப் பார்த்துச் சொல்லியபடி தமையனை பின்பற்றினார் ராமசாமி.
“அதுதான் ராமன் போனால் லட்சுமணன் பின்னாலேயே போய்விடுவாரே.. இதில பெண்டாட்டி கிட்ட சொல்லாட்டி குறைஞ்சு போயிருமாக்கும்.” திலகா முகவாயை தோள்பட்டையில் இடித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.
சுவாமி படங்களுக்கு விளக்கேற்றி விட்டு வந்த காயத்ரி தேவி..
“என்ன சித்தி..?” என்று வினவினாள்.
“எல்லாம் உன் கல்யாண சமாச்சாரம் தான். உன்னைப் பார்க்க ரகசியமாய் சிவப்பிரகாச அண்ணனின் வீட்டிற்கு மாப்பிள்ளை..” என்று சொல்லிக் கொண்டிருந்த திலகா.. பூஜை யறையில் குத்துவிளக்கின் திரியைத் தொடப்போன தன் மகளைக் கண்டதும் பேச்சைப் பாதியில் நிறுத்தி விட்டு…
“சாவித்திரி சுட்டு விடும்.. விளக்கைத் தொடாதே…” என்று பதட்டத்துடன் சொல்லியவாறு மகளிடம் ஓடி விட்டாள்.
முடிக்கப்படாத வார்த்தைகளால் எப்படிப்பட்ட பின் விளைவுகள் ஏற்படப் போகின்றன என்பதை அறியாதவளாக அரைகுறையாய் செய்தியை சொல்லி விட்டுப் போன திலகா அதை அப்படியே மறந்தும் விட்டாள்.
‘உன்னைப் பார்க்க ரகசியமாய் சிவப்பிரகாச அண்ணனின் வீட்டிற்கு மாப்பிள்ளை.. அவருடைய பிரண்டை அனுப்பி வைச்சிருக்கிறார். அவரைப் பார்த்தால் மரியாதையுடன் நடந்து கொள். அவர் போய்.. மாப்பிள்ளையிடம் உன்னைப் பற்றி நல்லவிதமாய் சொல்ல வேண்டும்..’
இதைத்தான் திலகா பேச ஆரம்பித்தாள். ஆனால் ‘உன்னைப் பார்க்க ரகசியமாய் சிவப்பிரகாச அண்ணனின் வீட்டிற்கு மாப்பிள்ளை.. ‘ என்று சொல்லி விட்டுப் போய்விட்டாள்.
அதை காயத்ரிதேவி எப்படி எடுத்துக் கொள்வாள்..? ‘உன்னைப் பார்க்க ரகசியமாய் சிவபிரகாச அண்ணனின் வீட்டிற்கு மாப்பிள்ளை வந்திருக்கிறார்…’ என்று திலகா சொன்னதாக அவள் எடுத்துக் கொண்டு விட்டாள்.
‘அவன்தான் மாப்பிள்ளையா..?’ அவளது கண்களில் ரகசியக் கனவு வந்தது…
‘என்ன ஒரு கம்பீரமாய் இருக்கிறான்..?’ அவள் மனம் அவன் அழகை ரசித்தது..
‘என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான்…’ அவன் நினைவைப் பற்றி அவள் மனம் கவலை கொண்டது..
‘என்னைப் பெண் பார்க்க வந்தவனா அவன்..? நான் தினமும் சாயங்காலம் ஆற்றங்கரை அரசமரத்தடி பிள்ளையார் கோவிலுக்கு விளக்கேற்றப் போவதை.. அவனிடம் யார் சொல்லியிருப்பாங்க…?’
அவளைப் பார்க்கத்தான் அவன் ஆற்றங்கரைக்கு வந்தான் என நினைத்து விட்டாள் காயத்ரிதேவி.
“தேவி…” சிந்தாமணி அழைத்தாள்.
கனவு கலைய.. காயத்ரி.. சிந்தாமணியிடம் ஓடினாள்.. இதுவும்கூட இறைவனின் திருவிளையாட்டு…
பால சரஸ்வதி என்ற பெயர் இருந்தால்.. அதை ‘பாலா’ என்றும் அழைக்கலம். ‘சரஸ்வதி’ என்றும் அழைக்கலாம். அதைப் போல.. காயத்ரிதேவியை.. ‘தேவி’ என்று புன்னை வன மக்கள் அழைக்க.. ‘காயத்ரி’ என்று விஸ்வம் மூலம் மித்ரன் அறிந்திருந்தான்.
மித்ரன் அறிவானா.. காயத்ரியும்.. தேவியும்.. ஒருத்திதான் என்பதை…
பெயர் சுருக்கம் கொண்ட சென்னையில் வசிப்பவன், தேவியை.. விஸ்வத்திற்கு பார்த்திருக்கும் மணப் பெண்ணாக கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை.
அவனைப் பொறுத்தவரையில் ஆற்றங்கரையில் அவன் சந்தித்த ‘தேவி’ என்பவள் வேறு.. விஸ்வத்திற்கு பார்த்திருக்கும் ‘காயத்ரி’ வேறு..
நண்பனுக்கு பார்த்திருக்கும் பெண்ணைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் துளிகூட அவன் மனதில் இல்லை…
நண்பனுக்கு பார்த்திருக்கும் பெண்ணைத்தான் தான் யாரென்று அறியாமல் சந்தித்திருக்கிறோமென்றும் அவனுக்குத் தெரியாது..
வாழ்க்கை சிலசமயம் நம்முடன் விளையாடிப் பார்க்கும். இது அந்த வகையான விளையாட்டு.. வாழ்க்கையின் கரங்களில் தாங்கள் விளையாட்டு பொம்மைகளாகி விட்ட உண்மை தெரியாமல்.. காயத்ரி தேவி.. இரவு முழுவதும் உறங்காமல் மித்ரனைப் பற்றிய நினைவுகளுடன் புரண்டு.. புரண்டு.. படுத்துக் கொண்டிருந்தாள்.
மித்ரனுக்கு அந்த அளவு தாக்கமெல்லாம் இல்லை. அவன் இயல்பாகவே இருந்தான். இரவில் நன்றாகத் தூங்கினான். காலையில் லலிதா காப்பியோடு எழுப்பியதும் எழுந்தான். காபியைக் குடித்து விட்டு சிவப்பிரகாசத்துடன் ஆற்றங்கரைக்கு குளிக்கப் போனான். குளித்துவிட்டு வந்ததும் லலிதா செய்து வைத்திருந்த இட்லியையும், கோழி வறுவலையும் ஒரு பிடி பிடித்தான். சிவப்பிரகாசம் வைத்திருந்த மளிகைக்கடைக்கும், உரக்கடைக்கும் அவருடன் சென்று ஒரு கடையில் அமர்ந்து கொண்டான்.
“தலைவலியோடு கடைக்குப் போகணுமா..? சித்தப்பா போகட்டும். நீ வீட்டில் இரு..” லலிதா தடுத்துப் பார்த்தாள்.
“ஆரோக்கியமான இயற்கைக் காற்றுக்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன் சித்தி.. வீட்டில் அடைபட்டுக் கிடந்தால் காற்று எங்கிருந்து வரும்..?” மித்ரன் மறுத்துப் பேசிவிட்டுக் கிளம்பி விட்டான்.
மதிய உணவுக்கு வந்து.. கோழிக்குழம்பை ருசித்தவன்.. மாடியறையில் படுத்து சுகமான மதியக் தூக்கம் போட்டான். மாலையில் லலிதா காபியுடன் வந்து எழுப்பவும் விழித்துக் கொண்டான்.
“சித்தி.. இப்படியொரு வாழ்க்கைக்கு நான் பழகிட்டேன்னா சென்னைக்கு திரும்பவே மாட்டேன்..”
“ஆடின காலும்.. பாடின வாயும் நிற்காதுடா மித்ரா..”
“அதாவது.. கீ போர்ட்டை தட்டின விரலும்.. கம்ப்யூட்டர் திரையைப் பார்த்த கண்ணும் நிற்காதுங்கறீங்க..”
“புரிந்தால் சரி…”
அவன் சிரித்துக் கொண்டே.. மாலை நேர உலாவலுக்கு ஆற்றுப் பக்கம் போனான். தூரத்திலேயே… படித்துறையில் அவள் காத்திருப்பது தெரிந்தது. மித்ரனின் புருவங்கள் மேலேறின…
‘அவள் எனக்காகவா காத்திருக்கிறாள்…?’
Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.