Chapter 15

0Shares

ஞாயிற்றுக்கிழமையின் ஓய்வில் மனம் லயிக்க பரபரப்பில்லாத மனதோடு, காலைப் பொழுதை ரசித்தபடி ஏரிக்கரையின் மீது ஏறினான் ஆனந்தன்.. அன்பழகன்தான் அவனை அங்கே வரச் சொல்லியிருந்தான்..

“ஏரியில் விரால் மீன் பிடிப்பாங்க சார்.. ஞாயித்துக்கிழமை அந்தப் பக்கமா வாங்க.. நான் முன்னாடி போயி காத்திருக்கிறேன்.. விரால் மீன் வாங்கிட்டு வந்திரலாம்..”

அவன் மூட்டி விட்ட ஆசையில் ஞாயிறின் சிறப்பு உணவாக விரால் மீனைத் தீர்மானித்து விட்டான் ஆனந்தன்.. அதை வாங்க வந்தவன் ஏரிக்கரையின் அழகில் சொக்கிப் போய் விட்டான்..

கூடுகளை விட்டு இரை தேடிப் பறவைகள் கிளம்பிக் கொண்டிருந்தன.. காலை நேரக் காற்றே சுகம்தான்.. அந்தக் காற்றும் ஏரித் தண்ணீரின் ஈரப்பசை படிந்த காற்றாக அவன் உடல் தழுவியதில் ஏற்பட்ட புத்துணர்வில் குளிர்ந்து போனான்..

ஏரியில் வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக நீந்திக் கொண்டிருந்தன.. ஏரிக்கரையோரமாக நீர்வரத்தை உண்டு பண்ணும் பனைமரங்கள் வரிசை கட்டி நின்றன.. அவற்றின் மத்தியில் ஓடிய பாதையில் நடந்த ஆனந்தனுக்கு உற்சாகமாக இருந்தது..

அது ஏரிக்கரையைப் போலவே இல்லை.. கண்ணுக்கு எட்டியதூரம் வரை தண்ணீர் அலை மோதிக் கொண்டிருக்க கடற்கரையைப் போல உணர்ந்தான் ஆனந்தன்.. ஏரிக்கரையோரமாக பனை மரங்களின் இடையினில் பூத்துக் குழுங்கிய செடிகள் காற்றில் ஆடியது நாட்டியத்தைப் போலவே இருந்தது..

கைலியை மடித்துக் கட்டிய ஆனந்தன் சன்னமாக விசிலடித்தபடி நடந்தான்.. அவனது கம்பீரமான நடையழகைக் கண்ட கீதா சொக்கிப் போனாள்..

ஆனந்தனைப் போல அவள் மீன் வாங்க அங்கே வரவில்லை.. ஏரிக்கரையோரமாக இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு வந்திருந்தாள்.. தொடர்ச்சியாக சிலதினங்கள் பிள்ளையாருக்கு நீர் ஊற்றி.. பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று பார்வதி சொல்லியிருந்ததால் இடுப்பில் குடமும் கையில் பூஜைக் கூடையுமாக அவள் ஏரிக்கரைக்கு வந்திருந்தாள்..

தன் போக்கில் கரையேறியவள் முன்னால் சென்று கொண்டிருந்த ஆனந்தனைப் பார்த்து விட்டாள்.. அவளுக்குள் புதுரத்தம் பாய்ந்தது.. கைலியை மடித்துக் கட்டியவனின் உருண்டு திரண்ட கால் அழகில் அவளுக்கு ஏதோ போல ஆனது..

தினமும் அவள் பார்க்கும் ஆனந்தனாக அவனில்லை.. எதிர் வீட்டிலிருப்பவன் பால் வாங்க வரும்போது கைலியை மடித்துக் கட்டாமல் இறக்கி விட்டிருப்பான்.. மற்ற நேரங்களில் பேன்ட், சட்டையோடு இருப்பான்.. இப்படி விச்ராந்தியாக கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு விசிலடித்தபடி நடக்கும் ஆனந்தன் புதியவனாகத் தெரிந்தான்.. அவனுக்குத் தெரியாமல் அவனைத் தொடர்ந்து நடப்பது புதுவித அனுபவமாக கீதாவுக்கு இருந்தது..

‘முன்னாடி நீ போனா..

பின்னாடி வாரேன்..’

மனதுக்குள் பாடிக் கொண்டாள்.. அவனது நடை திடிரென்று நின்றது.. சுற்று முற்றும் பார்த்தான்.. பனைமரத்தின் பின்னால் கீதா மறைந்து கொண்டாள்.. சரிவில் இறங்கிய ஆனந்தன் கைலியையும் டி சர்ட்டையும் கழட்டி விட்டு பனியனும் இறுக்கிப் பிடித்த டிரவுசருமாக கால் பந்தாட்ட வீரனைப் போல நின்றான்..

ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்த கீதாவின் மூச்சுத் திணறியது.. அது போன்ற உடையில் வெளிப்பட்ட அவனது உடலழகில் மனம் மயங்கினாள் அவள்.. ஆனந்தன் ஏரிக்குள் இறங்கினான்.. தண்ணீரைக் கிழித்துக் கொண்டு அம்பு போல லாவகமாய் நீந்தினான்.. இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்த கீதாவைப் பாடாய் படுத்தினான்.. அவளால் அங்கே நிற்கவும் முடியவில்லை.. கடந்து நடக்கவும் முடியவில்லை..

அதிக நேரம் சோதிக்காமல் கரை திரும்பி விட்டான் ஆனந்தன்.. நனைந்திருந்த அவன் தலைமுடியில் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.. உடல் முழுவதும் நீர்த் திவலைகள் படிந்திருந்தன.. தாவணி கொண்டு துவட்டி விடவேண்டும் போல அலை பாய்ந்தது கீதாவின் மனம்..

‘நெஞ்சம் பொறு.. கொஞ்சம் இரு..

தாவணி விசிறிகள் வீசுகிறேன்..

மன்மதன் அம்புகள் தைத்த இடங்களில்

சந்தன மாவிலை பூசுகிறேன்..’

மனதுக்குள் மத்தளம் வாசித்த பாடல் தோன்றியது.. ஒரு துவாலையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு வந்திருக்கலாம் அல்லவா என்று மனதுக்குள் அவனை கடிந்து கொண்டாள் கீதா..

‘இப்படித் துவட்டாம கைலியைக் கட்டி, டி சர்ட்டை மாட்டிக்கிறானே.. ஏரித் தண்ணி..! உடம்புக்கு சரிப்படலைன்னா என்ன செய்கிறது..?’ கவலைப் பட்டாள்..

அவளது கவலையைப் பற்றி அறியாமல் கரையேறிய ஆனந்தன் இடுப்பில் குடத்துடன் நின்றிருந்த கீதாவைப் பார்த்து விட்டான்..

அவன் சும்மாவே கீதாவைக் கண்டு விட்டால் விலகிப் போக வழியைத் தேடுவான்.. இப்படி ஆளில்லாத ஏரிக்கரையில் அவளைக் கண்டு விட்டதும் ஒதுங்கி மறைய இடம் தேட ஆரம்பித்துவிட்டான்..

“இப்பத்தான் தண்ணிக்குள்ள இருந்து எழுந்திருச்சு வந்திருக்கீங்க.. திரும்பவும் தண்ணிக்குள்ள குதிச்சு வைச்சிராதீங்க.. இந்த ஏரிக்கரைப் பாதை எல்லோருக்கும் பொதுவானது.. எனக்கு மட்டும் பட்டாப் போட்டதில்லை.. இதில நீங்களும் நடக்கலாம்.. நானும் நடக்கலாம்..” என்றாள் கீதா..

துணிச்சலான அவளது பேச்சில் ஒதுங்கி மறைய இடம் தேடிய  ஆனந்தன் நிதானித்தான்.. ஒரு பெண்ணே இத்தனைத் துணிச்சலாக பேசும் போது ஆண்பிள்ளையான அவன் ஓடி ஒளிய நினைப்பதா..?

அவன் பேசாமல் நின்றதில் இடுப்பில் குடத்துடன் நடக்க ஆரம்பித்தாள் கீதா.. போதுமான இடைவெளி விட்டு பின்னால் நடந்த ஆனந்தனுக்கு..

‘ஏரிக்கரையின் மேலே..

போறவளே.. பெண் மயிலே..!’

என்று பாடத் தோன்றியது..

‘வேற வினையே வேணாம்..’ மானசீகமாக குட்டு வைத்துக் கொண்டவன் வேகமாக எட்டு வைத்து அவளைக் கடந்து விரைந்தான்..

“போஸ்ட் மாஸ்டரு எந்தக் கோட்டையைப் பிடிச்சுக் கொடியை நட்டு வைக்க இம்புட்டு விரசா போறாராம்..?” கீதா வம்பிழுத்தாள்..

பதில் சொல்லாமல் ஆழ்ந்து அவன் பார்த்த பார்வையில் அவளுக்கு மூச்சுத் திணறி விட்டது.. விரைந்து அவன் மறைந்ததில் ஏரிக்கரையே வெறுமையாகிப் போனதைப் போல அவளுக்கு இருந்தது..

அவன் இல்லாத பாதையில் நடந்து பிள்ளையார் கோவிலை அணுகியவள் ஒரு பெருமூச்சுடன் சரிவில் இறங்கி ஏரியிலிருந்த தண்ணீரை குடத்தில் நிரப்பி இடுப்புக்கு கொடுத்து கரையேறினாள்.. பிள்ளையாருக்கு நீர் ஊற்றி.. அவரிருந்த மேடையைக் கழுவி சுத்தம் செய்து விட்டு.. அவருக்கான புதுவஸ்திரம் அணிவித்து பூக்கள் கொண்டு அலங்கரித்து, கல் விளக்கில் எண்ணை ஊற்றி விளக்கேற்றி வணங்கினாள்..

அவளை முந்திக் கொண்டு விரைந்த ஆனந்தன் வேக நடையுடன் ஏரிக்கரையின் முனையை அணுகினான்.. அங்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த பொன்னழகனிடம் பேசிக் கொண்டிருந்த அன்பழகன் ஆனந்தனின் விரைவிற்கு ஆட்சேபம் தெரிவித்தான்..

“நான்தான் முன்னாடியே இங்கே வந்து காத்திருக்கேன்னு சொன்னேனில்ல..? விரால் மீன் எங்கே ஓடிறப் போகுது.. மத்த நாள்களிலதான் பரபரப்பா இருக்கீங்கன்னா ஞாயித்துக்கிழமையும் அப்படியே இருக்கனுமா..? மெதுவாத்தான் வந்தா என்ன..?”

“அந்தப் பொண்ணும் ஏரிக்கரைமேலே வந்துக்கிட்டு இருக்குப்பா..”

“எந்தப் பொண்ணு..?”

ஏரிக்கரையை பார்த்தான் அன்பழகன்.. அங்கே யாருமில்லாததில் போஸ்ட் மாஸ்டரை மோகினி எதுவும் பயமுறுத்தி விட்டதோ என்று யோசனையானன்..

‘இந்த மனுசன் மோகினிக்கு பயப்படற ஆளில்லையே..’

“என்னப்பா அப்படிப் பார்க்கிற..?”

“அங்கே எந்தப் பொண்ணையும் காணோமேசார்..”

“வந்துக்கிட்டு இருந்துச்சே..”

திரும்பிப் பார்த்தான் ஆனந்தன்.. யாருமில்லாததில் அவன் முகத்தில் ஏமாற்றம் கவிந்தது.. அவனையே பார்த்துக் கொண்டிருந்த அன்பழகன்..

“யாரு சாரு வந்தது..?” என்று கேட்டான்..

“அதான்.. எதிர் வீட்டுப் பொண்ணு..” எங்கோ பார்த்தான் ஆனந்தன்..

“கீதாம்மாவா..?”

“ஆமாம்ப்பா.. ஆமாம்..”

“இதுக்கா இப்படி ஓடி வந்தீங்க..? அவங்க இடுப்பில குடமும் கையில பூக்கூடையும் வைச்சிருந்தாங்களா..?”

“அது எப்படிப்பா அவ்வளவு கரெக்டாச் சொல்ற..?”

“தினமும் ஏரிக்கரை பிள்ளையாருக்கு தண்ணி ஊத்தி பூப்போட்டு கும்பிட்டு பூஜை பண்ணி விளக்கேத்திட்டுப் போவாங்க.. இருந்தாலும் போஸ்ட் மாஸ்டர் அவங்களைக் கண்டாலே நடுங்கக் கூடாது..”

ஆனந்தன் பதில் சொல்லவில்லை.. அவளைக் கண்டு அவன் மனம் நடுங்குதென்னவோ உண்மைதானே..

0Shares

Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link