Chapter 17

0Shares

நீ நடந்த பாதையில்.. நான் நடந்தேன்…

உன் நிழல் தேடித்தேடி.. மனம் சோர்ந்தேன்..

மித்ரன் சட்டையின் பொத்தான்களை போட்டு முடித்த போது முழுக்கதையையும் சொல்லி முடித்திருந்தான்.

“எப்படியோ போ.. கந்தசாமி அண்ணன் மகளுக்கு எப்படியும் என்ஜினீயர் மாப்பிள்iதான் கிடைக்கணுமுன்னு இருக்கும் போது.. உன் பிரண்ட்.. வேண்டாமுன்னு சொன்னதில் அவருக்கு ஒன்றும் நஷ்டமில்லை..” லலிதா கீழே இறங்கிப் போய்விட்டாள்.

மித்ரனை மனதில் வைத்துக் கொண்டு லலிதா பேசிவிட்டுப் போக.. கந்தசாமி பெற்ற மகள் யாரென்று தெரியாத மித்ரன், அவர் வேறொரு இடத்தில் இன்ஜினீயர் மாப்பிள்ளையை தன் மகளுக்கு தேர்வு செய்து விட்டார் போல.. என்று நினைத்தபடி மாடிப் படிகளில் இறங்கினான்.

லலிதாவின் கணவர் சிவப்பிரகாசம்.. அவ்வளவு பணிவோடும் மரியாதையோடும் பவ்யமாக அமரக் கூடியவர் என்பதை அன்றுதான் கண்டான் மித்ரன்.

‘ம்ஹூம்.. இவருடைய உருட்டல்… மிரட்டலெல்லாம் சித்தியிடம் மட்டும்தான் செல்லுபடியாகும் போல…’ என்று நினைத்தபடி சிவப்பிரகாசத்தின் அருகே சென்றான்.

“வா மித்ரா.. இவங்க இரண்டு பேரும் உன்னைப் பார்க்கத்தான் நம்ம வீடு தேடி வந்திருக்காங்க.”

‘ம்ஹூம்.. நீங்களும் சித்தி பாடிய அதே பல்லவியை பாடிட்டிங்களா…? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேடல் இருக்கிறது. இவங்க பாவம்.. இந்த விடியற்காலையில் உங்கள் வீட்டைத் தேடினாங்களா..?’

மித்ரன் அவர்கள் இருவரையும் மரியாதையுடன் பார்த்தபடி – 

“வணக்கம்…” என்று பொதுவாக சொல்லி வைத்தான்.

“இப்படி உட்கார் மித்ரா..” சிவப்பிரகாசம்.. அவனைத் தன் அருகில் அமர வைத்துக் கொண்டார்.

ஊர் பண்ணையாரை தன் வீடு தேடிவர வைத்து விட்ட மித்ரனின் மேல்.. அவருக்கு பாசம் பெருக்கெடுத்தது.

“நீங்க சென்னையிலே.. எங்க மாப்பிள்ளைகூட வேலை செய்கிறவங்கன்னு என் மச்சினன் ஃபோன் பண்ணிச் சொன்னாரு..” கந்தசாமி பேச்சை ஆரம்பித்தார்.

அண்ணன் பேசுவதை பயபக்தியோடு கவனித்தபடி குறுக்கே பேசாமல் அமர்ந்திருந்த ராமசாமியை, ‘இந்தக் காலத்திலும்.. இப்படி ஒரு தம்பியா..?’ என்று வியப்புடன் பார்த்தபடி..

“ஆமாங்க.. விஸ்வம் என் கூடத்தான் வேலை பார்க்கிறான்..” என்றான் மித்ரன்.

சிவப்பிரகாசத்திற்கு.. மித்ரனின் அந்தப் பதில் மிகவும் பிடித்துப் போய் விட்டது. அவர் மனதிற்குள் அவனுக்கு ஒரு ‘சபாஷ்..’ போட்டார்.

“மாப்பிள்ளை எப்படியிருக்கிறார்..?”

“அவனுக்கென்ன.. நன்றாக இருக்கிறான்…”

“எங்க பெண்ணைப் பற்றி.. மாப்பிள்ளையின் அபிப்ராயம் என்ன..?”

‘அதைச் சொன்னால் தாங்க மாட்டிங்க…’

மித்ரன் எப்படி இதற்கு பதில் சொல்லுவது என்ற யோசனையுடன் சமையலறைப் பக்கம் திரும்பி லலிதாவைப் பார்க்க.. அவளும் அவனைப் பார்த்தாள். உதட்டின் மேல் விரலைவைத்து

‘ஒன்றும் சொல்லாதே…’ என்று சமிக்ஞை செய்தாள்.

“அவன் பெண்ணைப் பார்த்து விட்டானா…?”

“இன்னும் பார்க்கலைங்க.. நாங்க பெண் பார்க்க வரச்சொல்லி ஆயிரம் தடவை அழைப்பு வைத்தாச்சு.. என் மச்சினன் இதோ வரேன்.. அதோ வரேன்னு தள்ளிப் போட்டுக்கிட்டே இருக்கிறார்…”

“பெண்ணைப் பார்க்காமல் அவன் எப்படி அபிப்ராயத்தைச் சொல்லுவான்…?”

“நீங்க சொல்றதும் சரிதான்.. ஆமாம்.. நீங்க எப்போ நம்ம வீட்டுக்கு வரப் போறீங்க…?”

“நம்ம வீடா…?”

“எங்கள் வீட்டைத்தான் அப்படிச் சொன்னேன்..”

‘இந்த ஆள் என்ன ஓவராய் இப்படி பாசமழையைப் பிழியிறாரு.. இவர் முகத்தில் அடித்தது போல.. விஸ்வத்திற்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லைன்னு நான் சொல்லியாகணும்.. இவர் வீட்டுக்குப் போய் விருந்தைச் சாப்பிட்டு விட்டால் – அப்படி ஒரு வார்த்தையைச் சொல்ல.. எனக்கு மனம் வந்து தொலைக்காது.. சொல்லாமல் சென்னைக்குப் போனால்.. விஸ்வம் பயல் என்னைத் தொலைத்து விடுவான்..’

அந்த இக்கட்டான நிலைமையிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அவர் வீட்டிற்கு சாப்பிடப் போகக்கூடாது என்ற முடிவுக்கு வந்தான் மித்ரன்.

“அதுதான் உங்களை இங்கேயே பார்த்து விட்டேனே.. இனி உங்க வீட்டுக்கு வராவிட்டால் என்ன..?”

“நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. எங்க ஊருக்கு வந்து ஒரு மாசம் தங்கியிருக்கிறவரு – எங்க வீட்டில் வந்து ஒரு நேரமாவது கை நனைக்கலைன்னா எங்க மனசு ஆறாது..”

“கை நனைப்பதா..?”

கிராமத்து பாஷையில் கரை தேர்ந்த மித்ரனே.. ‘கை நனைப்பது’ என்ற வார்த்தையில் குழம்பிப் போனான். சிவப்பிரகாசம் அவசரமாய் அவனுடைய சந்தேகத்தை தீர்த்து வைக்க முன்வந்தார்.

“அது வேறு ஒன்றுமில்லை மித்ரா.. அவங்க வீட்டுக்கு சாப்பிட வரச் சொல்லிக் கூப்பிடுகிறார்..” சிவப்பிரகாசம் இதைச் சொல்லி விட்டு பெருமையுடன் கந்தசாமியை.. ‘எப்படி…?’ என்று ஒரு பார்வை வேறு.. பார்த்துக் கொண்டார்.

“இன்னும் பத்திருபது நாள்கள் இங்கேதான் இருக்கப் போகிறேன்.. சென்னைக்குப் போவதற்கு முன்னால்.. உங்க வீட்டுக்கு வந்து விட்டுப் போகிறேன்..”

“ஆனால் அடிக்கடி உங்களைப் பார்க்க நாங்க இங்கே வருவோம். என்ன சிவப்பிரகாசம்.. வரலாமில்லையா…?”

அதுவரை கெத்தாக நடந்து போகும் ஊர் பண்ணையார் தன்னிடம் அனுமதி கேட்கவும்.. சிவப்பிரகாசம் உச்சி குளிர்ந்து போனார்.

0Shares

Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link