Chapter 22

0Shares

நான் புகழ் தேடவில்லை…

உன் புகல் தேடி வந்தேன்..

“அவள் நாளைக்கும்.. அதற்கு அடுத்தநாளும்… ஆற்றங்கரைக்கு வர மாட்டாளாம் சித்தி…”

“ஏண்டா…?”

“அவளுடைய குடும்பத்துடன் ஊருக்குப் போகிறாளாம்…”

“அதையேண்டா இத்தனை வருத்தமாய் சொல்கிற..? பாவம்.. அந்தப் பெண் இந்த ஆற்றைத் தாண்டி.. அக்கரையை மிதித்து நான்கு வருசம் ஆகப்போகுது.. ஆற்றங்கரைவரைதாண்டா.. அந்தப் பெண்ணுக்கும் எல்லை.. போய் விட்டு வரட்டும்.. இப்போதாவது வெளியுலகைப் பார்த்து விட்டு வரட்டும்..”

“ஏன் சித்தி.. அவள் நான்கு வருசமாக எங்கேயும் போனதில்லையா…?”

“ஆமாம்டா மித்ரா.. ப்ளஸ் டூ வரைதான் படிக்க வைத்தாங்க… அக்கரையில் இருக்கும் ஊரில் ஹையர் செகண்டரி ஸ்கூல் மட்டும்தான் இருக்கு. இந்த ஆற்றைத் தாண்டிப் போய்.. அந்தப் பெண் ப்ளஸ் டூ வரை படித்ததே அந்த வீட்டில் பெரியவிசயம்.”

மித்ரனுக்கு தேவியை நினைக்கும்போது பாவமாக இருந்தது. அவள் கூண்டுக்கிளியா..? அவளுக்கு சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டுமென்று மித்ரன் அந்த நொடியில் ஆசைப்பட்டாள்.

“சித்தி.. எங்க கல்யாணத்துக்குப் பிறகு.. அவளை நான் மேலே படிக்க வைப்பேன்…”

“செய்… அவளுக்காவது விமோசனம் கிடைக்கட்டும்.”

லலிதா, தன் கடந்த காலத்தின் ஆசைகள் நிராசைகளாகிப் போன சோகத்துடன் இதைக் கூறினாள்.

மித்ரன் தேவியை இரண்டு நாள்கள் பார்க்க முடியாது என்ற எரிச்சலில் கந்தசாமி விசயத்தை சுத்தமாக மறந்து விட்டான்.

மனைவியை மதித்து.. எப்போதும்.. ஊர் நிலவரம் பற்றிப் பேசாத சிவப்பிரகாசம் அன்றும்.. கந்தசாமியின் வரவைப் பற்றியும் மித்ரன் சொல்லிக் கொடுத்த வழிமுறையைப் பற்றியும்.. அவளிடம் பேசவில்லை..

மித்ரனுக்கு அத்தனை நாளும் அலுப்பைக் கொடுக்காத அந்தக் கிராமத்தின் சூழல்.. அடுத்த இரண்டு நாள்களிலும் அலுப்பைக் கொடுத்தது.

அதை உணர்ந்தவளாக லலிதா.. மித்ரனை இழுத்து வைத்துப் பேசினாள். ஆற்றங்கரைக்கு.. மாலையில் அவனுடன் சென்றாள். இருட்டும் வரை.. அங்கேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

ஒரு வழியாய் இரண்டு பகல்களும் இரண்டு இரவுகளும் கழிந்து விடிந்தபோது.. விஸ்வம் உற்சாகமாய்.. மித்ரனைத் தேடி.. லலிதாவின் வீட்டிற்கு வந்தான்.

இருள் பிரியாத அதிகாலையில், தூங்கிக் கொண்டிருந்த மித்ரன்.. அறைக்கதவு தட்டப்படும் சத்தத்தைக் கேட்டு.. தூக்கக் கலக்கத்துடன் எழுந்து கதவைத் திறந்தான்.

“மித்ரா.. மைடியர் பிரண்ட்..” என்று கைகளை விரித்துக் கொண்டே.. உள்ளே வந்த விஸ்வத்தைப் பார்த்ததும் அவன் தூக்கம் பறந்து விட்டது..

“டேய்.. விஸ்வம்.. நீ எப்படிடா.. இங்கே வந்த..?”

“சஸ்பென்ஸ்.. நான் மட்டும் வரவில்லை.. அம்மா.. அப்பா.. எல்லோரும்.. குடும்பத்துடன் வந்திருக்கிறோம்..”

“ஈஸிட்.. அவங்க எங்கே…?”

“மாமாவின் வீட்டில் இருக்கிறாங்க.. இப்போதுதான் வந்து இறங்கினோம். நான் உடனே உன்னைப் பார்க்க ஓடி வந்து விட்டேன். தேங்க்ஸ்டா மித்ரா…”

‘இவன் எதுக்கு தேங்க்ஸ் சொல்கிறான்..? நான்தான் இவன் சொன்ன வேலையைச் செய்யவே இல்லையே.. சொல்லாத வேலையைத்தானே செய்து வைத்திருக்கிறேன்..’ மித்ரன் குழப்பத்துடன் நண்பனைப் பார்த்தான்.

“காயத்ரியை.. என் கண்ணில் காட்டி விடுங்கன்னு நீதான் என் மாமாவிற்கு ஐடியா கொடுத்தாயாமே..?”

‘தெரிந்து போச்சா..? காச்சு மூச்சென்று கத்தி.. என்னை ஒருவழி பண்ணலாமென்று கிளம்பி வந்திருக்கிறானோ..?’

“என்ன அழகுடா அந்தப் பொண்ணு…”

விஸ்வம் கண் செருக – மித்ரனுக்கு தைரியம் மீண்டு வந்தது. அவன் சொல்லிக் கொடுத்த யுக்தி வெற்றி பெற்று விட்டதா..? பயல் கிறங்கிப் போய் தெரிகிறானே…

எதற்கும் இருக்கட்டுமென்று.. ஜாக்கிரதை உணர்வுடன் – தள்ளி நின்றபடி,

“எந்தப் பெண்ணுடா..?” என்று கேட்டான் மித்ரன்.

“எல்லாம்.. என் மாமா பெண்தான். காயத்ரி…”

“அவள்தான் பட்டிக்காட்டுப் பெண்ணாச்சே…?”

“இது பட்டிக்காடாடா..? சொர்க்கம்டா.. இது…”

“அவள் ப்ளஸ் டூ வரைக்கும்தான் படித்திருக்கிறாள்.”

“அதனால் என்ன குறைந்து போச்சு.. அவள் வாயைத் திறந்து பாடினால்.. எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா..? என் தாத்தா வீட்டுக் கல்யாணத்தில் அவளைப் பாடச் சொன்னாங்க.. அவள் அசத்தி விட்டாள். அப்படியே குயிலின் பாட்டுத்தான்..”

‘குயில்பாட்டா…?’ மித்ரனின் முகம் மாறியது. அதைக் கவனிக்காமல் விஸ்வம் உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தான்.

“வைர நகைகளால் அவளை அலங்கரித் திருந்தார்கள். என் மாமா… இவ்வளவு பெரிய பணக்காரர்ன்னு எனக்கே தெரியாதுடா மித்ரா.. நினைத்தால் நானே ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்கலாம் போல இருக்கு. அவ்வளவு பணத்தோடும் அழகோடும்.. பாட்டோடும்.. ஒருத்தி எனக்குக் கிடைக்கிறாள் எனும்போது அதைக் கை நழுவ விட்டால் என்னைப் போல் முட்டாள் வேறு யாருமில்லைடா மித்ரா..”

அறைக்குள்.. காபித்தம்ளர்களோடு வந்த லலிதாவின் முகம் கருத்திருந்தது. அவள் பார்வை மித்ரனை குற்றம் சாட்டியது.

‘ஏன்.. சித்தி இப்படி என்னைப் பார்க்கிறாங்க..?’ புரியாதவனாக மித்ரன் காபியை வாங்கிக் கொண்டான்.

காபியைக் குடித்து முடித்த விஸ்வம், லலிதாவிற்கு நன்றி சொல்லிவிட்டு.. கூடுதலாக.. ஒரு அழைப்பையும் விடுத்தான்.

“இன்றைக்கு நைட்.. எனக்கும்.. காயத்ரிக்கும்.. மேரேஜ் என்கேஜ்மென்ட் நடத்தப் போகிறாங்க.. மித்ரனுடன் நீங்களும் அங்கிளும்.. குடும்பத்துடன் கட்டாயம் வந்து கலந்து கொள்ள வேண்டும் ஆன்ட்டி. இன்பேக்ட்.. இந்த மேரேஜே.. மித்ரனால் தான் நடக்க போகிறது.. நீங்கள் எல்லோரும் வர வேண்டியது அவசியம் ஆன்ட்டி.. நான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்..”

விஸ்வம் வெளியேறிவிட.. லலிதா மித்ரனை முறைத்தாள்.

0Shares

Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link