Chapter 06

0Shares

அன்னபூரணியென அர்ஜூனால் உபாசிக்கப்பட்ட ஈஸ்வரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தன.. அவளும் அந்த அபார்ட்மெண்டில் ஆறு பிளாட்களில் அஷ்டாவதனி வேலை பார்க்கிறாள்.. எந்த பிளாட்டிலும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டதில்லை.. அவளறிந்த வரை அந்த பிளாட்டில் அர்ஜூன் எனப்படும் அப்பாவி ஒருவன் இருந்தான்.. நேற்று ஒருநாள் லீவ் போட்டாள்.. இன்று வந்து பார்த்தால் எவனோ ஒரு படுபாவி கதவைத் திறந்து அவளைத் திருட வந்தவளைக் கேள்வி கேட்பதைப் போலக் கேள்வி கேட்டு விட்டானே.. ஒரு நாளுக்குள் உலகமே மாறி விடுமா என்ன..?

“யாரும்மா.. நீங்க..?”

அர்ஜூன்தான் கதவைத் திறந்திருக்கிறான் என்ற எண்ணத்தில் சுவாதீனமாக உள்ளே நுழையப் போனவளைத் தடுத்து நிறுத்தி நிமிர்ந்து பார்க்க வைத்தது இந்தக் கேள்வி..

‘இது யாரு..?’

பிளாட் மாறி வந்து விட்டோமோ என்ற குழப்பத்துடன் அவள் கதவின் எண்ணை சரி பார்த்தாள்.. அப்படியே பிளாட் மாறி வந்திருந்தாலும் பத்து வருடங்களாக அந்த அபார்ட்மெண்டில் குப்பை கொட்டுகிறவளுக்கு.. எந்தப் பிளாட்டில் யார் குடியிருக்கிறார்கள் என்று தெரியாமல் போய் விடுமா..?

திருதிருவென அவள் விழிக்க.. நந்தகுமார் சந்தேகத்துடன் அவளை ஏற இறங்கப் பார்த்தான்..

“என்னம்மா.. நீ பாட்டுக்கு வீட்டுக்குள்ள வரப் பார்க்கற..? ஏதாச்சும் கதை சொல்லி எதையாச்சும் அபேஸ் பண்ணப் பிளான் போடறாப்பல தெரியுதே..”

நந்தகுமாரின் கேள்வியில் ஈஸ்வரிக்குப் புசுபுசுவெனக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.. அவளைப் பார்த்தால் அவனுக்கு எப்படித் தெரிகின்றது என்ற கொதிப்புடன்..

“எப்படித் தெரியுது..?” என்றாள் அவள்..

“அதான்.. ஆளைப் பார்த்தாலே தெரியுதே..” என்றான் இவன்..

“தெரியும் தெரியும்..”

“தெரியப் போய்த்தானே கேட்கிறேன்..”

“யோவ்.. நான் வாயைத் திறந்தா நல்லா நல்லாக் கேட்டிருவேன்.. அர்ஜூன் ஐயா முகத்துக்காக பார்க்கிறேன்..”

“அர்ஜூனை உனக்குத் தெரியுமா..?”

“அவருக்கும் என்னைத் தெரியும்ய்யா..”

“அதை நீ சொல்லக் கூடாது..”

“வேற யாருய்யா சொல்லனும்..?”

“அர்ஜூன் சொல்லனும்..”

“அப்ப அவரைக் கூப்பிட்டுக் கேளு.. வாசலிலே நிறுத்தி வைச்சுப் பேச்ச வளர்க்காதே.. எனக்கென்ன இந்த ஒரு வீடுதான்னு நினைச்சியா..?”

“வேற வீடுகளிலயும் உன் கைவரிசையை காட்டலாம்ன்னு பிளான் பண்ணியிருக்கியா..?”

“ஆமாய்யா.. ஆமாம்.. என் கைவரிசையைப் பத்தி உனக்கு என்ன தெரியும்..? அர்ஜூன் ஐயாவுக்குத்தான் அது தெரியும்..”

“இரு.. அவனைக் கேட்டுட்டு வந்து உனக்கு கச்சேரி வாசிக்கறேன்..”

“நான் திருவிழாவே காட்டறேன்.. போ.. போ..”

இப்படித்தானே ஈஸ்வரியுடன் பானிபட் யுத்தம் புரிந்து வாசலில் தேக்கி வைத்துவிட்டு.. அர்ஜூனிடம் அறைகூவல் விடச் சென்றான் நந்தகுமார்.. அலறியடித்து அர்ஜூன் ஓடி வந்தால்.. ஈஸ்வரி சிரித்த முகமாகவா அவனை எதிர்கொள்வாள்..?

“என்ன சார்.. இது சன்னாகிதே..?” என்று படபடத்தாள்..

“நல்லா இல்லைதான்.. ஆனா பாருங்க ஈஸ்வரியம்மா.. இவன் என் நண்பன்..”

“அதி நனகே பேடா சார்..”

“உங்களுக்கு வேண்டாம்தான்.. எனக்கு இவன் வேணுமே.. மைசூரில் வேலை பார்க்க வந்திருக்கான்.. என்னோடுதான் தங்கப் போறான்.. பிளாட் வாடகையை ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கிறதாப் பிளான்.. நீங்க தயவு பண்ணனும்..”

“நா ஊரு சென்னை.. சாப்பாட்டுக்கு கஷ்டம்ன்னு நீனு மாட்டாடுத்து.. அதுக்காக நானு இல்லி சமையல் செய்ய ஒப்புக்கிட்டேன்.. அதிக்கு இதிதான் பரிசா..? இதி நனக்கே பேக்கு..”

“நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.. எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்ன்னு நீங்க அலுத்துக்கிறதைப் போல எதுவும் ஆகிறலை.. இவன் பார்க்கத்தான் முரடன்.. பழகப் பழக நல்லவன்னு நீங்களே சொல்லுவீங்க..”

நந்தகுமார் அவளை ஏற இறங்கப் பார்த்ததைப் போல ஈஸ்வரி நந்தகுமாரை பார்வையிட்டு விட்டு..

“நனக்கு கொத்தில்லா..” என்றாள்..

“இப்பவே எப்படித் தெரியும் ஈஸ்வரியம்மா..? போகப் போகத்தான் தெரியும்.. இந்த பூவின் வாசம் புரியும்..”

“ஏனு..?”

“ஒன்னுமில்ல.. நீங்க செந்தமிழிலேயே சிந்து பாடுங்க.. அப்பத்தான் எனக்குப் புரியும்..”

“இவரிக்கி..?”

“இவன் உங்களுக்கே கன்னடம் கத்துக் கொடுப்பான்.. பன் மொழிப் பயிற்சியாளன்..”

“ஓஹோ..”

நந்தகுமாருக்குக் கன்னடம் தெரியும் என்பதில் ஈஸ்வரி பெருத்த யோசனையுடன் சமையலறைக்குள் போனாள்..

“எனக்குக் கன்னடம் தெரியறதில இந்தம்மாவுக்கு என்னடா பிரச்னை..?” அர்ஜூனை அதட்டினான் நந்தகுமார்..

“ஊம்.. உன்னை முன்னாடி வைத்துக்கிட்டேக் கன்னடத்தில் திட்டித் தீர்க்கலாம்ன்னு நினைச்சிருப்பாங்க.. அது முடியாம போயிட்டதில அடுத்த திட்டத்தை யோசிப்பாங்களா இருக்கும்..” என்று பல்லைக் கடித்தான் அர்ஜூன்..

“அந்தம்மாவுக்கு அந்த ஐடியா இல்லைன்னாலும் நீ சொல்லிக் குடுப்பியே..”

“என் மனசைப் புரிஞ்சு வைச்சிருக்கிற நண்பேன்டா நீ..”

“அப்ப.. இந்தம்மாதான் சமைக்கும்ங்கிற..”

“இந்தப் பிளாட்டோட ஆல் இன் ஆல் அன்னபூரணியே இவங்கதான்ங்கிறேன்.. இப்ப என்னாங்கிற..?”

“எனக்கு இந்த அம்மாவைப் பிடிக்கலை..”

“ஏன்னு நான் கேட்க மாட்டேன்.. அவங்க சிகப்புச் சேலைக் கட்டிக்கிட்டு வந்திருக்காங்க.. அதனால பிடிக்கலைன்னு எனக்கு ஹார்ட் அட்டாக்கை வர வைப்ப.. போ ராஜா.. போயி குளிச்சுட்டு உன் புதுவேலையை ஏத்துக்கக் கிளம்பற வழியைப் பாருடி கண்ணு.. ஹோம் டிபார்ட்மெண்டில எல்லாம் நீ தலையிடாதே..”

“ஏன்.. ஏன்.. ஏன்..?”

“எதுக்கு இத்தனை ஏன்..? நான் ஹோம் மினிஸ்டர்ன்னு வைத்துக்கயேன்.. அதனால ஹோம் டிபார்ட்மெண்டில நான் வைத்ததுதான் சட்டம்..”

“நீ ஹோம் மினிஸ்டர்ன்னா.. நான் யாருடா..?”

“டிபன்ஸ் மினிஸ்டர்.. எப்பப் பாரு.. துப்பாக்கியைத் தூக்கப் போறவனைப் போல பரபரன்னே இருக்க.. உனக்கு அந்தப் போஸ்ட்தான் லாயக்கு..”

நந்தகுமார் செவ்வரி ஓடிய கண்களுடன் ஈஸ்வரியை முறைக்க.. அவள் அடுப்பை அணைத்துவிட்டு கிளம்ப ஆயத்தமானாள்.. குய்யோ, முறையோ என அலறிக்கொண்டு அர்ஜூன் காதைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடாத குறையாக ஈஸ்வரியை சமாதானப் படுத்தி விட்டு நந்தகுமாரனின் முதுகைப் பிடித்து உந்தி.. குளியலறைக்குள் தள்ளி விட்டான்.. குளித்து முடித்து உடை மாற்றி வந்த நந்தகுமார் அலுவலகம் கிளம்பத் தேவையானவற்றை வார் வைத்தத் தோள் பையில் எடுத்து வைத்துக் கொண்டான்..

“நந்து ரெடியா..?” அர்ஜூன் குரல் கொடுத்தான்..

“ம்ம்ம்..” நந்தகுமார் பையைத் தோளில் மாட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்..

படு டீசன்டாக இருந்தவனை ஈஸ்வரி பார்த்த பார்வை.. ‘தேவலையே..’ என்றது.. பதிலுக்கு முறைத்த நந்தகுமாரின் பார்வை.. ‘உன்னைக் கேட்டேனா..?’ என்றது..

‘எதுக்கு வம்பு..’ ஈஸ்வரி முகத்தை திருப்பிக் கொண்டாள்..

‘அஃது..’ நந்தகுமார் சாப்பிட உட்கார்ந்தான்..

நந்தகுமாருடன் கிளம்பிய அர்ஜூன் அவன் சொன்ன இடத்தில் காரை நிறுத்தி நண்பனை இறக்கி விட்டு..

“பெஸ்ட் ஆஃப் லக்..” என்று கையாட்டி விட்டுப் போனான்..

பதிலுக்குத் தலையைக் கூட ஆட்டாமல் இறுக்கமான முகத்துடன் மிலிடிரி கம்மாண்டரைப் போல டக், டக் என நடந்து அந்தப் பலமாடிக் கட்டிடத்தின் தரைத்தளத்தின் கண்ணாடிக் கதவைத் திறந்து பிரவேசித்த நந்தகுமார், ரிசப்சனிஸ்டிடம்..

“வேர் இஸ் எம்.டி’ஸ் ரூம்..?” என்று வினவினான்..

“ஹீ ஆர் யு சார்..?”

“ஐ’ம் நந்தகுமார்.. நியு ஜாயினிங் சீஃப் என்ஜினியர்..”

“ப்ளீஸ் வெயிட்..”

ரிசப்சனிஸ்ட் போனை எடுத்து அனுமதி வாங்கிய பின் நந்தகுமாரிடம் கை காட்டினாள்..

“பர்ஸ்ட் ஃப்ளோரில் எம்.டியோட ரூம் இருக்கு.”

நன்றி சொல்லாமல் லிப்டில் புகுந்து முதல் தளத்தில் வெளிப்பட்டு எம்.டியின் அறைக்குள் போன நந்தகுமார் அதிர்ச்சியானான்..

‘இவளா.. எம்.டி..?’

0Shares

Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link