Chapter 09
கிஷோர் குமாருக்கு நந்தகுமாரின் மீது தனி வாஞ்சை உண்டு.. மகனைப் போல அவனை நேசிப்பவர்.. அவருக்கு ஒரேயொரு மகள்தான்.. திருமணமாகிக் கணவனுடன் அமெரிக்காவில் வசிக்கிறாள்.. தனக்கொரு மகன் இருந்திருந்தால் நந்தகுமாரைப் போலதான் இருந்திருப்பான் என்று அடிக்கடி சொல்லுவார்.. அவருடைய மனைவி அதை ஆமோதிப்பாள்.. பீம்சிங்கிடமிருந்து போன் வந்தபோது நந்தகுமார் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.. அதை கிஷோர் குமாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
“கியா பேட்டா..? ஏன் உன் வேலையை ரிசைன் பண்ணுகிறாய்..? சேலரி போதவில்லையா..?” என்று விசாரித்தார்..
“இந்தக் கேள்வியை எம்.டியும் கேட்டார் சார்.. எவ்வளவு கேட்டாலும் ரெய்ஸ் பண்ணித் தருகிறோம் என்று சொன்னார்..”
“அப்புறம் என்ன..? வேண்டியதைக் கேட்க வேண்டியதுதானே..? இந்தக் கம்பெனியில் நீ வேலையைக் கண்டினியூ பண்ணுவது உன் எதிர்காலத்திற்கு நல்லது நந்தகுமார்..”
“என் எதிர்காலம் எதுன்னே எனக்குத் தெரியலை சார்..”
இப்படிச் சொன்னவனை கூர்ந்து பார்த்தார் கிஷோர்குமார்.. வேதனைகளை வெளிக்காட்டாமல் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் அந்த முரடனின் மீது அவருக்குள் பரிவு சுரந்தது.. இருகரம் நீட்டி அவனை அணைத்து.. முடிகோதி.. உன் மனதில் தைத்திருக்கும் முள் எது என்று கேட்டு அதை அகற்ற முடிந்தால் நன்றாக இருக்கும்.. அதை அவன் விரும்ப மாட்டானே.. சில தருணங்களில் பாசத்தில் நனைவது கூட பலவீனமானதாக ஆகிவிடுகிறது..
“வாட்’ஸ் யுவர் பிராப்ளம் மை டியர் சன்..?”
“எனக்கு நானேதான் பிராப்ளம் சார்..”
அலைபாயும் விழிகள் அவன் ஓரிடத்தில் தங்காமல் தேசாந்திரியாக அலைவதற்கான காரணத்தை ஒளித்து வைத்திருந்தன.. அவன் சொல்ல விரும்பாத சோகத்தைத் தூண்டித் துருவிக் கேள்வி கேட்பது அநாகரிகமாகும் என்பதினால் மௌனப் பெருமூச்சு விட்டார் கிஷோர்குமார்.. கிளம்ப நினைத்து விட்டவனைத் தடுத்து நிறுத்த முடியாது.. அது அத்தனை எளிதல்ல.. நந்தகுமார் புயல்.. ஒரிடத்தில் நிற்காமல்.. சுற்றிக் கொண்டிருக்கும் சூறாவளி..
“உன் மனதில் இருக்கிற கற்பனைகள் கட்டிடங்களாக மாறிக் காண்பவரை வியக்க வைக்கின்றன மகனே..! உனக்கு நீயே பிரச்னையா..?” ஆங்கிலத்தில் உருகினார் கிஷோர்..
வெறுமையாகப் புன்னகைத்தான் நந்தகுமார்… கலப்படமில்லாத தந்தை பாசத்தைக் காட்டும் கிஷோர்குமாரின் பாசத்தைப் புறக்கணித்து விலகிச் செல்ல அவனுக்கும் கிரமமாகத்தான் இருந்தது.. என்ன செய்வது..? அவர் மட்டுமா அவனிடம் பாசம் காட்டுகிறார்..? அவனைப் பெற்றவர்களும்.. கூடப் பிறந்தவளும் அளவுக்கு அதிகமான பாசத்தை அவன்மீது வைத்திருக்கிறார்களே.. அந்தப் பாசத்தாலும் அவன் மன ரணத்தை ஆற்ற முடியவில்லையே.. இதோ.. வேலையை விட்டு விட்டேன் என்று அவர்கள் முன்னால் போய் நிற்கப் போகிறான்.. ஏன் விட்டாய் என்று ஒரு வார்த்தை அவர்கள் கேட்க மாட்டார்கள்.. மாறாக போட்டி போட்டுக் கொண்டு அவன் மீது பாசமழையைப் பொழிவார்கள்.. அவனுக்குப் பிடித்த உணவு.. பிடித்த பாடல்.. பிடித்தமான பேச்சு என்று அவனைச் சுற்றி வீடு இயங்கும்.. அவனால் அங்கும் இருக்க முடியாது.. தேடி வரும் வேலை எதையாவது ஒப்புக் கொண்டு வேலையில் சேர்ந்து விடுவான்..
“நீ இந்த வேலையை விட்டுச் செல்ல முடிவு எடுத்து விட்டாய்.. நான் தடுக்கவில்லை.. அதை நீ விரும்ப மாட்டாய்.. எனக்காக ஓர் உதவி செய்வாயா..?”
நந்தகுமாரால் மறுக்க முடியவில்லை.. எதிர்பார்ப்பில்லாமல் பொழியும் மழையைப் போன்றது அவரின் பாசம்.. அவர் கேட்டு அவன் மறுப்பதா..?
“சொல்லுங்கள் சார்.. செய்கிறேன்..” என்று சொல்லி விட்டான்.
“என் நண்பன் ஒருவன் மைசூரில் புதிதாக கண்ஸ்ட்ரக்சன் கம்பெனியை ஆரம்பித்திருக்கிறான்.. பெரிய அளவிலான புராஜெக்ட்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன.. அவற்றைச் சிறப்பாக அவன் கட்டிக் கொடுத்து விட்டால் அவனது கம்பெனிக்கு நல்ல பெயர் கிடைக்கும்.. திறமையான சீஃப் என்ஜினியர் வேண்டும் என்று கேட்கிறான்.. இஃப் யு ஹேவ் எனி அப்ஜெக்சன்.. நீ அந்த வேலையில் சேர முடியுமா..?”
“ஓகே சார்..”
“தேங்க்யு மைடியர் சன்.. அவனுக்குத் தகவல் சொல்லி விடுகிறேன்.. உன் மெயில் ஐடிக்கு அவன் கம்பெனியின் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வந்து விடும்..”
“இம்மீடியட்டா என்னால் வேலையில் ஜாயின் பண்ண முடியாது சார்..”
“உனக்கு எப்போது வசதிப்படுகிறதோ அப்போது ஜாயின் பண்ணிக் கொள்ளலாம்.. டேக் யுவர் ஓன் டைம்..”
அப்படி கிஷோர்குமாரின் வேண்டுகோளுக்காக அவன் மைசூருக்கு வந்து நின்றிருக்கிறான்.. பீம்சிங் என்னடாவென்றால் அவன் அவரிடம் வேலைக்காக தொங்கி நின்று வேண்டிப் பெற்றுக் கொண்டதைப் போல ஆணவம் காட்டுகிறாரே..
அவர் அனுராதாவின் அப்பாவாக இல்லாமல் இருந்திருந்தால்.. அனுராக் கண்ஸ்ட்ரக்சன் கம்பெனி, அனுராதாவின் கம்பெனியாக இல்லாமல் இருந்திருந்தால்.. நந்தகுமார் ஒர் நொடி கூட அங்கே நின்றிருக்க மாட்டான்.. போடா.. நீயுமாச்சு.. உன் வேலையுமாச்சு என்று தூக்கிப் போட்டு விட்டு போயிருப்பான்..
அப்படி இல்லையே.. அவனுக்குப் பிடிக்காத.. அவனைப் பிடிக்காத பீம்சிங் அனுராதாவின் அப்பாவாயிற்றே.. போனால் போகிறது.. கிஷோர் குமாரின் வார்த்தைக்காக இங்கேயும் சிலகாலம் வேலை பார்த்துத் தொலைக்கலாமே என்று விட்டேற்றியாக அவன் வந்து நிற்கும் கம்பெனி, அவனுடைய காதலியின் கம்பெனியாக இருக்கிறதே.. அவளை மறக்க முடியாமல், துரத்தும் நினைவுகளுடனும்.. அழைக்கும் கனவுகளுடனும்.. போராடிக் கொண்டிருப்பவன் அவளை விட்டுப் பிரிவானா..?
“மிஸ்டர் நந்தகுமார்.. கிஷோரிடம் நான் சொன்னபோது எங்க கம்பெனியில் திறமையான சீஃப் என்ஜினியர் இல்லை.. அதனால் தான் உங்களுக்கு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை அனுப்பினோம்.. நீங்கள் உடனடியாக வந்திருக்க வேண்டும்.. காலம் தாழ்ந்து வந்து விட்டிர்கள்..”
“அதனால்..?”
“வேறு ஒரு என்ஜினியரை வேலையில் சேர்த்து விட்டோம்..”
அனுராதாவின் திகைத்த முகமே பீம்சிங் கதை சொல்கிறார் என்பதை உணர்த்தியது.. எங்கே அவன் கிளம்பிப் போய் விடுவானோ என்ற பயம் அவளது கரு விழிகளில் சூழ்வதைக் கண்ட நந்தகுமார் சினம் கொண்டான்.. அழகான பெண்களின் அப்பன்கள் எல்லாமே ஏன் படு வில்லன்களாக இருக்கிறார்கள்.. காதலை வாழ்த்தி வாழ வைத்தால்தான் என்ன..?
“இதை அப்படியே கிஷோர் சாரிடம் சொல்ல முடியுமா சார்..” பவ்யம் போல முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் நந்தகுமார்.
அவனுக்குத் தெரியும்.. இதைக் கேட்டால் கிஷோர் குமார் பீம்சிங்கை சும்மா விட மாட்டார்.. பிடி, பிடியென பிடித்து விடுவார்.. பீம்சிங்குடனான நட்பைத் துண்டித்துக் கொள்வார்.. வாக்குத் தவறுவது அவருக்குப் பிடிக்காது.. அவர் சொன்ன சொல்லுக்காக வேலையை ஏற்றுக் கொள்ளப் போன நந்தகுமாரிடம் இந்த ரீதியில் பீம்சிங் பேசுகிறார் என்பதை அறிந்து விட்டால் ஓர்நாளும் அவர் பீம்சிங்கை மன்னிக்க மாட்டார்..
பீம்சிங்கின் முகம் வெளிறியது.. கிஷோர் குமார் அவரின் நீண்டகால நண்பர்.. மும்பையில் உள்ள பெயர் பெற்ற கண்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகளில் கிஷோர் குமாரின் கம்பெனியும் ஒன்று.. அவருடைய தம்பியின் கம்பெனியில் வேலை பார்த்தவன்தான் நந்தகுமார்.. தம்பியின் பாராட்டுதலில் அவனுடைய வேலைத் திறமையை கண்காணித்தவர்க்கு அவனது குண இயல்பை பிடித்துப் போய் விட்டது.. கிஷோர் குமாரை விரோதித்துக் கொள்வதினால் மும்பையில் உள்ள கண்ஸ்ட்ரக்சன் கம்பெனிகளின் மத்தியில் பீம்சிங்கின் பெயர் கெட்டு விடும்.. நேர்மையான கிஷோர் குமார் எதற்காக தன் நட்பை துண்டித்துக் கொண்டு நண்பரை விலக்கி வைத்தார் என்ற கேள்வி எழுந்து விடும்..
Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.