Chapter 16

0Shares

அரசபட்டினத்தின் அரசு மேல் நிலைப் பள்ளியை ஒட்டிய பரந்த மைதானம் அன்று கிரிக்கெட் மைதானமாக மாறியிருந்தது.. திருவிழாக் காலங்களில் அங்குதான் சிலம்பப் போட்டி நடைபெறும் என்று அன்பழகன் சொல்லியிருந்தான்.. தேர்தல் சமயங்களில் அதே மைதானம் பொதுக்கூட்டத் திடலாகவும் மாறுமாம்.. அரச பட்டினத்தின் கபடிக் குழுவினர் கபடி விளையாடும் இடமும் அதுதானாம்.. அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டுப் போட்டிகளும் அங்குதான் நடக்குமாம்.. 

இப்படி எண்ணற்ற பயன்பாடுகளைக் கொண்ட விளையாட்டு மைதானத்தில் நிரஞ்சனும் அவனுடைய நண்பர்களும் கிரிக்கெட் விளையாடும் ஆயத்தங்களில் இருந்தார்கள்… அனைத்து தெய்வங்களின் அனுகிரகத்தால் அன்றைய வேலைகளை சீக்கிரமே முடித்து விட்ட ஆனந்தனும் அன்பழகனும் அலுவலக பணி 

நேரம் முடிவடைந்த நொடியில் அலுவலகத்தைப் பூட்டி விட்டு அன்று மழை கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது என்ற தீர்மானத்தைப் பகிர்ந்தபடி வீட்டைப் பார்த்துக் கிளம்பினார்கள்..

யதேச்சையாக மைதானத்தின் பக்கம் பார்த்த ஆனந்தன் ஆர்வமாகி..

“அந்தப் பசங்க கிரிக்கெட்டா விளையாடறாங்க..?” என்று கேட்டான்..

“அப்படித்தான் அவனுக சொல்லிக்கிறானுக சார்..” அசுவராஸ்யமாகச் சொன்னான் அன்பழகன்..

“என்னப்பா இப்படிச் சொல்ற..?”

“வேற எப்படிச் சொல்றது சார்..? கிரிக்கெட்டைப் பத்தின அரிச்சுவடி கூட இந்தப் பயலுகளுக்குத் தெரியாது.. இதில இவனுகளா ஒரு டீமை உண்டாக்கிக்கிட்டு பக்கத்து ஊருக்காரனுக கூட விளையாடப் போவானுக..”

“போயி..?”

“தோத்துப்புட்டுத் திரும்பி வருவானுக.. வேற என்னத்தைச் செய்வானுக..?”

இலகுவாக அன்பழகன் சொன்ன விதத்தில் வாய் விட்டுச் சிரித்தான் ஆனந்தன்..

“அப்புறம்..?”

“அப்புறம்.. பக்கத்து ஊர்க்காரனுக இவனுககூட விளையாட அரசபட்டினத்துக்கு வருவானுக..”

“வந்து..?”

“வந்து, அவனுக ஜெயிச்சுட்டுப் போயிருவானுக..”

மறுபடியும் இலகுவாக சொன்னான் அன்பழகன்.. ஆனந்தனின் சிரிப்பு தொடர்ந்தது.. ஏனோ விளையாட்டு மைதானத்திற்குப் போக வேண்டுமென அவன் விரும்பினான்.. எதனால் அந்த ஆர்வம் ஏற்படுகிறது என்று அவனுக்குப் புரியவில்லை.. நிரஞ்சன் கீதாவின் தம்பி என்பதினாலா..?

அதுதான் என்பது அவனுடைய ஆழ் மனதிற்கும் தெரியும்.. அன்பழகனுக்கும் தெரியும்.. அடுத்த விசாரணை எதுவாக இருக்கும் என்று அன்பழகன் ஆனந்தனின் முகம் பார்த்தான்.. ஆனந்தனோ மைதானத்தை நோக்கி நடந்தான்..

“என்னாச்சு சார்.. காத்து அந்தப் பக்கமா அடிக்குது..?” சைக்கிளை உருட்டியபடி கூட வந்த அன்பழகன் கேட்டான்..

“சும்மாப்பா.. வீட்டுக்கு போயி என்னத்த செய்யப் போறோம்..?”

“அதுக்கு..?”

“இவனுக எப்படித்தான் விளையாடறானுகன்னு வேடிக்கை பார்க்கலாமில்ல..?”

“தேவையா சார்..? என்னதான் சீக்கிரமா வேலை முடிஞ்சாலும் வீட்டுப் பக்கம் போயிறக் கூடாதுங்கிறது போஸ்ட் ஆபிஸ்காரன் தலைவிதியா சார்..?”

“யோவ்..! புலம்பாம கூட வாய்யா..”

“புலம்பிட்டாலும் கழுதையில..”

“என்ன முணுமுணுக்கிற..?”

“ம்ம்ம்..? எங்க போஸ்ட் மாஸ்டரு, தங்க போஸ்ட் மாஸ்டருன்னு பாட்டுப் பாடறேன்.. போவிங்களா.. புலம்பினா மட்டும் ஐயோ பாவம்ன்னு வீட்டைப் பாத்து போக விட்டுறப் போறிங்களா..?”

“வீட்டில போய் என்னய்யா செய்யப் போற..?”

புதிதாகக் கல்யாணமான அன்பழகன் இந்தக் கேள்வியில் நொந்து போய் விட்டான்.. கண்ணுக்கு லட்சணமான புதுப் பெண்டாட்டி அவன் நினைவுக்கு வந்தாள்..

“உங்களுக்கே நாயமா இருக்கா சார்..? நீங்கதான் கல்யாணமாகாத மனுசன்னா உங்ககூட வேலை பார்க்கிறவனும் அப்படியே இருப்பானா..?” கொதித்து விட்டான்..

“விடுப்பா.. விடுப்பா..” என்று அவனை ஆற்றுப் படுத்தினான் ஆனந்தன்..

அவர்கள் இருவரும் மைதானத்திற்குப் போன போது நிரஞ்சன் கேப்டனைப் போல அங்கே நில்லு, இங்கே நில்லு என்று பசங்களைப் போட்டுப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தான்..

“இதுக்கே ஒன்னும் தெரியாது.. அதில இது பண்ற அலம்பலைப் பாத்தீகளா சார்..?” தலையில் அடித்துக் கொண்டான் அன்பழன்..

“பாவம்ப்பா.. சின்னப்பையன்..” ஆனந்தன் நிரஞ்சனைத் தாங்கிப் பேசினான்..

“அதானே.. பையன் யாரு..? அனுதாப அலை அடிக்காமப் போயிருமா..? அர்த்தத்துடன் கேட்டான் அன்பழகன்..”

“நீயா எதையாவது நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல..” பற்றில்லாத ஞானியைப் போல முகத்தை வைத்துக் கொண்டான் ஆனந்தன்..

“நம்பிட்டேன்..” நம்பாத பார்வையுடன் சொன்னான் அன்பழகன்..

அவர்கள் இருவரையும் பார்த்து விட்ட பையன்கள் தங்களுக்குள் கூடிக் கூடிப் பேசிக் கொண்டார்கள்.. நிரஞ்சனின் முகத்தில் வெட்கம் வந்திருந்தது.. சும்மாவே சொதப்பும் பையன்கள் போஸ்ட் மாஸ்டர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற பதட்டத்தில் மட்டக் கேவலமாக ஆடி வைத்தார்கள்..

“என்னாப்பா இப்படி விளையாடறானுக..?” ஆனந்தன் அரண்டு விட்டான்..

“நான்தான் சொன்னேனே சார்.. இவனுக கிட்டிப்புல்லையும், பச்சைக் குதிரை தாண்டறதையும் ஒன்னாப் போட்டுக் கலக்கியடிக்கிறவனுக.. இவனுக ஆடறதை இவனுகதான் கிரிக்கெட்டுன்னு சொல்லிக்கிட்டுத் திரியறானுக.. கிரிக்கெட்டை கண்டு பிடிச்சவனுக மட்டும் இவனுக ஆடறதப் பாத்தான்னு வையுங்க.. அந்த இடத்திலேயே ரத்தம் கக்கிப் போய் சேர்ந்திருவானுக..” சிரிக்காமல் விளக்கம் கொடுத்தான் அன்பழகன்..

‘கீதாவின் தம்பி கிரிக்கெட்டில் சொதப்புவதா..?’ ஆனந்தனுக்கு மனம் தாங்கவில்லை..

“நிரஞ்சா.. இங்கே வாப்பா..” கூப்பிட்டான்..

“அவனை ஏன்சார் கூப்பிடறீங்க..?” சந்தேகமாக கேட்டான் அன்பழகன்..

“ம்ம்ம்.. அவனோட அக்காகிட்ட தூது சொல்லி அனுப்ப..” என்றான் ஆனந்தன்..

“நீங்க தூது சொல்லி அனுப்பிட்டாலும்.. கழுதையில.. அந்தக் தைரியமெல்லாம் உங்களுக்கு கிடையாது சார்..” அறிவித்தான் அன்பழகன்..

“அப்பேற்பட்ட தைரியமே எனக்கு வேணாம்ப்பா..” என்ற ஆனந்தன் தயக்கத்துடன் வந்த நிரஞ்சனின் தோள்மீது நட்புடன் கை போட்டான்..

பதினொன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நிரஞ்சனின் முகம் மலர்ந்த விட்டது.. அவன் விளையாடிய மட்டக் கேவல விளையாட்டை விமரிசிக்கத்தான் ஆனந்தன் கூப்பிடுகிறான் என்ற நினைவுடன் வந்தவன் அப்படியில்லை என்பதில் ஆனந்தமாகி விட்டான்..

“கிரிக்கெட்டுன்னா உனக்கு ரொம்ப பிடிக்குமா..?”

“உயிர் சார்..”

“இதை யார்கிட்டக் கத்துக்கிட்ட..? உங்க ஸ்கூலில் கோச்சிங் கொடுத்தாங்களா..?”

“நீங்க வேற.. அவங்க புட்பால், வாலிபால்ன்னு விளையாட விடுவாங்க.. அதையும் பி.யி.டி. சமயத்திலதான் விளையாடனும்.. இதை நாங்களா விளையாடறோம் சார்..”

“உன்னோட ஆர்வத்தைப் பாராட்டறேன்..”

“தேங்க் யு சார்..”

மகிழ்ந்து போன நிரஞ்சன் என்னவோ போட்டியில் வென்று வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றி விட்டவன் போல பெருமையுடன் கூட்டாளிகளைப் பார்த்துக் கொண்டான்..

“கோச்சிங் இல்லாமலே வெளுத்துக் கட்டறிங்களே.. கோச்சிங் கிடைச்சா இந்தியா டீமிலேயே இடம் பிடிச்சிற மாட்டிங்களா..?”

அன்பழகனுக்கு முதுகு காட்டி நின்றபடிதான் நிரஞ்சனிடம் உரையாடினான் ஆனந்தன்.. உரையாடலின் போக்கைத் தாங்க முடியாத அன்பழகன் விடுவேனா என்று ஆனந்தனின் முன்னால் வந்து நின்று..

‘ஆனாலும் உங்களுக்கு இம்புட்டுப் பேராசை கூடாது சார்..’ என்று பார்த்து வைத்தான்..

அன்பழகனைப் பார்க்காததைப் போல படு தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு நிரஞ்சனுக்கு தெம்பூட்டும் பணியை செவ்வனே தொடர்ந்தான் ஆனந்தன்.. 

“இந்தியா டீமில ஆடனும்ங்கிற ஆசையெல்லாம் எங்களுக்குக் கிடையாது சார்.. இந்த சிறுவூர்க்காரனுக டீமையும் பெருவூர்க்காரனுக டீமையும் ஒரே ஒரு தடவையாவது ஜெயிச்சுப் புடனும்..” கண் சிவந்தான் நிரஞ்சன்..

‘சிறுவூரும், பெருவூருமா..?’ அன்பழகனை நிமிர்ந்து பார்த்தான் ஆனந்தன்..

“என்னத்தைப் பார்க்கறிங்க..? எல்லாம் நம்ம பிரான்ச் ஆபிஸ்தான்.. சப் ஆபிஸை ஜெயிச்சுக்கிட்டு இருக்குது.. எல்லாம் இந்தப் பசங்களச் சொல்லனும் சார்.. வராத கிரிக்கெட்ட விட்டுத் தொலைங்கன்னா கேட்கிறானுகளா..?” சலித்துக் கொண்டான் அன்பழகன்..

“அப்படியா சேதி..? கவலையே படாதே நிரஞ்சா.. உனக்கு நானிருக்கேன்.. இப்பவே ரெண்டு ஊருக்கும் தகவல் சொல்லிரு.. எண்ணி பதினைஞ்சே நாளிலே ரெண்டு ஊருக்காரங்க கூடவும் உன் டீம் மோதுது.. ஜெயிச்சுக் காண்பிக்குது.. அரசபட்டினமா கொக்கா..?” சூளுரைத்தான் ஆனந்தன்..

“நிஜமாவா சார்..? நாங்க ஜெயிச்சுருவோமா..?” நம்பிக்கையில்லாமல் கேட்டான் நிரஞ்சன்..

“பாத்திங்களா..? இவனுகளுக்கே நம்பிக்கையில்லை.. இவனுகளை நம்பி சிறுவூர், பெருவூரோட மோதச் சொல்றீகளா..? இவனுக தேற மாட்டானுக சார்..” என்றான் அன்பழகன்..

“நான் தேத்திக் காட்டறேன்ய்யா..”

ஆனந்தன் அப்போதே களமிறங்கி நிரஞ்சனுக்கும் அவனுடைய தோழர்களுக்கும் கிரிக்கெட்டைப் பற்றிய நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டான்.. விதியே என்று தலையில் கை வைத்தபடி தள்ளி நின்று வேடிக்கை பார்த்த அன்பழகன் போகப் போக விளையாட்டில் சுவராஸ்யமாகி கைதட்டி ஊக்கப் படுத்த ஆரம்பித்து விட்டான்..

இருட்டின பின்பு நிரஞ்சனுடன் பேசியபடி வீட்டுக்குப் போனார்கள்.. வாசலில் பால் பாத்திரத்துடன் நின்றிருந்தாள் கீதா..

“என்னப்பா இது..?” பயந்து போனான் ஆனந்தன்..

“அட சும்மாயிருங்க சார்.. பொசுக்கு பொசுக்குன்னு பயந்துக்கிட்டு.. எதுத்த வீட்டுக்காரங்க பால் வாங்கி வைச்சுக் கொடுக்கிறது பழக்கம்தானே..?” சண்டைக்கு வந்தான் அன்பழகன்..

“பால்காரக் கோனார் அப்பவே வந்துட்டார் அன்பு..”

“நானும் போஸ்ட் மாஸ்டரும் நிரஞ்சனுக்கு கிரிக்கெட் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தோம்மா..”

“நீயும்.. போஸ்ட் மாஸ்டரும் சொல்லிக் கொடுத்தீங்களா..?”

“போஸ்ட் மாஸ்டரு சொல்லிக் கொடுத்தாரு.. நான் தள்ளி நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.. ஹி.. யி..”

அன்பழகனிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தபடி ஆனந்தனைப் பார்த்த கீதாவின் விழிகளில் சொந்தம் மின்னியது..

0Shares

Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link