Chapter 11
உன் முகவடிவை அறிந்தும்..
உன் முகவரியை நான் அறியவில்லை…
மறுநாள் காலையில் ஆற்றங்கரையில் குளிக்கும் போது. சிவப்பிரகாசத்தின் முகத்தையே பார்த்தான் மித்ரன்.
“ஆயிரம் தான் சொல்லு.. எங்க ஊர் ஆற்றில் குளிப்பதற்கு ஈடாகுமா.. உங்கள் சென்னை..? தினமும் காலையிலேயும் சாயந்திரத்திலயும் இதில் முழுக்குப் போட்டுவிட்டுப் போகும் சுகமிருக்கே.. அப்பப்பா.. இதை விட்டு விட்டு.. எந்தச் சீமையை ஆள என்னைக் கூப்பிட்டா லும் நான் போகமாட்டேன்…” பெருமை பேசினார் சிவப்பிரகாரம்.
“ஏன் சித்தப்பா.. நீங்க மட்டும் அற்றில் குளிக்க தினமும் வருகிறீங்களே.. சித்தி வரமாட்டாங்களா..?” அறியாதவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் மித்ரன்.
சிவப்பிரகாசத்தின் முகம் மாறிவிட்டது. அவர் புருவங்களை சுளித்தபடி மித்ரனை நோக்கி…
“இதை யார் உனக்குச் சொன்னது.. உன் சித்தி சொன்னாளா..?” என்று கடுமையாக கேட்டார்.
கணநேரத்தில் அவருடைய சுபாவம் மாறிப்போன விந்தையை மனதிற்குள் வியந்தபடி..
“இல்ல சித்தப்பா.. நான்தான் கேட்டேன்.” என்றான் மித்ரன்..
“அதுதானே பார்த்தேன்.. லலிதா அப்படிப்பட்ட பெண் இல்லையே.. அடக்கமாய்.. வீட்டுக்குள்ளேயே இருக்கிறவளாச்சே.. ஊர் சுற்ற நினைக்கமாட்டாளே.. அவள் சொல்லியிருக்க மாட்டாள்ன்னுதான் நானும் நினைத்தேன்..”
‘ஹூம்.. ஆற்றின் அழகை ரசிக்கவந்தால்.. உங்கள் அகராதியில் ஊர் சுற்றுவதாக அர்த்தமா…?’
நினைத்ததை எல்லாம் பேசிவிட முடியாது என்று லலிதா சொன்னது எவ்வளவு உண்மை என்று.. அனுபவபூர்வமாக உணர்ந்தான் மித்ரன்..
‘இப்படி பேசும் மனிதரிடம்.. எப்படி சித்தியால் வாய் திறந்து பேச இயலும்…’ என்று நினைத்து பெருமூச்சு விட்டதைத்தவிர.. மித்ரனால் வேறு எதுவும் செய்ய இயலவில்லை. அதற்காக.. சித்தியை ஒரேயடியாய் வீட்டுக்குள் போட்டு பூட்டி வைத்திருப்பதை சகித்துக் கொள்ளவும் அவனால் முடியவில்லை..
‘என்ன செய்வது..?’ யோசனையுடன் ஆற்றங்கரையைப் பார்த்தான். அரச மரத்துப் பிள்ளையார் அவன் கண்ணில் பட்டார்.
‘ஐடியா…’ மித்ரன் வழியைக் கண்டுபிடித்து விட்டான்.
“அம்மா ஊரிலிருந்து வரும்போது ஒன்றைச் செய்யச் சொல்லிச் சொன்னங்க சித்தப்பா.. அதை சித்தியிடம் சொல்ல மறந்து விட்டேன்..”
“என்னப்பா…?”
“இந்த ஊரில் மட்டும்… ஆற்றங்கரை பிள்ளையாருக்கு கொஞ்சம் சக்தி அதிகமாமே..”
“அது உண்மைதான்.. அதுக்கென்ன இப்ப..?”
“அம்மா என் தலைவலி குணமாகணும்னு.. இந்தப் பிள்ளையார் கிட்ட வேண்டியிருக்காங்களாம்..”
“சென்னையிலிருந்து கொண்டு.. புன்னைவன பிள்ளையாரிடம் வேண்டினாங்களா…?”
சிவப்பிரகாசம் சந்தேகத்துடன் மித்ரனைப் பார்த்தார். அவரை யோசிக்க விட்டால் ஆபத்து என்று அவசரமாக மித்ரன் பேச்சைத் தொடர்ந்தான்.
“ஆமாம் சித்தப்பா.. நான் ஒருமாதம் ரெஸ்ட் எடுக்க இந்த ஊரில் தானே தங்கப் போகிறேன். அதனால்.. இந்த ஊர் பிள்ளையாரிடம் வேண்டியிருக்கிறாங்க..”
“அப்படியா.. மதினிக்குக்கூட எங்கள் ஊர் பிள்ளையாரின் மகிமை தெரிந்திருக்கே.. ” சிவப்பிரகாசம் மகிழ்ந்து போனார்.
‘ஆஹா.. இரும்பு கொஞ்சம் இளகுதே…!’ மித்ரன் தன் அடுத்த வேண்டுகோளை சொல்ல ஆரம்பித்தான்.
“அவங்க என்ன வேண்டினாங்கன்னு நீங்க கேட்கலையே சித்தப்பா…”
“நீயும் சொல்லலையே…”
“இதே இப்ப சொல்கிறேன் கேட்டுக்குங்க.. தினமும் எனக்காக சித்தி.. இந்த பிள்ளையாரிடம் விளக்கேற்றி வேண்டிக்கணுமாம்..”
“என்னது.. லலிதா.. உனக்காக தினமும் இங்கே வந்து விளக்கேற்றணுமா…? ஆகுற சோலியைச் சொல்லப்பா..”
“ஏன் சித்தப்பா… இது ஆகாதா…?”
“அவள் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டாள்..”
‘நீங்க வரவிட மாட்டிங்கன்னு சொல்லுங்க..’ நினைத்ததை வெளியில் சொல்லாமல்.. மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டான் மித்ரன்.
“இதென்ன சித்தப்பா.. கோவிலுக்குகூட எனக்காக வரமாட்டாங்களா..?”
“அவள் தான் சனிக்கிழமையன்னைக்கு.. பெருமாள் கோவிலுக்குப் போவாளே.. அங்கிருக்கும் பிள்ளையார் சந்நிதியில் வாராவாரம் உனக்காக விளக்கேற்றி வைக்கச் சொல்கிறேன்..”
“ஊஹூம்.. அம்மா.. ஆற்றங்கரை அரசமரத்தடி, பிள்ளையாரிடம்தான் வேண்டியிருக்கிறாங்களாம். அதுவும்.. தினமும் விளக்கேற்றணும்னு வேண்டியிருக் கிறாங்களாம்..”
‘இது என்னடா… இவன் இப்படி ரோதனை பண்ணுகிறான். தெய்வ காரியம். முடியாதுன்னும் சொல்ல முடியாது..’ தட்ட முடியாமல் யோசித்தார் சிவப்பிரகாசம்.
‘ம்ஹூம்.. விண்வெளிக்கு கல்பனா சாவ்லாவை அனுப்பிய அவங்க வீட்டாளுங்ககூட இவ்வளவு யோசித்திருக்க மாட்டாங்க. இதோ இருக்கற ஆத்தங்கரைக்கு பெண்டாட்டியை அனுப்ப.. இந்த மனுசன் இப்படி யோசிக்கிறாரே…!’ மியூஸியத்தில் இருக்கும் இனத்தைப் பார்ப்பதுபோல.. சித்தியின் கணவரைப் பார்த்து வைத்தான் மித்ரன்..
‘பயல் ஒரு மார்க்கமாய் பார்க்கிறான். எதுக்கு வம்பு.. சரின்னு சொல்லி விடுவோம். எண்ணி முப்பதே நாள்.. அதுக்கப்பறம் சென்னைக்கு ஓடி விடுவான். புன்னை வனத்துப் பக்கம் தலை வைத்துக்கூட படுக்கமாட்டான். வந்தவனின் மனசுப்பிரகாரம் நடக்கலைங்கிற பொல்லாப்பு நமக்கு எதுக்கு…!’ சிவப்பிரகாசம் அவசர முடிவிற்கு
வந்தார்.
“சரிப்பா.. உன் சித்தி வந்து தினமும் உனக்காக விளக்கேத்தட்டும்..”
ஒருவழியாக லலிதாவை.. ஆற்றங்கரைக்கு அழைத்துவர சிவப்பிரகாசத்திடம் அனுமதி வாங்கி விட்டான் மித்ரன்.
கண் விழிக்கும் போதே.. மித்ரனின் நினைவுடன் தான் கண் விழித்தாள் காயத்ரி. படுக்கையில் எழுந்து அமர்ந்து.. உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டவள், கட்டிலை விட்டு இறங்கினாள். அவளுடைய அறையின் ஜன்னல் வழியாக சற்று தொலைவில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றைப் பார்த்தாள். தினமும் பார்க்கும் நதியின் அழகு.. இன்று கூடியிருந்தது போல் அவளுக்குத் தோன்றியது.
‘கோபமா.. உங்கள் மீதா.. நான் ஏன் உங்கள் மேல் கோபப்படப் போகிறேன்..’
மித்ரனின் வார்த்தைகள் அவளுக்கு நினைவில் வந்தன. அவன் கோபப்பட மாட்டானா..? இல்லை.. அவள் மேல் அவனுக்குக் கோபம் வராதா…?
“என்னம்மா தேவி.. என்ன யோசனையில் இருக்கிற..?” அவளுக்கு காபி கொண்டு வந்த சிந்தாமணி கேட்டாள்..
“ஒன்றுமில்லைம்மா சும்மா. ஆற்றங்கரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்..” காயத்ரி காபியை வாங்கிக் கொண்டாள்.
“அக்கா.. எனக்கு இந்தக் கணக்கைச் சொல்லிக் கொடு…”
காயத்ரி தேவியின் சித்தப்பாவின் மகன் சங்கரன் நோட்டுடன் வந்தான். காயத்ரி.. காபியைக் குடித்தவாறு அவனுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“அக்கா.. எனக்கு நீ பின்னிவிடு..” சங்கரனின் தங்கை சாவித்திரி தலைமுடியை விரிய விட்டுக் கொண்டு.. காயத்ரியின் முன்னால் வந்து அமர்ந்தாள்.
காபியை குடித்து முடித்து விட்ட காயத்ரி.. தங்கைக்கு தலையைப் பின்னி விட்டவாறு.. தம்பிக்கு கணக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதைத் தொடர்ந்தாள்.
அறைக்குள் வந்து, காயத்ரி குடித்துவிட்டு வைத்த காலிதம்ளரை எடுத்துக் கொண்ட திலகா..
“இதுக ரெண்டுக்கும் இம்புட்டு செல்லம் கொடுக்காதே தேவி.. நாளைக்கே.. நீ கல்யாணமாகிப் போகப் போகிறவள். நீ உன் புருஷன் வீட்டுக்கு வாழப்போன பின்னால.. இதுக ரெண்டும்.. என்னைப் போட்டுல்ல பாடாய் படுத்தும்..” என்றாள்.
“இருக்கட்டும் சித்தி. நான் கல்யாணமாகிப் போன பின்னால் நடப்பதை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். இப்போ நடப்பதை இப்போ பார்க்கலாம்..”
காயத்ரி… மாலையில் அவனைச் சந்திக்க அப்போதிருந்து தயாரானாள்.
Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.