Chapter 06

0Shares

கொட்டும் மழையில் குடை பிடித்து சுபாவைப் பார்க்கப் போனதற்கு தக்க பலன் கிடைத்து விட்டதில் அக மகிழ்ந்து போனாள் பூர்ணிமா.. ரகுவரனைப் பார்ப்பதே குதிரைக் கொம்பு.. பேசுவதை அவள் நினைத்தும் பார்த்ததில்லை.. அவனைப் பார்த்ததுடன் பேசியும் விட்டதில் அவளுக்குள் பொங்கிய ஆனந்தத்திற்கு அளவேயில்லை..

அப்போதிருந்த மனநிலையில் நடந்த நிகழ்வுகளை அசை போட்டு நினைத்துப் பார்க்க அவளுக்கு தனிமை தேவைப் பட்டதில் சுபாவின் வீட்டிற்குப் போகாமல் திரும்ப முற்பட்டாள்.. அதற்கு விடாமல் சுபா அங்கு வந்து விட்டாள்.. வந்தவள் பூர்ணிமாவைப் பார்த்ததும் திகைப்புடன்..

“என்னடி இங்கே நிற்கிற..?” என்று கேட்டாள்..

“ஹி.. ஹி.. உன்னைத்தான் பார்க்க வந்தேன்..” என்று தட்டுத் தடுமாறினாள் பூர்ணிமா..

என்னவோ உன்னைத்தான் நானறிவேன், மன்னவரை யாரறிவார் என்ற ரீதியில் அவள் தடுமாறிய தடுமாற்றத்தில் சுபாவின் விழிகளில் சந்தேகம் வந்து அமர்ந்தது..

“உன்கிட்ட எதுவோ சரியில்லைன்னு என் மனசுக்குள்ள ஒரு பட்சி கூவுதே..” என்றபடி பூர்ணிமாவை பாதாதிகேசம் முதல் பார்வையில் அளந்தாள்..

“போடி.. உனக்கும் ஒரு வேலையில்லை.. உன் பட்ஷிக்கும் வேற வேலையில்லை.. போயும் போயும் அந்தப் பட்ஷிக்கு கூடு கூட்ட உன் மனசுதானா கிடைச்சது..?”

கோபம் போலக் காட்டியபடி எஸ்ஸாக முயன்றாள் பூர்ணிமா.. 

“அந்தக் கதையே வேணாம்.. என்னைப் பார்க்கவந்தவ மாடிக்கு வராம கீழே மழையில ஏன் உலாத்தற..?” கறாராகக் கேள்வி கேட்டு அவளைப் போகவிடாமல் தடுத்து நிறுத்தினாள் சுபா..

“உன் பிளாட் மாடியிலதானடி இருக்கு..?”

“அதைத்தாண்டி நானும் கேட்கிறேன்.. கிரௌவுண்டு புளோரில இருந்தா நீ கீழே நிக்கிறதில ஒரு அர்த்தமிருக்கு.. மாடியில இருக்கிற பிளாட்டுக்கு வந்தவளுக்கு கீழே என்ன வேலை..?”

“ஒரு வேலையுமில்ல.. மாடி பிளாட்டுக்கு பறந்து வர முடியாதில்ல.. அதனாலதான் கீழே நிக்கிறேன்..”

“எல்லாத்துக்கும் ஒரு ஆன்சர் வைச்சிருப்பியே..”

அலுத்துக் கொண்ட சுபா சுற்று முற்றும் பார்த்தாள்..

“யாரைடி தேடற..?” என்றாள் பூர்ணிமா..

“இங்கே உட்கார்ந்திருந்த வாட்ச்மேனை எங்கேடி காணோம்..?”

“ம்ம்ம்.. குருவி தூக்கிட்டுப் போயிருக்கும்..”

“அவருக்கு இருக்கிற ஸ்டெர்ன்த்துக்கு குருவி தூக்கிட்டுப் போனாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.. படு வீக்கான மனுசன்..”

“தெரிஞ்சாச்சரி.. அவரை எதுக்கு நீ தேடற..?”

எரிச்சலுடன் கேள்வி கேட்ட பூர்ணிமாவை ஏற இறங்கப் பார்த்தாள் சுபா.. அவள் பார்வையில எச்சரிக்கையான பூர்ணிமா..

“எதுக்குடி இப்படிப் பார்த்து வைக்கிற..?” என்று பம்மினாள்..

“ம்ம்.. எங்க அபார்ட்மென்ட் வாட்ச் மேனை நான் தேடறேன்.. நீ எதுக்கு கொஸ்டின் பண்ற..?”

சுபாவின் பதில் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் திருதிருத்தாள் பூர்ணிமா..

“என்ன..?” என்ற சுபாவின் ‘என்ன’வில் பல கேள்விகள் தொக்கி நின்றன..

“ஒன்னுமில்லையே.. ஒன்னுமே இல்லைடி சுபா..”

என் பாதர் ஷெல்பில் இல்லை என்ற கதையாக மழுப்பினாள் பூர்ணிமா.. அந்த மழுப்பலே அவளைக் காட்டிக் கொடுத்து சுபாவிடம் அகப்பட வைத்தது..

“நீ எப்ப வந்த..?” சுபா கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்தாள்..

“இப்பத்தான்..”

“இப்பத்தான்னா..?”

“இப்பத்தான்னா இப்பத்தான் சுபா..”

“குத்து மதிப்பா நேரத்தைச் சொல்லு..”

“யாரைக் குத்தற மதிப்பு சுபா..?”

“உன்னைக் குத்தற மதிப்புன்னு சொல்ல மாட்டேங்கிற தைரியம்தானே..? அண்ணன் டி.எஸ்பிங்கிற தெனாவெட்டு..?”

“ஒரு வெட்டும் இல்லை.. ஆளை விடு..”

“தப்பிச்சுப் போகலாம்ன்னு பார்க்கறியா..? அதுதான் நடக்காது.. நானும் உன்னை வாட்ச் பண்ணிக்கிட்டுத்தாண்டி இருக்கேன்.. ஒரு மார்க்கமாத்தான் இருக்க..”

“இந்த மார்க்கமெல்லாம் எனக்குத் தெரியாது..”

“யார்கிட்டக் கதை விடற..?”

“உன்கிட்டக் கதை விட்டுட்டாலும்.. ம்ஹீம்.. கேட்டுட்டுத்தான் வேற வேலையைப் பார்ப்ப..”

தோழிகள் இருவரும் வழக்கடித்துக் கொண்டிருந்த போது அந்த அபார்ட்மெண்டில் குடியிருந்தவர்களில் ஒருவரின் கார் கேட்டுக்கு வெளியே வந்து நின்றது.. காரை ஓட்டி வந்தவர் காரை விட்டு இறங்காமல் ஹாரனை அடித்த சப்தத்தில் தோழிகள் இருவரும் சண்டையை நிறுத்தி விட்டுக் காரைத் திரும்பிப் பார்த்தார்கள்..

“எதுக்குடி இப்படி சவுண்டு கொடுக்கிறாரு..” பூர்ணிமா முகத்தைச் சுளித்தாள்..

“கேட் மூடியிருந்தா ஹாரன் சவுண்டைக் கொடுக்காம என்ன பண்ணுவாராம்.. இந்த வாட்ச்மேன் கேட்டைத் திறந்துவிட வராம எங்கே போனார்…?” சுபா எரிச்சலுடன் சொன்னாள்..

‘ஹாஸ்பிடலுக்குப் போயிருக்கிறார்..’ என்ற வார்த்தைகள் பூர்ணிமாவின் வாய் வரைக்கும் வந்து விட்டன..

அதைச் சொன்னால் எதிர் கொள்ளப் போகும் கேள்விகளைப் பற்றிய பயத்தில் சொல்லாமல் விட்டு விட்டாள்.. அது அவள் வசிக்கும் குடியிருப்பல்ல.. அந்த அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஒன்றில் அவளது தோழிதான் வசிக்கிறாள்.. பூர்ணிமா எதிர் வீட்டில் இருப்பவள்.. இந்தக் குடியிருப்பின் வாட்ச்மேனைப் பற்றி அவள் கருத்துச் சொல்ல முடியாது..

“பால்பாக்கெட் காலி.. கொட்டற மழையில சூடா பஜ்ஜி போட்டுச் சாப்பிட்டு காபி கலந்து குடிச்சா எப்படியிருக்கும்..? வாட்ச்மேன் இருந்தா கடைக்குப் போய் பால் பாக்கெட்டும் கள்ள மாவு பாக்கெட்டும் வாங்கிக்கிட்டு வரச் சொல்லலாம்ன்னு நினைச்சு வந்தா ஆளைக் காணோம்..”

உனக்கு மனச்சாட்சியே இல்லையா சுபா என்று கேட்டு விடலாம் போல கொதித்துப் போனாள் பூர்ணிமா..

இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு கொட்டும் மழையில் நனைந்தபடி வாட்ச்மேன் போயாக வேண்டும்.. குடை பிடித்தாலும் பிரயோசனமில்லை.. அடித்துக் கொட்டும் மழை ஆளை நனைத்து விட்டுத்தான் வேறு வேலையைப் பார்க்கும்.. அந்த மழையில் நனைந்தபடி வாட்ச்மேன் வாங்கி வரும் பாலையும், கடலை மாவையும் வாங்கி உலர்ந்த உடையும் சாரல் படாத வீடுமாக இவர்கள் பஜ்ஜி போட்டு, காபி கலந்து.. பால்கனியில் நின்று கொட்டும் மழையை வேடிக்கை பார்த்தபடி மொக்குவார்கள்.. குளிரில் நனையும் வாட்ச்மேனுக்கு கொதிக்கக் கொதிக்க ஒரு கப் காபி கொடுப்போம் என்ற பிரக்ஞை கூட இவர்களுக்கு இருக்காது..

ஹாரன் அடித்து அடித்து ஓய்ந்து போன கார்க்காரர் காரை விட்டு இறங்கி மழையில் நனைந்தபடி கேட்டை திறந்து விட்டுக் காரில் ஏறினார்..

“நாம திறக்கலாமா..?”

ஆலோசனை கேட்டு விட்டு சுபாவின் பலத்த முறைப்புக்கு ஆளானாள் பூர்ணிமா..

“வாயை வைத்துக்கிட்டு சும்மாயிருக்க மாட்டியா..? அந்த ஆளுக்கு கேட்டைத் திறந்து மூடத்தான் நாம இங்கே வந்து நின்னிருக்கோமா..?”

“இல்லேடி சுபா..”

“ஒரு நாள் செய்தா அதையே ரெகுலராக்கிருவாங்க பூர்ணி.. அபார்ட்மெண்ட் பழக்கத்தைப் பற்றி உனக்குத் தெரியாது.. பேசாம இரு.. “

நமக்கெதுக்கு வம்பு என்று பூர்ணிமா பேசாமல் இருந்து விட்டாள்.. காரை ஓட்டி வந்தவர் பார்க் பண்ணி விட்டுத் திறந்திருந்த கேட்டை மூடி விட்டு வரும் வரை அவரைக் கவனிக்காததைப் போல பூர்ணிமாவிடம் தீவிரமாக விவாதம் செய்து கொண்டிருந்த சுபா.. அவர் கேட்டை மூடிவிட்டு வந்ததும் சிநேகிதமாக சிரித்தபடி..

“ஹாய்.. அங்கிள்..” என்றாள்..

‘எப்படி இவளால் கொஞ்சம் கூட கில்ட்டியில்லாம ஹாய் சொல்ல முடியுது..?’

கேட்டைத் திறந்து மூடியதில் மழையில் நனைந்து விட்ட அந்த மனிதரை பரிதாபமாக பார்த்தாள் பூர்ணிமா.. அவரோ பூர்ணிமாவைக் கவனிக்காமல் சுபாவிடம்..

“இந்த வாட்ச்மேன் எங்கே தொலைஞ்சான்..?” என்று படபடத்தார்..

“ஐ டோன்ட் நோ அங்கிள்.. மழைக்கு இதமா தம்மடிக்கப் போயிருக்காரோ என்னவோ..” என்றாள் சுபா..

நீ கண்டாயா என்று கேட்க வேண்டும் போல இருந்தது பூர்ணிமாவுக்கு..

“டியூட்டி டயத்தில என்ன தம் வேண்டிக் கிடக்கு..? அபார்ட் மெண்டோட இந்த மன்த்லி மீட்டிங்கில இவனை மாத்தச் சொல்லிச் சொல்லப் போறேன்..”

“செய்யுங்க அங்கிள்..”

கோபத்துடன் கத்தி விட்டு அந்த மனிதர் போய்விட்டார்..

“நீயும் ஏண்டித் தூண்டி விடற..?” ஆற்ற மாட்டாமல் கேட்டாள் பூர்ணிமா..

“அபார்ட்மெண்டோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேசனில நாம தலையிட முடியாது பூர்ணி.. அத்தோட இது மாதிரி சமயத்தில வாட்ச்மேன் இருக்கிறது அவசியம்தானே.. டியூட்டி நேரத்தில எஸ்கேப் ஆகலாமா..?” என்று நியாயம் பேசினாள் சுபா..

“நீ நினைக்கிறதைப் போல அவர் டியூட்டிக்கு ஓபி அடிக்கலைடி சுபா.. ஹெவி ஃபீவர்.. பாவம்.. காய்ச்சலோட டியூட்டி பார்த்தவர் தன்னுணர்வு இல்லாம உங்க அபார்ட்மெண்ட் வாசலிலதான் சரிஞ்சு கிடந்திருக்கார்.. ரகுவரன் சார்தான் அவரை ஹாஸ்பிடலுக்கு காரில் தூக்கிப் போட்டுக்கிட்டுப் போனார்..”

“என்னடி சொல்ற..? உனக்கெப்படித் தெரியும்..?”

“ரகுசார் வாட்ச்மேன் அண்ணாவைக் காரில் தூக்கிப் போடத் தோதா நான்தாண்டி அவருக்கு கார்க் கதவைத் திறந்து விட்டேன்.. அவர்தான் விவரம் சொன்னார்..”

பூர்ணிமாவின் முகம் மிருதுவானது.. நடந்ததை அவள் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்ட சுபா யோசனையானாள்..

“என்னடி..?” என்றாள் பூர்ணிமா..

“எனக்கென்னவோ இது விசயமா அபார்ட்மெண்டில பலத்த சண்டை வரும்ன்னு தோணுது பூர்ணி..”

சுபா சொன்னதைப் போலதான் ஆனது.. வாட்ச்மேன் உடல் தேறி வரும் வரைக் காத்திருக்க முடியாது.. புதிய வாட்ச்மேனை நியமிக்க வேண்டும் என்று அபார்ட்மெண்டில் கூட்டம் போட்டுத் தீர்மானம் செய்தார்கள்.. அதை ஒரு மனதாக நிறைவேற்ற முடியாமல் ரகுவரன் எதிர்த்து நின்றான்..

“ஒரு மனுசனுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சுன்னா வேலையை விட்டு நிப்பாட்டிருவீங்களா..? நீங்க வேலை பார்க்கிற ஆபிஸ்களில் இப்படித்தான் செய்கிறாங்களா..? உங்களுக்கு உடம்புக்கு முடியலைன்னா மெடிகல் லீவு போடறிங்கள்ல.. வாட்ச் மேனுக்கும் மெடிகல் லீவைக் கொடுங்க..”

“அவன் வர்ற வரைக்கும் அபார்ட்மெண்ட் காவல் காக்க ஆளில்லாம இருக்கனுமா..?”

“டெம்பரவரியா யாரையாச்சும் போடுங்க.. பட் வாட்ச்மேன் உடம்பு சரியாகி வர்றப்ப டெம்பரவரி வாட்ச் மேன் இடத்தைக் காலி பண்ணிரனும்..”

“இல்லைன்னா..?”

“இதுக்குக் காரணமானவங்களை நான் காலி பண்ணிருவேன்..”

உறுதியான ரகுவரனின் குரலில் இவன் செய்தாலும் செய்து விடுவான் என்று திகிலடைந்து போனார்கள் அவர்கள்..

“போலிஸ்ன்னு நான் இருக்கேண்டா.. என் முன்னாடியே கொஞ்சம்கூட பயமில்லாம அவன் வாய் விடறாண்டா..” பூபாலனிடம் அவனது நண்பன் புலம்பித் தள்ளினான்..

இதை பூபாலன் வீட்டில் சொன்னபோது பூர்ணிமாவுக்கு ஜில்லென்று இருந்தது.. ரகுவரனின் தீரத்தில் அவள் மனதைப் பறி கொடுத்தாள்.. எதற்கும் அஞ்சாத அவனது அஞ்சாமை அவளைக் காந்தம் போல சுண்டி இழுத்தது..

வாட்ச்மேன்  குணமாகி வேலைக்குத் திரும்பினான்.. அவனுக்கான மருத்துவச் செலவை ரகுவரன்தான் செலவளித்தான் என்று சொன்னாள்..

“அது மட்டுமில்லைடி.. வாட்ச்மேன் வேலைக்கு வராத நாள்களுக்கான சம்பளத்தையும் இவனே கொடுத்தானாம்.. பெரிய பாரிவள்ளல் பரம்பரைன்னு மனசுக்குள்ள நினைப்பு..”

சுபா நொடித்துக் கொள்ள.. பூர்ணிமா கொடியாக மாற ஆசை கொண்டாள்..

0Shares

Reviews — Akalvizhku / அகல் விளக்கு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link