Chapter 12
உக்கிரத்தில் இருந்த பிரசன்னாவின் கையில் குளிர்ந்த தண்ணீர் பாட்டிலைத் திணித்து தாகத்தை தணித்துக் கொள்ளச் சொன்னான் ரகுவரன்.. கத்திக் கத்தி தொண்டை வறண்டிருந்ததால் மறு பேச்சுப் பேசாமல் தண்ணீர் பாட்டிலைக் காலி செய்து தாகத்தை தணித்து மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி அமைதியடைந்தான் பிரசன்னா.. ஆறுதலாகப் பேசப் போனால் அதற்கும் அவன் டென்சன் ஆவான் என்பதினால் எதுவும் பேசாமல் கார் என்ஜினைக் கவனிக்க ஆரம்பித்தான் ரகுவரன்..
“என்னத்தைச் சொல்ல..?” பெருமூச்சு விட்டான் பிரசன்னா..
அவன் பேச்சுக்கு, ‘எசப் பேச்சு’ ஏதும் வராததினால் சமாதானமானவன்..
“அவளும் இருந்திருக்கலாம்.. இந்த மழையும் இன்னும் கொஞ்ச நேரம் கண்டினியூ பண்ணியிருக்கலாம்.. இரண்டும் இரண்டு ஜாடி.. இரண்டுமே மூடி கழண்ட ஜாடிங்கிற கதையா மழையும் நின்னுருச்சு.. அவளும் ஓடி போயிட்டா..”
நண்பன் விட்ட பெருமூச்சைத் தாங்க முடியாமல் வாய் திறந்த ரகுவரன்..
“மழையையே குற்றம் சொல்லாத.. இவ்வளவு நடந்திருக்கு.. நீயாவது அவ முகத்தைப் பார்த்திருக்கலாமில்ல..” என்று நண்பனைக் கடிந்து கொண்டான்..
“ஏண்டா வயிற்றெரிச்சலைக் கிளப்பற..? மழையில நனைஞ்சவன் முகத்தில வழிஞ்சுக்கிட்டு இருக்கிற தண்ணியை வழிச்சு விடுவேனா இல்லை பக்கத்தில நிக்கிறவ முகத்தைப் பார்ப்பேனா..? இப்படி இடி விழுந்து, அவ பயந்து, ராவிக்கிட்டு வந்து என்னைக் கட்டிப் பிடிப்பான்னு எனக்குத் தெரியுமாடா..?”
“அதைச் சொல்லு.. தெரிஞ்சிருந்தாத்தான் அவ முகத்தைப் படமாவே வரைஞ்சிருப்பியே..”
“தெரியுதில்ல.. அப்புறமும் ஏண்டா வெந்த புண்ணில சுடு காப்பியை ஊத்தற..? கைக்கெட்டினது வாய்க் கெட்டலையேன்னு நான் வயிறெரிஞ்சு புகை விடறதைப் பாக்கறதில உனக்கு அம்புட்டு ஆசை.. உன்னை நண்பனை அடைஞ்சிருக்கேனே.. நான் கொடுத்து வைத்தவண்டா ரகு..”
சிரித்தபடி இயல்பாக வாசல் பக்கம் திரும்பிய ரகுவரன் சிரிப்பை மறந்து அப்படியே நின்று விட்டான்.. நண்பன் நின்ற தோற்றத்தில்..
‘இவன் ஏன் இப்படி ஜெர்க் ஆகிறான்..’ என்று வாசலைப் பார்த்தான் பிரசன்னா..
மற்ற மூவரும் பிரசன்னாவைப் பின்பற்றி வாசல் பக்கம் பார்வையைத் திருப்பினார்கள்..
அங்கே அழகான ஓவியம் போல நின்று கொண்டிருந்தாள் பூர்ணிமா.. நாணம் கலந்த செம்மை அவள் முகத்தில் படர்ந்திருக்க.. பயமும், நடுக்கமுமாக ரகுவரனை அடிப் பார்வையில் பார்ப்பதும் சுற்று முற்றும் பார்ப்பதுமாக பதட்டத்துடன் காணப்பட்டாள்..
‘இதைப் பாருடா.. இப்பத்தான் என்னைத் தேடி எந்தக் காதலி வரப் போறான்னு சொன்னான்.. சொல்லி வாய் மூடலை.. இந்தப் பெண் வந்து நிற்குது..’
பிரசன்னா பூர்ணிமாவைப் பார்த்திருக்கிறான்.. ரகுவரனின் வீட்டிற்குப் போய் வரும்போது வழியில் தென்படுவாள்.. அவன் மட்டும் தனியாக இருந்தால் அறிமுகமற்ற பார்வையுடன் கடந்து போய் விடுவாள்.. ரகுவரன் அவன் பக்கத்திலிருந்தால் விழிகளில் பரவசத்துடன் ரகுவரனை மட்டும் பார்த்தபடி கடந்து போவாள்.. அவளைப் பார்க்கும் தருணங்களில் ரகுவரனின் முகத்தில் விரவும் மிருதுத்தன்மையில் வியந்து போவான் பிரசன்னா..
“யாருடா அந்தப் பொண்ணு..?”
“என்னோட அபார்ட்மெண்டுக்கு எதிர் வீட்டுப் பெண்..”
“கேக்க நல்லாத்தான் இருக்கு.. உனக்கும் பெண்களுக்கும் ஆகவே ஆகாதே..”
“அப்படி உன்கிட்ட நான் வந்து சொன்னேனா..?”
“அப்படிப் போடு அருவாளை.. பார்ட்டி வேற உன்னைப் பருகு பருகுன்னு பார்க்குது..”
“பார்ட்டின்னு சொன்ன.. பல்லைக் கழட்டிருவேன்.. அவ பெயர் பூர்ணிமா..”
பூர்ணிமா என்ற பெயர் ரகுவரன் மென்மையாக உச்சரித்த விதத்தில் பூரணத்துவம் அடைந்து விட்டதைப் போல உணர்ந்தான் பிரசன்னா.. ரகுவரனின் முரட்டு முகத்தில் விரவியிருந்த மென்மை அவனுக்குத் தனித்ததொரு சோபையைத் தந்ததையும் இப்போது நினைவு கூர்ந்தான்..
ரகுவரன் பெண்களிடம் பேசிப் பழகியிராதவனல்ல.. அவனது மெக்கானிக் ஷெட்டிற்கும், ஆட்டோ மொபைல் ஸ்பேர்ஸ் பார்ட்ஸ் கடைக்கும் பெண்கள் வருவதுண்டு.. வியாபார ரீதியாய் அவர்களிடம் பேசும் ரகுவரன் இறுக்கமாக முகத்தை வைத்திருப்பான்.. அதிகப்படியாக ஒரு வார்த்தைகூடப் பேசிவிட மாட்டான்.. அவனது கடுமையான சுபாவத்தில் அவர்களும் அரண்டு போய் ஒன்றிரண்டு வார்தைகளுடன் வேலையை முடித்துக் கொண்டு இடத்தை காலி பண்ணி விடுவார்கள்..
“அவங்க என்ன உன் எதிரிக்காரங்களாடா..?” பிரசன்னா தலையில் அடித்துக் கொள்வான்..
அப்படிப்பட்ட ரகுவரன் கனிவான பார்வையும், நட்பான முகபாவமுமாக பூர்ணிமாவை அணுகி, வெகு தன்மையாக
“வாங்க..” என்று வரவேற்றான்..
“ஸ்கூட்டி ரிப்பேர்.. என்னன்னு தெரியலை..” அவன் முகத்தைப் பார்ப்பதும் இமைகள் படபடக்கத் தலையைக் குனிந்து கொள்வதுமாகச் சொன்னாள் பூர்ணிமா..
“லோகு..” ரகுவரனின் அழைப்பில்..
“சார்..” என்று ஓடி வந்தான் லோகநாதன்..
“இதில என்ன ரிப்பேர்ன்னு பாரு..”
பூர்ணிமாவின் கைப்பிடியிலிருந்த ஸ்கூட்டியை நகர்த்தினான் ரகுவரன்.. பதறிப் போனவளாக தள்ளி நின்ற பூர்ணிமாவின் நடுக்கத்தை ரசித்தபடி லோகநாதனிடம் ஸ்கூட்டியை ஒப்படைத்து விட்டு..
“உள்ளே வாங்க..” என்றான்..
‘இதுதான் இவனோட மெக்கானிக் ஷெட்டா..?’
பூர்ணிமாவின் பார்வை ஷெட் முழுவதும் சுழன்று ஆராய்ந்தது.. அங்கே நின்று கொண்டிருந்த கார்களின் வரிசையில் பிரமித்தாள்..
“கார்களா இருக்கே..” என்றாள் குழந்தைத்தனத்துடன்..
வசீகரமான அந்தக் குழந்தைத் தனத்தில் வசீகரிக்கப் பட்ட ரகுவரன் புன்னகைத்தான்.. மனதுக்குப் பிடித்த பெண்ணின் முன்னால் சிரித்த அவனது சிரிப்பை பிரசன்னாவும் மற்ற மூவரும் வியப்புடன் பார்த்தார்கள்.. அரிதான அந்தச் சிரிப்பு அலாதியானதொரு அழகுடன் இருப்பதாக பலராமன் கிசுகிசுத்தான்.. அதிசயத்திலும் அதிசயமாக ரகசியப் புன்னகையுடன் அதை ஆமோதித்து தலையசைத்தான் பிரசன்னா..
மறைத்து வைக்க முடியாத மல்லிகை மலரின் வாசமாக வெளிப்படும் நண்பனின் நுண்ணிய காதல் உணர்வுகளை அவனால் இனம் காண முடிந்தது.. முரட்டுத்தனமான ரகுவரனின் பாறை மனதிலும் பூ மலரக்கூடும் என்பதை அன்றுதான் அவன் கண்டான்..
விண்ணிலிருந்த நிலவு இறங்கி மண்ணுக்கு வந்து அவனுடைய மெக்கானிக் ஷெட்டின் வாசலில் நின்றிருப்பதைப் போல பேருவுவகை கொண்டான் ரகுவரன்..
பராக்குப் பார்ப்பதைப் போல அவனது மெக்கானிக் ஷெட்டை லயிப்புடன் பூர்ணிமா பார்த்துக் கொண்டிருந்ததில் அவன் மனம் திளைத்தது.. வெருட்சி கொண்ட அனிச்ச மலர் போன்ற மெல்லிய நுட்பமான இயல்பினைக் கொண்டவள் அவனுடைய மெக்கானிக் ஷெட்டிற்கு வந்திருந்தது அவன் மனதைக் கொய்தது.. அரைத்த மஞ்சளின் நிறம் கொண்ட அந்த அழகியை சொந்தத்துடன் பார்த்தவன்..
“ஆமாம்.. இங்கே கார்கள்தான் அதிகமா வரும்..” என்றான்..
“கார் மட்டும்தான் வருமா..?”
“அப்படியும் சொல்லலாம்..”
“ஸாரி.. ஸாரி.. நான் ஸ்கூட்டியை கொண்டு வந்திட்டேன்..”
தவறு இழைத்து விட்டக் குழந்தையைப் போல அவள் தடுமாறியதில் அவன் இளகிப் போனான்.. சலவை செய்த வெள்ளை வேட்டியினைப் போல அவளைக் கண்டதும் நிர்மலமானது அவன் மனது.. மழை பெய்த பூங்காவினைப் போல பளிச்சென்று குளுமையானது.. தித்திப்பு நிறைந்த மனது தாம் தரிகிடதோம் எனத் தாளமிட்டது..
Reviews — Akalvizhku / அகல் விளக்கு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.