Chapter 15

0Shares

“ஷி இஸ் எ ஏன்ஜல்..” என்றாள் நந்தினி..

அவள் எதைச் சொன்னாலும் அதற்கு எகனைக்கு மொகனையாக எதையாவது பேசி வைக்கும் நந்தகுமார்.. அன்று மட்டும் அழிச்சாட்டியம் பண்ணாமல் மென்மையாகப் புன்னகைத்தான்..

“டேய் அண்ணா..” அதிசயிதித்தாள் நந்தினி..

“இது நீதானாடா..? உனக்கு இப்படி ஷாப்டாச் சிரிக்கக் கூடத் தெரியுமா..?”

“நீயே இப்படிப் புத்திசாலித்தனமாப் பேசும்போது.. நான் ஷாப்டாச் சிரிக்க மாட்டேனா..?” தங்கைக்கு ஒரு ஷொட்டு வைத்தான் நந்தகுமார்..

“பாருடா.. இவனோட காதலியை தேவதைன்னு சொன்னதினால நான் புத்திசாலியா ஆகிட்டேனாம்.. ஹலோ பிரதர்.. தேவதையை தேவதைன்னுதான் சொல்ல முடியும்.. உன்னைச் சொல்லச் சொல்.. குரங்கு, முரடன், ரௌடின்னு அடுக்கு மொழிச் சொற்களா அள்ளி விடறேன் பாரு..”

“நான் ரௌடியா..?”

“ஆமாண்டா அண்ணா.. நீ ரௌடியேதான்.. எனக்கென்னன்னா.. தேவதை எப்படி ரௌடியிடம் மயங்கிப் போனாங்க..”

நந்தகுமாரின் முகத்தில் வந்த காதல் நிரம்பிய கர்வத்தை ரசித்தாள் நந்தினி.. அவளுடைய அண்ணன் அழகனாகி விட்டான் என்று தாயிடம் சொன்னாள்..

“என் பிள்ளை பேரழகன்டி..” பெருமைப் பட்டாள் யமுனா..

வாசுதேவன் மட்டும்தான் யதார்த்தமாக யோசித்தார்.. பெண்களின் சிநேகிதத்தை விரும்பாத நந்தகுமார் காதலில் விழுந்திருக்கிறான் என்பது சாதாரணமான ஒன்றல்ல.. வருடத்திற்கு இரண்டு பெண்களைக் காதலித்து.. வருடங்கள் கடந்த பின்பு வீட்டில் பார்க்கும் பெண்ணுக்கு சமர்த்தாக தாலி கட்டிக் குடும்பம் நடத்தும் குணம் கொண்டவனின் காதலென்றால் கவலைப்படாமல் இருந்து விடலாம்.. அப்படிப்பட்டவன் காதல் தோல்வியைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டான்.. நந்தகுமார் அப்படியல்ல.. ஒன்றை எளிதில் நினைக்காதவன் அவன்.. நினைத்து விட்டால் அதிலேயே நிலைத்து நின்று விடுபவன்..

அனுராதாவின் குடும்ப பின்புலம் வாசுதேவனை அச்சுறுத்தியது.. அதைப் பற்றி மகனிடம் விவாதிக்கத் தயக்கமாக இருந்தது.. அவன் அனுராதாவைப் பற்றி மட்டுமே நினைத்தான்.. பேசினான்.. அவள் மிகப் பெரிய கோடிஸ்வரி என்பதைப் பற்றி ஓர்நாள்கூடப் பேசியதில்லை.. அவன்தான் அப்படியென்றால்.. யமுனாவும், நந்தினியும் அவனைப் போலவே இருந்தார்கள்..

வாசுதேவனுக்கு, மனைவி, மகளின் பிரியம் புரிந்தது.. அவருக்கு மட்டும் அனுராதாவின் மீது பாசம் பொங்கவில்லையா..? வருங்கால மருமகள் என்று நினைக்கத்தான் பயமாக இருந்தது.. அதற்கான உத்திரவாதம் இருக்கிறதா..?

அச்சுறுத்தும் உயரத்தில் இருப்பவள் அனுராதா.. அன்பைப் பொழிவதில் மட்டும் செல்வந்தர்களாக இருக்கும் வாசுதேவனின் குடும்பத்தில் அவள் மருமகளாக வருவது சாத்தியமா..?

மகளிடம் இதைப் பற்றிப் பேசிப் பார்க்கலாம் என்று தேடிப் போனார்.. அவள் தமையனுடன் வாய் வளர்த்துக் கொண்டிருந்தாள்..

‘நந்து இருக்கானே…’ தயங்கி நின்றார்..

அண்ணனும் தங்கையும் ஹாலின் சோபாக்களில் கால்மாடு, தலைமாடாக சரிந்தபடி பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்..

“உனக்கென்னடா அண்ணா.. டென்த் வரைக்கும் ஸ்கூல்க்கு சைக்கிளில் போன.. பிளஸ் ஒன், பிளஸ் டூவுக்கு ஆக்டிவ் ஹோண்டா.. காலேஜில பர்ஸ்ட் இயர்ல கால் வைச்சவுடன் ராயல் என்ஃபீல்டுன்னு அப்பாவும், அம்மாவும் உள்ளங்கையில வைச்சுத் தாங்கறாங்க..”

“உன்ன மட்டும் மழையில நனை.. வெயிலிய காய்ன்னு விட்டுடாங்களாக்கும்.. அதே சைக்கிள்.. ஸ்கூட்டியை உனக்கு தாரை வார்த்திருக்காங்களே தங்கம்..”

“கடுப்பைக் கிளப்பாதே.. பிளஸ் டூ முடிகிற வரைக்கும் ஓட்டை சைக்கிள்.. காலேஜீக்கு ஸ்கூட்டி.. ஒரு கண்ணில வெண்ணை.. இன்னொரு கண்ணில விளக்கெண்ணை..”

“விளக்கெண்ணை கண்ணுக்கு நல்லது சிஸ்டர்.. இப்ப உனக்கு என்னதான் பிரச்னை..?”

“ஸ்கூட்டி ரிப்பேர்டா.. ஒரு மாசமா பஸ்ஸில் போய் வர்றேன்.. அதைப்பத்தி கொஞ்சமாவது கண்டுக்கறியா..?”

“கண்டுக்கறதுக்கு என்ன இருக்கு..?”

“நீ பஸ்ஸில் போய் வந்தாத் தெரியும்..”

“அதெல்லாம் பசங்க கூப்பிடறாங்கன்னு போவேனே..”

“சும்மா சொல்லாதே.. பொண்ணுகள சைட்டடிக்க போவேன்னு சொல்லு.. யாரிடம் காது குத்தற..?”

“அண்ணன்கிட்ட தங்கை பேசற பேச்சா இது..? அவளுகள சைட் அடிச்சிட்டாலும் கழுதையில..”

“நீ வேணும்னா பொண்ணுகள முறைக்கிறவனா இருக்கலாம்.. உன் பிரண்ட்ஸ் அப்படியா..?”

“ஊம்.. இது பாயிண்ட்.. ஆனா நந்தினி.. என் கூடப் பஸ்ஸில ஏறினா ஒரே பாட்டிக கூட்டமா இருப்பாங்களாம்.. இறங்கப் போற ஸ்டாப்பில அழகிகள் கூட்டமா ஏறுவாங்களாம்.. நீ இந்த பஸ்ஸில வர்றேன்னு பெண்கள் கூட்டம் தெறிச்சு ஓடிருச்சுன்னு அவனுக வெறுத்துப் போயிருவானுக..”

“ஸோ சேடு.. ஸோ சேடு.. உனக்குப் போய் பிரண்ட்ஸா இருக்கானுக பாரு.. அவனுகளுக்கு இப்படித்தான் சோதனை வரும்.”

அண்ணன் தங்கையின் அரட்டையில் வாசுதேவனின் இதழ்களில் புன்சிரிப்பு அரும்பியது.. இந்த மகிழ்ச்சியும் குதூகலமும் அவரது பிள்ளைகளை விட்டு அகலாமல் இருக்க வேண்டுமே என்ற அச்சம் மனதில் வந்ததில் வந்த புன்னகை மாயமாய் மறைந்தது.. மனைவியிடம் மனபயத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று தேடிப் போனால்.. அவள் சமையலறையில் வேலைக்காரப் பெண்மணியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.. அன்று ஞாயிறு.. விடுமுறை தினம்.. பெற்றவர்களும், பிள்ளைகளும் வீடு தங்கும் நாள்.. விசேச சமையல்.. துணி மணிகளைத் தோய்த்தல்.. வீட்டை ஒட்டடை அடித்துச் சுத்தப் படுத்தி வைத்தல் என்று வேலை நெட்டி முறிக்கும்.. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விடுமுறை தினத்தில்தான் அதிகப்படியான வேலைகள் குவிந்திருக்கும்..

“உனக்கு யாரு சாந்தின்னு பேரு வைச்சது..?”

“இன்னாம்மா.. இப்புடிக் கேட்டுப் புட்டீக.. அல்லாருக்கும் ஆரு பேரு வைப்பாங்க..? அப்பன், ஆத்தாதான..? எங்க வூட்டுலயும் அப்படித்தான் பேரு வைச்சிருக்காங்க.. அதுக்கு இன்னாங்கறிங்க..?”

“என்னாங்கிறேனா..? ஒரு நிமிசம் அமைதியா இருக்கறியா..! எப்பப் பாரு லொடலொடன்னு பேசித்தள்ளிக்கிட்டே இருக்கிற.. வாசலுக்குத்தான் பூட்டுப் போட முடியுது.. உன் வாய்க்குப் பூட்டுப் போட முடியுதா..? உன் புருஷன் அயர்ன் பண்ணித் தள்ளி என்ன பிரயோசனம்..? உன்ன அடக்க முடியலயே..”

“அத்தோட பாட்டன் பூட்டன் வந்தாலும் அஃது முடியாதும்மா.. அஆங்.. ஆரு நானு..?”

“சாந்திதான..? வீடு மாறி வந்துட்டியா..?”

“இன்னாம்மா.. அந்தாளப் போலவே பேசிக்கினு கீறிங்க.. அதுதான் நான் குடும்ப இஸ்திரி மாதிரி இல்லேன்னு பினாத்துதுன்னா, நீங்களுமா..?”

“என்னது..? குடும்ப இஸ்திரியா..? அடிப்பாவி சாந்தி.. புருசன்காரன் அயர்ன் பண்றவனா இருந்தா குடும்ப ஸ்திரியை குடும்ப இஸ்திரியாக்குவியா..?”

“இன்னாம்மா உங்களோட பேஜாராக்கீது.. என்வாயில வர்றதத்தான வச்சுத் தள்ள முடியும்..?”

“என்னவோ செய்.. இப்பக் கொஞ்சம் வேலையைச் செய்..”

“எங்கேம்மா செய்றது..? அடிபட்டதில கை, காலெல்லாம் நோவா இருக்குது..”

“அடி பட்டிருக்கா..? எப்படி..? உன் புருசன் அடி கை வைச்சுட்டானா..?”

“அதுக்கு அம்புட்டுத் தைரியமெல்லாம் கிடையாதும்மா.. என்கிட்டக் கை நீட்டினா, நீட்டின கையை முறிச்சுற மாட்டேன்..?”

“அதான.. யாரு நீ..? வேற யாரும்மா உன்னை அடிச்சது..?”

“குழாயடிச் சண்டையில யாரு, யாரை அடிக்கிறான்னு பாத்துக்கிட்டு இருக்க முடியுமாம்மா..? சகட்டு மேனிக்கு அடிக்க வேண்டியதுதான்.. சகட்டு மேனிக்கு அடியை வாங்க வேண்டியதுதான்..”

“எனக்கென்னவோ சாந்தி.. உன் புருசன்தான் ஆள்களை செட் பண்ணிக் குழாயடிச் சண்டையில உன்னைப் பந்தாடச் சொல்லியிருக்கனும்னு தோணுது..”

“அப்படிங்கறிங்க.. நான் இத்தை யோசிக்கலயே..”

சாந்தி முகவாயில் கைவைத்து பலமாக யோசித்து விட்டு..

“இருக்கும்மா..” என்றாள் நிச்சயமாக..

‘குச்சியை முறிச்சுப் போட்டுட்டா.. இன்னைக்கு சாந்தி புருசனுக்கு மண்டகப்படி நிச்சயம்..’ மறுபடியும் வாசுதேவனின் இதழ்களில் புன்னகை உதித்தது..

நிர்பயமாக விளையாட்டும், சிரிப்புமாக இருக்கும் அவரது குடும்பத்தின்மீது எவர் கண் பட்டதோ என்ற துயரம் அவர் மனதை கவ்வியது.. சற்றுமுன் நடந்ததைப் போல.. உதித்த புன்னகை உடனே மறைந்தது.. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்ற திகில் மட்டும் அவர் மனதில் மாறாமல் மையம் கொண்டது..

அனுராதா அழகானவள்.. அமைதியானவள்.. குணவதி.. நந்தகுமாருக்குப் பொருத்தமான மனைவியாகவும் அவரது குடும்பத்திற்கு நல்ல மருமகளாகவும் அவள் இருப்பாள் என்பதில் அவருக்கு யாதொரு சந்தேகமும் இல்லை.. அதற்கு அவளுடைய குடும்பத்தினர் சம்மதம் தருவார்களா என்றுதான் சந்தேகப் பட்டார்..

“நந்துவ அனுராதாவிடம் அதிகமாப் பழக வேண்டாம்ன்னு சொல்லு யமுனா..” இரவின் தனிமையில் மனைவியிடம் கோரிக்கை வைத்தார்..

“ஏன்..?” அவள் முறைத்தாள்..

“நான் தப்பாச் சொல்லலைடி.. அந்தப் பொண்ணு சின்னப் பொண்ணு.. இப்பத்தான் பர்ஸ்ட் இயர்ல ஜாயின் பண்ணியிருக்கு.. நம்ம நந்து ஃபைனல் இயர்ல இருக்கான்.. படிப்பை முடிக்கலை..”

“அதுக்கு..?”

“சின்னப் பிள்ளைக வெள்ளாமை வீடு வந்து சேருமாடி..?”

“ஐயா.. வாத்தியாரே.. நான் வாத்திச்சி.. நாத்து நடறவ இல்லை.. விவசாயப் பழமொழி சொன்னா எனக்குப் புரியாது..”

“உனக்கா புரியாது..? சரி.. உனக்குப் புரிகிறதைப் போலவே சொல்கிறேன்.. சின்னப் புள்ளைக கட்டற மணல்வீடு அடுக்கு மாடிக் கட்டிடமா ஆகாதுடி.. அலையடிச்சா கரையற மணல்வீடு அது..”

“ம்ப்ச்.. உங்க வாயில ஏன் இப்படி வருது..? நந்து காதலிக்கிறான்.. எனக்கு அது மட்டும்தான் தெரியுது..”

யமுனா கோபத்துடன் அவருக்கு முதுகு காட்டித் திரும்பிப் படுத்து உறங்கி விட்டாள்.. வாசுதேவனுக்குத்தான் உறக்கம் வரவில்லை.. அவருக்கு நந்தகுமாரின் காதல் மட்டுமே தெரியவில்லையே.. அதனுடன் சேர்ந்து வரும் அபாயங்களும் தெரிகின்றனவே.. இதை அவருடைய குடும்பத்தினர்க்கு எப்படி புரிய வைக்கப் போகிறார்..?

0Shares

Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link