Chapter 11
இதைப் போன்றதொரு கொட்டும் மழை நாளில்தான் நந்தகுமார் அவனுடைய ராதையைச் சந்தித்தான்.. அவள்.. அனுராதா..! முதல் வருட சிவில் என்ஜினியரிங் மாணவி.. அடாது மழை பெய்தாலும் விடாது ராகிங் பண்ணிக் கொண்டிருந்த மாணவர்களின் கூட்டம் மரத்தடியில் மையம் கொண்டிருந்தது.. வெளிநாட்டுக் காரில் வந்து இறங்கிய அவளைக் கண்டதும்..
“பாருடா.. பர்ஸ்ட் இயரில ஒரு தேவதை காலடி எடுத்து வைக்கிறா..” என்றான் கோகுல்நாத்..
“அவ பர்ஸ்ட் இயர்ன்னு உனக்கு எப்படிடா தெரியும்..?” வினவினான் அனந்த நாராயணன்..
“உன்னைப் போல பெண்ணைக் கண்டா மண்ணைப் பார்க்கிறவனா இருந்திருந்தா தெரிஞ்சிருக்காது.. இவன்தான் ஒவ்வொரு இயரிலும் இருக்கிற அத்தனை டிபார்ட்மெண்டிலயும் எத்தனை பெண்கள் படிக்கிறாங்கன்னு சென்சஸ் எடுத்து வைச்சிருக்கானே..” கேலியாகச் சொன்னான் வினய்..
நண்பர்களின் பேச்சை செவி மடுத்தபடி செல்போனை நோண்டிக் கொண்டிருந்த நந்தகுமார் ஆர்வமில்லாமல்தான் விழிகளை உயர்த்தினான்.. உயர்த்திய விழிகளில் ஓர் ஓவியம் போல அவள் தெரிந்தாள்.. மழைத்தாரைகள் திரையிட.. அவற்றுக்குள் நடுவே வண்ணக் குடையை விரித்துப் பிடித்தவளின் முகம் அவன் மனதில் பதிந்து விட்டது..
“டேய்.. தேவதை எஸ்கேப் ஆகப் பார்க்குதுடா..”
“ஏய்ய்.. இங்கே வா..”
“அதானே.. இங்கே மழையில நனைந்துக்கிட்டு இருக்கிறவனுகளைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது..?”
நந்தகுமாரின் நண்பர்கள் கைதட்டி அழைக்க.. அவள் மிரட்சி ததும்பும் விழிகளுடன் வந்து.. கடைசிக் கேள்விக்கு மட்டும் பதிலளித்தாள்..
“நீங்கள்ளாம் மழையை என்ஜாய் பண்றீங்கன்னு நினைத்தேன்..”
நண்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள.. நந்தகுமார் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து பாக்கெட்டில் போட்டு விட்டு அவன் ஆரோகணித்திருந்த ராயல் என்ஃபீல்டை விட்டு இறங்கினான்..
“கேட்டியா தல.. இத்துணூண்டு இருந்துக்கிட்டு இது நம்மளக் கலாய்க்குது..” அனந்த நாராயணன் முறையிட்டான்..
‘இவளா கலாய்க்கிறா..?’
மான்குட்டியைப் போல மிரண்டு விழித்துக் கொண்டிருந்தவள் ஓடி ஒளிந்து கொள்ளும் பயத்துடன் இருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.. அவளது உடல் நடுக்கம் மழையினால் வந்ததல்ல என்பதை உணர்ந்த நந்தகுமாரனுக்குப் பாவமாகத்தான் இருந்தது.. பொதுவாக ‘ராகிங்..’ போன்ற வீர விளையாட்டுக்களில் அவன் ஆர்வம் காட்ட மாட்டான்.. நண்பர்களையும் அதட்டி வைப்பான்..
“ச்சும்மாடா நந்து.. புதுசா வர்ற பசங்களத் தெரிந்து வைத்துக்கனுமில்ல.. அவங்களுக்கும் சீனியர்ன்னா ஒரு மரியாதை வரனும்டா.. அதுக்குத்தான் இந்த இண்டர்வியு.. கண்டுக்காதே..” என்ற நண்பர்களின் வேண்டுகேளுக்காக..
“தொலைந்து போங்கடா..” என்று விட்டு விடுவான்..
எல்லை மீறினால் தலையிட்டுத் தட்டி வைக்கலாம் என்பது அவனது எண்ணம்.. அந்தத் தலைவலியை அவனுக்கு உண்டு பண்ணாமல் நண்பர்கள் எல்லைக் கோட்டைத் தாண்டாமலே தங்களின் ரகளையை முடித்துக் கொள்வார்கள்.. அந்த வகையில் நந்தகுமாரின் நண்பர்கள் சொக்கத் தங்கங்கள்.. அப்படி இருந்தால்தான் அவனுக்கு நண்பனாக குப்பை கொட்ட முடியும் என்பது வேறு விசயம்..
நந்தகுமாருக்கு அவளிடம் பேச வேண்டும் போல இருந்தது.. அதுவரை அவனிடம் பேச வேண்டுமென்று தான் பெண்கள் ஆசைப்பட்டிருக்கிறார்கள்.. எந்தப் பெண்ணிடமும் தானாக அவன் பேசியதில்லை.. முதன் முறையாக அதை உடைத்து..
“என்ன..? என் ஃபிரண்ட்ஸைக் கலாய்க்கிறயா..?” என்று அவன் அவளிடம் கேட்டபோது நண்பர் குழாம் ஆச்சரியத்தில் இமை கொட்டியது..
“நோ.. நோ..” அவசரமாக அவள் மறுத்தாள்..
“‘நோ, நோ’ன்னு சொல்லிட்டா ஆச்சா..? அது என்ன தமிழில் கேள்வி கேட்டா.. இங்கிலிஷீல் பீட்டர் உடற..? உனக்குத்தான் இங்கிலிஷ் தெரியும்.. எங்களுக்குத் தெரியாது.. அப்படித்தானே..?”
நந்தகுமார் புருவங்களை நெரித்து.. கண்களை உருட்டி விழித்ததில்.. அவளது கண்களில் இருந்து மழை கொட்ட ஆரம்பித்து விட்டது.. அர்ஜூன் படு சுவராஸ்யமாக நண்பனை வேடிக்கை பார்த்தான்.. தலையைச் சாய்த்துக் கைகளை மட்டும் பிசையவில்லை.. மற்றபடி அச்சு அசல் நம்பியாரேதான்..
‘திடிர்ன்னு நம்ம ஹீரோ வில்லன் வேசம் கட்டறானே.. இதையும் அட்டகாசமா பிளந்து கட்டறான் பாரு.. எந்த வேசம்ன்னாலும் இவனுக்கு கன கச்சிதமா ஷீட் ஆகுது..’
அவளது இமைகள் படபடவென அடித்துக் கொண்டன.. பட்டாம் பூச்சிகள் சிறகை விரித்துப் பறக்க யத்தனிக்கின்றன என்று நந்தகுமார் மனதுக்குள் கவிதை வரைந்தான்..
“‘நோ, நோ’ன்னு இரண்டே எழுத்தைத்தான் சொன்னேன்..” அவள் விளக்கம் சொல்ல முற்பட..
“இது பீட்டர் விடறதாடா..?” என்று நியாயம் கேட்டான் அர்ஜூன்..
“நீயென்ன இந்தப் பெண்ணுக்கு லாயரா..?” உஷ்ணமானான் நந்தகுமார்..
“தெரியாமக் கேட்டுட்டேன்டா.. அதுக்கு ஏன் என்ஜினியரை லாயராக்கற..? அம்மா..! உன் வழக்கை நீயே டீல் பண்ணிக்கம்மா..” அர்ஜூன் ஜகா வாங்கினான்..
“அம்மாவா..?” அவள் அழ மாட்டாத குறையாக கேட்டாள்..
“ஏண்டா டேய்.. இப்பத்தான் எல்.கே.ஜியில இருந்து வந்ததைப் போல இருக்கிற பாப்பாவைப் போய் ‘அம்மா’ன்னு கூப்பிடறயே.. உனக்கே இது நல்லா இருக்காடா.. அதனாலதான் ஒரு ஃபிகரும் உனக்கு மடியாம ‘அண்ணா’ன்னு கூப்பிட்டு வெறுப்பேத்துதுக..” அர்ஜூனைக் காய்ச்சிய வினய்..
“நீ ஒன்னும் ஃபீல் பண்ணாதம்மா.. அதான் நான் நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டுட்டேனில்ல..” என்று அவளைச் சமாதானப் படுத்தினான்..
“நீங்களும்தான் அம்மாங்கறிங்க..” அவள் சுட்டிக் காட்டினாள்..
“வேற என்னத்தைப் பண்ணச் சொல்ற..? நீ யாரு.. என்ன பேருன்னு தெரியாம எப்படிப் பேசறது..? அம்மான்னு கூப்பிட்டாலும் அசைய மாட்டேங்கறியே..” என்றான் கோகுல்நாத்..
“அபித குஜலாம்பாளா இருக்குமோ..?” அனந்த நாராயணன் ஆவலாக கேட்டான்..
“உன் அகத்தில இருக்கிற ‘அவா’வையெல்லாம் ‘இவா’கிட்ட எதிர்பார்க்கக் கூடாதுடா அம்பி..!” அர்ஜூன் கிண்டலடித்தான்..
“அனுராதா..” அவள் வாய் திறந்தாள்..
மயிலிறகு ஒன்று நந்தகுமாரின் மனம் வருடிச் சென்றது.. வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்று மென்மையாக அவள் பேசிய விதம் அவனை வசீகரித்தது.. இயல்பான பேரழகால் அவனை ஈர்த்தாள் அவள்.. எந்தப் பெண்ணிடமும் மயங்காத அந்தப் பேரழகன் அவளிடம் மயங்கிப் போனான்..
“மிஸ் அனுராதா..!” நந்தகுமார் கெத்தாக உச்சரிக்க..
“மிஸஸா இருக்க முடியாதுடா நந்து..” என்று விளம்பி வைத்தான் வினய்..
“யெஸ்.. யெஸ்.. பாப்பாவைப் பார்த்தா பர்ஸ்ட் இயரில சேர வந்ததைப் போலவே தெரியலை.. யு.கே.ஜியில சேர வந்ததைப் போலத் தெரியுது.. பேபி.. திஸ் இஸ் இன்ஜினியரிங் காலேஜ்.. ப்ளீஸ் கோ டு கிண்டர் கார்டன் ஸ்கூல்..” கோகுல்நாத் வழி காட்டினான்..
“இவர் மட்டும் இங்கிலிஷில் பீட்டர் விடறார்.. இதை ஏன்னு கேட்க மாட்டிங்களா..? என்னை மட்டும்தான் திட்டுவீங்களா..?” அனுராதா நந்தகுமாரிடம் முறையிட்டாள்..
“டேய் நந்து.. நம்ம கோகுல் பேசினது பீட்டராம்டா..” அர்ஜூன் சொல்ல.. நண்பர் குழாம் ஆர்ப்பரித்துச் சிரித்தது..
அனுராதாவின் முகம் சிவந்தது.. அவர்கள் அவளிடம் விரசமாகப் பேசவில்லை.. மேய்ச்சல் பார்வை பார்க்கவில்லை.. மிரட்டவில்லை.. மரியாதைக் குறைவாக நடத்தவுமில்லை.. ஆனாலும் அவளுக்கு அந்த இளைஞர் கூட்டத்தின் முன்னால் நிற்கப் பயமாக இருந்தது.. அவர்களின் சிரிப்பும், பேச்சும், கலாட்டாவும்.. அவளறியாத வேறு ஒரு உலகமாக இருந்தது.. அவளறிந்த உலகம் வேறு.. அங்கே அவளைக் கண்டவர்கள் எழுந்து நின்று வணக்கம் வைப்பார்கள்.. இப்படி நிற்க வைத்துக் கேலி பேசி சிரிக்க மாட்டார்கள்..
“இவன் பேசினது பீட்டர்ன்னா.. பீட்டருக்கே மரியாதையில்லை..” நந்தகுமாரும் சிரித்தான்..
“அப்ப நான் பேசின ‘நோ,நோ’ மட்டும் பீட்டராகிருமா..?” அனுராதா கேட்டாள்..
“அப்சல்யூட்லி.. அப்படித்தான்..”
“அதுதான் ஏன்..? நீங்க இங்கிலிஷையும் தமிழையும் கலந்து பேசலாம்.. நான் ‘நோ, நோ’ன்னா தப்பு..”
“யெஸ்.. தப்புத்தான்.. பிகாஸ்.. நாங்க சீனியர்.. நீ ஜீனியர்..”
நந்தகுமார் அறிவுறுத்தியதில் அனுராதா உதட்டைக் கடித்துக் கொண்டு பேசாமல் நின்றாள்.. நந்தகுமார் பேசும் போது மற்ற நண்பர்கள் குறுக்கிடுவதில்லை என்பதை அவள் கவனித்தாள்.. அவன் என்னவோ தலைவன் போலவும்.. மற்றவர்கள் அவனுக்குக் கட்டுப்பட்டவர்கள் போலவும் இருந்தது.. உண்மையிலேயே அப்படித்தான் என்பதைப் பின் வரும் நாள்களில் தெரிந்து கொண்டபோது நந்தகுமாரைத் தேடிப் போய் பார்க்க வேண்டும் போல இருந்தது.. அவள் தேடாமலே அவன் அவளைப் பார்க்க வந்தபோது அனுராதா வானத்தில் பறந்தாள்..
“எல்லோரும் கம்யூட்டர் என்ஜினியரிங் எடுத்துப் படிக்கும் போது.. நீ ஏன் சிவில் என்ஜினியரிங்கை சூஸ் பண்ணியிருக்க..?” அந்த மரத்தடி மழைநாளின் முதல் சந்திப்பில் நண்பர்கள் மத்தியில் நின்றிருந்த நந்தகுமார் கேட்டான்..
“ஏன்னா.. கம்யூட்டர்களை விடக் கட்டிடக்கலை புராதனமானதுன்னு எனக்குத் தோணுச்சு.. நாளுக்கு நாள் கம்யூட்டர் ஃபீல்டில் மாற்றங்கள் வருது.. தாஜ்மஹாலின் பெருமை அசையாம நிற்குது.. நம்ம ஊர் கோவில்கள் எத்தனைப் பழமையானவை தெரியுமா..? அதைத் தெரிந்துக்கறதை விடக் கம்யூட்டரைத் தெரிந்துக்கிட்டு ஆகப் போகிறதென்ன..?”
அவளின் பதிலில் அர்ஜூன் ஆச்சரியத்துடன் நந்தகுமாரைப் பார்த்தான்.. இந்த வார்த்தைகளை நந்தகுமார்தான் அர்ஜூனிடம் அடிக்கடி சொல்வான்.. அதையே இவளும் சொல்கிறாளே.. எப்படி..?
Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.