Chapter 10
“தூள்..” என்றான் அர்ஜூன்..
“அஃதே..” என்று தலையாட்டிய நந்தகுமாரை அதிசயமாகப் பார்த்தபடி சமையலறையில் பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தாள் ஈஸ்வரி..
சாந்த சொரூபியாய் இருந்த நந்தகுமாரை வேற்றுக் கிரகவாசியைப் போல அவள் வினோதமாக பார்த்து வைத்ததைக் கவனித்த நந்தகுமார் சிநேகிதமாக சிரித்து வைக்க.. ஈஸ்வரிக்கு மயக்கமே வந்து விட்டது..
“வேண்டாம்டா நந்து.. விட்டு விடு.. ஒரே நாளில இம்புட்டு மாற்றம்ன்னா உலகம் தாங்கும்.. நம்ம ஈஸ்வரியம்மா தாங்க மாட்டாங்க.. சிங்கத்துக்கும் சிரிக்கத் தெரியும்ன்னு அவங்க மெதுவாப் புரிஞ்சுக்கட்டும்.. ஒரேயடியாப் போட்டுத் தாக்காதே..”
“ஹா.. ஹா..”
“இப்பத்தானே அடக்கி வாசின்னு சொன்னேன்.. அடங்க மாட்டேங்கறியே.. ஈஸ்வரியம்மாவை ஒட்டி விடறதிலேயே குறியாய் இருக்கிற போல..”
‘சோ’ வென்று பெய்த மழையின் சாரல் பால்கனியின் கைபிடி விளிம்பில் பட்டுத் தெறித்து.. பால்கனியில் நாற்காலிகளைப் போட்டு உட்கார்ந்திருந்த நண்பர்களின் மீது நீர்த்துளிகளை அள்ளி வீசியது..
“ம்ஹா..” இமைகளை மூடி ரசித்து அனுபவித்தான் நந்தகுமார்.
இது இவன்தானா என்று அடையாளம் பார்ப்பதைப் போல அவன் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தபடி பஜ்ஜி தட்டுக்களை டீப்பாயில் வைத்து விட்டுப் போனாள் ஈஸ்வரி.. சூடான பஜ்ஜியை எடுத்துக் கடித்த நந்தகுமார்.. சமையலறையைப் பக்கம் திரும்பி.. பெருவிரலையும், நடுவிரலையும் இணைத்து வளையமாக்கி..
“ஈஸ்வரியம்மா.. பஜ்ஜி சூப்பர்..” என்று கத்தினான்..
ஈஸ்வரி இமைக்க மறந்து ‘ஆ’ வென வாய் பிளந்து அவனைப் பார்த்தாள்.. அவளது முகம் மலர்ந்து விட்டது.. தலையை ஆட்டி அவனது பாராட்டை ஏற்றுக் கொண்டவளைப் பார்த்த அர்ஜூன்..
“சூப்பர்டா மச்சி.. இது போல நான் ஓர்நாள் கூடப் பாராட்டியதில்லைடா..” என்றான்..
“கஞ்சன்டா நீ..”
“இன்னைக்குக் காலையில வரைக்கும் இந்த விசயத்தில நீயும் கஞ்சனாத்தான் இருந்த நண்பா.. மறந்துட்டியா..?”
தலையை ஆட்டி நண்பனின் கூற்றை ஏற்றுக் கொண்ட நந்தகுமார் சந்தோசமாக இருந்தான்.. குதூகலத்துடன் எழுந்து சென்று கொட்டும் மழைத் தாரையில் கை விட்டு நீரை சேகரித்து அர்ஜூனின் முகத்தில் வீசிச் சிரித்தான்..
“உனக்கே இது நல்லா இருக்காடா..? இதை என் காதலி செஞ்சா கிக்கா இருக்கும்..” அர்ஜூன் அலுத்துக் கொண்டான்..
“உன் காதலியா..? சொல்லவே இல்ல..”
“எதைடா..?”
“உன் காதலி யாருங்கிறதை..”
“இருந்தாத்தானே சொல்ல முடியும்..?”
“இன்னுமாடா கிடைக்கலை..?”
நந்தகுமார் துக்கம் விசாரித்ததில் நொந்து போய் விட்டான் அர்ஜூன்.. அவன் ராசி அப்படி.. கண்ணியமாகப் பேசிப் பழகுபவனிடம் எந்தப் பெண்ணுக்கும் காதல் வராதது சோகத்திலும் பெரும் சோகம்.. இவனும் தலையால் தண்ணீர் குடித்துப் பார்த்து விட்டான்.. வேலைக்கு ஆகவில்லை.. காதல் சொல்ல முயற்சித்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத்தான் தழுவின..
“நான் மும்பையில இருந்து போன் பண்ணினப்ப எவளோ ஒரு லீனா கூட ஏதோ மோகம், ஏதோ தாகம் போல ஏதோ ஒன்னு ஃபார்ம் ஆகிக்கிட்டு இருக்கிறதைப் போலச் சொன்னியேடா மச்சான்..”
“சொன்னேன்தான்..”
“என்கிட்டச் சொன்னதை அவகிட்டச் சொன்னியா..?”
“அந்தச் சோகக்கதையை ஏண்டா கேட்கிற..?”
“நான் கேட்காம வேற யாரு கேட்பா..?”
“விட மாட்ட..?”
“மாட்டேன்..”
“சொல்லித் தொலைக்கிறேன்.. கேளு.. அவகிட்டக் காதலைச் சொல்லிரலாம்ன்னுதான் போனேன்.. கொஞ்சம் பேசனும்னேன்..”
“அவ கொஞ்சிப் பேசியிருப்பாளே..”
“வயித்தெரிச்சலைக் கிளப்பாதேடா..”
“என்னதாண்டா ஆச்சு..?”
“அவ ஒற்றை வார்த்தையிலே என் உயிரைக் குறைச்சுட்டாடா மச்சான்..”
“ஒற்றை வார்த்தையில உன் உயிரைக் குறைச்சிட்டாளா..? என்னடா சொன்னா..?”
“சொல்லுங்கண்ணான்னு சொல்லிப்புட்டாடா மச்சான்..”
“என்னது..???!!!”
திகைத்து விழித்த நந்தகுமார்..
“ஹா.. ஹா..” என்று சிரிக்க ஆரம்பித்து விட்டான்..
“காதல் மன்னன்ங்கிற திமிர்..?” காண்டானான் அர்ஜூன்..
“கோவிச்சுக்காதேடா மச்சான்..”
நந்தகுமார் அர்ஜூனின் முகவாயைப் பிடித்துக் கொஞ்சியதைப் பார்த்தபடி அடுத்த பிளேட் பஜ்ஜிகளை கொண்டு வந்தாள் ஈஸ்வரி.. சிரித்த முகமாய் இருந்த நந்தகுமாரைப் பார்த்த பார்வையில் விரோதமில்லை..
“ஏன் ஈஸ்வரியம்மா.. நல்லவனை இந்தப் பொண்ணுக ஓரம் கட்டுதுக..? அதுவே ரௌடின்னா பின்னால சுத்துதுக..” நந்தகுமார் கேட்டான்..
“அது அப்படித்தாங்கய்யா.. அந்தக் காலத்தில எங்க கிராமத்தில இளவட்டக் கல்லத் தூக்கினாத்தான் கன்னிப் பொண்ணுக திரும்பிப் பார்ப்பாகளாம்..” ஈஸ்வரி நின்று விட்டாள்..
“அப்ப மாட்டை அடக்கினாத்தான் கல்யாணம்ங்கிறது..?”
“அது.. அதுக்கு முன்னால இருந்ததுங்கய்யா..”
“அதுக்கும் முன்னால எது இருந்திருக்கும்..?”
“வில்லை ஒடிச்சாத்தான் கல்யாணம்ன்னு இருந்திருக்கும்.. ராமனும், அர்ஜூனனும் வில்லை ஒடிச்சுத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க..?”
“அடிரா சக்கை.. இந்தப் போடு போடறிங்க.. நீங்க இம்புட்டுப் பெரிய அறிவாளின்னு எனக்குத் தெரியாமப் போச்சே ஈஸ்வரியம்மா.”
“தெரிஞ்சிருந்தா என்ன செய்திருப்பீங்க.. காலையிலே வாசலோடு விரட்டி விடாம வீட்டுக்கதவைத் திறந்து உள்ளே வான்னு சொல்லியிருப்பீங்க.. வேற என்ன செய்திருப்பீங்க..?”
“வேற என்ன செய்யனும்..?”
“இந்த மாதச் சம்பளத்தை என் கையில கொடுத்திரனும்.. முடியுமா உங்களாலே..”
“முதலுக்கே மோசம் வைக்கறிங்களே..”
ஈஸ்வரி சிரித்தபடி சமையலறைக்குப் போய் விட்டாள்..
“இரண்டு வருசமா எனக்குச் சமைத்துப் போடறாங்க.. இந்த வீட்டில ஆல் இன் ஆல் இவங்கதான்.. என்கிட்டக்கூட இவ்வளவு கதையடிச்சதில்லை..” அர்ஜூன் சொன்னான்..
“இதிலயும் பொறாமையா..?”
“இருக்காதா பின்னே..?” நண்பனை கூர்ந்து பார்த்த அர்ஜூன்
“அனுராதா மனது மாறுவாங்கிற..?” என்று கேட்டான்.
“தெரியலை..” முகம் வாடாமல் பதில் சொன்னான் நந்தகுமார்.
“பின்னே.. எந்த நம்பிக்கையிலே இவ்வளவு சந்தோசமா இருக்கிற..?”
“உனக்கு அது பொறுக்கலையா..?”
“டோன்ட் மிஸ்டேக் மி நந்து.. நீ லவ் பெயிலியர்ன்னு விரக்தியா உலகம் சுத்திக்கிட்டே இருக்கனும்னு நான் ஆசைப்படுவேனா..? பட்.. கிடைக்காத ஒன்றிற்காக மறுபடியும் நம்பிக்கையை வளர்த்துக்கறியோன்னு பயமாய் இருக்குடா..” அக்கறையோடு எடுத்துச் சொன்னான் அர்ஜூன்..
“கிடைக்கலைன்னாத்தான் என்ன..?” ஆழ்ந்த குரலில் கேட்ட நந்தகுமாரின் குரலில் அமைதி விரவியிருந்தது..
“நந்து..?”
“அவளைப் பார்க்க முடியுமான்னு தவிச்சேன்டா.. என்னிடம் சொல்லாம பிரிஞ்சு போயிட்டா.. தேடித்தேடி நான் ஓய்ஞ்சு போனேன்.. இப்ப கண்ணெதிரே பார்த்திட்டேன்.. அவ கம்பெனியில கண்டினியு பண்ண முடியுமான்னு தெரியலை அர்ஜூன்.. பட் ஒன் திங்.. அவ கம்பெனியில இருந்த வெளியேற நேர்ந்தாலும் இந்த மைசூரை விட்டு நான் போக மாட்டேன்டா.. அவ இருக்கிற இடத்திலதான் இருப்பேன்.. அது போதும் எனக்கு..”
முரட்டுத்தனமான நந்தகுமாரின் வார்த்தைகளில் விரவியிருந்த காதல் அர்ஜூனை உருக்கியது.. கட்டுக்குள் அடங்காத காளையைப் போன்றவன்.. காதலில் வீழ்ந்து தத்தளிக்கிறான்.. அடங்காத காளையையும் அடக்கி வைக்கும் மூக்கணாங்கயிறு காதலா..? அதற்கு அந்த அளவுக்கு சக்தியுண்டா..?
“நல்லவேளை.. நான் காதலில் விழுகலை..” உண்மையாகச் சொன்னான் அர்ஜூன்..
“என்னைக் கண்டதும் அவ கண்ணில வந்த ஜொலிப்பு.. பரபரப்பு.. எனக்கு நம்பிக்கையைக் கொடுக்குது “
“அதை உடைக்க அந்த பீம்சிங் இருக்கிறாரே..”
“நானா.. அவரான்னு பார்த்து விடுகிறேன்..”
“நேருக்கு நேராய் யுத்தம் செய்தால் நீதான் ஜெயிப்ப.. அந்த மனிதர் முதுகுக்குப் பின்னாலே கத்தி வீசுவாரே..”
“அதுக்கும் தயாராகத்hன் இருந்தாகனும்..”
நந்தகுமார் பேச்சை நிறுத்தி விட்டுக் கொட்டும் மழையை வெறித்தான்.. அவனது மனம் கடந்த காலத்தில் சஞ்சரிக்கத் துவங்கி விட்டதை உணர்ந்து கொண்ட அர்ஜூன் நண்பனின் சிந்தனையில் குறுக்கிடாமல் மௌனமாகி விட்டான்.. இருவர் மனமும் பின்னோக்கிப் பயணித்தன.. கள்ளமில்லா கல்லூரிப் பருவத்தில் அவர்களது மனம் காலடி எடுத்து வைத்தது..
அது ஒரு வசந்தகாலம்.. அழகிய இளமைக் காலம்.. நந்தகுமாரன் என்னும் கந்தவர்னின் அழகிலே அனுராதா எனும் யட்ச கன்னிகை மயங்கி நின்ற காலம்..
Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.