Chapter 20

0Shares

ஆட்டோப் பிடிக்கத் தெரு முனைக்குப் போனபோது ரகுவரனின் கார் அவளுக்காக காத்திருந்தது.. அனிச்சையாக சுற்று முற்றும் பார்த்துவிட்டுக் காருக்குள் ஏறியவளின் மனதில் குற்றஉணர்வு வந்தது..

‘இது கள்ளத்தனமில்லையா..?’

ரகுவரனின் முகத்தைப் பார்த்ததும் அனைத்தும் மறந்து விட்டது.. அவன் அருகிலிருப்பதை நம்ப முடியாமல் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.. வலித்தது.. முகம் சுளித்தாள்..

“சின்னக் குழந்தை போலக் கையைக் கிள்ளிக்கிற..?”

வியப்புடன் அவன் சிரித்தான்.. வெட்கத்துடன் அவள் பேசாமல் இருந்தாள்.. அடிக்கடி அவளைப் பார்த்தபடி காரை ஓட்டினான்..

“ரோட்டைப் பார்த்து ஓட்டலாமே..” வெட்கத்துடன் சொன்னாள் பூர்ணிமா..

“ஏன்.. உன்னைப் பார்க்கக் கூடாதா..?”

ரகுவரன் இமை சிமிட்டியதில் தடுமாறிப் போனாள்.. அவனது அசாத்திய தைரியம் அவளைக் கவர்ந்தது.. அவனது பேச்சு, மேனரிசம், எண்ணம் என்று அத்தனையும் ஒட்டு மொத்தமாக அவளைக் காந்தம் போலக் கவர்ந்திழுத்தன..

பீச் ரோட்டில் சென்ற கார் வளைந்து திரும்பியது..

“ஏன் இங்கே திரும்புது..?” பதறினாள் பூர்ணிமா..

அவளை ஆழமாகப் பார்த்தான் ரகுவரன்.. பூர்ணிமாவின் பதட்டத்தை அவன் விரும்பவில்லை என்பதில் உதட்டைக் கடித்தாள் பூர்ணிமா.. அவளது கண்கள் கலங்கி விட்டன..

“உன்னை நான் ஒன்னும் ஸ்வாஹா பண்ணிற மாட்டேன்..” கோபத்துடன் சொன்னான்..

கடற்கரையைப் பார்த்தான்.. காலை நேர வாக்கிங், ஜாகிங் என்று ஜன நடமாட்டம் அதிகமாக இருந்ததை சுட்டிக் காட்டினான்.

“அங்கே பார்.. எத்தனை பேர் உன் பாதுகாப்புக்கு இருக்காங்கன்னு பார்த்து வைச்சுக்க..”

பூர்ணிமாவின் மனம் வலித்தது.. அவன் அவளது பாதுகாவலன்.. அவனிடமிருந்து பூர்ணிமா பாதுகாப்பை வேண்டுகிறாளா..?

“உங்ககிட்டயிருந்து யாரும் என்னை புரடெக்ட் பண்ண வேண்டாம்..” வெடுக்கென்று சொன்னாள்..

அவளையே பிரியத்துடன் பார்த்த ரகுவரனின் முகம் இளகியது.. 

“நிஜமாத்தான் சொல்றியா..?” என்று கேட்டான்..

“எனக்குப் பொய் சொல்லத் தெரியாது..”

பூர்ணிமாவின் பதிலில் ரகுவரனின் பிரியம் அதிகரித்தது..

“என்னிடமிருந்து உன்னைப் பாதுகாக்கனும்னு உன் அப்பாவும், அண்ணனும் நினைப்பாங்களே..” மிருதுவாகச் சொன்னான்..

பூர்ணிமாவின் முகம் வெளிறியது.. அவளது கண்களில் கலக்கம் வந்தது.. ரகுவரனின் புருவங்கள் முடிச்சிட்டன.. கடலை வெறித்தவன் கார்க்கதவைத் திறந்து இறங்கினான்..

“ஏன்..?” பதட்டமானாள் பூர்ணிமா..

ரகுவரன் முகம் சுளித்தான்.. பூர்ணிமாவின் முகம் மாறியது.. தவறு செய்து விட்டதைப் போல விழித்தாள்.. அவனுடன் பேசும் தருணங்களில் அடிக்கடி இதைப் போல விழிக்கிறாள் என்பதை அவனது மனம் பதிவு செய்து கொண்டது..

“இது பீச்.. காருக்குள் இருந்து கடலைப் பார்க்கிறதை விட இந்தக் காலை நேரத்தில காலாற மணலில் நடந்து கடலுக்குப் பக்கத்தில் போய் நின்று அலையில காலை நனைச்சா எவ்வளவு நல்லாயிருக்கும்..? ம்ம்ம்..?”

அவன் சொல்லச் சொல்லக் கடலலை வந்து கால் நனைப்பதைப் போலவே உணர்ந்தாள் பூர்ணிமா.. முகம் தெளிய காரை விட்டு இறங்கினாள்.. அவன் பக்கத்தில் வந்து நின்றாள்..

“இஃது..”

திருப்தியாக சிரித்தவனுடன் இணைந்து நடப்பது சுகமான அனுபவமாகத்தான் இருந்தது.. கடல்காற்றில் முடி பறந்து முன் நெற்றியில் படிய அதை அலட்சியமாகக் கோதி விட்டபடி அவள் முகம் பார்த்தவனின் கம்பீரத்தில் கிறங்கிப் போனாள்.. இவன் என் காதலை ஏற்றுக் கொண்டானா..? என்னுடையவனா..? என்று தனக்குள் பிரமிப்புடன் கேட்டுக் கொண்டாள்.. இரண்டு எட்டுக்கள்தான் வைத்திருப்பாள்.. பூர்ணிமா என்ற அழைப்பில் பதறிப் போய் சுற்று முற்றும் பார்த்தாள்..

“உன்னையில்லை..” இறுக்கமான குரலில் சொன்னான் ரகுவரன்..

அவளது பதட்டம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதில் உதட்டைக் கடித்துத் தலையைக் குனிந்து கொண்டாள்..

“தெரிஞ்சவங்களோன்னு பயந்துட்டேன்..” முணுமுணுத்தாள்..

“எதற்கு பயம்..?” சினந்தான் ரகுவரன்..

பூர்ணிமா பதில் சொல்லவில்லை.. கடலலையில் கால் பதிய நின்றாலும் அவள் மனதில் குதூகலம் வரவில்லை.. இனிமையான கானத்தின் நடுவே ஸ்வரம் பிசகி விட்டதைப் போல உணர்ந்தாள்..

ரகுவரனுக்கும் அதே உணர்வுதான் என்றாலும் அரிதான குறிஞ்சி மலரைப் போல வாய்த்திருக்கும் அத்தருணத்தின் நொடிகளை இனிப்பாக்கிக் கொள்ள விரும்பினான்..

“கடல்ல கால் நனைச்சாச் சிரிக்கனும்.. இப்படி உம்முன்னு இருக்கக் கூடாது..” என்றான்.

சடுதியில் முகம் மலர்ந்து சிரித்தாள் பூர்ணிமா.. அவளிடம் சிரிப்பையும் வருத்தத்தையும் அவனால் மட்டுமே கொண்டுவர முடிகிறது என்பதில் மனம் கனிந்தான் ரகுவரன்.

அவளது சிரிப்பும், வருத்தமும் அவன் வசத்தில் இருக்கின்றனவா..? இது எதை உணர்த்துகிறது..? அவளது வாழ்க்கை அவன் வசத்தில் உள்ளது என்பதைத்தானே உணர்த்துகிறது..?

“வாழ்வதும் தாழ்வதும் உங்கள் கையிலே..

          என் சஞ்சலமும் நிம்மதியும் உங்கள் சொல்லிலே..

வாழ்கவென்று நீங்கள் சொன்னால்

வாழும் என் மனம்

இல்லை மறைகவென்று வரம் கொடுத்தால்

மறையச் சம்மதம்..”

அந்தக் காலை நேரத்திலும் தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல் சகிதம் கடை போட்டிருந்த தள்ளு வண்டிக்காரனின் வண்டியிலிருந்து எப்.எம். ரேடியோ பாடியது..

பூர்ணிமாவின் விழிகள் உயர்ந்து ரகுவரனைப் பார்த்தன.. பாடலின் வரிகளை அவளது பார்வையில் படித்த ரகுவரன் அப்படியே நின்று விட்டான்.. என்ன மாதிரியான அன்பு இது என்ற பிரமிப்பு அவனுள் எழுந்தது.. அடிமையாகி அடிமைப்படுத்தும் அன்பு இது.. யாதும் நீயே என்று அவனுக்கு யாதுமாவது.. அடைக்கலம் நீயே என்று அடைக்கலம் கொடுப்பது..

“பூர்ணி..” அவளது கைகளைப் பற்றினான்..

“என் பிரியத்தைச் சந்தேகப்படறிங்கதானே..” அவள் விம்மினாள்..

அவர்களது பாதம் நனைத்த அலை அவர்களை ஒன்று சேர்க்க விழைந்தது போல ஓங்கி அடித்தது.. அலையில் தடுமாறியவளை அவன் தாங்கிப் பிடிக்கத் தொய்ந்து போன பூங்கொடியாய் அவன் மார்பில் சாய்ந்தான் பூர்ணிமா..

பற்றுகோல் தேடிய கொடி போல அவன் கழுத்தை அவளது கரங்கள் வளைத்துக் கொண்டன.. அவன் மார்பில் புதையுண்டிருந்தவளின் முதுகில் அவன் கரங்கள் படிந்து, பரவி இறுக்கிக் கொண்டன.. எதிர்பாராமல் கிடைத்த அணைப்பில் அவள் விலக முடியாமல் அவன் மார்பில் முகம் புதைத்து புதைந்து கொண்டாள்..

அவளது கூந்தலில் முகம் புதைத்து முகர்ந்து முத்தமிட்டான் ரகுவரன்.. சிலிர்த்து நடுங்கினாள் பூர்ணிமா.. தேறுதல் சொல்வதைப் போல பரிவுடன் அவள் கூந்தலை வருடிக் கொடுத்தான்..

அவனது இறுகிய அணைப்பில் அவளும்.. இறுக்கமான அணைப்புடன் அவனும் அசையாமல் தழுவியபடி அப்படியே நின்றார்கள்.. ஓங்கி அடித்து அவர்களை ஒன்று சேர்த்தக் கடலலை அவர்களின் பாதங்களை நனைத்து நகைத்தது..

பக்கத்தில் சலசலத்த பேச்சுக்குரல்கள் கேட்டதில் பூர்ணிமா விலகினாள்.. ரகுவரன் அவளுடைய விரல்களோடு விரல்களைக் கோர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.. அவள் விரல்களை உறுவிக் கொள்ளவில்லை.. அதைக் கவனித்தவனின் முகத்தில் சொந்தம் வந்தது..

டூரிஸ்ட் பஸ் ஒன்று நின்றிருந்தது.. அதிலிருந்து இறங்கிய சுற்றுலாப் பயணிகள் கடலோரம் சென்று நின்று கடலலைகளின் கால் பதித்து விளையாடத் தொடங்கினார்கள்.. தனிமை கலைந்ததில் பூர்ணிமாவின் மனம் சிணுங்கியது.. ரகுவரனுடனான தனிமையை அவள் மனம் தேடியது.. அவளது முகச் சிணுக்கத்தைக் கண்டு கொண்ட ரகுவரன்..

“லோகு வந்து ஷெட்டைத் திறக்க நேரமாகும்.. அதுவரைக்கும் காபி சாப்பிடப் போகலாமா..?” என்று கேட்டான்.

“ஓ..” கண்கள் ஜொலிக்கத் தலையாட்டிய பூர்ணிமா..

“வீட்டில் வயிறு புல்லா காபி, டிபன்னு மொக்கிட்டு வந்துட்டேனே..” என்றாள் குழந்தையாக..

வழக்கம்போல அவளது குழந்தைத்தனம் அவனை வசீகரித்தது.

“காபிதான் சாப்பிடனும்னு கட்டாயம் ஏதுமிருக்கா.. ஐஸ்கிரிம்கூடச் சாப்பிடலாமே..” என்று சிரித்தான்.

“அப்பச் சரி..”

அவள் சமாதனமானதில் அவனது சிரிப்பு அதிகரித்தது.. பிரியத்துடன் அவளது விரல்களை அழுத்தினான்.. முகம் சிவந்து அவள் தடுமாறியதில் முத்தமிடும் வேகம் வந்தது..

‘ஊஹீம்.. இன்னைக்கு இதுபோதும்.. பயந்துருவா..’

அவனை நம்பி வெளியே வந்திருப்பவளைக் கலவரப் படுத்தி விடக்கூடாது என்று தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான்.

அவர்கள் ஐஸ்கிரிம் சாப்பிட்டபடி பேசினார்கள்.. தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.. அடுத்த சந்திப்பு எப்போது என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள விரும்பினான் ரகுவரன்.. அவன் கேட்டபோது தினந்தோறும் சந்திக்க வேண்டுமா என்று மருண்டாள் பூர்ணிமா.. அவளுக்குப் பிடித்தமில்லையென்றால் வேண்டாம் என்று இலகுவாக அவன் சொல்லி விட்டதில் அவ்வளவுதானா என்று ஏமாற்றமாய் உணர்ந்தாள்..

“நாளைக்கு ஈவினிங் பீச்சுக்கு வந்துறவா..?”

தயக்கத்துடன் அவள் கேட்டதில் அவர்களது தினசரி சந்திப்பு உறுதியாகி விட்டது.. அவனுடனான அவளது காதல் வலுப்பெற்றது.

0Shares

Reviews — Akalvizhku / அகல் விளக்கு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link