Chapter 14
“நல்லாச் சொன்னீங்க போங்க.. நமக்கு இருக்கிறது ஒரே பெண்.. அவளைக் கட்டு திட்டமா வளர்க்கத்தானே ஊட்டி கான்வெண்டில் சேர்த்து விட்டோம்.. சின்ன வயதில் அங்கே வளர விட்டுவிட்டு.. இப்ப டீன் ஏஜில போய் அமெரிக்காவுக்கு அழைத்துக்கலாம்ன்னு சொல்கிறீங்களே.. இப்பத்தானே அவ இந்தியாவில இருக்கனும்..?” கொஞ்சினாள் தீப்தி..
“ஐ மிஸ் ஹெர்..” பீம்சிங்கின் விழிகளில் வழிந்த பிள்ளைப் பாசத்தில் வெகுண்டாலும் அதை மறைத்துக் கொண்டு சரச மாடினாள்.
“எனக்கு மட்டும் நம்ம குழந்தையை நம்முடன் வைத்துக் கொள்ளனும்னு ஆசையில்லையா..? பட், டியர்.. நீங்களும் நானும் பிஸினெஸ்ஸே கதின்னு சுற்றிக்கிட்டு இருப்போம்.. அனுவை யார் கவனிச்சுக்கிறது..? என்னைக் கேட்டா அவ.. சென்னையில அவளோட தாத்தா, பாட்டியின் கண்காணிப்பில காலேஜ் படிப்பை முடிக்கிறதுதான் பெட்டர்ன்னு சொல்லுவேன்..”
“இனியாவோட பேரண்ட்ஸ்கிட்டேயா அனுவை விடச் சொல்கிற..?” பீம்சிங் நிம்மதியானார்..
தீப்திக்குத்தான் அது தெரியுமே.. அதனால்தானே அவள் அந்த யோசனையைச் சொன்னாள்.. இனியாவின் பெற்றோர் மீது பீம்சிங்கிற்கு இருக்கும் மரியாதையையும், பாசத்தையும் பார்த்து வயிறு எரிபவள் ஆயிற்றே.. அவர்களிடம் மகளை விட பீம்சிங் மறுப்புத் தெரிவிப்பாரா என்ன..?
அனுராதா கம்யூட்டர் என்ஜினியரிங்கைத் தவிர்த்துக் கட்டிடக் கலையைத் தேர்வு செய்ததில் தீப்திக்கு மகிழ்ச்சி.. அவள்தான் எல்லாத் திசைகளிலும் பந்தை எறிவாளே.. இதிலும் அனுராதாவின் விருப்பத்திற்கு ஆதரவாகத் தன் கருத்தைச் சொன்னாள்..
“ஐ.டி ஃபீல்டு முன்ன மாதிரி இல்லையே டியர்.. அட் த ஸேம் டைம்.. எங்கே பார்த்தாலும் பில்டிங்கைக் கட்டிக்கிட்டு இருக்காங்க.. பியூச்சரில அனுராதா கண்ஸ்ட்ரக்சன் கம்பெனியை ஆரம்பித்து
அதில் சைன் பண்ணலாமே.. அவளுக்குன்னு இண்டிஜீவாலிட்டி வேண்டாமா..?”
அனுராதா தனித்துத்தான் நிற்க வேண்டும்.. தகப்பனின் சொத்துக்களுக்கு பங்குக்கு வந்து விடக் கூடாது என்ற தீப்தியின் அபிலாஷையை படு நாசுக்காக மறைத்து அனுராதாவின் நலம் விரும்பி போல இவள் கருத்துச் சொல்ல..
“யு ஆர் வெரி கிளவர்..” என்று மகிழ்ந்து போனார் பீம்சிங்..
‘அதானே.. உன் மகளைப் பத்திப் பேசினா மட்டும்தானே நான் ‘கிளவர்..’ ஆவேன்..?’ முகம் மாறாமல் பல்லைக் கடித்தாள் தீப்தி..
இப்படியாகத்தானே.. தாயை இழந்த அனுராதா.. தகப்பனையும் அணுக முடியாமல் கண்ணுக்குத் தெரியாத சதிவலையால் பிரிக்கப்பட்டு.. தாய்வழித் தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் சென்னையில் என்ஜினியரிங் படிப்பைப் படிக்க நந்தகுமார் படித்துக் கொண்டிருந்த கல்லூரிக்கு வந்து சேர்ந்தாள்..
இந்தியப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்தாலும் அனுராதா பிறந்தது வெளிநாட்டில்.. பத்தாவது வயது வரை வளர்ந்ததும் வெளிநாட்டில்.. அதன் பின்னால் பள்ளிப் படிப்பைப் படித்தது ஊட்டிக் காண்வென்டில்.. அவளைப் போய் பீட்டர் விடாதே என்று நந்தகுமார் மிரட்டினால் அவள் பாவம் என்ன செய்வாள்..? நுனிநாக்கு ஆங்கிலத்தைத் தவிர்த்து.. தாத்தா, பாட்டி சொல்லிக் கொடுத்திருந்த தமிழில்தான் பேசுவாள்.. இருந்தாலும் ஊடே ஆங்கில வார்த்தைகள் நர்த்தனமாடி அவளை மாட்டி வைத்து விடும்.. நந்தகுமார் அவளது காதைப் பிடித்துத் திருகுவான்..
“ஆ..” வலிப்பதைப் போல நடித்தாலும் அவனது தண்டனையை விரும்பி ரசிப்பாள் அனுராதா..
அவளுக்கு அது புதிது.. நந்தகுமாரின் முரட்டுத்தனம்.. பேச்சு.. ஆளுமையான குணம்.. அடாவடித்தனம்.. என்று அனைத்திலும் அவள் கரைந்தாள்.. அவளை மட்டும் தேடும் அவனது பார்வையில் அவள் உயிர்த்தெழுந்தாள்.. தாயில்லாத குழந்தை அவள்.. அவனது காதல் அவளைச் சீராட்டியது.. ஒரு பொன்மாலைப் பொழுதில் அவளது கரம் பற்றி அதில் இதழ் பதித்து.. அவன் காதல் சொன்னபோது அவள் சிலிர்த்துப் போனாள்.. அதற்காகவே காத்திருந்ததைப் போல இமையோரம் நீர் மல்க.. விழி மூடி.. அவன் மார்பில் அவள் சாய்ந்து கொண்ட போது மரத்திலிருந்த மலர்கள் உதிர்ந்து அவர்கள் மீது படிந்தது, தேவர்கள் அவர்களை பூமாரி தூவி ஆசிர்வதிப்பதைப் போல இருந்தது..
அடுத்து வந்த கல்லூரி விழா ஒன்றில்.. மேடையேறிய நந்தகுமார்.. அனுராதாவையே பார்த்த வண்ணம்..
“என் காதல் கண்மணி..!
ஏதேதோ.. நினைத்தாளோ..
சொல்ல நாணம் வந்ததோ..
சொல்லாமல் மறைத்தாளோ..
ராதா.. ராதா.. ராதா.. ஆஆஆ..”
என்று பாடிய போது அவளுக்கும் அவனுக்குமான காதல் கல்லூரி முழுவதும் பரவி விட்டது..
“என் வீட்டுத் தோட்டத்தில் புதுமல்லிகை..
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை..
வாடாத மலரே..! தேயாத நிலவே..!
நாள்தோறும் என்னோடு உறவாட வா..
ராதா.. ராதா.. ராதா.. ஆ ஆ ஆ…”
மல்லிகையின் மணத்தை அனுராதாவுக்கு அறிமுகப் படுத்தியவன் நந்தகுமார்தான்.. அவளது விரித்து விடப்பட்டிருக்கும் கூந்தலைப் பின்னி.. மல்லிகைச் சரம் சூட்டி.. புடவை கட்டிப் பெண்மையின் மென்மையோடு அவள் வந்தால் அவன் கிறங்கிப் போவான் என்று ஓர்நாள் சொன்னான்.. அவன் வர்ணித்த வர்ணனையில் கிறங்கிப் போனவள், அவன் சொன்னதைப் போலப் புடவை கட்டிப் பின்னலிட்டு.. அதில் மல்லிகைப்பூச்சரத்தைச் சூடி.. விழிகளில் மையிட்டு.. நெற்றியில் அடர் சிகப்பில் ஸ்டிக்கர் பொட்டை வைத்துக் கல்லூரிக்கு வந்தாள்.. அவனது விழிகளில் தெரிந்த கிறக்கத்தில் இவள் கிறங்கிப் போனாள்.. அன்று அவளை அவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.. பிரகாரத்தில் உட்கார்ந்து அவளது விரல்களை நீவியபடி நிறையப் பேசினான்.. அவனைப் பற்றி.. அவனுடைய பெற்றோரைப் பற்றி.. சதா சண்டையிடும் தங்கையைப் பற்றி என்று அவன் பேசிய போது.. இதுவல்லவோ குடும்பம் என்ற பிரமிப்பும், பொறாமையும் அவளுக்குள் வந்தன..
இன்றும் அவள் பூச்சூடியிருந்தாள்.. அவனது சுவாசத்தில் கலந்த மல்லிகையின் மணத்தை அவளும் நுகர்ந்தாள்.. அவனது விழிகளில் மின்னிய காதல் அவளைக் காந்தமென இழுத்தது.. உறவாட அழைத்தது.. நந்தகுமாரின் ராதையாக அவள் மாறிப் போனாள்..
“கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே..!
தாளத்தில் அழியாத எழில் வண்ணமே..!
கடல் வானம் யாவும் தடம் மாறினாலும்..
மாறாத நிலை கொண்ட மனம் கொண்டு வா..
ராதா.. ராதா.. ராதா… ஆ ஆ ஆ…”
கடற்கரை மணலில் அவள் மடியில் தலை வைத்து அவன் பாடினான்.. அவன் முடி கலைத்து அவள் விளையாடினாள்.. கடல்காற்றில் அவளது முந்தானை பறந்து.. அவன் முகம் மூடிய பொழுது.. அந்த முந்தானைச் சேலைக்குள் அவள் முகத்தையும் மறைத்துப் போர்த்தி இழுத்து.. அவளது இதழோடு இதழ் பதித்து மயங்க வைத்தான்..
“உன் நெஞ்சம் பொன்னென்று அறியாததோ..
உறவெல்லாம் உனதென்று தெரியாததோ..
பனி தாங்கும் கிளியே.. மடல் போன்ற மனமே..
வருங்காலம் நமதென்ற முடிவோடு வா..
ராதா.. ராதா.. ராதா.. ஆ ஆ ஆ…”
பொன் மனம் கொண்ட மன்னன்.. பொன் மனம் அவளுக்கென்று பாடினான். பொன்னிற மேனி கொண்டாள் மின்னலாக அவன் தேகம் நாடினாள்.. தன் வீட்டுக்கு அவளை அழைத்துச் சென்றான்..
“இவள் அனுராதா..”
இந்த இரண்டு வார்த்தைகள் அவள் யாரென்று அவன் குடும்பம் உணரப் போதுமானதாக இருந்தது..
“வாம்மா..” யமுனா கைவிரித்த போது..
இனியாவே கை விரிப்பதைப் போல இருந்ததில்.. தன்னை மறந்து யமுனாவின் கைகளுக்குள் புகுந்து கட்டிக் கொண்டாள் அனுராதா..
அதுதான்.. அவளது அந்தப் பாசம்தான்.. அவளை மறக்க முடியாமல் நந்தகுமாரை அலைக்கழித்தது.. ஊர், ஊராக அவளைத் தேடி ஓட வைத்தத.. ஓரிடத்தில் நிலைத்து நின்று வேலை செய்ய முடியாமல் பித்துப் பிடிக்க வைத்தது..
அனுராதாவின் பின்புலத்தை அறிந்தா அவன் காதல் கொண்டான்..? அவள் மலர்..! குறிஞ்சி மலர்..! அரிதானவள்.. அன்பானவள்.. அவளுக்கு நிகரில்லை.. அதை நந்தகுமார் அறிந்து வைத்திருந்ததைப் போல அறிந்தவர் எவருமில்லை..
Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.