Chapter 05
கஞ்சப் பிசுராணியென்றால் பிசுராணி, அப்படியொரு கஞ்சப் பிசுராணி சுகுமாறன்..! அனாவசியமாக என்ன.. அவசியமென்றால்கூட பைசாவை வெளியே எடுக்க மாட்டான்.. மற்றவர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை வைத்து தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் படு கெட்டிக்காரன்..! நண்பர்கள் குழாமில் அவனுக்கு வைத்திருக்கும் பெயரே ‘அடுத்து நான்தான்..’ என்பதுதான்.. ஹோட்டலுக்குப் போனால் அது வேண்டும், இது வேண்டும் என்று சகட்டு மேனிக்கு வரவழைத்துச் சாப்பிட்டு விட்டு..
“அடுத்து வர்றப்ப நான்தாண்டா பில் கொடுப்பேன்..” என்று கறாராக அறிவிப்பதில் திறமைசாலி..
அந்த அடுத்த முறை என்பது வந்தேயில்லை என்பது வேறு விசயம்.. எப்போது போனாலும் அதுதான் முதல்தரம் என்பது போல ‘அடுத்து நான்தான்..’ என்பான்.. போகிறான் என்று நண்பர்களும் கண்டு கொள்ள மாட்டார்கள்..
கல்லில் இருந்து நாரைக்கூட உரித்து விடலாம்.. சுகுமாறனின் கையிலிருந்து ஒரு பைசாவை வாங்கிவிட முடியாத.. சுகுமாறனின் இந்தக் குணத்தை மிகச் சரியாக கணித்து வைத்திருக்கும் அந்தப் பெண் யாராக இருக்கக் கூடும் என்று யோசித்தபடி அவளை ஓரக் கண்ணால் பார்த்து வைத்தான் ஆனந்தன்..
“என்ன..? தோட்டக்காரரே..! பார்வையெல்லாம் பலமா இருக்க..? இது அரசபட்டினம்..! கை, காலு பத்திரமா இருக்கனும்னு சூதானமா பார்த்துப் பழகனும்..” அதட்டினாள் அவள்..
‘சூதானமா பார்த்துப் பழகனுமா..?’
அவளிடம் பழக வேண்டும் போல அவனுக்குள் ஆசை கிளர்ந்தது.. அதைச் சொன்னால் முதுகில் டின் கட்டி விடுவாள் என்பதால் ஆனந்தன் குழாயை நிறுத்தி விட்டு ரப்பர் பைப்பை உறுவி சுருட்டி வைத்தான்.. இயல்பான அவனது நடிவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டவளாக அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது..
“கீதா நீயா..?” என்ற குரல் கேட்டது..
மாடி பால்கனியில் ஒலித்த குரலில் அண்ணாந்து பார்த்தாள் அவள்.. சுகுமாறனின் தலை தெரிந்தது..
“இரு வர்றேன்..” என்று குரல் கொடுத்த சுகுமாறன் மறு நொடியில் தோட்டத்தில் தோன்றி நின்றான்.
‘டிஷ்’ என அவன் தோன்றியதில் சட்டென தள்ளி நின்று நெஞ்சில் கை வைத்த கீதா..
“இப்படியா பயமுறுத்துவீங்க..?” என்றாள்..
“இந்த இரண்டு வருசத்தில இப்பத்தான் உன் காலடி என் வீட்டில பட்டிருக்கு.. உள்ளே வா கீதா..”
“இது எங்க வீடு.. ஞாபகம் இருக்கில்ல..?”
“ஹி.. ஹி.. மறந்து போகுமா..? நீ உள்ளே வா..”
“எதுக்கு..?”
“என்னைப் பாக்கத்தானே வந்தே..?”
“இல்லையே.. நான் தோட்டத்தைப் பாக்க வந்தேன்.. நீங்க வந்த நாள்ல இருந்து இந்த நாள் வரைக்கும் தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணி காட்டியிருக்கீங்களா..?”
“நான் நேர்மையான வாத்தியார் கீது.. தண்ணி காட்டிப் பழக்கமில்ல.. ஹி.. ஹி..”
“ஜோக்காக்கும்..? சிரிப்பு வரல.. வயலுக்கு வேலை செய்ய வர்ற பண்ணையாளுக வீட்டுப்பக்கம் வந்தா இந்த தோட்டத்துக்கு தண்ணி காட்டச் சொல்லி செடிகள பட்டுப் போகாம காப்பாத்திக்கிட்டு இருக்கோம்.. இல்லேன்னா இங்கே தோட்டமா இருந்திருக்கும்..? காஞ்சு போன நிலமில்ல இருந்திருக்கும்..”
“அப்படியெல்லாம் விட்டுருவேனா கீது..”
இருபொருள்பட வினவி வைத்தான் சுகுமாறன்.. அதை கண்டு கொள்ளாமல் ஆனந்தனைப் பார்த்து வைத்தாள் கீதா.. அவர்களின் பேச்சு வார்த்தையிலிருந்து அவள் சுகுமாறனின் மாமன் மகளாக இருக்கக் கூடும் என்று யூகித்தான் ஆனந்தன்..
“ஒரு வழியா தோட்டக்காரனை வேலைக்கு வைச்சிட்டிங்க போல..”
கீதாவின் வார்த்தைகளில் தூக்கிவாரிப் போட்டவனாக நிமிர்ந்து பார்த்தான் ஆனந்தன்.. அழகான அப்சரஸின் வாயிலிருந்து வரும் அவனைப்பற்றிய அடையாள மொழி இப்படியா இருந்து வைக்க வேண்டும்..?
சுகுமாறன் மறுத்துப் பதில் சொல்வான் என்று எதிர்பார்த்த ஆனந்தன் ஏமாந்து போனான்.. மறுத்து ஒற்றைச் சொல்லைக்கூட சுகுமாரனின் வாய் உதிர்க்கவில்லை..
‘என்னைத் தோட்டக்காரன்னு கன்பர்ம் பண்றதிலேயே குறியாய் இருக்கானே..’
சுகுமாறன் அப்படித்தான் இருந்தான்.. ஆனந்தன் என்ற ஒருவன் அங்கே இருப்பதையே மறந்து போனவனைப் போல கீதாவை வீட்டுக்குள் அழைப்பதிலேயே குறியாக இருந்தான்..
“வீட்டுக்குள்ள போய் பேசலாம் வா கீது..”
“இந்த கீதுவெல்லாம் வேண்டாம்.. முழுசா கீதான்னு பேரைச் சொல்லிக் கூப்பிடுங்க..”
“அதுக்கென்ன கீது.. அப்படியே கூப்பிட்டுட்டாப் போச்சு..”
“என் பேரு கீதான்னு சொன்னேன்..”
“ஓகே.. ஓகே.. கீதா போதுமா..? உள்ளே வாயேன்..”
“இதென்ன புதுப் பழக்கம்..?”
கீதா எதைச் சொல்கிறாள் என்று தெரியாமல் தலையைச் சொரிந்தான் சுகுமாறன்.. ஆனந்தனைத்தான் சொல்கிறாளோ என்ற சம்சயம் அவனுக்கு.. இது புதுப்பழக்கமில்லை.. பள்ளிப் பருவத்திலிருந்து தொடர்ந்து வரும் பால்ய காலப் பழக்கம் என்று சொல்ல முடியாமல் மூச்சுத் திணறினான்.. நிமிர்வான ஆனந்தனின் கம்பீரத்தில் என்றுமே அவனுக்கு பொறாமை உண்டு.. என்னதான் ஆனந்தனை விட நிறமாக கவர்ச்சியாக சுகுமாறன் இருந்தாலும் பெண்களின் பார்வை ஆனந்தனை மட்டும் வட்ட மடிப்பதை அவன் உணர்ந்திருந்தான்.. அவசரப்பட்டு ஆனந்தனை அழைத்துக் கொண்டு வந்து விட்டோமோ என்ற மனப்புழுக்கம் அவனுக்கு உண்டானது.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலிருக்க வெகுவாக பிரயத்தனப் பட்டான்.. அப்போதைக்கு அந்த இடத்தை விட்டு ஆனந்தனை அகற்றி விட வேண்டுமென்ற எண்ணத்துடன்..
“நீ வெளியே போகனும்னு சொன்னேல்ல..?” என்று மொட்டையாக ஆனந்தனிடம் கேட்டு வைத்து அவனை வெளியே அனுப்ப முயன்றான்..
அப்போதும் அவன் ஆனந்தன், சுகுமாறனின் உயிர் நண்பன் என்பதைக் குறிப்பிடவில்லை..
‘கெட்டிக்காரண்டா நீ..’
ஆனந்தனின் இதழ்களில் படிந்த இகழ்ச்சிப் புன்னகையை சுகுமாறன் லட்சியமே பண்ணவில்லை.. அவன் பரவசத்துடன் கீதாவையே பார்த்துக் கொண்டிருந்தான்..
‘எப்படியோ தொலை..’
ஆனந்தன் மடித்துக் கட்டிய கைலியை இறக்கி விட்டு வெளியே கிளம்பப் போனான்.. அப்போது பார்த்துத்தானா அன்பழகன் சைக்கிளில் வந்து இறங்கி என்ட்ரி கொடுக்க வேண்டும்..?
“சார்..”
வாயெல்லாம் பல்லாக வந்து இறங்கியவனை ‘சூ.. சூ..’ என கை விரித்து ஓட்ட முயன்று தோற்றுப் போனான் சுகுமாறன்.. எங்கே..? அன்பழகனின் பார்வை ஆனந்தனிடம் மட்டும்தானே மையம் கொண்டிருந்தது..? புதிதாக வந்திருக்கும் இளந்தாரி போஸ்ட் மாஸ்டரை வசியம் பண்ணி தன் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் மும்முரத்துடன் அவன் இருந்தான்..
“என்ன அன்பு..? ஆபிஸ் முடிஞ்ச பின்னாலே தபால் கொண்டு வந்திருக்கியா..?” கீதா விசாரித்தாள்..
“ஆமாம்மா.. விடிய விடியத் தபால் கொடுத்துக்கிட்டு இருந்தா உங்களுக்கெல்லாம் நல்லாத்தான் இருக்கும்.. அப்போவும் போஸ்ட் ஆபிசை சகட்டு மேனிக்குத் திட்டத்தான் செய்வீக.. கட்டுக்கட்டா நோட்ட வாங்கறவகள கண்டுக்கக் கூட மாட்டிக.. ஊருக்கு இளைச்சது பிள்ளையார் கோவில் ஆண்டின்னா உங்களுக்கெல்லாம் இளைச்சது போஸ்ட் ஆபிஸ்தான..?”
அன்பழகன் போட்டபோட்டில்..
“சரி, சரி.. விடு, விடு..” என ஜகா வாங்கினாள் கீதா..
வெற்றிகரமான அவளது பின்வாங்கலை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தனின் பார்வையில் அவள் மனம் குறுகுறுத்தது..
“இந்நேரத்தில் இந்தப் பக்கம் வாத்தியாரத் தேடிக்கிட்டு வந்திருக்கயே.. தபால் கொடுக்கத்தான் வந்திருப்பியோன்னு நினைச்சேன்..”
“அதுசரி.. இந்த வீட்டுக்கு வந்தா வாத்தியாரப் பார்க்கத்தான் வந்திருப்பேன்னு நீங்களா முடிவு கட்டிக்கிட்டா எப்படிம்மா..? நான் எங்க போஸ்ட் மாஸ்டரையில்ல பார்க்க வந்திருக்கேன்..”
அன்பழகன் போட்டு உடைத்து விட்ட குட்டில் சுகுமாறன் தலையில் கை வைத்துக் கொள்ள..
‘முட்டாளாடா நீ..!’ என்று ஓர் பார்வை பார்த்தான் ஆனந்தன்..
இந்த விவரத்தை எத்தனை நாள் ஒளித்து வைக்க முடியும்..? படித்துப் பட்டம் பெற்று பொறுப்பான உத்தியோகத்தில் இருக்கும் சுகுமாறனுக்கு இது ஏன் தெரியாமல் போனது..?
“போஸ்ட் மாஸ்டரா..? யாரு..?” திகைத்து விழித்தாள் கீதா..
“யாரா..? இதோ தேசிங்கு ராஜாவைப் போல நிக்கிறாரே.. இவர்தான் எங்க போஸ்ட் மாஸ்டர்..”
கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்டவனாய் அக்கினி வெயிலில் ஐஸ் கட்டியைத் தூக்கி ஆனந்தனின் தலைமீது வைத்தான் அன்பழகன்..
கீதாவால் தலை நிமிர முடியவில்லை… சவடாலாக ஆனந்தனிடம் பேசிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் சங்கடப் பட்டுப் போனாள்..
“மன்னிச்சுக்கங்க.. யாரோன்னு நினைச்சுட்டேன்..” முணுமுணுத்தவளுக்கு ஆனந்தன் பதில் சொல்லும் முன் சுகுமாறன் ஊடே புகுந்து..
“அதனால என்ன..? தெரியாமத்தான பேசின..? இதுக் கெல்லாம் வருத்தப்படலாமா..?” என்று அவளைத் தடுத்தாட் கொண்டு உருகினான்..
பதிலளிக்கும் வேலையை சுகுமாறன் செய்து விட்டதில் மௌனமாக அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்த ஆனந்தனின் பார்வையை சந்திக்க முடியாமல் இமைகள் படபடக்க தன் வீட்டை நோக்கி ஓடிப்போனாள் கீதா..
Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.