Chapter 08
சோழியன் குடுமி சும்மா ஆடாது..
சுகுமாறனைப் போன்ற சுயநலவாதி காரணமில்லாமல் நண்பனுக்கு அடைக்கலம் கொடுக்க மாட்டான்.. நடமாட்டம் இல்லாத ஹாலைக் கடக்கும் ஒவ்வொரு நொடியும் உயிர் போய் உயிர் வரும் அனுபவத்தைப் பற்றி அவனுக்குத்தானே தெரியும்..? உள்ளூர்ககாரர்களை துணைக்கு அழைத்தால் அவன் தொடை நடுங்கியென்ற உண்மையை ஊர் முழுவதும் பரப்பி விட்டு விடுவார்கள்.. அதனால் பல்லைக் கடித்துக் கொண்டு அந்த வீட்டில் இருந்தவனுக்கு வீடு கிடைக்கவில்லையென்று அலுவலகத்தில் தஞ்சமடைந்திருந்த ஆனந்தனைக் கண்டதும் ஆனந்தம் பொத்துக் கொண்டு வந்தது..
சுகுமாறனின் நண்பர்களிலேயே அதிதைரியசாலி ஆனந்தன் மட்டும்தான்.. அந்த ஆனந்தனை அரச பட்டினத்தில் கண்டதும் தெய்வமே சுகுமாறனின் கதறலைப் பொறுக்க மாட்டாமல் கருணை காட்டி அனுப்பி வைத்த துணையென்று மகிழ்ந்து போய் விட்டான் சுகுமாறன்..
இல்லாவிட்டால் கீதாவைக் கணக்குப் பண்ணுவதற்காக எங்கெங்கோ பயணிக்கும் உறவுமுறை வரைபடத்தை இழுத்து வளைத்து மாமன்மகன் உறவு கொண்டாடி குடியிருக்கும் வீட்டிற்கு ஆனந்தனை அழைத்துக் கொண்டு வர சுகுமாறனுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது..?
விவரம் தெரிந்த நாளிலிருந்தே அவன் படு உஷார் பேர்வழி.. ஒரு கள்ளமிட்டாய் தின்ன வேண்டுமென்றாலும் நண்பர்களைக் கழட்டி விட்டு விட்டு தனியாகத்தான் போய் தின்பான்.. சொத்துக்காக கல்யாணம் பண்ணிக் கொள்ள நினைக்கும் கீதாவின் வீட்டுக்கு ஆனந்தனைப் போன்ற நண்பனை அழைத்து வர நேர்ந்தது காலத்தின் கட்டாயம்..
‘விதி வலியது..’ நொந்து கொண்டான் சுகுமாறன்..
சுகமான பணத் தட்டுப்பாடில்லாத செல்வச் செழிப்பான வாழ்க்கைக்காக அவன் எப்படியெல்லாம் பிரயத்தனப் பட வேண்டியிருக்கிறது..!
அழகான கீதாவின் கண்களில் ஆனந்தன் பட்டுத் தொலைத்து விட்டதில் சுகுமாறனுக்கு உடன்பாடில்லை.. அதற்காக ஆனந்தனைப் போ என்று அனுப்பி வைத்து விடவும் முடியாது.. இரண்டு வருடமாக பீடித்திருக்கும் ‘கிழவிப் பேய்..’ பயத்திலிருந்து அப்போதுதான் விடுபட்டிருக்கிறான் சுகுமாறன்.. அன்று இரவுதான் அவனுக்கு நிம்மதியான உறக்கம் வாய்க்க இருக்கிறது.. கிடைத்திருக்கும் பாதுகாப்பையும், நிம்மதியையும் விரட்டியடிக்க சுகுமாறனால் முடியவே முடியாது..
கீதாவின் முன்னிலையில் ஆனந்தனை மட்டமாக பேசி ஜெயித்து விடலாம் என்று நினைக்கக் கூட முடியாது.. ஆனந்தன் பேசுவதில் படுகில்லாடி.. ஆளானப்பட்ட அன்பழகனையே மண்டி போட வைப்பவன்.. சுகுமாறன் ஒரு வார்த்தை மட்டமாகப் பேசினால் அவன் ஒராயிரம் வார்த்தைகளை மட்டமாகப் பேசி கீதாவின் முன்னிலையில் சுகுமாறனை படுதுச்சமாக்கி விடுவான்.. அதனால் அந்த முயற்சியைப் பற்றி சுகுமாறனால் யோசிக்கக் கூட முடியாது..
ஆனந்தனை திருப்பி அனுப்புவது வெகு சுலபம்தான்.. சுகுமாறன் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டான்.. அப்படியென்றால் என்ன..? கிலோ என்ன விலை..? என்றெல்லாம் கேட்டு பச்சை பிள்ளை போல இமை கொட்டுவதில் அதிதிறமைசாலி..
“ஆனந்தா..! ஆனந்தா..! எங்க மாமா ஊர்ப் பண்ணையாருடா.. சொந்த மருமகன்ங்கிறதினால உன்னை என் வீட்டில் குடி வைச்சா நீ எப்படி உன் நண்பனை வீட்டுக்குக் கூப்பிட்டுக்கிட்டு வரலாம்ன்னு என்னைக் குடைஞ்செடுக்கிறார்டா.. எனக்கு வேற வழியில்லைடா.. உயிர் நண்பா..! நட்பு வேற, சொந்தம் வேற இல்லையா..? என் மாமா பேச்சை நான் தட்ட முடியுமா..? வீடு அவரோட வீடாச்சே.. அதனால நீ பெட்டியைக் கட்டிக்கிட்டு உன் ஆபிசுக்குப் போயிருடா..” என்று கண்கலங்க வசனம் பேசினால் ரோசக்கார ஆனந்தன் அதன் பின்னால் ஒர்நொடி கூட அங்கே தங்க மாட்டான்.. சுகுமாறன் கண்மூடிக் கண் திறப்பதற்குள் வீட்டை விட்டுப் போய் விடுவான்..
‘அதுக்குப் பின்னால்..?’
நினைத்தாலே நெஞ்சம் நடுங்கியது சுகுமாரனுக்கு.. பண்ணையாரின் அம்மாக் கிழவிப் பேயுடன் அவன் தனியாக மாரடிக்க வேண்டும்..
‘அதுக்கு இவனே தேவலாம்..’
சுகுமாறன் ஒரு முடிவிற்கு வந்திருந்தான்.. ஆனந்தனும் துணைக்கு இருக்க வேண்டும்.. சுகுமாறனின் கீதாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கான லட்சியத்திற்கு அவன் குறுக்கே நிற்கவும் கூடாது.. இவை இரண்டிற்கும் என்ன வழியென்று தலை முடியைப் பிய்த்து யோசித்து ஒரு வழியை கண்டு பிடித்திருந்தான்..
ஆனந்தனைப் பற்றி சுகுமாரனுக்கு நன்றாகவே தெரியும்.. அவன் நியாயவாதி.. வாக்குக் கொடுத்து விட்டால் மாற மாட்டான்.. மனதை அலைபாய விட மாட்டான்.. கீதாவே நெருங்கி வந்தாலும் விலகிப் போய் விடுவான்..
அப்படியெல்லாம் அவனை செய்ய வைக்கும் திட்டத் தோடுதான் சுகுமாறன் அவனைத் தேடி வந்திருந்தான்..
“காபிக்கென்ன ஆனந்தா.. போட்டுக் குடிச்சுக்கிட்டாப் போச்சு.. நீ கலந்து கொடுத்ததினால பாராட்ட ஒரு வார்த்தை சொன்னேன்.. நாளைக்கே நீ டயர்டா இருக்கிறப்ப ஒரு வாய் காபிய உனக்குக் கலந்து கொடுக்க மாட்டேனா..?”
வெள்ளையாக சிரிப்பதைப் போல சிரித்து வைத்தான் சுகுமாறன்.. அந்த வெள்ளைச் சிரிப்பை நம்ப ஆனந்தன் தயாராக இல்லை.. சுகுமாறனின் வினயத்தைப் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும்.. அதனால்
“அப்பவும் ஒரு வாய் காபிதான் தருவியா..? கெட்டிக்காரண்டா நீ..” என்றான்..
“ஏம்ப்பா.. வாய் வார்த்தைக்கு ஒன்னைச் சொன்னா நீ குதர்க்கமாவே அர்த்தப் படுத்திக்குவியா..? ஒரு வாய் சாப்பிட்டுப் போய்கன்னு சொல்றாங்க.. நீ உடனே ஒரு வாய் சோத்தைத்தான் சாப்பிடுவியா..? இப்ப என்னப்பா உனக்கு ஒரு குடம் காபியே போட்டுத்தரேன்.. வைச்சு வைச்சுக் குடி.. போதுமா..?”
“பால்கார கோனாரே ஒரு குடம் பாலைக் கறக்க மாட்டாரு.. நடக்கிறதைப் பேசு..”
“பேசிட்டாப் போச்சு.. ஆனந்தா..”
“சொல்லு..”
“எங்க மாமா இருக்காரே..”
“எதிர் வீட்டு பண்ணையாரைத்தானே சொல்ற..?”
“ஆமாண்டா..”
“அவருக்கென்ன..?”
“அவரு ஊர்ப் பண்ணையாரு..”
“இதைத்தானேடா நானும் சொன்னேன்..?”
“இந்த கட்டுப்பாடு அது இதுன்னு இருக்கில்ல.. அதில எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாரு..”
“இருக்கட்டும்.. அதில உனக்கு என்னடா கஷ்டம்..?”
“எனக்கு ஒரு கஷ்டமுமில்லடா.. உனக்குத்தான் கஷ்டம்..”
“எனக்கு கஷ்டமா..?”
சுகுமாறனை ஒரு மார்க்கமாக பார்த்தான் ஆனந்தன்.. அவனைப் போன்ற நண்பனை நம்பி அவன் வீட்டில் தங்க வந்திருப்பதைத்தான் கஷ்டமென்று சொல்கிறானோ என்ற சம்சயம் ஆனந்தனுக்கு..
‘இவனுக்கே இவன் புத்தியப் பத்தித் தெரிஞ்சிருக்கு..’
“எங்க மாமா மனசில ஒரு ஆசை..”
ஆனந்தனின் சம்சயத்தை உடைத்தான் சுகுமாறன்..
“அவரு ஆசைப்படறதைப் பத்தி நமக்கென்னடா பேச்சு..?” எரிந்து விழுந்தான் ஆனந்தன்..
“இல்லேடா.. அவரும் எங்கம்மாவும் பாசமலர் சினிமாவில வாரதைப் போல அண்ணன் தங்கச்சி பாசத்தில உருகறவங்களாம்..”
“இது வேறயா..? அப்புறம்..?”
“எங்க அம்மாவைப் பெத்த பாட்டி சாகக்கிடக்கிறப்ப எங்க மாமா பாட்டியை பார்க்க வந்தாராம்..”
எதற்காக இவன் தூண்டிலைப் போட்டு விலாங்கை இழுக்கிறான் என்ற யோசனையோடு கோதுமை மாவு பாக்கெட்டை உடைததுப் பாத்திரத்தில் மாவைக் கொட்டிப் பிசைந்தான் ஆனந்தன்..
சுகுமாறனின் அம்மாவைப் பெற்ற பாட்டியை அரசபட்டினத்தின் பண்ணையார் பார்க்க வந்த கதையை வேலை மெனக்கெட்டு எதற்காக சுகுமாறன் ஆனந்தனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான்..?
“அப்ப எங்க பாட்டி மாமா கையைப் பிடிச்சுக்கிட்டு வாக்குக் கேட்டுச்சாம்..”
என்னவென்று என்று கேட்கப் போன ஆனந்தன் அது எதுவாக இருந்தாலும் தனக்கென்ன வந்தது என்று தன்னைத் தானே கடிந்து கொண்டு தலையை ஆட்டி வைத்தான்..
“எங்காலத்தோட உங்க அண்ணன் தங்கை பாசம் அத்துப் போகக் கூடாதுடா மகனே.. உன் பொண்ணு கீதாவை உன் தங்கச்சி மகன் சுகுமாறனுக்குக் கட்டி வைச்சிருன்னு சொல்லுச்சாம்..”
அப்போதுதான் சுகுமாறன் கதை பிணைவது எதற்காக என்பதை உணர்ந்து கொண்டான் ஆனந்தன்.. பண்ணையாரின் மகள் கீதா சுகுமாறனுக்கு உரியவள் என்பதை ஆனந்தனுக்கு உணர்த்துகிறானாம்..
என்ன கழுதைக்கு என்று நினைக்க முடியாமல் ஏனோ மனம் வலித்தது ஆனந்தனுக்கு.. தேவதையைப் போன்ற அழகுடன் மிளிர்ந்த கீதாவை நினைத்துக் கொண்டான்.. அவளுடைய தலைவிதி சுகுமாறனைப் போன்ற கோட்டானுடனா பிணைக்கப்பட்டிருக்கிறது என்ற பரிதாபம் அவனுக்குள் எழுந்தது..
வாழ்க்கையின் ஓட்டத்தில் யாரோடு யார் இணைவார் என்பதைக் காலம்தான் நிர்ணயிக்க வேண்டும்..? இது போன்ற வாக்குறுதிகள் நிர்ணயிக்கக் கூடாது..
இதைச் சொன்னால் சுகுமாறன் ஆனந்தனைச் சும்மா விட்டு விடுவானா..?
“ஓஹோ..”
“எங்க மாமாவும் கீதாவை எனக்குத்தான் கட்டி வைப்பாருன்னு வாக்குக் கொடுத்திட்டாராம்.. அப்ப நான் சின்னப் பையன்..”
“நீயே சின்னப் பையன்னா உன் மாமா பொண்ணு பாவம்.. பச்சைக் குழந்தையா தொட்டில்ல படுத்து தூங்கிக்கிட்டு இருந்திருக்கும்..”
‘இதைச் சொல்லச் சொல்லி நான் கேட்டேனா..?’ சுகுமாறனுக்கு எரிச்சல் வந்தது..
ஆனந்தன் கீதாவைப் பார்த்து ‘பாவம்..’ என்று பரிதாபப் படுவது எதற்காக..? அவள் பச்சைக் குழந்தையாய் இருந்ததிற்காகவா…? இல்லை சுகுமாறனுக்குத்தான் அவள் என்று நீலகண்டன் வாக்குக் கொடுத்து விட்டாரே என்பதற்காகவா..?
இரண்டில் எதுவாக இருந்தாலும் சுகுமாரனுக்கு அது ஏற்புடையதாக இல்லை..
Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.