Chapter 19

0Shares

‘அனுராதா எங்கே..?’

இந்தக் கேள்வி மட்டும்தான் நந்தகுமாரின் மனம் முழுவதும் வியாபித்திருந்தது.. அவனது படிப்பு முடிந்து விட்டது.. இறுதியாண்டின் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே அவனுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்திருந்தது.. அடுத்தடுத்து நடந்த பரபரப்பான நிகழ்வுகளில் அவனால் நேரம் ஒதுக்கி அனுராதாவைச் சந்திக்க முடியவில்லை.. இதனூடே கோபிகாவின் தந்தைவேறு மருத்துவமனையில் இருந்தார்.. அவரது வைத்தியச் செலவுக்கு அதிக அளவில் பணம் தேவைப்பட்டதாகச் சொன்ன கோபிகா.. அவளுடைய தந்தையின் நண்பர்கள் அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்தாலே போதுமானது என்று சொல்லி அவர்களுக்குப் போன் செய்தாள்… அவர்களும் உடனடியாகப் பணத்தைப் புரட்டி விட்டார்கள்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலிருந்து கொண்டு கோபிகாவை வரச் சொல்ல.. அவள் நந்தகுமாரைத் துணைக்கு அழைத்தாள்.. மறுக்க முடியுமா..? தோழியாயிற்றே என்று நந்தகுமார் துணைக்குப் போனான்.. இதில் இறுதியாண்டு மாணவர்கள் விடை பெறும் விழாவேறு.. அன்றாவது அனுராதாவைப் பார்த்துவிட வேண்டும் என்று தேடினால் அவள் இவன் கண்களில் படாமல் ஓடி விட்டாள்..

“அனுராதா வந்திருந்தாடா.. நான் பார்த்தேனே..”

அர்ஜூன் அடித்துச் சொன்னான்.. வினய், கோகுலாவது நந்தகுமாருக்காக பொய் சொல்லலாம்.. அர்ஜூன் அப்படியில்லையே.. அவன் உள்ளது உள்ளபடி சொல்கிறவன் ஆயிற்றே..

‘அவ எங்கே போனா..?’

நந்தகுமார் போன் பண்ணினால் ‘ஸ்விட்ச் ஆஃப்..’ என்று வந்தது..

“காலேஜ் ஓப்பன் ஆனா வந்துட்டுப் போறாங்க.. நீ காலேஜிலேயே மீட் பண்ணிரலாமில்ல..” நந்தினி தமையனைச் சமாதானப் படுத்தினாள்..

“இல்லை நந்தினி.. அத்தனை நாள் என்னாலே வெயிட் பண்ண முடியாது.. காலேஜ் ஃபேர்வெல் பங்சனில் இந்த கோபிகா ஒரு பாட்டைபாடி வைச்சுட்டா.. அதைக் கேட்டவ முகமே மாறிருச்சாம்.”

“மாறிருச்சாம்ன்னா..? நீ அவங்களைப் பார்க்கலையா..?”

“எங்கே பார்க்கிறது..? காலேஜ் ஸ்டூன்ட்ஸ் சேர்மன்.. பங்சன் ஏற்பாடுகளில் பிசியா இருந்துட்டேன்..”

“தல, தலன்னு உன்னை எல்லாரும் தலயில தூக்கி வைச்சுக் கொண்டாடுகிறாங்கங்கிற மிதப்பில நீ காதலியைக் கண்டுக்காம இருந்தா வேலைக்கு ஆகுமாடா அண்ணா..? அவங்க ‘ஜூட்’ விட்டதில தப்பே இல்லைம்பேன்..”

“ஏய்ய்..! காலேஜீக்குத்தான் நான் ஸ்டூடன்ட் லீடர் அவளுக்கு அப்படியா..? அவபொறுமையா இருந்து என்னைப் பார்த்துப் பேசிட்டுப் போயிருக்கலாமில்ல..?”

“எல்லோரும் உன்னைப் புரிஞ்சுக்கிட்டு உனக்கேத்ததைப் போல இருக்கனும்னு நினைக்கிறது சுயநலம்டா அண்ணா.. நீயேன் அவங்களைப் புரிஞ்சுக்கலை..? அவங்களுக்காக மாறலை..?”

“அது.. அது.. வந்து..” நந்தகுமார் திணறினான்..

ஏன் அவன் மாறவில்லை..? அனுராதாவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மற்ற வேலைகளைப் பின்னுக்குத் தள்ளவில்லை..? கோபிகாவுக்குத் துணைக்கு ஆள் வேண்டுமென்றால் அவளுடைய தோழிகளை உடன் அழைத்துச் செல்லச் சொல்லித் தவிர்த்திருக்கலாமே.. அர்ஜூன் அதைத்தானே செய்யச் சொன்னான்.?

“திஸ் இஸ் டூ மச் நந்து..? நீயேன் கோபிகாவோட கவலைகளைத் தூக்கி உன் தலையில போட்டுக்கற..?”

“நம்ம பிரண்டுடா மச்சி..”

“அப்படின்னு நீதான் சொல்ற.. அவ வேற மாதிரி காலேஜ் முழுவதும் பரப்பி விட்டுக்கிட்டு இருக்கா.. அது உனக்கு நல்லதில்லடா..”

“விடுடா.. விடுடா..”

அர்ஜூனை பேச்சை விடச் சொல்லி விட்டு இவன் அனுராதாவை விட்டு விட்டானோ..

“சரி.. உன் பேச்சுக்கே வர்றேன்.. ஃபிரண்ட்ஷிப்புக்காக அவ கூடச் சுத்தறேன்னு சொல்றியே.. நீ மட்டும்தான் அவளுக்குப் ஃபிரண்டா..? வேற ஃபிரண்டே இல்லையா..?”

மண்டையில் உறைப்பதைப் போலதானே அர்ஜூன் புத்தி சொன்னான்..? அது ஏன் நந்தகுமாரின் புத்திக்கு உரைக்கவில்லை..? இவன் என்ன செய்தாலும் அனுராதா இவனை விட்டுப் போய் விட மாட்டாள் என்ற அதீத தன்னம்பிக்கை செருக்கைக் கொடுத்து விட்டதா..?

“அந்த கோபிகாவும்.. அவளோட முகரக்கட்டையும்.. அவளையெல்லாம் ஒரு ஃபிரண்டுன்னு சொல்லிக்கிற பாரு.. உன்னைச் சொல்லனும்.. அப்படிப்பட்டவளை உன் ஃபிரண்டுன்னு சொல்லிக்கிட்டு இருந்தா.. அனுராதா ஏன் தன் காதலை மறுபரிசீலனை செய்யலாமேன்னு யோசிக்க மாட்டாங்க..?”

“செய்திருவாளா..? அவ அப்படிச் செய்திருவாளா..?”

“சும்மா ‘சந்திரமுகிகாரு..’ மாதிரிக் குதிக்காதே.. அந்த கோபிகாக் குரங்கு அப்படி என்ன பாட்டைப் பாடித் தொலைச்சான்னு சொல்லித் தொலை.. நீயாய் வினையை இழுத்து விட்டுக்கற..”

“பிருந்தாவனமும்.. நந்தகுமாரனும்.. யாவருக்கும் பொது செல்வமன்றோன்னு ஒரு பாட்டு இருக்கில்ல..”

நந்தகுமாரின் குரல் இறங்கியிருந்தது.. அனுராதாவைப் போன்ற மென்மையான மனமும், குணமும் கொண்டவள் அந்தப் பாட்டைக் கேட்டதும் பொறாமைக்கு ஆட்பட மாட்டாளா..?

“கிழிஞ்சது போ..” தலையில் அடித்துக் கொண்டாள் நந்தினி..

“நந்தினிக் குட்டி..” நந்தகுமார் தங்கையை தாஜா செய்தான்..

“குட்டி, தொட்டின்னு கொஞ்ச வந்த.. ரோஜாத் தொட்டியத் தூக்கி உன் தலமேல போட்டிருவேன்.. ‘தல’யாம் ‘தல..’ உன்னையெல்லாம் பூந்தோட்டக் காவல்காரன்னு உன் 

தோஸ்த்துக பூப்போட்டு கொண்டாடுறானுக பாரு.. அவனுகளைச் சொல்லனும்.”

“நான் என்ன செய்யட்டும்..? நானா கோபிகாகிட்ட இந்தப் பாட்டைப் பாடச் சொன்னேன்..?”

“வாயால் சொன்னால்தானா..? அதுக்கான தைரியத்தைக் கொடுத்தது யாரு..? நீதானே.. அனுராதா ரொம்பவும் சென்சிட்டிவ் டைப் அண்ணா.. காதலிக்கிறேன்னு சொல்ற.. இதைக்கூட நீ புரிஞ்சுக்கலைன்னா.. என்னத்தை நீ காதலிச்சு.. ம்ஹீம்..”

“கோபிகா பாட்டுப் பாடினப்ப நான் ஆடிட்டோரியத்திலேயே இல்லை நந்தினி.. சீஃப் கெஸ்ட்டை ரிஸீவ் பண்ணப் போயிட்டேன்.. திரும்பி வந்தப்ப ராதா அங்கே இல்லை..”

“உன்னை..” பல்லைக் கடித்த நந்தினி..

“இப்ப நான் என்ன செய்யனும்..? சொல்லித்தொலை..” என்றாள்..

“அவளோட தாத்தா, பாட்டி வீடு அடையாறில இருக்கு.. எனக்காக அங்கே போய் ராதாவிடம் பேசிப் புரியவை..”

“முடியுதான்னு பார்க்கிறேன்..”

சத்தியமூர்த்தியின் வீட்டிற்கு முன்னால் தங்கையை இறக்கி விட்டு விட்டுத் தெரு முனையில் காத்திருந்தான் நந்தகுமார்.. போன வேகத்தில் திரும்பி வந்த நந்தினி..

“வீட்டில் யாரும் இல்லையேடா அண்ணா… வேலைக்காரங்கதான் இருக்காங்க.. குடும்பத்தோட ஃபாரின் போயிட்டாங்களாம்..” என்று தகவல் சொன்னாள்..

“ஃபாரினுக்குப் போயிட்டாளா..? என்னிடம் சொல்லாமலா..?”

“நீ மட்டும் அவங்ககிட்டச் சொல்லிட்டுத்தான் கோபிகாகூட ஊரைச் சுற்றினியா..? அடங்குடா அண்ணா.. அவங்க உன் கைக்குள்ளே இருக்கிறாங்க என்கிற ஆணவம்தானே உன்னை ஆட வைச்சது..? இப்பப் புரியுதா..? அவங்க உலகம் சுற்றுகிற அப்பாவுக்கு மகள்.. கோடிஸ்வரி.. உனக்காக உன் கைக்குள்ள இருந்தாங்க.. எப்பவுமே கைப் பொருளுக்கு மதிப்பிருக்காது அண்ணா.. நீயும் அப்படித்தான்..”

வயதில் சிறியவளாக இருந்தாலும் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னாள் நந்தினி.. கைப்பொருளைத் தவற விட்ட ஏமாளியாக நந்தகுமார் பித்துப் பிடித்தவனைப் போல உலகமெல்லாம் சுற்றி வந்தான்.. அனுராதாவைத் தேடினான்.. கண்டு பிடிக்க முடியவில்லை..

நந்தினி சொன்ன செய்தியைக் கேட்டதும் திகில் பிடித்தவனைப் போல அவன் நின்றுவிட.. அவள் பயந்து போனாள்..

“நீயாடா அண்ணா இப்படி நிற்கிறது..? உன் தைரியம் எங்கே போச்சு..? காதல் உன்னைக் கோழையாக்கிருச்சா.. அவங்க என்ஜினியரிங் பர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ட்.. செகண்ட் இயரைக் கண்டினியூ பண்ணக் காலேஜீக்கு வந்துதானே ஆகனும்.. அப்ப அவங்களை மீட் பண்ணு.. இனிமே அவங்க மனது புண்படுகிறதைப் போல நடந்துக்க மாட்டேன்னு பிராமிஸ் பண்ணு.. எல்லாம் சரியாகிரும்..” தமையனுக்கு ஆறுதல் சொன்னாள்..

எதுவும் சரியாகவில்லை.. அனுராதா கல்லூரிக்குத் திரும்பவில்லை.. அவள் வெளிநாட்டில் படிப்பைத் தொடரப் போகிறாள் என்று கல்லூரி அலுவலகத்தில் சொன்னார்கள்.. நந்தகுமார்.. கோல்டு மெடல் வாங்கித் தேர்ச்சி பெற்றிருந்தான்.. நியுயார்க் கம்பெனி ஒன்றில் அவனுக்கான வேலை காத்திருந்தது.. உடனடியாக வேலையை ஒப்புக் கொள்ளக் கிளம்பியாக வேண்டும்.. அனைத்தையும் மறந்தவன் அனுராதாவின் இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்காக சத்தியமூர்த்தியின் வீட்டுக்குப் போனான்.. புயல் போல பங்களாவுக்குள் பிரவேசித்தவனை வரவேற்பறையில் கால் மேல் கால் போட்டுத் தோரணையாக சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்த பீம்சிங் எதிர் கொண்டார்.. தடைகள் எதுவும் இல்லாமல் அனுராதாவின் தோழன் என்றவுடன் பங்களாவுக்குள் அனுமதிக்கப்பட்டதில் நந்தகுமாரின் மனதில் ஓரத்தில் கேள்வி இருந்ததுதான்.. எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ளும் துணிவோடுதான் அவன் சென்றிருந்தான்..

“யார் நீ..?” பீம்சிங்கின் பார்வை அவனைத் துளைத்தது.. 

“அனுராதா எங்கே..? அவளிடம் கேட்டால் நான் யாரென்று சொல்லுவாள்..” நிமிர்வாக பதிலளித்தான் நந்தகுமார்..

“ஓ.. அவளிடம் கேட்காமலா உன்னை வீட்டுக்குள் அனுமதித்திருப்போம்..? நீ யாரென்றே அவளுக்குத் தெரியாதாமே..” துச்சமாக அவனைப் பார்த்தபடி சொன்னார் பீம்சிங்..

“நான் நம்ப மாட்டேன்..”

“ஹேய் மேன்..! நீ நம்ப வேண்டுமென்ற அவசியம் எனக்கில்லை.. நான் யார்.. என் மகள் யார்.. அவளது உயரம் என்ன.. என்பதையெல்லாம் தெரிந்த வைத்திருந்தால் எங்கள் நிழலை நெருங்கும் துணிவுகூட உனக்கு வந்திருக்காது.. ஆப்டர் ஆல்.. ஸ்கூல் டீச்சர்ஸின் மகன் நீ.. உனக்கு மல்ட்டி மில்லியனரின் மகள் கேட்கிறதா..? என் மகளின் பெயரைச் சொல்லக்கூட ஒரு தகுதி வேண்டும்.. நீ படிக்கும் காலேஜில் அவளும் படிக்க வந்தால் அவளுக்கு நீ இணையாகி விடுவாயா..? ஓடிப் போய் விடு..”

“அனுராதா இருக்கும் இடம் தெரியாமல் போக மாட்டேன்.”

“ஹேய்.. நீ கெட்டிக்காரனாக இருந்தால் என் மகள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்துக் காட்டு பார்க்கலாம்..”

அன்றைக்கு அவனுக்குச் சவால் விட்ட பீம்சிங்கை மைசூரில் மறுபடியும் சந்தித்திருக்கிறான் நந்தகுமார்.. அவரது மகளின் இருப்பிடத்தைக் கண்டு கொண்டவனாக அவரிடம் நெஞ்சை நிமிர்த்திப் பேசி விட்டு வந்திருக்கிறான்.. ஆறு வருடங்கள் நிற்காமல் அவன் அனுராதாவைத் தேடி ஓடிய ஓட்டத்திற்குப் பலன் கிடைத்திருக்கிறது.. நந்தகுமார் அவனது ராதை இருக்குமிடத்திற்கு வந்து நின்று விட்டான்..

0Shares

Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link