Chapter 20

0Shares

தூக்கம் வராமல் புரண்டு படுத்தான் ஆனந்தன்.. ஜன்னல் வழி அறைக்குள் விழுந்த நிலா வெளிச்சத்தின் வெண்மை அவனை தோட்டத்திற்கு வா என்று அழைத்தது..

அறைக்கதவைத் திறந்து ஹாலுக்கு வந்தவன் பிரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தொண்டையில் கவிழ்த்தான்.. மாடிப்பக்கமிருந்து யாதொரு சப்தமும் வரவில்லை.. சுகுமாறன் தூங்கியிருப்பான் என்று நினைத்துக் கொண்டான்.. ஆனந்தன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்ப முனைந்ததில் அரண்டு போனவன் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தான்.. ஆனந்தனுடன் அவ்வளவாக வம்பு பண்ணுவதில்லை.. பொதுவாக எதையாவது பேசுவதைப் போல ஆரம்பித்து ஆனந்தன் கீதாவைப் பார்க்கக் கூடாது, பார்த்தாலும் பேசக் கூடாது என்று வந்து நிற்பான்.. தீர்க்கமாக ஆனந்தன் பார்க்கும் பார்வையில் வாயடைத்துப் போய் பேச்சை மாற்றி விடுவான்..

‘இவனை என்னதான் செய்வது..?’

வாசல் கதவைத் திறந்தான் ஆனந்தன்.. சிலுசிலுவென்ற காற்று அவன் உடல் தழுவியது.. இமை மூடி அதை ரசித்தான்..

‘ஆஹா..! அற்புதம்..!’

அந்த சுகானுபவத்தில் மனமும் உடலும் மூழ்கித் திளைத்தன.. தோட்டத்தில் நடந்தவன் யதேச்சையாக நிமிர்ந்து பார்த்தான்.. எதிர் வீட்டுப் பால்கனியில் கோட்டோவியமாக நின்ற கீதாவைக் கண்டதும் அவனது நடை நின்று விட்டது..

‘சுகுமாறன் பார்த்து விட்டால் வம்பு.. இவளைப் பார்க்கத்தான் நான் தோட்டத்துக்கு வந்தேன்னு பட்டம் கட்டி சண்டைக்கு வந்துருவான்..’

திரும்பிப் போய் விடலாம் என்ற முடிவுக்கு அவன் வந்தபோது கீதா பால்கனியை விட்டு அகன்று விட்டாள்..

நல்லதாகப் போனது என்று அவனால் மகிழ்ந்து போக முடியவில்லை.. கடல்நீர் நடுவே குடி நீரைத் தேடும் வறியவனைப் போலத் தன்னை உணர்ந்தான்.. அவள் இல்லாத பால்கனி அவன் மனதுக்கு வலி நிரம்பிய ஏமாற்றத்தைத் தந்தது..

ஒரு பெருமூச்சுடன் நடையைத் தொடர்ந்தான்.. காம்பவுண்டு கேட்டின் தாழை யாரோ சப்தம் இல்லாமல் நகர்த்தும் ஒலி வெகு துல்லியமாக அவன் காதுகளில் விழுந்ததில் நடையை நிறுத்தி காதுகளை கூர்மையாக்கி பார்வையைத் தீட்டி வெகு உன்னிப்பாக கவனித்தான்..

மல்லிகையின் மணம் வந்தது.. என்னடா இது.. அன்பழகன் சொல்வதைப் போல மோகினி எதுவும் வந்து விட்டதோ என்று ஓர்கணம் நினைவு வந்தது.. நிலவு வெளிச்சத்தில் பாவாடை தாவணி தெரிந்ததில் மோகினி பாவாடை தாவணி அணியுமா என்ற ஆராய்ச்சி அவன் மனதில் ஓடியது.. சிகப்பு வண்ண தாவணி ஆடியது.. வெண்மை நிறப் புடவை காற்றில் பறக்க வந்தால்தான் மோகினி.. இது வேறு ஒரு தாவணி என்ற முடிவிற்கு வந்தவன் உற்றுப் பார்த்தான்..

கொழுசின் ஒலி கேட்காமலிருக்க அடிமேல் அடியெடுத்து வைத்து தோட்டத்தில் கால்பதித்தாள் கீதா..

‘இவளா..?..!’ ஆனந்தனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

துளிக்கூட இதை அவன் எதிர்பார்க்கவில்லை.. பால்கனியில் நின்றிருந்தவள் வீட்டுக்குள் போனதும் தூங்கப் போயிருப்பாள் என்றுதான் அவன் நினைத்தான்.. இப்படித் துணிச்சலாக அவன் தங்கியிருக்கும் வீட்டுத் தோட்டத்திற்கே வந்து நிற்பாள் என்று நினைத்தும் பார்க்காததில் ஸ்தம்பித்து விட்டான்..

“கீதா..! என்ன இது..?” தன்னுணர்வு வந்ததும் பதறினான்..

“என் பேர் கூட உங்களுக்குத் தெரியுமா..?” அவள் தழுதழுத்தாள்..

ஆனந்தனுக்கு கலக்கமாக இருந்தது.. அவளின் துக்கம் கலந்த கேள்வி அவன் நெஞ்சைத் தொட்டது..

‘இருந்தாலும்..’ அவன் மனதைத் திடப்படுத்திக் கொண்டான்.. 

“இந்த நேரத்தில இங்கே வரலாமா..? ஊர்ப் பண்ணையா ரோட மக நீங்க.. அதுக்கான பொறுப்புணர்வு இருக்க வேணாமா..? ராத்திரி நேரத்தில துணிச்சலா வீட்டு வாசப்படியைத் தாண்டி இந்த வீட்டுத் தோட்டத்துக்கு வந்திருக்கீங்களே.. யாராச்சும் பார்த்தா என்ன ஆகும்ன்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தீங்களா..?”

பேசியபடியே வீட்டை ஒட்டியிருந்த தோட்டத்து மரத்தின் நிழலுக்கு அடியில் நகர்ந்து விட்டான் ஆனந்தன்.. நிலா வெளிச்சத்தை மறைத்து இருள் போர்வையால் பாதுகாத்த அந்த நிழலுக்குள் கீதாவும் புகுந்து மறைந்து கொண்டாள்..

“எதையும் யோசிக்கிற நிலைமையில நானில்லை.. பகலில் உங்களைப் பார்க்க முடியலை.. பார்த்தாலும் பேச முடியலை.. அப்படியே நானாக வலிய வந்து பேசினாலும் பேயைக் கண்டதைப் போல என்னைக் கண்டாலே பயந்து நடுங்கி விலகி ஓடறிங்க.. ஆபிஸீக்கு நான் வந்தா பேசக் கூலி கேக்கறீங்க.. நான் என்ன பண்ணட்டும்..?”

உரிமையோடு அவள் அங்கலாய்த்ததில் ஆனந்தனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது.. அவனை அன்னியனாகவே அவள் நினைக்கவில்லை.. உடந்தைப் பட்டவனாக நினைத்து மனம் குமுறிக் கொண்டிருந்தாள்..

“கீதா..?”

“எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.. ஏன்னு தெரியலை.. எங்க வீட்டு பால்கனியில இருந்து பார்த்தா இந்த வீட்டு ஹால், உங்க பெட்ரூம், முதற்கொண்டு எல்லாமே தெரியும்.. இரண்டு வருசமா சுகுமாறன் இங்கே தங்கியிருந்தார்.. ஆளில்லாத வீடு போல இருக்கும்.. நீங்க கால்வைச்ச மறுநொடியில வாடிக்கிடந்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினீங்களே.. அப்ப ஆரம்பித்தது இந்த வீட்டோட உயிர்ப்பு..”

“இது உங்க வீடா இருக்கிறதாலே உங்களுக்கு இப்படித் தோணுது..”

“காலம் காலமா இந்த வீட்டில குடியிருக்கிறதைப் போல முதல்நாளே சமைத்துச் சாப்பிட்டிங்க.. சுகுமாறன் இந்த வீட்டோடு ஒட்ட மாட்டார்.. நீங்க பசை போட்டு ஒட்டிக்கிட்டிங்க.. உங்க கண்ணியம், நிதானம், நிரஞ்சனோட மனசைக் கூட வெல்ல முடிகிற அரவணைப்புன்னு சொல்லிக்கிட்டேப் போகலாம்.. உங்களைப் போல ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை..”

“என்னையும் மிஞ்சி வேறொருத்தன் வரலாம்.. நீங்களும் பார்க்கலாம்.. இது இளமைப்பருவத்தில் புதிதாக யாரையாவது பார்த்தா ஏற்படும் அட்ராக்சன்..! ஈர்ப்புணர்வு..! தட்ஸ் ஆல்..”

“தட்ஸ் ஆலா..? என் உணர்வுகள் அத்தனை சாதாரண மானவையா..?”

கீதா உடைந்து போன குரலில் கேட்டாள்.. மனம் தாள முடியாத ஆனந்தன் அவனையும் அறியாமல் அவள் தோள் தொட்டதில் சன்னமாக விசும்பியபடி அவன் மார்பில் சாய்ந்து விட்டாள்..

பதறிப் போனான் ஆனந்தன்.. அவளை விலக்கி நிறுத்தி விடு என்றது அவனது அறிவு.. அவளது முதுகைச் சுற்றி வளைத்தன அவனது கரங்கள்.. அறிவின் எச்சரிக்கையை ஆழ்மனம் புறக்கணித்து ஜெயிக்க முற்பட்டதில் அவன் அதிர்ந்து போயிருந்தான்..

அவளது முதுகில் அவன் கரங்கள் படர்ந்ததில் அவள் இறுக்கமாக அவனை அணைத்துக் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து விட்டாள்.. அவனது தோளை வளைத்துப் பிணைந்திருந்த அவளது வளைக்கரங்களின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் தவித்துப் போனான் ஆனந்தன்..

அவன் தீரன்தான்.. இரும்பு வேலியை உடைத்து நொறுக்கித் தூள் தூளாக்கி விடும் வல்லமை பெற்றவன்தான்.. அந்த இரும்பு மனிதனுக்கு அவனைச் சுற்றி வளைத்திருக்கும் பூவேலியை உடைக்கும் திராணியில்லை..

அவளது பின்னலில் சூடியிருந்த மல்லிகையின் வாசம் அவன் மனதை மயக்கியது.. அவளது கூந்தலில் இருந்து வந்த சீயக்காய் பொடியுடன் கூடிய நறுமணம் அவனை சுண்டியிழுத்தது.. அவளது மேனியிலிருந்து வந்த சந்தனச் சோப்புடன் கூடிய சுகந்த வாசனை எங்கோ ஓர் மாய உலகுக்கு அவனை இழுத்துச் சென்றது..

அவனிடம் அடைக்கலமாகி விட்ட உணர்வுடன் அவன் மீது தன் மனதில் ஒளித்து பொதித்து வைத்திருந்த காதல் உணர்வுகளைக் கொட்டிக் கொண்டிருந்தாள் கீதா..

“வீடு பூரா வேலையாளுக.. இருந்தாலும் வாசல் தெளித்துக் கோலம் போடன்னு நான் ஓடியோடி வந்ததுக்கு நீங்க மட்டும் தான் காரணம்.. கோலம் போடற சாக்கில பால் வாங்க வர்ற உங்களைப் பார்க்கலாம்.. கோலம் போடறப்ப நீங்க தோட்டத்துப்பக்கம் செடிகளுக்கு தண்ணீர் ஊத்தறதைப் பார்க்கலாம்.. சாயங்காலம் வாசலில் நின்னா ஆபிஸ் விட்டு வர்ற உங்களைப் பார்க்கலாம்.. இப்படி உங்களைப் பார்க்கிறது மட்டுமே என்னோட வேலையா மாறிப் போச்சு.. நீங்க வீட்டுக்குள்ள இருக்கறப்ப.. பால்கனி இருட்டில் உட்கார்ந்து உங்க வீட்டையே பார்த்துக்கிட்டு இருப்பேன்.. நீங்க அன்பழகன்கூடப் பேசுவீங்க.. சிரிப்பீங்க.. எனக்குப் பொறாமையா இருக்கும்..”

ஆனந்தனின் சட்டையை நனைத்த கீதாவின் கண்ணீர் துளிகளில் மனம் நெகிழ்ந்து போனான் அவன்.. இப்படியொரு காதலை இதயத்தில் சுமந்து கொண்டு அவள் இருப்பாள் என்று நினைத்தும் பார்த்திராதவனுக்கு நெஞ்சம் கனத்தது..

வறியவன் கையில் வைரம் வந்து சேர்ந்திருக்கிறது.. அதைப் போற்றி வாழும் பாக்கியம் அவனுக்கு கிடைத்திருக்கிறதா..?

‘சுகுமார்..! ஏண்டா இந்த ஊருக்கு வந்தேன்..? எதுக்காக உன்னையும், இவளையும் சந்திச்சுத் தொலைத்தேன்.’

இதயம் ரணமாக அவளை அணைக்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் மனம் மறுகினான் ஆனந்தன்..

அவன் கேட்டானா..? இப்படியொரு தேவதைப் பெண்ணின் காதல் வேண்டுமென்று..! கேட்காமலே வரம் கொடுக்கும் தேவதையாக அவனிடம் அவள் அடைக்கலமாகி உருகுகிறாள்.. 

அவள் அளிக்கும் வரத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் ஆண்டவன் அவனை வைக்கவில்லையே..

0Shares

Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link