Chapter 19

0Shares

“சார் அந்தம்மாவ நிறையத் தடவ நீங்க பார்த்திருக்கீங்க..”

“எனக்கு நினைவில்லையேப்பா..”

“எப்படித்தான் நீங்க சுகுமார் வாத்தியாரோட பிரண்டா இருக்கீங்க ளோ..? அவருக்கு இருக்கிற விவரத்தில கால்வாசிகூட உங்களுக்கு இல்லை..”

“இருந்துட்டுப் போகட்டும்.. அதனால ஒரு குறைவுமில்லை..”

“சார்.. அந்தம்மாதான் பார்வதியம்மா.. பண்ணையாரோட சம்சாரம்.. கீதாம்மா, நிரஞ்சனோட அம்மா.. எதுத்த வீட்டுல இருக்கிறவங்களைத் தெரியாதுன்னு சொல்ற பிரகிருதியை இப்பத்தான் பார்க்கிறேன்.. நேத்துக்கூட நாம ஆபிசில இருந்து வந்தப்ப அந்தம்மா வாசலில நின்னுக்கிட்டு இருந்தாங்களே..”

“நான் கவனிக்கலை அன்பு..”

“ம்ஹீம்.. நீங்க தேறாத கேஸ் சார்..”

“இனித் தேறி என்ன பண்ணப் போறேன்..? ஆல்ரெடி எனக்கு சென்ட்ரல் கவர்ண்மெண்ட் வேலையே கிடைச்சாச்சு.. விடுவியா..?”

ஆனந்தனும் அன்பழகனும் கோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டபடி வீட்டைப் பார்த்துக் கிளம்பினார்கள்.. அன்பழகனின் சைக்கிள் பத்திரமாக நின்றிருந்தது..

“உன் ராயல் என்ஃபீல்டை யாரும் டச் பண்ணலை அன்பு..” கேலியாக சொன்னான் ஆனந்தன்..

“எனக்கு இதுதான் ராயல் என்ஃபீல்ட்..” காதலுடன் சைக்கிளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான் அன்பழகன்..

அந்தக்கதை, இந்தக்கதை, சொந்தக்கதை என்று கதைகள் பலவற்றை பேசியபடி வீட்டுக்குப் போனவர்களை கோபத்துடன் எதிர் கொண்டான் சுகுமாறன்..

“நீ ஒரு முடிவோடதாண்டா இருக்க..”

“என்னடா சொல்ற..?”

“புரியாததைப் போலப் பேசாதே ஆனந்தா.. திட்டம் போட்டுத்தானே காய் நகர்த்தற..?”

“எந்தத் திட்டத்தைப் போட்டேன்..? எந்தக் காயை நகர்த்தறேன்..?”

“அன்னைக்கு என்னன்னா நிரஞ்சனுக்கு கிரிக்கெட் ஆசையைக் காட்டிக் கைக்குள்ள போட்டுக்கிட்ட.. இன்னைக்கு எங்கத்தை முன்னாடி பக்திப் பாட்டுப் பாடி வேசம் போட்டு நல்லவன்னு பேரு வாங்கிக்கிட்ட இல்ல..?”

“டேய்..”

“நான் வீட்டுக்கு வாரேன்.. எங்கத்தை கோவிலில இருந்து அப்பத்தான் வந்தாங்க.. என்னைப் பார்த்ததும் உங்க நண்பர் நல்ல குடும்பத்தில பிறந்த குணமான தம்பி போல இருக்கு.. கோவிலில சிவனைப் பத்தி பக்திப் பாடல் பாடினாரே பார்க்கனும்.. மனசெல்லாம் நிரம்பிருச்சுன்னு புகழ்ந்துட்டுப் போறாங்க.. எனக்கு எப்படியிருக்கும்..? நீ நல்ல குடும்பத்தில பிறந்தவன்னா நான் எந்தக் குடும்பத்தில பிறந்தேன்.. நீ தங்கக் கம்பின்னா நான் யாரு..? பித்தளைக் கம்பியா..? “

“சுகுமார்..”

“நிம்மதியா இருந்தேண்டா.. நீ இந்த ஊருக்கு வாற வரைக்கும் நிம்மதியா இருந்தேன்.. நீ வந்த பின்னாலே என் நிம்மதியே போச்சுடா.. நான் உனக்கு என்னடா கெடுதல் செஞ்சேன்..? அறியாத ஊருக்கு வேலைக்கு வந்திருக்கேன்னு அடைக்கலம் கொடுத்தேன்.. அது தப்பாடா..?”

“ஷட் அப் சுகுமார்.. நீ குடியிருக்கிற வீட்டை என்னோட ஷேர் பண்ணிக்கிட்ட.. அடைக்கலம் கொடுக்கல.. மைண்ட் யுவர் வெர்டுஸ்.. உன்னைப் போல நானும் சம்பாதிக்கிறவன்தான்.. இன்னும் சொல்லப் போனா உனக்குச் சாப்பாட்டை நான்தான் போட்டுக்கிட்டு இருக்கேன்.. வீட்டு வாடகைக்குன்னு நான் உனக்குப் பணம் கொடுக்கிறேனே.. உணக்கையாய் நேரா நேரத்துக்கு நீ சாப்பிடுகிற சாப்பாட்டுக்கு என்னைக்காவது நீ பணம் கொடுத்திருக்கியா..? பாலில இருந்து காய்கறி, மளிகை ஜாமான் வரை நான் பணம் போட்டு வாங்கறதும் இல்லாம உனக்குச் சமைச்சுக் கொட்டிக்கிட்டும் இருக்கேன்.. நீ அதை மொக்கு, மொக்குன்னு மொக்கிட்டு எனக்கு அடைக்கலம் கொடுத்ததா பேசிக்கிட்டு இருக்கே.. குட்ஜோக்.. நான்தாண்டா உனக்கு அடைக்கலம் கொடுத்திருக்கேன்..”

“ஆனந்தா..”

“கத்தாதே.. குரள் வளையைப் பிடிச்சுருவேன்.. ஆளைப் பாரு.. உன்கூட ஹவுஸ் மேட்டா தங்கினா நீ என்ன வேணும்னாலும் வாய்க்கு வந்தபடி பேசுவியா..? அன்பு.. ஏதாச்சும் டிரை சைக்கிள் இருந்தாக் கூப்பிடு.. ஜாமான் சட்டைக் கட்டிக்கிட்டு ஆபிசைப் பார்த்துப் போயிரலாம்.. இவன் தொல்லை தாங்கலை..”

ஆனந்தன் முடிவெடுத்தவனாக பெட்டியைத் திறந்து சுவர் அலமாரியில் இருந்த துணிகளை இழுத்துத் திணிக்க ஆரம்பித்ததில் திகிலடைந்து விட்டான் சுகுமாறன்..

ஆனந்தன் வந்த பின்னால்தான் பயமின்றி அந்த வீட்டில் தூங்கி எழுந்திருக்கிறான்.. ஆனந்தன் போய் விட்டால் அவனோடு சுகுமாறனின் தூக்கமும் போய்விடுமே.. அது மட்டுமில்லாமல் ஆனந்தன் நிரஞ்சனின் கிரிக்கெட் விளையாட்டுக்கான குருவாக ஆகி விட்டான்.. அவன் வீட்டை விட்டுப் போய் விட்டால் விபரிதமாகப் போய் விடும்.. நிரஞ்சன் பொடியன் நீலகண்டனிடம் சுகுமாறனைப் பற்றி வத்தி வைத்து விடுவான்.. பிள்ளைகளை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் பண்ணையார் நிரஞ்சனின் வார்த்தையை சிரமேற் கொண்டு சுகுமாறனை வீட்டை விட்டுப் பற்றி விட்டு.. அங்கே ஆனந்தனை மட்டும் ஏகபோக உரிமையுடன் குடிவைத்து விடுவார்..

அதன் பின் அரச பட்டினத்தில் சுகுமாறனால் தலை காட்ட முடியுமா..? 

இத்தனையும் போதாது என்று நீலகண்டனின் பக்திப் பழமான பத்தினி.. பார்வதியம்மாள், திருஞானசம்பந்தரைப் புகழும் அளவுக்கு ஆனந்தனை உயர்த்திப் புகழ்பாடி விட்டுப் போயிருக்கிறாள்.. ஆனந்தன் வீட்டை விட்டு வெளியேறி விட்டால் அவள் பங்குக்கு பண்ணையாரை தூண்டி விட்டு விடுவாள்..

அதற்கு மேல் அரசபட்டினத்தில் குப்பை கொட்டுவதைப் பற்றிச் சுகுமாறன் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது..

அவசரமாக ஆனந்தனின் பெட்டியைப் பிடுங்கி வைத்தான் சுகுமாறன்..

“நீயே என்னைப் புரிஞ்சுக்கலைன்னா வேற யார் என்னைப் புரிஞ்சுக்குவாங்க.. ஆனந்தா..?” என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்..

‘இவன் காரியக் கிறுக்கன்..!’ வெறுப்புடன் நினைத்துக் கொண்டான் அன்பழகன்..

“வேணாம் சுகுமார்.. இது எல்லை மீறிப் போய்க்கிட்டு இருக்கு.. நீ மெண்டலி டிஸ்டர்ப் ஆகிற.. நாம தள்ளியிருக்கிறதுதான் உனக்கும் நல்லது.. எனக்கும் நல்லது..” கண்டிப்புடன் சொன்னான் ஆனந்தன்.

‘படுபாவி..! போறதிலயே தீவிரமா இருக்கானே..’ திகிலானான் சுகுமறான்..

“பேசறத எல்லாம் பேசிப்புட்டு டகால்ன்னு காலிலயும் விழுந்துடறீங்க வாத்தியாரே..! நீங்க படா கெட்டிதான்.. அப்படியே நாடகசாலையைப் பார்க்கிறதைப் போலவே இருக்கு..” என்றான் அன்பழகன்..

“சும்மாயிரு அன்பு.. நீ வேற கிளப்பி விடாதே.. ஆனந்தா உனக்கே தெரியும்.. நான் கீதாமேல உசிரையே வைச்சிருக்கேன்..” 

“இது கீதாம்மாவுக்குத் தெரியுமா..?” ஊடே புகுந்தான் அன்பழகன்..

“உன்னைச் சும்மாயிருக்கச் சொன்னேனில்ல..”

“இதையெல்லாம் கேட்டுட்டு சும்மாயிருக்க நான் சித்தரும் இல்ல.. புத்தரும் இல்ல.. எப்பப் பார்த்தாலும் எங்க போஸ்ட் மாஸ்டரையே இம்சை பண்றதுக்குப் பதிலா கீதாம்மாகிட்ட நேரடியா உங்க மனசில இருக்கிற ஆசையைச் சொல்லிற வேண்டியதுதானே..?” கறாராக கேட்டான் அன்பழகன்..

“அது என் முறைப் பொண்ணுதானேப்பா..?”

“பார்த்தா அப்படித் தெரியலையே.. முறைக்கிற பொண்ணு மாதிரியில்ல தெரியுது..? மாமா, மாமான்னு நீங்கதான் சொல்லிக்கறீங்க.. ஒருதரம் கூட பண்ணையாரு வாயாலே உங்களை மருமகன்னோ மாப்பிள்ளைன்னோ சொன்னதில்லையே..”

அன்பழகன் பாயிண்ட், பாயிண்டாக போட்டுத் தாக்கியதில் கிளீன் போல்டான சுகுமாறன் வெறி பிடித்தவனைப் போல சண்டைக்கு வந்தான்..

“உன் லிமிட்டைத் தாண்டிப் பேசற அன்பு.. என் குடும்ப விவகாரத்தைப் பேச நீ யார்..?”

“உங்க குடும்ப விவகாரத்தை எங்ககிட்ட கொண்டு வராதீங்கன்னுதான் நாங்களும் சொல்றோம்..”

“நீயென்ன இவன்கூட கூட்டுச் சேருகிற.. இவன் என் பிரண்டு..”

“அது இவரைப் பெட்டியத் தூக்க வைக்கிற வரைக்கும் தான்.. இதுக்கு மேல பிரண்டுங்கிற வார்த்தையை நீங்க சொல்லக் கூடாது..”

“இப்ப என்னதான் சொல்ல வர்ற..?”

சுகுமாறன் இறங்கி வந்தான்.. அதுதான் அவன் குணம்.. கெஞ்சினால் மிஞ்சுவான்.. மிஞ்சினால் கெஞ்சுவான்.. என்ன பிறவியோ என்று கசந்து போனான் ஆனந்தன்..

“நீங்க கீதாம்மாவைக் கட்டிக்கனும்னு நினைக்கிறது உங்க பிரச்சனை.. அதில போஸ்ட் மாஸ்டரை இழுக்கக் கூடாது.. உங்களுக்காக இவரு வில்லன் வேசம் கட்ட முடியாது.. யதார்த்தமாக எல்லோர் கூடவும் நல்லாப் பேசிப் பழகற மனுசனை இம்சை பண்ணக் கூடாது.. உங்களுக்குத் திறமையிருந்தா கீதாம்மாவோட மனசை ஜெயித்துத் தாலியைக் கட்டுங்க.. இல்லேன்னா கம்முன்னு இருங்க.. மத்தவங்க மனசை புண் படுத்தாதீங்க.. ஆமாம்.. சொல்லிட்டேன்.. ரொம்பப் பண்ணினீங்கன்னா பண்ணையார்கிட்ட நியாயம் கேட்டிருவேன்..”

அரண்டு விட்டான் சுகுமாறன்.. அன்பழகன் அப்படிச் செய்து விடக் கூடியவன்தான் என்பதில் சர்வாங்கரும் ஒடுங்கிப் போனான்.. அன்றைய சண்டை அத்துடன் முடிந்தது..

0Shares

Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link