Chapter 08

0Shares

“யாருடி நீ..? தேவதை..! உன் அடையாளம் பணம் மட்டும்தானா..? எப்படிடீ உன்னால் இப்படி நினைக்க முடிந்தது..? எவளோ ஒருத்தி சொன்னால்.. உனக்கெங்கே போச்சு புத்தி..? உன்னிடம் மயங்கிப் போனேன்டி.. விடுபட முடியாத மயக்கம்.. ஆதி அந்தம் மறந்த மயக்கம்.. அன்னைக்கு விழுந்தவன் இன்னைக்கு வரைக்கும் எழுந்திருக்கவே இல்லைடி.. என்னைக்குமே எழுந்திருக்க மாட்டேன்.. அது தெரியுமாடி உனக்கு..? பேச வந்திட்டா..”

அவன் பேசித் தீர்த்தான்.. அவள் அழுது தீர்த்தாள்.. குளிர்ந்த நீரை அவன் நீட்ட மறுக்காமல் வாங்கிப் பருகினாள்.. முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவளின் கலங்கிச் சிவந்திருந்த முகத்தில் ஓர் பொழிவு வந்திருந்தது..

அது அவனைக் கண்டு விட்டதினால் வந்த பொழிவு என்பதை அவனும் அறிவான்.. அவளும் அறிவாள்..

“சொல்லுங்க.. எங்களுக்குத்தான் நீங்க யார்ன்னு தெரியாது.. உங்களுக்கு எங்களைத் தெரிந்திருக்கனுமே.. அப்படியிருந்தும் எப்படி இந்த போஸ்ட்டை ஏத்துக்கிட்டிங்க..?”

“திமிரா..? எனக்கு உன்னை மட்டும்தான் தெரியும்.. உன் பேக்ரவுண்ட் கூந்தல் இழையைப் பற்றித் துளியளவும் தெரியாதுன்னு சொன்னா நம்பனும்.. கிராஸ் கொஸ்டின் கேட்கக் கூடாது.. மைசூரில் ‘அனுராக்’ கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில இருந்து சீஃப் என்ஜினியர் போஸ்ட்டுக்கான கால் வந்தது.. ஓகே.. எத்தனையோ கம்பெனிகளைச் சுற்றிட்டோம்.. இந்த ஒன்றையும் சேர்த்துச் சுற்றி வைப்போம்ன்னு கிளம்பி வந்தேன்.. என்னைப் பொறுத்தவரை இந்தக் கம்பெனி, பத்தோடு பதினொன்று.. அத்தோடு இது ஒன்று கணக்குத்தான்.. அதிகபட்சம் ஆறுமாதம் இங்கே தாக்குப் பிடிப்பேன்னு நினைத்தேன்.. அதுவும் இந்த ஊரில அர்ஜூன் வேலை பார்க்கிறான்.. அவனுடன் சேர்ந்து கொஞ்ச நாள் இருக்கலாமேன்னுதான்.. உன் அப்பனும் நீயும் ரொம்பவும் மண்டைக்கனம் வைத்துக்காதீங்க.. இது உங்க கம்பெனின்னு தெரிந்திருந்தா…”

பதில் சொல்லாமல் அவன் நிறுத்த.. அவள் தூண்டினாள்.. 

“தெரிந்திருந்தா..?”

அவன் அவளை இமைக்காமல் பார்த்தான்.. காதலுடன் கவ்வும் அவனது கோபப்பார்வை அவளுக்கு சுகமான சோகத்தைத் தந்தது.. அவனை அவள் பிரிந்து வந்து விட்டாள் என்ற கனம் இருவர் இதயத்தையும் அழுத்தியது..

“சொல்லுங்க.. தெரிந்திருந்தா என்ன செய்திருப்பீங்க..? இங்கே வந்திருக்க மாட்டிங்கதானே..”

“வந்திருப்பேண்டி..”

கண்களில் நீர் வழியக் கேட்டவளின் முகத்தைத் தன் கையால் இறுக்கிப் பிடித்து உறுமினான் நந்தகுமார்..

“வந்திருப்பேன்.. நீயிருக்கும் இடம் தெரியாம பித்துப் பிடிச்சு அலைஞ்சவனுக்கு.. நீயிருக்கும் இடம் தெரிஞ்சாப் போதாதா..? விட்டு வைப்பேனா..? கட்டாயம் வந்திருப்பேன்.. ஏன்னா.. என் காதல்.. உண்மைக்காதல்..”

“என் காதலும் அப்படித்தான்..”

“ஹ..! இதை நீ சொல்லி நான் கேட்க வேண்டியிருக்கிறது பார்.. கொடுமைடி.. யமுனா நதியிங்கே.. ராதையின் முகம் இங்கே.. கண்ணன் போவதெங்கேன்னு பாட்டுப் பாடின ராதாதானேடி நீ.. இந்த நந்தகுமாரனின் ராதா..”

அவன் கேட்டுக் கொண்டிருந்த போதே அறைக்கதவு திறந்தது..

“வெறும் ராதா இல்லை.. அனுராதா..! இந்த ‘அனுராக்’ கண்ஸ்ட்ரக்சன் கம்பெனியின் எம்.டி..” என்ற கனத்த குரலுடன் கம்பீரமாக உள்ளே வந்தார் பீம்சிங்..

நந்தகுமாரனின் முகம் இறுகியது… அவரை அவன் ஒருமுறைதான் சந்தித்திருக்கிறான்.. மறக்க முடியாத சந்திப்பு அது.. அதன்பின்தான் நந்தகுமாரனும் அனுராதாவும் ஆளுக்கொரு திசையில் பிரிந்து பறந்தார்கள்..

“வெல்கம் மிஸ்டர் நந்தகுமார்.. ராதா ‘நந்து.. நந்து..’ன்னு சொல்லுவாளா..? உங்க ஃபுல் நேம் எனக்கு மறந்து விட்டது.. அதனால்தான் கிஷோர் சொன்னதும்.. யார், எவர்ன்னு விசாரிக்காம அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை அனுப்பினேன்..”

பீம்சிங்கின் பேச்சிலிருந்த ‘உள்குத்து’ நந்தகுமாரை பாதித்தது.. அவன் யாரென்று தெரிந்திருந்தால் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை மெயில் பண்ணியிருக்க மாட்டாராம்..

“நான் உங்களிடம் வேலை கேட்கலை சார்.. எனக்கான ஆஃபர் பற்றி உங்களுக்குத் தெரியாது.. கிஷோர் சார் இந்தக் கம்பெனியில் நான் வேலைக்குச் சேரனும்னு கேட்டுக்கிட்டார்.. ஜாயின் பண்ணலாம்.. பிடித்திருந்தால் கண்டினியு பண்ணலாம் என்கிற நினைவோடுதான் வந்தேன்..”

“ஓ..! வொண்டர் ஃபுல்.. ஐ திங்க்.. உங்களுக்கு இங்கே வேலை செய்யப் பிடிக்காது..”

“என்னோட பிடித்தத்தைப் பற்றி நீங்க திங்க் முடிவு பண்ண முடியாது சார்.. எனக்கு எது பிடிக்கும்ன்னு நான்தான் முடிவு செய்யனும்..”

இதைச் சொல்லியபடியே நந்தகுமார் அனுராதாவை உன்னிப்பாக பார்த்து வைத்தான்.. அதை எதிர்பார்த்திராத அனுராதா, தந்தையும் அங்கே நிற்கிறார் என்பதை மறந்து போனவளாக தடுமாறினாள்.. அவளது முகம் சிவந்ததில் நந்தகுமாரின் முகம் கனிந்தது.. அவர்கள் இருவரின் முகம் கண்ட பீம்சிங்கின் முகம் கடுத்தது..

“பட்.. உங்க வொர்க் எங்களுக்குப் பிடிக்கனுமே நந்தகுமார்..”

“நீங்க எங்க கம்பெனியில வொர்க் பண்ணனும்னு நாங்க விரும்புகிறோம்ன்னு மெயில் பண்ணியது நீங்கதானே சார்.. விரும்புகிறோம் என்பதற்கு மீனிங் பிடித்தம்தானே..?”

அமர்த்தலாக நந்தகுமார் வினவினான்.. பதில் சொல்ல முடியாமல் பீம்சிங் திணறிப் போனார்.. எதையோ நினைக்க எதுவோ நடந்து கொண்டிருப்பதில் அவருக்குப் பூமி சுழல்வதைப் போல இருந்தது.. இந்த நந்தகுமாரிடமிருந்து அனுராதாவைப் பிரிக்க எத்தனை சூழ்ச்சிகளைச் செய்திருப்பார்.. அவரது உயரத்திலிருந்து இறங்கி.. மூன்றாம் தர வில்லன்களைப் போல நடந்து கொள்ள வேண்டியிருந்ததே.. எப்படியாவது மகளை மீட்டு விடவேண்டும் என்று இரவு பகலாக திட்டம் தீட்டி அனுராதாவைக் காதலில் தோற்க வைத்து மைசூருக்கு அழைத்து வந்தாரே.. அவளுக்கென்று கம்பெனியை ஆரம்பித்துக் கொடுத்து அவளது காதல் நினைவுகளை மறக்க வைக்க முயன்றாரே.. இத்தனை பாடுபட்டவர்.. எங்கேயோ தொலைந்து போன அவளது காதலனைத் தேடிப் பிடித்து வேலை கொடுத்து மகளின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தித் தொலைத்து விட்டாரே..

‘இதற்காகவா அந்தப் பாடு பட்டேன்..’

ஏஸி அறையிலும் பீம்சிங்கின் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின.. இனி முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமா என்ற ஆயாசம் உண்டானது.. தீராத தலை வேதனையை அவரே இழுத்து விட்டுக் கொண்டாரே என்ற கவலையில் நெஞ்சை வலிப்பதைப் போல இருந்தத.. என்ன செய்து நந்தகுமாரை விரட்டுவார்..?

“கிஷோர்.. அனுராதாவின் கம்பெனியில் வொர்க் பண்ண எக்ஸ்பர்ட்டான சீஃப் என்ஜினியர் வேண்டும்.. அவளுக்குப் புதிதாய் சில புராஜெக்ட்கள் கிடைத்திருக்கின்றன.. ஃபாரின் முதலீடுடன் கூடிய நட்சத்திர ஹோட்டல் மற்றும் சில ஐ.டி கம்பெனிகளுக்கான பலமாடிக் கட்டிடங்களைக் கட்டித்தர வேண்டும்.. இவள் கட்டித் தரும் கட்டிடங்கள் மற்ற கண்ஸ்ட்ரக்சன் கம்பெனிகள் கட்டித் தந்திருக்கும் கட்டிடங்களை விட அழகிலும், நவீனத்திலும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள்.. தொழிலில் அவள் காட்டும் ஆர்வம் எனக்கு நிம்மதியை அளிக்கிறது.. வெகு திறமையான சிவில் என்ஜினியர் கிடைத்து விட்டால் அவள் நினைத்ததை சாதித்துக் காட்டி விடுவாள்.. அப்படி யாரேனும் இருந்தால் சொல்..”

அவர்தான் கேட்டார்.. கிஷோர் குமாரிடம் வேண்டுகோள் வைத்தார்.. இதுதான் சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது என்பதோ.. இருந்திருந்து இப்போதுதான் அனுராதா பழைய நினைவுகளிலிருந்து மெதுமெதுவாக விடுபட ஆரம்பித்திருக்கிறாள்.. காதலை மறக்கக் கம்பெனியின் வேலைகளில் தன்னை அமிழ்த்திக் கொண்டிருப்பவளிடம் காதலனைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டாரே..

கிஷோர் குமாரின் மீது யாதொரு குற்றமும் இல்லை.. அவருக்கு நந்தகுமாரின் தொழில் திறமையின் மீது மிகுந்த மதிப்பு உண்டு.. அவன் மனது அலை பாய்வதை அறிந்து வைத்திருப்பவர்.. ஓரிடத்தில் நிலைத்து நிற்காமல் சுற்றி வருபவனைத் தங்களின் கம்பெனியில் பிடித்து வைத்துக் கொள்ளப் பெரிய பெரிய கண்ஸ்ட்ரக்சன் கம்பெனிகள் எல்லாம் போட்டி போடுவதை தெரிந்து வைத்திருப்பவர்.. அவருக்கு என்ன தெரியும்..? அவரது நெருங்கிய நண்பரான பீம்சிங்கின் மகள் அனுராதாவை மறக்க முடியாமல்தான் நந்தகுமார் பித்துப் பிடித்து அலைகிறான் என்பது..?

0Shares

Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link