Chapter 04

0Shares

பழமையில் பாரம்பர்யப் பெருமை குறையாத கட்டிடங்கள் விளக்குகளின் ஒளிச் சிதறல்களுடன் கண்சிமிட்டி நந்தகுமாரை மயக்கின.. இரவுப் பொழுதில் நகரின் அழகு பன்மடங்குக் கூடித் தெரிவதைப் போல உணர்ந்த நந்தகுமார்..

“மைசூர் என்னை மயக்குதுடா..” என்றான்..

“இதுல மயங்கி என்னத்தைச் செய்யப் போற..? எதிர் பிளாட் ப்ரீத்தி.. ப்ர்ஸ்ட் ப்ளோர் ஜென்ஸின்னு அபார்ட்மெண்டில என்னைப் பார்த்து மயங்கற டீன் ஏஜ் கேர்ள்ஸ் எத்தனை பேர் தெரியுமா..?”

“மயக்க மருந்தை அவங்க மூஞ்சி மேல ஸ்பிரே பண்றியா..?”

“இப்பத்தாண்டா நீ பழைய நந்து..”

“அதுசரி.. பக்கத்து பிளாட்டில இருக்கிற லேடி ஏன் உன்னைப் பார்த்ததும் அப்படி முறைக்குது..?”

“அதையேண்டா கேட்கிற.. அந்தம்மாவோட மகன் என்னைப் பார்த்து.. ‘அங்கிள்’ன்னு கூப்பிட்டுட்டாண்டா..”

“அதுக்கு நீ சண்டை போட்டுட்டியா..?”

“இல்லடா.. பக்கத்து பிளாட்காரங்களோட எதுக்கு வம்புன்னு கண்டுக்காம விட்டுட்டேன்..”

“அதில்லைன்னா வேற என்ன கோபமாம்..?”

“அதை நான் ஆண்ட்டின்னு கூப்பிட்டுட்டேனாம்டா.. அதுக்குத்தான் இம்புட்டுக் காண்டு..”

“ஹா.. ஹா..”

நந்தகுமார் சிரிப்பதைப் பரிவுடன் பார்த்தான் அர்ஜூன்.. 

நந்தகுமார் இருக்குமிடத்தில் சிரிப்பும், கலகலப்பும் கொட்டிக் கிடக்கும்.. உரத்த குரலில் சிரித்து.. நண்பர்களைக் கலாட்டா செய்து.. உற்சாக ஹீரோவாக கல்லூரியையே கலக்கிய அந்த நந்தகுமார் எங்கே போனான்..?

அர்ஜூனின் இதயம் வலித்தது.. அவன் மனம் கல்லூரிக் காலத்திற்குப் பயணித்தது.. எந்த மாணவனின் மனதில்தான் கல்லூரிக் காலங்களின் வசந்த நினைவுகள் இல்லாமல் இருக்கின்றன..? அனைத்து மாணவர்களின் பொற்காலமும் கல்லூரி காலம்தானே.. இன்பமோ.. துன்பமோ.. சிறகு முளைத்துத் தனித்துப் பறக்கும் இளமைப் பருவத்தின் துவக்கம் என்பது மறக்க முடியாத ஓர் காலகட்டம்..

நந்தகுமார் கல்லூரியின் கதாநாயகன்.. முதல் வருட இறுதிக்குள் கல்லூரியின் ‘சிய்யான்..’ ஆக மாறி.. மாணவ, மாணவிகளின் மனதில் இடத்தைப் பிடித்து அதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவன்.. அவனை ‘ராகிங்’ பண்ண நினைத்த சீனியர் கூட்டத்திற்கு விரல் சொடுக்கி சவாலுக்கு அழைத்த தீரன்… அடுத்த வந்த மாணவர் தேர்தலில் அரசியல் பின்புலம் கொண்ட இறுதியாண்டு மாணவனைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடியவன்..

தலைமைப் பொறுப்பு அவனைத் தேடி வந்தது.. கல்லூரியின் கிரிக்கெட் டீமிற்குத் தலைவன்.. மாணவர் தேர்தலில் ஜந்தாண்டுகளும் அசைக்க முடியாத தலைவன்.. கல்லூரியின் மாணவர்களின் மன மகிழ் மன்றத்திற்குத் தலைவன்.. ஆண்டுதோறும் நடக்கும் ஆண்டு விழாவை ஒருங்கிணைக்கும் மாணவர் கமிட்டிக்குத் தலைவன்..

இப்படித் தலைவன், தலைவன் என்று அனைத்து மாணவர்களாலும் கொண்டாடப்பட்டுத் “தல” என்று சுருக்கமாக அழைக்கப்பட்டவன்.. அவனுடைய கம்பீரமான தோற்றத்திலும், எவருக்கும் அஞ்சாத ஆளுமையிலும், கல்லூரியின் கதாநாயகன் என்ற ஸ்டார் இமேஜிலும் ஈர்க்கப்பட்டப் பெண்கள் பலர் அவனிடம் காதல் வயப்பட்டு, அதை அவனது காதுகளுக்குக் கொண்டு சென்றதும் உண்டு.. எவரிடமும் அவன் மயங்கியதில்லை.. எவர் மீதும் அவனுக்குக் காதல் வரவில்லை.. தனது மறுப்பை நாசுக்காக.. அதே சமயம் கண்டிப்பாகச் சொல்லி விட்டு அவர்களை விலக்கி நிறுத்தி விடுவான்..

அப்படிக் காதல் சொல்லி விலக்கி நிறுத்தப் பட்டவள்தான் ‘கோபிகா..’ நந்தகுமார், அர்ஜூனுடன் ஒரே வகுப்பில் படித்தவள்.. முதலாம் ஆண்டு நந்தகுமாரைச் சுற்றிச் சுற்றி வந்தாள்.. இரண்டாம் ஆண்டு காதல் சொன்னாள்.. நந்தகுமாரின் மறுப்பில் முகம் கருத்தாலும் சட்டென சமாளித்துக் கொண்டு சிரித்தாள்..

“ஓகே.. லீவ் இட்.. காதலை மறந்து விடலாம்.. உன் பிரண்ட்ஷிப்பைத் தரலாம்தானே..”

தன்மையாகக் கேட்டவளின் நட்பை எப்படி மறுப்பது..? நந்தகுமார் அவள் நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கினான்.. அதுதான் அவன் செய்த தப்பு..!

கோபிகா அவனிடம் தோழியைப் போலப் பழகினாலும் வெளியே அவளுக்கும், நந்தகுமாருக்கும் இடையில் இருப்பது நட்பைத் தாண்டிய காதல் என்று பரப்பி விட்டாள்.. காதலை மறுத்தாலும் அந்தக் கோபமின்றி தோழியாகப் பழகுகிறாளே என்ற இரக்க உணர்வில் நந்தகுமார் அவளுக்குக் கொடுத்த பிரத்யேக சலுகைகள் கோபிகாவின் வார்த்தைகள் உண்மைதானோ என்ற ஐயத்தை மற்ற மாணவ, மாணவிகளின் மனதில் விதைத்தது.. தனக்குச் சாதகமாக அந்த ஐயத்தைப் பயன்படுத்திக் கொண்டாள் கோபிகா.. எப்போது பார்த்தாலும் நந்தகுமார் இருக்கும் இடத்திலேயே இருப்பாள்.. அர்ஜூனுக்கு எரிச்சல் வரும்.. கோபப்படுவான்..

“ச்சை..! ஒரு பிரைவசிங்கிறதே இல்லாமப் போச்சு.. பத்து நிமிசம் தனியாப் பேச முடியுதாடா..?”

நந்தகுமார் சங்கடப்படுவான்.. அர்ஜூன் கோபிகாவின் முன்னிலையில்தான் கத்துகிறான்.. இங்கிதம் தெரிந்தவளென்றால் நந்தகுமாருக்குப் பதில் கோபிகாவல்லவா சங்கடப்பட்டு விலகிச் செல்ல வேண்டும்..? அவள் அப்படிச் செய்ய மாட்டாள்.. அர்ஜூன் யாரையோ திட்டுவதைப் போல முகத்தை குழந்தைத்தனமாக வைத்துக் கொண்டு..

“இந்த சேப்டர் புரியல நந்து.. சொல்லிக் குடேன்..” என்று கொஞ்சுவாள்..

அர்ஜூன் தலையில் அடித்துக் கொண்டு போய் விடுவான்.. இரவில் ஹாஸ்டல் ரூமில் கொந்தளிப்பவனை..

“பாவம்டா அவ.. இன்னொஸென்ட்..” என்று சமாதானப் படுத்துவான் நந்தகுமார்..

“அவளா.. ‘பப்பா..?’ சும்மாயிருடா நந்து.. நான் ஏதாச்சும் சொல்லிறப் போறேன்..”

நந்தகுமாருக்கும் அது தெரிந்துதான் இருந்தது.. கோபிகா ஒன்றும் குழந்தையல்ல.. அவள் குழந்தைத்தனத்துடன் பழகுகிறாள் என்று நம்ப நந்தகுமார் ஒன்றும் ஏமாளியல்ல.. அவனுக்குத் தெரியாததா..?

“டேய்.. லவ்வை சொன்னவகிட்ட இந்த எண்ணத்துடன் என்னுடன் பழகாதேன்னு மூஞ்சியில அடிச்சதைப் போலச் சொல்லிட்டேன் மத்த பொண்ணுக மாதிரி ஒதுங்கிப் போகாம.. ஃபிரண்ட்லியாப் பழகலாம்ன்னு கை நீட்டறா.. நீட்டற கையைத் தட்டி விட்டுப் போகச் சொல்றியா..?”

“பட்.. அவ டேன்ஜரஸ்டா மச்சி.. என் மனசில பட்ஷி சொல்லுது..”

“ஐ நோ அர்ஜூன்.. என்னைமீறி அவளாலே என்னை என்ன செய்து விட முடியும்..?”

அலட்சியமாக தோள்களைக் குலுக்கினான் நந்தகுமார்.. அவளால் செய்து விடமுடிந்தது.. அதை உணர்ந்து கொண்டவன் அவளைக் கொன்று விடும் வெறியோடு தேடிப் போனபோது அவன் கைகளில் சிக்காமல் அவள் பறந்து விட்டாள்..

“பட்ஷி பறந்துருச்சு அர்ஜூன்..”

“இத்தனை சீக்கிரமா அவ எஸ்கேப் ஆகியிருக்கான்னா.. பக்காவா பிளான் பண்ணிக் களத்தில இறங்கியிருக்காடா நந்து.. ஐ திங்க். இவ தனியாளா ஸ்கெட்ச் போட்டிருக்க முடியாது.. பின்னாடி எவனோ இருக்கான்..”

“இவ ஊருக்கே ஸ்கெட்ச் போட்டுத் தூக்குவாடா..”

“இப்போ அப்படியில்லன்னு தோணுதுடா..”

அவன் எவன் என்று நந்தகுமாருக்குத் தெரியும்.. அர்ஜூனிடம் சொல்லாமல் மௌனமானான்..

“உனக்கும் அவளுக்கும் லவ்வுன்னு காலேஜ் முழுக்க அவ பரப்பினப்பவே லெப்ட் அண்ட் ரைட் கொடுத்திருக்கணும்டா நந்து..”

“என் காதுக்கு வந்தப்போ மைக் போட்டுச் சொன்னேனா இல்லையா..? அதை விடப் பெரிய அசிங்கம் இருக்கா..?”

“அவளுக்கு ஏதுடா அசிங்கம்..? துடைத்து விட்டுப் போயிருவா.. சண்டாளி..! நீ மைக்கில் அவ சொல்வது உண்மையில்லைன்னு அனௌன்ஸ் பண்ணியும் பிரயோசன மில்லாமல் ஆகிருச்சே..”

ஏன் பிரயோசனமில்லாமல் ஆனது..?

நம்பிக்கை..! அது இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் போனது.. இருக்க வேண்டியவர் மீது இல்லாமல் போனது.. நம்பிக்கையற்றுப் போனால் அனைத்து உறவுகளும் இற்றுத்தானே விழும்..?

நந்தகுமார் போன்ற தீரனின் மீது பல பெண்களுக்கு காதல் வரும்.. ஆதர்சம் வரும்.. சிலர் கிட்டாவிடின் வெட்டென மற என்று விலகிச் சென்று விடுவார்கள்.. சிலர் அது கிட்டியது போன்ற பிரமையில் உழல்வார்கள்.. இன்னும் சிலரோ பசுத்தோல் போர்த்திய புலிகளாய் பழிவாங்கும் படலத்தில் இறங்கி விடுவார்கள்..

இதை உணர்ந்தவர் எவர்..?

0Shares

Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link