Chapter 20

0Shares

நீ சொன்ன மொழி கேட்பேன்..

நீ காட்டும் வழி நடப்பேன்…

மித்ரனும் காயத்ரியும் மாலை நேரங்களில் தினமும் ஆற்றங்கரையில் தவறாமல் சந்தித்து வந்தனர். அதை அறிந்தும் அறியாதவள் போல் லலிதா.. அவர்களுக்கு தனிமையை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு.. தனியாக வீட்டுக்கு திரும்பி விடுவதை வழக்கப்படுத்திக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள் மாலையில்.. லலிதா பெருமாள் கோவிலுக்குப் போய்விட்டு.. ஆற்றங்கரைக்கு நேராக வந்து விடுவதாகச் சொல்லி விட.. மித்ரன் தேவியைக் காணும் ஆவலில் ஆற்றங்கரைக்கு முன்னதாகவே வந்து விட்டான்.

அவள் வருவதை உணர்த்தும் கொலுசின் ஒலியைக் கேட்டதும்.. அவன் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு.. நாணல்களைப் பார்த்து.. முதல் நாள் பாடியதைப் போல மீண்டும் பாட ஆரம்பித்தான்.

“புன்னை வனத்தினில்…

உன்னை முகம்தொட்டு…

எண்ணத்தைச் சொன்னவன்..

வாடுகிறேன்…”

“அது ‘புன்னை வனத்தினில்’ன்னு வராது பாகவதரே! ‘தென்னை வனத்தினில்’ன்னு வரும்..”

அவனருகே படித்துறையின் மேல்படியில் அமர்ந்தபடி காயத்ரிதேவி கூறினாள்.

“இந்த ஊருக்குப் பெயர் புன்னை வனமா.. இல்லை தென்னைவனமா…?”

“புன்னை வனம்தான்..”

“அப்போ.. நான் இப்படித்தான் பாடுவேன்.. ஏன் லேட்..?”

“இன்றைக்கு சனிக்கிழமை.. பெருமாள் கோவிலுக்குப் போய் விட்டு வர்றேன். நீங்க போகலையா..? கோவில் ரொம்ப அழகாயிருக்கும்.”

“கோவிலுக்குள் இருக்கும் சாமியும் அழகாகத்தான் இருக்கிறார். நீ சாயங்காலம் ஆற்றங்கரைக்கு வருவாய்ன்னு.. காலையிலேயே கோவிலுக்கு விசிட் அடித்து விட்டு வந்து விட்டேன்.. நீதான் என்னை மறந்து விட்டாய்…”

சட்டென்று துடித்துப் போனவளாக காயத்ரி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவள் கண்கள் குளமாகி இருந்தன.

“மறப்பதா..? உங்களையா..? இந்த ஜெனம்த்தில் என்னால் அது முடியுமா..?”

“உடனே கண்ணிலிருந்து தண்ணீரைக் கொட்டி விடுவாயே.. அது என்னடி.. கண்ணுக்குள் எதுவும் டேமைக் கட்டி வைத்திருக்கிறாயா..? நினைத்தால் பொலபொலன்னு கண்ணீரைத் திறந்து விடுகிற…”

“நீங்க மட்டும் அப்படிச் சொல்லலாமா…?”

“எப்படிச் சொன்னேன்..? அடச்சீ.. கண்ணைத் துடை.. ஒரு நாளின் இருபத்தி நாலு மணி நேரத்தில் – ஈவினிங் டயத்தில்தான்.. இப்படி ஆத்தங்கரையில் மீட் பண்ணிக் கொள்ள முடிகிறது. அந்த நேரத்தையும்.. அழுதே வேஸ்ட் பண்ண வேண்டுமா..?”

மித்ரன் கையில் குச்சியில்லாமலேயே அதட்டல் போட.. காயத்ரி கண்களைத் துடைத்துக் கொண்டாள். மடியிலிருந்த குடத்திலிருந்து ஒரு சில்வர் டப்பாவை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“என்னடி இது…?”

“திறந்து பாருங்க…”

டப்பாவைத் திறந்தான். உள்ளே நெய் வாசனையுடன் மைசூர் பாகும்.. முறுக்கும் இருந்தன.

“நானே செய்தேன்..” அவள் பெருமையாகச் சொன்னாள்.

“ஐயையோ..” அவன் அவசரமாக டப்பாவை மூடி அவளிடம் நீட்டினான்.

“என்னங்க.. ஏன் சாப்பிடாமல் கொடுக்கறீங்க..?”

“ஏண்டி.. நீ செய்ததை ருசிபார்த்துச் சொல்ல நான்தான் உனக்குக் கிடைத்தேனா..? இந்த எக்ஸ்பரி மெண்ட்டிற்கு நான் தயாரில்லை…”

“அய்யே.. சும்மா கேலி பண்ணாதீங்க.. நான் மோசமாய் ஒன்றும் சமைக்க மாட்டேன்..”

“இதோ பார் தேவி.. நீ பாட்டு பாடு.. அதைக் கேட்டு விட்டு குயில்பாட்டுன்னு பொய் சொல்கிறேன். இது சாப்பாட்டு விசயம்.. வயிற்றுக்குள் போகும்.. இந்த விசப்பரீட்சையெல்லாம் வேண்டாம்டி..”

காயத்ரி பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டே மித்ரனை முறைத்தாள். அதைப் பொருட்படுத்தாத மித்ரன்.. மைசூர் பாகை எடுத்து விரலில் பிடித்து ஒரு மார்க்கமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏன் இப்படி ஒரு மார்க்கமாய் பார்க்கறீங்க…?”

“ஆங்கிள் பார்க்கிறேண்டி…”

“பெரிதாய் வெட்டி முறிக்கப் போகிறார். ஆங்கிள் பார்க்கிறார். இப்ப கடித்துச் சாப்பிட முடியுமா.. முடியாதா..?”

மித்ரன் சாப்பிட்டான்.

“பரவாயில்லையே..! நல்லாத்தான் இருக்கு…” என்று சொல்லியபடி டப்பாவை அவன் காலிசெய்ய.. கன்னத்தில் கையூன்றி அவன் சாப்பிடுவதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சாப்பிட்டு விட்டேன்.. போதுமா…” அவன் எழுந்து.. ஆற்றில் இறங்கி.. கை கழுவிக் கொண்டான்.

அவன் பின்னாலேயே இறங்கிய காயத்ரி.. டிபன் டப்பாவையும் குடத்தையும் கழுவி விட்டு குடத்தில் தண்ணீரை நிரப்பப் போனாள்.

அவள் மேல் தண்ணீரை அள்ளி வீசிய மித்ரன்..

“ஆற்றங்கரை மரமே…

அரசமரக் கிளையே…” என்று பாடினான்.

அவன் வீசிய தண்ணீர் முகத்தில் பட்டதால் கண்களை இறுக மூடி.. சிலிர்ப்புடன் முகம் சுருக்கிய காயத்ரி… மனம் கொள்ளாத உல்லாசத்துடன் சிரித்தாள்.

அன்று அவளை விட்டுப் பிரிந்த போது.. முதன் முதலாக அவளது இதழ் தொட்டு.. முத்தம் பதித்தான் மித்ரன்..

கிறங்கிப் போனவளாக – அவன் மார்பில் முகம் புதைத்த காயத்ரிதேவியின் கூந்தலில் முகம் புதைத்த மித்ரனுக்கு – விஸ்வம் ஏன் இப்படியொரு கிராமத்தில் 

பெண் கட்டிக் கொள்ள மறுக்கிறான் என்ற கோபம் வந்து தொலைத்தது. அதனால் விபரீதம் ஒன்று முளைத்தது.

0Shares

Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link