Chapter 14
வெட்கப்படும் பெண்களின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குமா..? சுகுமாறனைக் கண்டாலே கீதாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் தான் வெடிக்கும்.. அவன் வலுக் கட்டாயமாக பேச்சுக் கொடுத்தாலும் பேச்சை நீடிக்க விடாமல் வெட்டி விட்டுப் போவதில் அவள் கெட்டிக்காரி.. அதற்காக ஒரேயடியாக சுகுமாறனுடன் பேச மாட்டாள் என்று சொல்லி விட முடியாது.. பேசுவாள்.. அளவோடு பேசுவாள்.. அந்தப் பேச்சும் அவன் அவர்களது வீட்டைச் சுத்தமாக பராமரிக்கிறானா என்பதைப் பற்றித்தான் இருக்கும்.. அவளும் சுகுமாறனை முறை சொல்லி அழைக்க மாட்டாள்.. பொதுப்படையாக வாங்க, போங்க என்று தான் பேசுவாள்..
“தோட்டத்தை ஏன் காய விட்டிருக்கீங்க.. செடிக பட்டுப் போயிரும்ன்னு தோணவே தோணாதா..?”
“வீட்டுக்கு வெளியே நூலாம்படையாத் தொங்குது… வீட்டுக்குள்ள எப்படியிருக்குமோ..? ஆளில்லாதப்போ செடிகளும் சிலுசிலுப்பா இருந்துச்சு.. வீடும் சுத்தபத்தமா இருந்துச்சு..”
“அப்பன்னா தினமும் செடிகளுக்கு தண்ணி ஊத்தி வீட்டைச் சுத்தம் பண்ணி வைப்போம்.. இப்ப என்ன செய்கிறது..?”
இப்படிப் பேசுகிறவளிடம் காதல் வசனத்தை பேசித் தொலைக்க முடியுமா..? அந்தக் கொடுமையைச் செய்யவும் அவன் தயாராகத்தான் இருந்தான்.. கேட்டுக் கொள்ள அவள் தயாராக இல்லையே..
அப்படித் தாமரையிலைத் தண்ணீரைப் போலக்கூட இல்லாமல் மொத்தமாக தள்ளி நின்று அவனிடம் பேசிப் பழகும் கீதா ஆனந்தனிடம் மட்டும் வலிய வலிய பேசுவதை சுகுமாறனால் சகித்துக் கொள்ள முடியவில்லை..
அவனுக்கு அவள் கிடைக்காவிட்டால் கூட அவன் தாங்கிக் கொள்வான்.. ஆனந்தனுக்கு கிடைத்துவிட்டால் தாங்கிக் கொள்ளவே மாட்டான்..
‘காத்திருந்தவன் காதலிய நேத்து வந்தவன் அடிச்சுக்கிட்டுப் போகப் பார்க்கிறானே..’ ஆத்திரத்தில் அவன் மனம் வெந்தது..
கீதாவை அவன் காதலிக்கவில்லை.. அவளது ‘பண்ணையார் மகள்..’ என்ற அடையாளத்தைத்தான் காதலித்தான்.. என்பதை வெகு வசதியாக அவன் மறந்து போனான்.. அவளும் அவனைக் காதலிக்கவில்லை என்ற உண்மையை எளிதாக மறைத்து விட்டான்..
வெகு வேகமாக வாசலுக்கு வந்து நின்றவனைப் பார்த்த அன்பழகன்..
“பார்த்து சார்.. கால் தடுக்கிறப் போகுது.. காத்தைப் போல வேகமா வராம மெல்ல வர்றதுக்கென்ன..? ஒரு நேரம் போல இருக்காது சார்.. மாடிப்படி வழுக்கி விட்டிருந்தா என்ன ஆகிறது..?” என்று கரிசனப் பட்டான்..
‘போடா.. நீயும் உன் கரிசனமும்..’ அவனை முறைத்த சுகுமாறன்.. கீதாவைப் பார்த்ததும் வாயெல்லாம் பல்லானான்..
“என்ன கீதா.. வாசல் தெளிச்சுக் கோலம் போடவந்தியா..?”
“இல்லையே.. வாசல்பக்கம் புதையல் கிடைக்குதான்னு பார்க்கல்ல வந்தேன்..” சிரிக்காமல் சொன்னாள் கீதா..
அதை ரசித்த போதும் சுகுமாறனின் ரத்த அழுத்தத்தை எகிற விட வேண்டாமே என்று முகம் மாறாமல் நின்றான் ஆனந்தன்..
அன்பழகனுக்குத்தான் அப்படியெதுவும் அக்கறையில்லையே..
“ஹா.. ஹா.. ஜோக்கும்மா.. ஜோக்கு..” என்று அவன் விழுந்து விழுந்து சிரித்து வைத்தான்..
சுகுமாறனின் முகம் கன்றிப் போனது.. பல்லைக் கடித்தபடி உக்கிரமாக ஆனந்தனை முறைத்துப் பார்த்தான்..
“ஆபிஸ் விட்டு வந்தா ஒன்னு வீட்டுக்குள்ள வரனும்.. இல்லைன்னா காலாற தெருவில நடந்துட்டு வரனும்.. ரெண்டும் இல்லாம வாசலில என்னடா பேச்சு வேண்டிக் கிடக்கு..?”
நேரடியான இந்தத் தாக்குதலில் ஆனந்தனுக்கு கோபம் வந்து விட்டது.. சுகுமாறனுக்கு கொடுத்த வாக்கிற்கு கட்டுப் பட்டுத்தான் அவன் இருக்கிறான்.. விலகி விலகிப் போகிறவனிடம் நெருங்குவது கீதாதான்.. இதைப் புரிந்தும் புரியாதவனைப் போல சுகுமாறன் ஆனந்தனைக் குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயமாகும்..?
ஆனந்தன் சும்மாவே முரட்டுக்காளை..! அன்புக்கும் நியாயத்திற்கும் மட்டுமே கட்டுப்படுபவன்.. அவனை வம்புக்கு இழுத்தால் சும்மா விட்டு விடுவானா..?
“அதை நீ சொல்லக் கூடாதுடா..” சுகுமாறனை முறைத்து விட்டான்..
ஆஹா என்று கைதட்ட வேண்டும் போல இருந்தது அன்பழகனுக்கு..
‘வாயைக் கொடுத்து இந்தாளு வாங்கிக் கட்டிக்கிறாரே..’
சுகுமாறன் சும்மா நின்றிருந்தாலே போதும்.. அவன் வந்து விட்டான் என்பதில் அந்த இடத்தை விட்டுத் தானாகவே ஆனந்தன் நகர்ந்திருப்பான்.. சுகுமாறனின் முன்னிலையில் கீதாவும் பேச்சை வளர்த்திருக்க மாட்டாள்..
அதை விட்டுவிட்டு மனதின் பொருமலை அவன் வெளிப்படுத்தி விட்டான்.. சும்மாவும் இல்லாமல் ஆனந்தனை சிறு குழந்தையை மிரட்டுவதைப் போல மிரட்டி விட்டான்..
தன்மானச் சிங்கமான ஆனந்தன் அதைக் கேட்டுக் கொண்டா இருப்பான்..?
“சுகுமார்.. நீயும் நானும் காலேஜ் வரைக்கும் ஒன்னாப் படிச்ச பிரண்ட்ஸ்தான்.. ஒரே வீட்டில தங்கியிருக்கிற ரூம் மேட்ஸ்தான்.. அதுக்காக என்னைக் கமாண்ட் பண்றதைப் போல நீ எப்படிடா பேசலாம்..? நான் தெருவிலயும் நடப்பேன்.. வாசலிலயும் நிற்பேன்.. இதைச் செய், அதைச் செய்.. இதைச் செய்யக் கூடாது, அதைச் செய்யக் கூடாதுன்னு எனக்கு ஆர்டர் போட நீ யாருடா..? என் இஷ்டம்.. நான் எங்கே வேணும்னாலும் நிப்பேன்.. என்கிட்டப் பேசறவங்களை மதிச்சுப் பதில் பேசுவேன்.. எனக்கு அது வேண்டியிருக்கு.. என்னாங்கிற..?”
ஆனந்தனின் கோபத்தில் சுகுமாறனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. கீதாவின் முன்னால் அவனைத் தட்டி வைக்கலாம் என்று பார்த்தால் அவனோ எகிறிக் குதிக்கிறான்.. கீதா வேறு ஆனந்தனின் கோபத்தை ரசித்து ‘இப்ப என்ன செய்வ..?’ என்பதைப் போலப் பார்த்து வைக்கிறாள்..
இனிப் பின் வாங்க முடியாது..’ சுகுமாறன் பேச வேண்டிய வார்த்தைகளை மனதுக்குள் கோர்த்தான்..
“அது என்னடா என்னாங்கிறன்னு எளிசா கேட்டுப்புட்ட..? சொந்தக்காரன்னு நம்பி என் மாமா அவரோட வீட்டில என்னைத் தங்க வைச்சிருக்காரு.. ஐயோ பாவம்.. வீடு கிடைக்காம அல்லாடறேயேன்னு பரிதாபப்பட்டு நான் என்கூட உன்னைத் தங்க வைச்சிருக்கிறேன்.. நாளைக்கு ஏதாச்சும் ஒரு வினையை நீ இழுத்து விட்டுட்டின்னா அவருக்குப் பதில் சொல்றது யாரு..?”
ஆனந்தனைக் குறிபார்த்துத் தாக்கும் வார்த்தைகளுக்கான பதில் கீதாவிடமிருந்து வந்தது..
“நான் சொல்லிக்கறேன்..”
“கீதா..”
“இது எங்க வீடு.. நிரஞ்சன் படிக்கிற பள்ளிக்கூடத்தில வேலை செய்கிற வாத்தியாராச்சேன்னு பாவம் பார்த்து எங்கப்பா உங்களை இந்த வீட்டில தங்க விட்டிருக்காரு.. இந்த ரெண்டு வருசத்தில இந்த வீட்டை நீங்க ஒரு வழி பண்ணிட்டிங்க.. போஸ்ட் மாஸ்டர் உங்ககூட தங்க வந்தப்புறம்தான் வீடு வீடா இருக்கு.. நீங்க வீட்டைப் போலவா வைச்சிருந்தீங்க..? வீடு பூராவும் தூசி, ஒட்டடைன்னு பாழடைஞ்ச மண்டபம் போல இருந்துச்சு.. வாசல்பக்கம் இருக்கிற செடி கொடிகளுக்கு தண்ணி ஊத்தனும்னு ஒரு நாளாவது உங்களுக்குத் தோணியிருக்குமா..? செடிகளை வாட விடறவன் மனுசப் பிறவியே கிடையாது.. இவர் வந்த முதல் நாளிலேயே வாடிப் போன செடிகளுக்குத் தண்ணி பாய்ச்சினாரு.. அதை நான் மட்டும்தான் பார்த்தேன்னு நினைச்சீங்களா..? எங்க அப்பாவும் பார்த்தாரு.. யாரும்மா அந்தத் தம்பின்னு கேட்டாரு.. நம்ம ஊருக்குப்
புதுசா வந்திருக்கிற போஸ்ட் மாஸ்டருன்னு சொன்னேன்.. பரவாயில்லையே.. தம்பி மனசில ஈரமிருக்கேன்னு சொன்னாரு.. ஆமாம்.. தெரியாமத்தான் கேட்கிறேன்.. எங்க வீட்டில
இவரைத் தங்க வைக்கிறதுக்கு எங்கப்பாகிட்ட நீங்க அனுமதி வாங்கினீங்களா..?”
கீதாவின் அழுத்தமான கேள்வியில் திகைத்து விட்டான் சுகுமாறன்.. அவன் வீடு போல அவன் உரிமை கொண்டாடிய வீட்டில் அவனுக்கான உரிமையைப் பற்றிய கேள்வியை எழுப்பி விட்டாள் கீதா..
“நான் உங்க சொந்தக்காரன் கீதா..”
“இந்த ஊரு பூராவும்தான் எங்களுக்குச் சொந்தக்காரங்க இருக்காங்க.. சுத்துபட்டியில இருக்கிற அத்தனை சனமும் உறவுமுறை சனம்தான்.. அதுக்காக ஓசியா வீட்டில குடியிருந்துக்கன்னு விட்டுக் கொடுத்துற முடியுமா..? இந்த வீட்டுக்கு வாடகைன்னு ஒற்றைப் பைசா கொடுத்திருப்பீங்களா..? சம்பளம் வாங்கறீங்கதானே..? ஓசியில குடியிருக்கோமேன்னு உங்க மனச்சாட்சி உறுத்தலை..?”
“என்கிட்டேயே வாடகை கேட்பியா..?”
“கட்டாயம் கேட்பேன்.. என் அனுமானம் சரியா இருந்துச்சுன்னா, நிச்சயமா போஸ்ட் மாஸ்டர் இந்த வீட்டில ஓசியில குடியிருந்திருக்க மாட்டார்.. வாடகைன்னு கொஞ்சப் பணத்தை உங்க கையில கொடுத்திருப்பார்..”
கீதாவின் அதி நிச்சயமான அந்த அனுமானத்தில் ஆடிப் போனான் சுகுமாறன்.. அப்படித்தான் நடந்திருந்தது..
“உனக்குத்தான் மாமா வீடு.. எனக்கு அப்படியில்லை.. கை நிறைய சம்பளம் வாங்கறேன்.. வாடகைன்னு பணம் கொடுக்காம ஓசியில குடியிருக்க என்னால் முடியாது..”
கண்டிப்பாக சொல்லி விட்டு மாதா மாதம் வாடகைப் பணம் தந்து கொண்டிருந்தான் ஆனந்தன்.. அதை உணக்கையாக வாங்கிச் செலவளித்துக் கொண்டிருந்த சுகுமாறனுக்கு அதை கீதா கண்டுபிடித்து விட்டாளே என்ற சங்கடம் வரவில்லை..
மாறாக.. அந்த அளவுக்கு அவள் ஆனந்தனைப் புரிந்து வைத்திருக்கிறாளே என்று வெறி வெறியாக வந்தது..
Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.