Chapter 17

0Shares

கீதாவைப் பார்க்காமல் ஆனந்தனுடன் பேசியபடி எதிர் வீட்டுக்குள் போய் விட்டான் நிரஞ்சன்.. கீதாவின் மனதில் இதம் பரவியது.. நிரஞ்சன் எளிதில் யாரிடமும் பேசிப் பழகிவிட மாட்டான்.. அவன் ஆனந்தனுடன் ஒட்டிக் கொண்டதில் ஆச்சரியப்பட்டுப் போனாள் அவள்.. சிறு பையனின் மனதையும் வெல்லக்கூடிய ஆகர்ஷசக்தி ஆனந்தனிடம் இருக்கிறது என்பதில் அவளது மனம் விகசித்தது.. சுகுமாறன் அரசபட்டினத்திற்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது.. ஒருநாள்கூட அவனிடம் நிரஞ்சன் பேச முயன்றதில்லை என்பதை அவள் நினைவு கூர்ந்தாள்..

சுகுமாறனும் நிரஞ்சனுடன் பேச முயன்றதில்லை.. அவன் கீதாவிடம் பேசுவதற்கே ஆர்வம் காட்டுவான்..

மனம் நிறைய இனிக்கும் எண்ணங்களை நிரப்பி அசை போட்டபடி வீட்டுக்குள் போய் விட்டாள் கீதா.. இவை எதையும் அறியாதவனாக மாடியில் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்தான் சுகுமாறன்..

வீட்டுச்சாவிகள் இரண்டில் ஒன்றை ஆனந்தனிடம் அவன் கொடுத்திருந்ததால் வீட்டைத் திறந்து உள்ளே போன ஆனந்தன் விளக்குகளை எரிய விட்டான்..

“வீடு இருட்டுக்கட்டிக் கிடக்கு.. வாத்தியாரு வரலையா..?” அன்பழகன் சுற்று முற்றும் பார்த்து விட்டு..

“வந்துட்டாரு போல் சார்.. வண்டி நிக்குதே..” என்று சுகுமாறனின் இருசக்கர வாகனத்தைச் சுட்டிக் காட்டினான்..

“மாடியில இருப்பான்..”

அதைப்பற்றிக் கண்டு கொள்ளாமல் பாலைக் காய்ச்ச ஆரம்பித்தான் ஆனந்தன்.. அன்பழகன்தான் பொருமினான்..

“ஆனாலும் இது அநியாயம் சார்.. வீட்டில லைட்டைப் போட்டுட்டு பாலை வாங்கி வைச்சிருக்கலாமில்ல..? இதைக்கூடச் செய்யாம குறட்டை விட்டுத் தூங்கினா எப்படி சார்..?”

“அவன் குணம்தான் தெரிஞ்சதாச்சே.. விடு அன்பு..”

ஆனந்தனின் பெருந்தன்மையை வியந்தபடி அவன் பின்னாடியே அலைந்து கொண்டிருந்தான் நிரஞ்சன்.. மூவருக்கும் காபி கலந்து முடித்த ஆனந்தன் நிரஞ்சனுக்கும் அன்பழகனுக்கும் காபித் தம்ளர்களைக் கொடுத்து விட்டுத் தானும் ஒரு தம்ளரை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.. அங்கிருந்த சோபாக்களில் உட்கார்ந்து அவர்கள் காபி குடித்தபடி பொதுவாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்களின் பேச்சுச் சப்தத்தில் விழித்துக் கொண்ட சுகுமறான் மெதுவாகப் பேச வேண்டியதுதானே 

என்று ஆனந்தனிடம் சண்டை போடுவதற்காக தடதடவென மாடிப்படிகளில் இறங்கி வந்தான்.. எள்ளும், கொள்ளும் முகத்தில் வெடிக்க வந்தவன் நிரஞ்சனைக் கண்டதும் திகைத்துப் போய் நின்று விட்டான்..

‘இவன் எங்கே.. இங்கே..?’

ஆனந்தனின் பக்கத்தில் வெகு சுவாதீனமாக உட்கார்ந்து நிரஞ்சன் கதை பேசி சிரித்துக் கொண்டிருந்ததில் சுகுமாறனின் உடல் முழுவதும் மிளகாயை அரைத்துப் பூசியதைப் போல இருந்தது..

‘களவாணிப்பய..! அக்கா மாதிரியே இவன்கிட்டப் பல்லப் பல்லக் காட்டிப் பேசறான்.. ஒருநா.. ஒரு பொழுது என்கிட்ட முகம் பார்த்துப் பேசியிருப்பானா..? கேட்டா இவனுக்கு நான் வாத்தியாரும்பான்.. இவன் என்ன ஜியாக்ரபி குருப்பா எடுத்திருக்கான்..?’

தாங்க முடியாமல் அவன் மேனி பதறியது..

“ஆனந்தா..”

அவன் போட்ட சப்தத்தில் நிரஞ்சன் காபித் தம்ளரை நழுவவிட இருந்தான்.. அன்பழகன் கெட்டியாக பிடித்து நிரஞ்சனின் தம்ளரைத் தடுத்தாட் கொண்டான்..

“ஏன் சார் இப்படி எட்டூருக்குக் கேக்கிறாப்புல சத்தம் போடறிங்க.. எங்களுக்குத்தான் உங்க சத்தம் பழக்கம்.. நிரஞ்சனுக்குமா பழக்கம்..? பாவம்.. பிள்ளைக்கு உடம்பே தூக்கிப் போட்டிருச்சு..”

அன்பழகனின் பரிவில் சுகுமாறனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது..

“நீ சும்மாயிரு அன்பு.. உனக்கெதுவும் தெரியாது..”

“அதைச் சொல்லுங்க.. உங்களுக்குத் தெரியற சூட்சுமம் வேற யாருக்கும் தெரியாதுதான்..”

“பேச்சு உனக்கும் எனக்குமில்லை அன்பு.. ஆனந்தனுக்கும் எனக்கும்தான்..”

“அதுதான் தெரிஞ்ச சங்கதியாச்சே.. போஸ்ட் மாஸ்டர் சார்.. வாத்தியாரு உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்.. பேசுங்க..”

“என்னடா..?”

“உன் மனசில என்னதாண்டா நினைச்சுக்கிட்டு இருக்க..? நினைச்சா வர்ற.. நினைச்சாப் போற.. வீடான வீட்டில சத்தமாப் பேசி கூத்தடிக்கிற..”

“பார்த்துப் பேசு சுகுமார்.. மாடியில நான் கால்வைச்சா ஏன்னு கேளு.. உன் போர்சனில நீ இருக்கிற.. கிரௌவுண்ட் ப்ளோரில நானிருக்கிறேன்.. ஆளுக்கொரு சாவிய வைச்சிருக்கோம்.. உன் வசதிக்கு நீ வந்து போகிற.. என் வசதிக்கு நான் வந்து போகிறேன்.. உன்னைக் கதவைத் திறந்து விடச் சொன்னா ஏன்னு கேளு.. சத்தமில்லாமப் பேசினா அது வீடே இல்லைடா.. எல்லோரும் உக்காந்து பேசிச் சிரிக்கத்hன் ஹாலையே கட்டி வைச்சிருக்காங்க..”

அதைத்தானே சுகுமாறனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..! அவனும் அந்த வீட்டில் இரண்டு வருடங்களுக்கு மேல் குடியிருக்கிறான்.. அழகான பெரிய ஹால்.. விலையுயர்ந்த சோபாக்கள்.. உட்கார்ந்தால் ஆளை உள்ளே இழுத்துக் கொள்ளும் பஞ்சின் மென்மை கொண்டவை.. சுவரில் பொருத்தப்பட்டிருந்த அகலமான பெரிய திரையைக் கொண்ட டிவி..!

இவை அனைத்தையும் அனுபவிக்க முடியாமல் நீலகண்டனின் அம்மாவைப் பற்றிய பயம் சுகுமாறனைப் பிடித்து ஆட்டி வைத்துக் கொண்டிருந்ததே.. அந்த ஹாலின் அழகை நின்று பார்க்கக் கூட முடியாமல் அவன் நடுங்கிக் கொண்டிருக்க ஆனந்தனும் அவனுடைய சகாவும் அந்த ஹாலில் உட்கார்ந்து காபி குடிக்கிறார்கள்.. பேசிச் சிரிக்கிறார்கள்.. டிவி பார்க்கிறார்கள் என்றால் அவனுக்கு எப்படியிருக்கும்..?

அவன் பெறாத இன்பத்தை ஆனந்தனும் மற்றவர்களும் பெறுவதா..? 

பொறாமையில் பொசுங்கியபடி அவன் நிரஞ்சனைப் பார்த்தான்.. அவன் இவன் பார்வையை சட்டை செய்யாமல் ஆனந்தனிடம் ரகசியம் பேசிக் கொண்டிருந்தான்.. அந்த நெருக்கத்தைத் தாள முடியாத சுகுமாறன்.. 

“எப்ப வந்த நிரஞ்சா..?” என்றபடி நிரஞ்சனின் பக்கத்தில் உட்கார்ந்தான்..

நான்கு நபர்கள் உட்காரக்கூடிய சோபாவில் ஆனந்தனுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நிரஞ்சன் சட்டென நகர்ந்து ஆனந்தனுடன் ஒட்டிக் கொண்டு உட்கார்ந்ததில் சுகுமாறனின் தன்மானம் அடி வாங்கியது..

எதிரில் இருந்த ஒற்றைச் சோபாக்களில் ஒன்றில் உட்கார்ந்திருந்த அன்பழகனின் எக்ஸ்ரே கண்கள் இந்நேரம் இந்நிகழ்வை பகிர்ந்து கொண்டிருக்கும் என்ற நினைவில் புளுங்கிப் போனவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கெத்தாக இருக்க முயன்றபடி..

“கீதா எதுவும் சொல்லி விட்டுச்சா..?” என்று கேட்டு வைத்தான்..

“என்னது..?” முகம் சுளித்தான் நிரஞ்சன்..

ஆனந்தனுக்கும், அன்பழகனுக்கும் அந்த கேள்வி பிடிக்க வில்லையென்றாலும் சுகுமாறனிடம் பேச முடியாது என்பதில் பல்லைக் கடித்தபடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்..

“இங்கே உட்கார்ந்திருக்கயே.. அதான் கேட்டேன்..”

“அதுக்கு இப்படித்தான் கேப்பீங்களா சார்..? இப்படிக் கேக்காதீங்க.. அப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்..”

‘பயபுள்ள போட்டுக் கொடுத்திருவானோ..’

நிரஞ்சனின் எச்சரிக்கையில் சுகுமாறனுக்கு குலை நடுங்கிப் போனது..

‘எதைப் பேசினாலும் மண்ணைக் கவ்வ வைக்கிறேனே..’

நீலகண்டனின் வீட்டுச் சுவரில் மாட்டப் பட்டிருக்கும் இரட்டைக்குழல் துப்பாக்கியின் நினைவில் நொந்து போனான்..

“நான் போஸ்ட்மாஸ்டர் சார் கூட வந்தேன்..”

நிரஞ்சன் கொண்டாடிய சொந்தத்தில் சுகுமாறன் வெறி கொண்டான்..

“உனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாரப் பாக்க வந்தேன்னு சொல்லு.. அதில ஒரு அர்த்தமிருக்கு.. போஸ்ட் மாஸ்டர் கூட வந்தேன்னு சொல்றியே.. படிக்கிற பையனுக்கும் போஸ்ட் ஆபிசுக்கும் என்னப்பா சம்பந்தம்..?”

“நான் பூகோள குருப்பில்லையே சார்..”

“இதை எதுக்கு இப்பச் சொல்ற..?”

“நீங்க எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கலைங்கிறதுக்குச் சொல்றேன்.. அப்புறம், படிக்கிற பையனுக்கு மட்டுமில்ல.. ஊரில இருக்கிற அத்தனை மக்களுக்கும் போஸ்ட் ஆபிசுக்கும் சம்பந்தம் இருக்கும் சார்.. எல்லோரும் தபால் போடுவாங்க.. எல்லோருக்கும் தபால் வரும்.. இது போக படிக்கிற பையன் மணி ஆர்டர் அனுப்பக் கூடாது.. பணம் சேர்க்கக் கூடாதுன்னு ஏதாச்சும் சட்டம் இருக்குதா சார்..? இல்லைல்ல..? அதுக்கெல்லாம் போஸ்ட் ஆபிசுக்குப் போய்த்தானே ஆகனும்..?”

நிரஞ்சன் போட்ட போட்டில் இவனுக்கு இவ்வளவு திறமையாக பேச வருமா என்று ஆனந்தனும், அன்பழகனும் ஆச்சரியப் பட்டுப் போனார்கள்.. சுகுமாறனோ வியர்த்துப் போன முகத்தை துடைத்துக் கொண்டான்..

‘ஒற்றைக் கேள்விக்கு இம்புட்டு நீள பதிலா..?’

அதுவும் போதாது என்று ஆனந்தனுடன் நிரஞ்சன் ஐக்கியமாகி இருப்பதற்கான தாத்பர்யத்தையும் பிட்டுப்பிட்டு வைத்தான் நிரஞ்சன்..

“எது எப்படியோ சார்.. எங்க பள்ளிக்கூடத்தில நீங்க வாத்தியாரா இருந்தும் உங்ககிட்ட பாடம் படிக்கிற குடுப்பிணை எனக்கு இல்லை..”

‘இதை சந்தோசமா சொல்றானே..’

“ஆனா.. போஸ்ட் மாஸ்டர்கிட்டப் பாடம் படிக்கிற குடுப்பிணை மட்டும் எனக்கு இருக்கு..”

‘இதை மட்டும் முப்பத்திரண்டு பல்லையும் காட்டிக்கிட்டுச் சொல்லுறானே..’

“போஸ்ட் மாஸ்டர்தான் எங்க கிரிக்கெட் டீமுக்கு கோச்..”

பெருமிதமாக அறிவித்தான் நிரஞ்சன்.. தனக்குக் கிரிக்கெட் தெரியாது என்பதில் தலைவேதனை கொண்டான் சுகுமாறன்.. கிரிக்கெட்டுக்கும் அவனுக்கும் காத தூரம்.. கிரிக்கெட்டில் தேர்ந்த வல்லுனனாக இருந்த ஆனந்தனை வெல்ல முடியாத சாத்தியக் கூறுகள் இருந்ததில் ஊமையாகிப் போனான்..

அனுதினமும் சாயங்கால வேளைகளில் நிரஞ்சனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் தீவிரமான பயிற்சி கொடுத்தான் ஆனந்தன்.. சிறூவூர், பெருவூருடன் மோதி ஜெயித்த அரசபட்டினத்தின் கிரிக்கெட் டீம் அதை நம்ப முடியாமல் 

ஆனந்த அதிர்ச்சியுடன் திக்கு முக்காடியது.. ஆனந்தனை அலேக்காகத் தூக்கி மைதானத்தைச் சுற்றி வந்தது.. நிரஞ்சனும் அவனுடைய நண்பர்களும் மகிழ்ந்து போனார்கள்..

0Shares

Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link