Chapter 23

0Shares

“கற்பூர நாயகியே..! கனகவள்ளி..!

காளி மகமாயி..! கருமாரியம்மா..”

காலத்தால் அழியாத எல்.ஆர். ஈஸ்வரியின் கணீரென்ற மந்திரக் குரலில் ஒலித்த பாடலில் அரச பட்டினத்தின் அம்மன் கோவில்கள் களை கட்டியிருந்தன.. ஒலி பெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்த பக்திப் பாடல்கள் சுற்றுப்பட்டி ஊர்மக்களையெல்லாம் அரசபட்டினத்திற்கு இழுத்து வந்து கொண்டிருந்தன.. களை கட்டியிருந்த ஊரில் களையில்லாமல் ஆபிசே கதியென்று வேலை பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்தன்..

அன்பழகன் புதுமாப்பிள்ளை போல பட்டு வேட்டியும் பட்டுச் சட்டையுமாக பரபரப்பாக இருந்தான்..

“திருவிழாவுக்குக் கூட லீவு தரமாட்டேன்னா எப்படி சார்..? உங்களைப் போல நான் தனிக்கட்டைன்னாப் பரவாயில்லை.. சாதி, சனம், சொந்த பந்தம்ன்னு இருக்கிற ஊர்க்காரன்.. புதுசாக் கல்யாணம் கட்டியிருக்கிறவன்.. அக்கா, தங்கச்சி, மாமனார், மாமியார்ன்னு ஒரு படையே திருவிழாவுக்கு வந்து இறங்கியிருக்கு.. அட.. இவங்களைக்கூட என் ஆத்தா, அப்பன், அப்பத்தா, பெண்டாட்டின்னு வீட்டில இருக்கிறவங்க பார்த்துக்குவாங்கன்னு வையுங்க.. என் கொழுந்தியா வந்திருக்கா சார்.. அவளைப் பார்த்துக்க நான் வீட்டில இருக்கனுமா, வேணாமா..?”

“அதை நான் முடிவு பண்ணக் கூடாது அன்பு..”

“வேற யாரு முடிவு பண்றதாம்..?”

“உன் சம்சாரம்தான் முடிவு பண்ணனும்..”

“கெடுத்தீங்களே காரியத்தை.. ஏன் சார்.. நீங்களும் கல்யாணம் கட்டிக்க மாட்டிங்க.. கட்டிக்கிட்டவன் குடும்பத்திலயும் கலகம் பண்ணுவீங்கன்னா என்னா சார் நியாயம் இது..?”

“எனக்கு இதுதான் நியாயம்.. வேலையைப் பாரு..”

“லீவு..?”

“மூச்..! வேணும்னா பெர்மிசன் போட்டுக்க..”

அன்பழகனுக்கு இவ்வளவு சொன்னால் போதாதா..? காலையில் மெயில் வந்தவுடன் பரபரவென பிரித்து அடித்து பிரான்ச் ஆபிஸ்களுக்குப் பை கட்டும் வரை ஆபிசில் வளைய வருவான்.. பிரான்ச் ஆபிஸ்களுக்கான பைகன் நகர்ந்தவுடன் இந்தப் பக்கம் இவனும் பறந்து விடுவான்.. மதியத்திற்கு மேல் பிரான்ச் ஆபிஸ் பைகள் வரும்போது வந்து சேர்வான்.. மடமடவென வேலைகளைப் பார்த்து மெயிலை அனுப்பியதும் விசிலை அடித்தபடி வீட்டைப் பார்த்து ஓடி விடுவான்..

மற்ற தினங்களில் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறவனிடம் ஆனந்தனால் கண்டிப்பைக் காட்ட முடியவில்லை.. அவன் லீவ் போட்டுவிட்டால் புதிய ஆளை வைத்து வேலை வாங்குவது வெகு சிரமமான ஒன்று என்பதால் அன்பழகனை இழுத்துப் பிடிக்காமல் தளர்த்தி விட்டு விட்டான் ஆனந்தன்..

திருவிழாவின் முதல் நாளில் அம்மன்களை ஆற்று மணலில் செய்து ஊர்வலமாக கோவில்களுக்கு எடுத்து வந்தார்கள்.. அதிகாலையில் அம்மன்கள் கோவிலுக்கு வர.. முளைப்பாரி ஊர்வலம் வந்தது.. வீட்டுக்குள் படுத்துக் கிடந்த ஆனந்தனை நிரஞ்சன் அனத்தி இழுத்துக் கொண்டு போனதில் அவன் கோவில் திருவிழாவில் கலந்து நின்று வேடிக்கை பார்த்தான்..

மண் சட்டிகளில் வளர்ந்திருந்த முளைப்பாரி பயிரை இளம் பெண்கள் தலையில் சுமந்து வந்தார்கள்.. அதில் கீதாவும் இருந்ததில் ஆனந்தனின் விழிகள் மின்னின.. அவள் ஆனந்தனைப் பார்த்தபடியே மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள்..

மஞ்சள் நிறத்தில் அரக்குசிகப்பு வண்ண கெட்டி ஜரிகை பார்டர் கொண்ட பாவாடையும் அரக்கு வண்ண தாவணியுமாக இருந்தவளின் பாரம்பர்ய அழகில் மெய் மறந்தான்.. அவளது நீண்ட பின்னலில் சூடியிருந்த மல்லிகைச் சரம்.. அவனுக்கு தோட்டதது இரவில் முகர்ந்த மல்லிகையின் வாசத்தை நினைவு படுத்தியதில் கிளர்ச்சியுற்றான்..

முளைப்பாரி சட்டிகளை இறக்கி வைத்த பெண்கள் வட்டமாக அதைச் சுற்றி வந்து கும்மியடித்துப் பாடல் பாடினார்கள்.. கீதாவின் விழிகள் ஆனந்தனையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன.. அன்றைய இரவில் கோவில் வாசலில் பள்ளிக்கூடத்தை ஒட்டிய மைதானத்தில் நாடகத்திற்கான மேடை போடப்பட்டு விடிய விடிய நாடகம் நடந்தது..

மறுநாள் பொங்கல் வைத்து வணங்கினார்கள்.. அன்று வீடு தோறும் கெடா வெட்டி விருந்து ஆக்கியதில் தன் வீட்டில் கறி விருந்து சாப்பிட வேண்டும் என்று சண்டைபோட்டு ஆனந்தனைத் தன் வீட்டில் விருந்து சாப்பிட தள்ளிக் கொண்டு போய் விட்டான் அன்பழகன்..

“யாரு..? நம்ம போஸ்ட் மாஸ்டரு பேராண்டியா..?”

அன்பழகனின் அப்பாவைப் பெற்ற பாட்டி கண்களுக்கு மேல் கையை விரித்து மறைத்து அடையாளம் பார்த்தாள்..

“ஆமாம் அப்பத்தா.. விருந்து சாப்பிட வந்திருக்கிற மனுசரைப் பயமுறுத்தி விரட்டியடிச்சிராதே..” என்றான் அன்பழகன்..

“யாருடா இவன் கூறு கெட்டவனா இருக்கான்.. சிங்கம் போல வந்து நிக்கிற ஆபிசர நான் ஏண்டா விரட்டப் போறேன்.. வாங்க சாமி.. சுக்கா வறுவலும்.. கறிக் கோலா உருண்டையுமா விருந்து ஆக்கியிருக்கோம்.. சாப்பிடுங்க.. ஏ புள்ள.. இலையைப் போடுதாயி..”

அன்பழகனின் பாட்டி வாஞ்சையாக பரிமாறினாள்.. அவள் வெங்கலத் தொண்டையில் பாடக் கூடியவள் என்று சொன்னான் அன்பழகன்.. 

“பாட்டுப் பாடியே தாத்தாவைத் துரத்தி விட்டிருச்சு.. மலேசியாவுக்குப் பிழைக்கப் போறேன்னு ஓடின மனுசன் அங்கேயே ஒரு பாட்டியைக் கட்டிக்கிட்டு செட்டிலாகிட்டாரு..”

‘பாவம் பாட்டி..’ ஆனந்தன் இரக்கப் பட்டான்..

கறிவிருந்தைச் சாப்பிட்டு வெற்றிலை பாக்கை மென்றபடி ஆபிசிற்கு வந்தவனுக்கு இன்ப அதிச்சி காத்திருந்தது.. கீதா நின்றிருந்தாள்..

“மதியச் சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வருவீங்களாம்.. அம்மா அழைக்கச் சொன்னாங்க..” அவன் விழியோடு விழி கலந்து சொன்னாள்..

“இப்பத்தான் அன்பு வீட்டில கறி விருந்தை ஒருபிடி பிடிச்சுட்டு வர்றேன்.. தேங்க்ஸ்ன்னு சொன்னேன்னு சொல்லு..” என்றான் ஆனந்தன்..

“இப்படிச் சொன்னாத் தப்பிக்க விட்டிருவோம்கிற நினைப்பா..? நடக்காது சாரே.. ராத்திரிச் சாப்பாடு எங்க வீட்டிலதான்..” விரலை உயர்த்தி எச்சரித்து விட்டுப் போய் விட்டாள் கீதா..

சுகுமாறனிடம் என்ன சொல்லி சம்மதம் வாங்குவது என்று குழம்பியபடி வீட்டுக்குப் போனவனுக்கு அடுத்த அதிர்ச்சியைத் தந்தான் சுகுமாறன்..

“ஆனந்தா, உனக்கும், எனக்கும் நைட் டின்னர் மாமா வீட்டிலதான்.. உன்னையும் அழைத்துக்கிட்டு வரனும்னு மாமா ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்காரு..” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சொன்னான்..

அப்பாடி என்ற விடுதலையுணர்வுடன் அன்றைய இரவு உணவுக்கு நீலகண்டனின் வீட்டுக்குப் போனான் ஆனந்தன். கூட வந்த சுகுமாறன் முன்னால் சென்றுவிட.. இவன் நிதானமாக அந்தப் பெரிய வீட்டின் பாரம்பர்ய அழகை ரசித்தபடி நடந்தான்..

“வாங்கய்யா..” வாய் நிறைய வரவேற்றாள் பார்வதி..

சுகுமாறனை கண்டு கொள்ளாமல் ஆனந்தனை மட்டும் அவள் வரவேற்றதில் முகம் சுண்டிப் போனது சுகுமாறனுக்கு..

கறிக்குழம்பு, வறுவல் என்று படு சிறப்பாக இருந்த இரவு உணவை ஒரு பிடிபிடித்து விட்டு வீட்டுக்கு வந்த ஆனந்தனுக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியது.. படுத்தவன் அசதியுடன் தூங்கி விட்டான்..

அன்று ஞாயிறு என்பதால் அரக்கப் பரக்க எழுந்திருக்காமல் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனை உலுப்பி எழுப்பி விட்டான் நிரஞ்சன்..

“சார்.. கிரௌவுண்டில சிலம்பப் போட்டி நடக்கப் போகுது சார்.. ஊரே அங்கேதான் இருக்குது.. நீங்க என்னடான்னு தூங்கிக்கிட்டு இருக்கீங்க..” என்று குற்றம் சாட்டினான்..

“சுகுமாறன் எங்கே..?”

“அவர் மாடியில தூங்கறார்.. அவரும் நீங்களும் ஒன்னா..? வாங்க சார்..”

நிரஞ்சனின் அன்பில் நெகிழ்ந்த ஆனந்தன் போர்வையை உதறிவிட்டு எழுந்து சோம்பல் முறித்தான்.. சமையலறைப் பக்கம் நகரப் போனவனின் கைபற்றி நிறுத்தி பிளாஸ்க்கையும், டிபன் கேரியரையும் திணித்தான் நிரஞ்சன்..

“உங்களுக்கும், வாத்தியாருக்கும் காபி, டிபனை கொடுத்து விட்டிருக்காங்க..”

“யாரு..?”

“அம்மாதான்.. வேற யாரு..? உங்களுக்காகத்தான் வாத்தியாருக்கும் சேர்த்து டிபன் காபி கிடைச்சிருக்கு.. இல்லேன்னா கண்டுக்க மாட்டாங்க..”

“ஏன்ப்பா.. சுகுமாறன் உங்களுக்குச் சொந்தக்காரனாச்சே..”

“அப்படின்னு அவர்தான் சொல்லிக்கிறார்.. ஐயோ பாவம்ன்னு சாப்பாடு கொடுத்து விட்டா அதை ஊர் பூராவும் சொல்லி இம்சை பண்ணுவார்.. அதனாலதான் அம்மா அவருக்கு பச்சைத் தண்ணி கூட குடுக்கக் கூடாதும்பாங்க..”

‘என்னடா இது..?’

திகைப்புடன் குளித்து உடைமாற்றி டிபன் சாப்பிட்டு விட்டு நிரஞ்சனுடன் மைதானத்திற்குப் போனான் ஆனந்தன்.. மைதானத்தைச் சுற்றி மூங்கில் குச்சிகளால் வேலி கட்டியிருந்தது.. மைதானத்தின் ஒரு பக்கம் இருந்த மேடையில் நாற்காலிகள் போடப்பட்டு ஊரின் முக்கியமான பெருந்தனக்காரர்கள் உட்கார்ந்திருக்க மையத்தில் நீலகண்டன் அமர்ந்திருந்தார்..

சிலம்பப் போட்டி ஆரம்பமானது.. உள்ளூர் வீரர்களை வென்ற வெளியூர் சிலம்பாட்டக்காரன் மமதையுடன் சிலம்பத்தைச் சுற்றியபடி..

“என்னை ஜெயிக்க அரசபட்டினத்தில் ஒரு ஆம்பளை கூட இல்லையா..?” என்று மீசையை முறுக்கியபடி கொக்கரித்தான்..

கோபம் கொண்ட நீலகண்டன் வேட்டியை மடித்துத் தார் பாய்ச்சுக் கட்டுக் கட்டி சிலம்பத்தை எடுக்கப் போனார்.. தடுத்து சிலம்பக் குச்சியை கையில் எடுத்துக் கொண்ட ஆனந்தன்..

“என்னால் முடியலைன்னா நீங்க களம் இறங்குங்க.. நான் இருக்கிறப்ப நீங்க உங்க லெவலை விட்டு இறங்கி சிலம்பாட்டப் போட்டிக்குப் போகக் கூடாது..” என்றான்..

நீலகண்டனின் விழிகள் விரிந்தன.. பெற்ற மகனைப் போல அவரின் சார்பாக களம் இறங்கியவனைப் பார்த்தவருக்குள் பிரியம் பெருகியது.. ஆனந்தன் சிலம்பத்தைச் சுழற்றியபடி மைதானத்தில் குதித்தான்.. கீதாவுக்குப் பயத்தில் மூச்சுத் திணறியது..

சுகுமாறனும் அங்கேதான் இருந்தான்.. எவனுக்கு வந்த அறை கூவலோ என்பதைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை நீலகண்டனும் பார்த்தார்.. அவர் விழிகள் வெறுப்பை உமிழ்ந்தன..

“மதுரை வீரன்தானே.. அவனை உசுப்பி விட்டே வீணே..

இனி விசிலு பறக்கும் தானே..

என் பேராண்டி மதுரை வீரன்தானே..”

கூட்டத்திலிருந்த அன்பழகனின் பாட்டி சத்தமாக பாட ஆரம்பிக்க போட்டி களை கட்டியது..

0Shares

Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link