Chapter 08

0Shares

“இந்த நிலவினை நான் பார்த்தால்

அது எனக்கென வந்தது போலிருக்கும்..

உன் நினைவினை எடுத்து வரும்..

என் நெஞ்சினில் கொடுத்து விடும்..”

இரவின் அமைதியில் மெத்தையின் மடியில் துயில் கொள்ளும் போது மன நிறைவுடன் மெல்லிய குரலில் பாடியபடி தூங்கிப் போவாள் பூர்ணிமா..

அவளுக்காக அவன் வந்து நிற்கிறானா என்று அவளுக்குத் தெரியவே தெரியாது.. இவள் வீட்டுப் பால்கனியில் விளக்கைப் போடாமல் இருளுக்குள் ஒளிந்து இவள் நிற்பாள்.. அவன் வீட்டுப் பால்கனியில் விளக்கு வெளிச்சத்தில் கம்பீரமாக அவன் நிற்பான்.. அவன் பார்வை இருளைத் துளைக்காது.. தேடாது..

ஆனால் அவளுக்காக அவன் நிற்பதைப் போல.. அவன் பார்வை அவளைத் துளைப்பதைப் போல.. அவன் அவளைத் தேடுவதைப் போல அவளுக்குள் ஓர் சிளிர்ப்பு வரும்.. அந்த உணர்வில் கலந்து தொலைந்து போக ஆரம்பித்தாள் பூர்ணிமா..

எப்போதாவது யதேச்சையாக சாலையில் அவர்கள் சந்தித்துக் கொண்டதுண்டு.. அவன் என்னவோ இயல்பாகத்தான் பார்த்து வைப்பான்.. பூர்ணிமாதான் உடல் நடுங்கத் தவித்துப் போவாள்..

இப்படி எதிர்த்த அபார்ட்மெண்டில் குடியிருக்கும் ரவுடி அவளுக்குச் சுவாசமாகிப் போவான் என்று அவள் நினைத்தும் பார்த்ததில்லையே.. பின் எப்படி இது நிகழ்ந்தது..?

நினைத்துப் பார்க்காதவைகள் நிகழ்வதுதானே வாழ்க்கை..? காலத்தின் ஓட்டத்தில் எந்தத் தருணத்தில் எது நிகழும் என்று விதி வகுத்திருக்கும் நியதியை அறிந்தவர் யார்..?

பூப்போன்ற பூர்ணிமாவின் மனதில் தீயாய் தீயவைகளைச் சுட்டெரிக்கும் ரௌடி குடி புகுந்து விட்டான்.. அதை எப்படி அவனிடம் தெரியப்படுத்துவது என்று தெரியாமல் அவனைத் தள்ளியிருந்து பார்ப்பது மட்டுமே போதும் என்று நாள்களைக் கடத்திக் கொண்டிருந்தாள் அந்த பேதை..

பூர்ணிமாவுக்கு காதலை உணர முடிந்தது.. அதைச் சொல்லத் தெரியவில்லை.. முதலும், முடிவுமற்ற அந்த உணர்வை இனம் காணக் கூடத் தெரியாத குழந்தை அவள்..

அவளுக்கு ரகுவரனைப் பிடித்திருந்தது.. அவனைப் பார்க்க வேண்டும் என்று அவள் மனம் தவித்ததைப் போல பேச வேண்டும் என்று தவிக்கவில்லை.. அந்தப் பார்வையையும் அவனுக்குத் தெரியாமல் மறைந்திருந்துதான் பார்ப்பாள்.. அதை வீட்டார் அறிந்து விடுவார்களோ என்று பயந்து வியர்த்துப் போவாள்.. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்..

ஒர்முறை இயல்பாக பாகீரதி..

“மறைந்திருந்தே பார்க்கும்..

மர்மம் என்ன..?”

என்ற பாடலை முணுமுணுத்து விட்டாள்..

கண்ணாடி தம்ளரில் ஜீஸ் அருந்திக் கொண்டிருந்த பூர்ணிமா அந்தப் பாடலின் வரிகளில் பயந்து போய் தம்ளரை நழுவ விட்டு விட்டாள்..

“சிலீர்..” என்ற சப்தத்துடன் கண்ணாடி தம்ளர் உடைந்து சிதறியதில் பயம் அதிகரிக்க அழுது விட்டாள்..

“என்னம்மா..?” என்றபடி எட்டிப் பார்த்த பாகீரதி பதறிப் போனவளாக மகளை சமாதானம் செய்தாள்..

பூர்ணிமாவைச் சமாதானம் செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இல்லை.. அதைச் சொல்லி இதைச் சொல்லி அவளைத் தேற்றுவதற்குள் பாகீரதிக்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது..

“ஏம்மா.. கைதவறி கண்ணாடி தம்ளர் விழுந்து நொறுங்கிட்டா நீ என்ன பண்ணுவ..? வேணும்ன்னா கீழே போட்டு நொறுக்கின..? தெரியாம நடந்ததுக்கு இப்படி அழுகிறயேம்மா..”

அலுத்துக் கொண்ட பாகீரதிக்குத் தெரியாது.. பூர்ணிமா கண்ணாடி தம்ளரைக் கை நழுவ விட்டு விட்டதால் அப்படி அழுகவில்லையென்று..

அவள் மனதைத் தொலைத்து விட்டதால் அழுகிறாள்.. அதை மீட்க முடியவில்லையென்று அழுகிறாள்.. அவளுடைய குடும்பத்தினருக்குத் தெரியாத அந்தரங்கம் அவள் மனதில் புதைந்திருப்பதில் அழுகிறாள்.. பச்சைக் குழந்தையென்று நம்பிக் கொண்டிருக்கும் அவளது குடும்பத்தினரின் நம்பிக்கையைச் சிதைத்து விட்ட குற்ற உணர்வில் அழுகிறாள்..

அலாதியான குணங்களைக் கொண்டவள் பூர்ணிமா அகல் விளக்கின் சுடர் போன்றவள்.. அமைதியைத் தன்னகத்தில் கொண்டவள்..

அவளது சின்னஞ்சிறு இதயம் காதலின் கனம் தாங்காமல் தொய்ந்தது.. சலனம் கொண்ட மனதின் சஞ்சலத்தைப் பிறர் அறியாமல் மறைக்கும் நுட்பம் அவளுக்குக் கை வரவில்லை.. சூட்சுமம் நிறைந்தவர்கள்தான் காதல் பண்ண முடியுமா என்ற சோர்வு அவள் மனதுக்குள் அவ்வபோது வந்து போகும்.. எதிர்பாராமல் அவள் மனதுக்குள் நுழைந்த காதலுக்கு என்ன எதிர்காலம் இருக்கப் போகிறது என்று கேள்வி அவள் மனதை தைத்து ரணமாக்கும்..

அதுபோன்ற தருணங்களில் எல்லாம் பூர்ணிமா அவள் மனதைத் கொய்த காதலை கடிந்து மறுத்து விலக்கும் மார்க்கங்களை யோசிப்பாள்.. அவற்றைச் செயல்படுத்தவும் முனைவாள்.. அனிச்ச மலரின் மென்மை கொண்டவளின் காதல் உன்னதம் நிறைந்தது என்பதை உணராத பேதையாக மனம் கலங்கினாள்.. புத்திக்கும் மனதுக்கும் என்றுமே ஏழாம் பொருத்தம்.. இதுவேண்டாம் என்று புத்தி விலக்கி வைப்பதை.. இது மட்டும்தான் வேண்டும் என்று மனது அடம் பிடிப்பது ஏன் என்பதை கண்டு சொல்வார் எவருமில்லை.. புத்தி பகைப்பதைத்தான் மனது விரும்பித் தொலைக்கிறது..

குடும்பத்தினரின் எண்ண அலைவரிசையோடு இசைந்து நேர்தடத்தில் பயணித்த பூர்ணிமாவின் மனம் என்று ரகுவரனின் பக்கமாக விலகிப் பயணித்ததோ அன்றே தவறு செய்து விட்டச் சிறு குழந்தைபோல குற்ற உணர்வை மனதுக்குள் பாரமாக உணர்ந்து கண்கலங்க ஆரம்பித்து விட்டாள் பூர்ணிமா.. 

இத்தனை போராட்டத்தையும் ரகுவரனுக்காக அவள் மனதுக்கள் போராடிக் கொண்டிருப்பதை அறியாதவனாக யாரோ, எவரோ போல ரகுவரன் போய் வந்து கொண்டிருந்தான்.. அவனைப் பார்க்கக் கூடாது என்று தினமும் உறுதி பூண்டு நொடியில் அந்த உறுதி கலைந்து அலைபாயும் மனதை அடக்கத் தெரியாதவளாக பால்கனியின் இருளோடு இருளாகக் கலந்து அவன் வரவுக்காக காத்திருப்பாள் பூர்ணிமா..

அவனும் வருவான்.. அவனுக்காக அவள் காத்திருப்பதை அறிந்து வைத்திருப்பவனைப் போல கேட்டை அணுகும் போது காரின் உள் விளக்கைப் போட்டு பூர்ணிமாவின் வீட்டுப் பால்கனியைப் பார்த்து வைப்பான்.. அவனுடைய பிளாட்டுக்குள் நுழைந்து விளக்குகளைப் போட்டு.. விட்டதும் பால்கனியில் பிரசன்னமாகி காட்சி கொடுப்பான்.. மனமார அவனைப் பார்க்கும் பூர்ணிமாவின் கண்களில் இருந்து உணர்ச்சிப் பூர்வமான கண்ணீர்த்துளி அரும்பி அவள் கையில் விழுந்து நனைக்கும்..

விரயமாகும் அந்தக் கண்ணிர் துளிக்கு விலை மதிப்புக் கிடையாது.. எங்கு தேடினாலும் கிடைக்காத அரிதான திரவியம் அது என்பதை அக்கண்ணீர்த்துளியை உகுத்தவள் அறிய மாட்டாள்..

பூர்ணிமாவைப் போன்ற பெண்ணின் காதல் கிடைக்க ரகுவரன் தவம் செய்திருக்க வேண்டும்..

அந்த ரகுவரனின் ‘ஆரோ மெக்கானிக் ஷெட்..!’ டில் ஸ்கூட்டியை விட வேண்டும்.. என்பதற்காகவே அதன் டயரை ஆணியின் மீது ஏற்றிப் பழுதாக்கினாள் பூர்ணிமா..

அவளது கல்லூரி இருக்கும் திசைக்கு எதிர் திசையில் இருக்கும் ரகுவரனின் மெக்கானிக் ஷெட்டிற்குப் போக வேண்டும் போல மனது துடிதுடித்ததை தாங்க மாட்டாமல்.. ஸ்கூட்டியை அந்தத் திசையில் செழுத்தி விட்டாள் பூர்ணிமா.. ஷெட்டை நெருங்கியதும் எதற்காக வந்திருக்கிறாள் என்ற காரணத்தை உண்டாக்க சாலையின் ஓரமாக கிடந்த பெரிய ஆணியின்மீது ஸ்கூட்டியை ஏற்றி விட்டாள்.. வெடி வைத்ததைப் போல வெடித்து வைத்தது டயர்.. பூர்ணிமாவுக்கான காரணம் கிடைத்து விட்டது..

0Shares

Reviews — Akalvizhku / அகல் விளக்கு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link