Chapter 18

0Shares

கார்மேக வண்ணனிடம் நியாயம் கேட்டேன்…

கருணைதர மறுத்ததற்கு காரணம் கேட்டேன்..

ஆற்றங்கரையருகே அமர்ந்து.. வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த லலிதா விளக்கேற்ற எழுந்த போது..

“என்ன சித்தி அவசரம்..? மெதுவாய் விளக்கேற்றலாமே…” என்றான் மித்ரன்.

“அப்படியா சொல்கிறாய்…?” லலிதா மீண்டும் அமரப் போனாள்.

“அம்மா பசிக்குது…” அருண் குரல் கொடுத்தான்.

“இதுக ரெண்டும் பசி தாங்காதுக மித்ரா.. வா போகலாம்…” லலிதா விளக்கேற்றப் போய் விட்டாள்.

‘இன்னும் அவளைக் காணோமே…’ மித்ரன் தயங்கி நின்றான்.

‘என்னடா…’ லலிதா கேள்வியாய் நோக்கினாள்.

“நீங்க முன்னாலே போங்க சித்தி. நான் பின்னாலேயே வருகிறேன்…” மித்ரன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.

“ம்ம்.. நடத்து.. நடத்து…” கேலியாகச் சொல்லியபடி லலிதா குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய்விட்டாள்.

‘இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாள்..? ஏன் வரவில்லை..? ஒரு வேளை இன்றைக்கு வராமலே இருந்து விடுவாளோ…’ மித்ரன் ஏமாற்றமாக உணர்ந்தான்.

தினமும்.. மாலை வேலைகளில் அவளைத் தவறாமல் பார்த்து விட்டு.. அன்று மட்டும் அவளைப் பார்க்காமல் வீடு திரும்ப அவனுக்கு மனம் வரவில்லை..

கொலுசொலியைக் கேட்டவுடன் ஆர்வமாகத் திரும்பினான். கனகாம்பர வண்ணப் பட்டுப் பாவாடையில்.. ஊதா வண்ண தாவணியுடுத்தி.. மெதுவாக அடியெடுத்து வைத்து.. படித்துறையின் மேல்படியில் வந்து நின்றாள் காயத்ரி..

அவள் பார்வை மித்ரனின் மீது மட்டும் படிந்திருந்தது.

தன் வரவைக் கண்டு.. அவன் முகம் மலர்ந்ததை.. ஒருவித மனத்திருப்தியுடன் பார்த்தாள் அவள்…

“ஏன் இவ்வளவு நேரம்…” மித்ரன் வேகமாகக் கேட்டுவிட்டான்.

“நான், நீங்க வருவதற்கு முன்னாலேயே வந்து விட்டேன்…” அவள் மேல்படியில் அமர்ந்து கொண்டாள்.

“பொய் சொல்லாதே…”

“இது நிஜம்தான்.. நான்வந்து பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றி விட்டு விளக்கும் ஏற்றி விட்டேன்.. அங்கே பாருங்கள்..”

மித்ரன் அரசமரத்தடி பிள்ளையாரைப் பார்த்தான். அவர் முன்னால் இரண்டு கல்விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன.

“இவ்வளவு நேரமாக எங்கேயிருந்தாய்…?”

“அந்த மரத்திற்குப் பின்னால் உட்கார்ந்திருந்தேன்..”

“ஒளிந்திருந்தாயா…?”

“மறைந்திருந்தேன்…”

“இரண்டும் ஒன்றுதானே…”

“ஊஹூம்.. இரண்டும் வேறு வேறு…”

“ஏன் அப்படிச் செய்தாய்…?”

“இதற்காகத்தான்..”

“இதற்காகன்னா…?”

“ஆளில்லாத தனிமையில் உங்களோடு பேசத்தான்..” காயத்ரிதேவியின் தலையில் சூடியிருந்த பூவின் நறுமணம் காற்றில் மிதந்து.. மித்ரனின் நாசியை வருடியது. கண்ணுக்கு முன்னால்.. அவள் சொந்தத்துடன் அமர்ந்திருந்த விதம் அவனைக் கவர்ந்தது. தன் மனத்தை மறைக்காமல் அவள் வெளிப்படுத்தி விட்ட செய்கையில் அவன் மனம் வியந்தான்.

“ஏன்.. சித்தியில் முன்னால் பேசினால் என்ன…?”

“உங்களின் சித்தியின் முன்னால் என்னை உரிமையுடன் வா.. போன்னு.. பேசுவீங்களா…?”

அப்போதுதான்.. அவளை இயல்பாக தான் ஒருமையில் அழைத்துப் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்த மித்ரன் திகைத்தான்.

‘இது எப்படி..? மனதில் இவளின் மேல் உரிமையுணர்வு இல்லாவிட்டால் இப்படி இயல்பாக ஒருமையில் பேச வாய் வருமா…?’

“தேவி…” அவன் பேச முடியாமல் தடுமாறினான்..

“ம்ம்ம்…” அவள் அவன் முகம் பார்த்தாள்.

“நான்.. இது.. எப்படின்னு தெரியலை…”

“எனக்கும் தான்..”

“எத்தனையோ பெண்களிடம் நான் பேசிப் பழகியிருக்கிறேன் தேவி.. நான் பெண்களை அறியாதவன் அல்ல. ஆனால்.. நீ வேறாக இருக்கிறாய்…”

“என் நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்ட பின்னாலும் நீங்க.. மற்ற பெண்களுடன் என்னை இணை கூட்டி வைத்துப் பேசலாமா…?”

“தேவி..” மித்ரன் மீண்டும் திகைத்தான்..

“நீங்கள் பட்டணத்துக்காரர். இது உங்களுக்குப் பெரிதாகத் தோன்றியிருக்காதுதான். ஆனால், நான் பட்டிக்காடு.. ஒன்றை நினைத்து விட்டால்.. அதிலேயே நிலைத்து விடும் ரகம். என் நெற்றியில் குங்குமம் வைத்தவர்தான் எனக்குப் புருசனாக இருக்க முடியும்…” அவள் நிதானமாக வார்த்தைகளைக் கோர்த்துக் கூறினாள்.

“என்னை நீ இதற்கு முன்னால் பார்த்தது கூட இல்லை..”

“நீங்கள் மட்டும் என்னைப் பார்த்திருக்கிறீங்களா..”

“இல்லை..”

“உங்களுக்கு மட்டும் ஏன் என்னைப் பிடித்தது…?”

“தெரியவில்லை…”

“இது தெரியாதுதான்.. இது மனம் சார்ந்த உறவு.. மனதிற்குப் பிடித்திருந்தால்தான்.. அவர்களிடம் நம்மால் சொந்தம் கொண்டாட முடியும். மனதிற்கு பிடித்தவங்களோடுதான் பேச முடியும். பழக முடியும்.  உங்களின் முகம் பார்க்க நான் தவிக்கும் இந்த தவிப்பை வேறொரு முகம் பார்க்கும் போது நான் உணர மாட்டேன். உங்கள் குரல் கேட்க.. நான் துடிக்கும் இந்த துடிப்பை.. வேறொரு குரல் கேட்க துடிக்க மாட்டேன்..”

காயத்ரிதேவியின் குரல் ஆழமாக ஒலித்தது. மித்ரனால் அவள் சொன்னவைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவனும் அவளுடைய நிலையில்தானே அப்போது இருந்தான்!

அவர்கள் வெகு நேரம் பேசினார்கள். இவருவம் பேசிக் கொண்டிருந்ததை – ஆற்றில் படகோட்டி வந்து கொண்டிருந்த ராமையா பார்த்து விட்டு ஆச்சரியப்பட்டான்.

‘இதுக ரெண்டும் காலம்காலமாகப் பழகினதுபோல பேசிக்கிட்டு இருக்குதுகளே…’

0Shares

Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link