Chapter 20

0Shares

ஜன்னலின் திரையை விலக்கினாள் அனுராதா.. வானம் மேகக் கூட்டங்கள் இல்லாமல் நிர்மலமாகக் காட்சி தந்தது.. அதிகாலை வானம் அழகானதாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.. மனதில் புத்துணர்வு பரவியது எதனால்..? தினமும் சென்ற அலுவலகக் கட்டிடம் சில தினங்களாக அவளுக்கு மிகவும் பிடித்த தினமாக மாறிப் போனதன் மர்மம் என்ன..?

வெப்பம் மறைந்து மண்வாசனையுடன் கூடிய மழைக்காற்று முகத்தை மோதி.. நாசிகளில் நுழையுமே.. அதுபோன்றதொரு சுகானுபவம்.. சடசடவென பொழியும் மழைத்துளிகள் உடலை நனைக்கும் போது உண்டாகுமே ஒரு சிலிர்ப்பு.. அது போன்றதொரு எதிர்பாராத ஆனந்தம்.. கடலலைகளில் கால் நனைய நின்றிருக்கும் போது.. கரையைத் தொட்டுத் திரும்பும் அலைகள்.. பாதங்களின் அடியில் உள்ள மணலை அரித்து இழுக்கும் போது கால் தடுமாறி சிரிப்போமே.. அது போன்தொரு அழகிய சிரிப்பு என அவளது நாள்கள் வர்ணங்களைப் பூசி வண்ணமயமானதாக மாறிப் போய் விட்டன..

இவையெல்லாம் எதனால் என்று அறியாத அளவுக்கு அவள் ஒன்றும் பச்சைக் குழந்தையல்ல.. அலையடித்த அவள் மனது அமைதியடைந்திருப்பது அவளது நந்தகுமாரனைக் கண்ட பின்னால்தான் என்பதை அவளது ஆழ்மனம் அறியும்.. அனைத்தையும் மறந்து தூக்கித் தூர எறிந்து விட்டு சலனமற்ற மனதுடன் அவள் நடமாடிக் கொண்டிருப்பதைப் போல நடித்துக் கொண்டிருப்பது ஒன்றும் எளிதான ஒன்றல்ல.. அதிலும் மனதை மறைக்கத்தெரியாத அனுராதாவிற்கு அது மிக, மிக, மிகக் கடினமான ஒன்று..

இருந்தும் அவள் நடித்தாள்.. அவளது அந்த ராத்மாவைத் தட்டி எழுப்பும் புல்லாங்குழலை இசைக்கும் நந்தகுமாரனை மறக்கப் போராடினாள்.. எவ்வளவுதான் போராடினாலும் மறக்க முடியாமல் அவனது முகம் அச்சடித்த சித்திரம் போல அவளது ஆழ் மனதில் உறைந்து நின்றது.. அவளது நினைவில் கலந்த அவனது முகம் மறந்து போகுமா..?

‘ஆசை முகம் மறந்து போச்சே – இதை

ஆரிடம் சொல்வேனடி தோழி..?

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்

நினைவு முகம் மறக்கலாமா..?’

என்று பாரதி வடித்த காதலியே புலம்பி விட்டாள்.. அனுராதா புலம்பவில்லை.. அவளது மனம் நந்தகுமாரனின் ஆசை முகத்தை மறக்கவில்லை.. நேசம் மறக்கவில்லை அவள் நெஞ்சம்.. அவள் நினைவு அவன் முகம் மறக்கவில்லை.. அவள் கண்ணில் தெரிந்தது.. தினம் அவன் தோற்றம்.. அவளது நந்தகுமாரனின் முகத்தை அதில் அவள் கண்டாள்..

அனுராதாவின் மனதில் பொங்கிய குதூகலம் அறையை விட்டு வெளியேற வைத்தது.. கால் தடுக்காமல் நைட்டியை இறுக்கிப் பிடித்தபடி அவள் மாடிப்படிகளில் துள்ளிக் குதித்து இறங்கினாள்.. ஹாலில் கண்ணாடிக் கதவுகளைத் துடைத்துக் கொண்டிருந்த வேலைக்காரப் பெண் அனுராதாவை வியப்புடன் பார்த்தாள்.. இத்தனை மகிழ்வாக தன் எஜமானியை இதுவரை அவள் பார்த்ததில்லை.. வயதில் சிறியவளாக இருந்தும் மெலிதான சோகம் அனுராதாவின் முகத்தில் எப்போதும் படர்நதிருக்கும்.. பாரம் சுமக்கும் தொழிலாளியின் வேதனையை மிகப் பெரும் கோடிஸ்வர முதலாளியின் முகத்தில் அந்த வேலைக்காரப் பெண் பார்த்திருக்கிறாள்.. மேகம் சூழாத நிலவின் அழகை அன்று அனுராதாவின் முகம் வெளிப்படுத்தியது..

தோட்டத்தில் உலவிய அனுராதா தனக்குத்தானே பேசிச் சிரித்துக் கொண்டாள்.. நகத்தைக் கடிப்பதும்.. உதட்டைச் சுழிப்பதுமாக ஓர் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.. பூச்செடிகளின் மீது மழைத்துளிகளின் ஈரம் தேங்கியிருந்தது.. முதல் நாள் இரவு பெய்த மழையின் துளிகள் பனி படர்ந்ததைப் போல பச்சிளம் செடிகளின் மீது படிந்திருந்ததைப் பார்க்கும் போது உற்சாகமாக இருந்தது.. மழைநாளின் காலை வேளைகள் அழகானவை என்று நினைத்துக் கொண்டாள்.. அந்த வார்த்தைகள் அவளுக்கு மிகவும் பரிச்சயமானவை போலத் தோன்றின.. எதனால் என்று யோசித்தாள்..

‘மழைநாளின் மாலைவேளைகள்

அழகானவை அன்பே..!

சாலையோரம் பூ உதிரும்

மரத்தடியில் நின்று கண்கள் கலக்க

கதை பேசலாமா.. வா கண்மணி..!’

நந்தகுமாரன் சொன்ன கவிதை இது.. மழை பெய்யும் மாலை வேளைகளில் அவளுடன் சாலையோர மரத்தடியில் நின்று கதை பேசுவதை அவன் விரும்புவான்..

‘அதனால்தான் மழைநாளின் இந்தக் காலை நேரத்தை எனக்குப் பிடிக்கிறதோ..’ அனுராதாவுக்கு ஏக்கமாக இருந்தது..

அவர்கள் மைசூரில் வசிக்கிறார்கள்.. பிருந்தாவனம் இருக்கும் ஊர்.. நந்தகுமாரன் மலர்களை ரசிப்பவன்.. பூங்காவனமான பிருந்தாவனத்தை எந்த அளவுக்கு ரசிப்பான்.. அவனுடன் இந்த மழை நாளின் மாலை நேரத்தில் பிருந்தாவனத்தில் வலம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..

அனுராதாவின் முகம் வாடியது.. பழைய நாள்கள் திரும்புமா என்று மனம் சோர்ந்தாள்.. அவளுக்காக அவன் ஏங்கியிருக்கிறான்.. பித்துப் பிடித்தவனைப் போல ஓரிடத்தில் தங்காமல் உலகம் முழுவதும் சுற்றித் தேடியிருக்கிறான்.. அவள்மீது உண்மையான காதல் இல்லாமலா அவளைத் தேடி அலைந்திருப்பான்..? கோபிகாவின் மீது எண்ணமிருக்கிறவன் அவள் பின்னால்தானே அலைந்திருக்க வேண்டும்..? அவளை விட்டு விட்டு அனுராதாவைத் தேடி ஏன் அலைய வேண்டும்..? அனுராதா கோடிஸ்வரி என்பதற்காகவா தேடினான்..?

‘அவனுக்கு என் ஸ்டேட்டஸ் பத்தியே தெரியாதே..’

அனுராதாவின் முகத்தில் கர்வம் வந்தது.. அது காதலிக்கப் படுவதால் வரும் கர்வம்.. ரௌத்திரம் கொண்ட முரடன் ஒருவன் தன் வாழ்வே அவள்தான் என்று தேடியிருக்கிறான் என்பதினால் உண்டான கர்வம்.. காதலில் வென்ற காதலியின் கர்வம்..

நான் எங்கே கூப்பிட்டாலும் நந்தகுமார் வந்து விடுவான் என்று கோபிகா சொன்னாளே.. அனுராதா கூட இருந்தபோதே கோபிகா கூப்பிட்டதும் சென்று விடுபவனை அனுராதா விட்டுப் பிரிந்து சென்ற பின்னால் கூப்பிடாமல் இருந்திருப்பாளா..? இவன் அவள் பின்னால் செல்லாமல் அனுராதாவைத் தேடுவதில் தன் காலத்தைச் செலவழித்திருக்கிறானே.. அனுராதா ஒன்றும் அவனை ‘வா..’ என அழைக்கவில்லையே..

அழைக்காமலே ஆலிங்கனம் செய்ய வருபவன்தான் காதலன்.. தன் காதலின் சக்தியில் பூரித்துப் போனாள் அனுராதா.. பேத்திக்காக காபிக் கப்பை ஏந்தி வந்த ராதிகா தோட்டத்தைத் தொட்டதும் அப்படியே நின்று விட்டாள்.. அன்றுதான் மலர்ந்த மலரைப் போலப் பொழிவுடன் இருந்த பேத்தியின் முகம் அவளை சந்தோசம் கொள்ள வைத்தது.. இந்த சந்தோசம் இத்தனை தினங்களாக எங்கே ஒளிர்ந்திருந்தது..?

“அனுவா போகிறது..?”

சத்தியமூர்த்திக்கு காபி கொண்டு வந்த ராதிகா புருவங்களை உயர்த்தியபோது சத்தியமூர்த்தி புன்னகையுடன் பேப்பரை விட்டு முகம் விலக்கி மனைவியைப் பார்த்தார்..

“நம்ம பேத்திதான் ராதிகா..”

“எங்கே போறா..?”

“தோட்டத்துக்குப் போயிருக்கலாம்..”

“ஈஸிட்.. இத்தனை நாளா தோட்டத்துப் பக்கமே எட்டிப் பார்க்காதவ தோட்டத்துக்குப் போயிருக்காளா..? ஐ ஆம் சர்ப்ரைஸிங்.. ரூமை விட்டு வெளியே வர மாட்டாளே..”

“இன்றைக்கு வந்திருக்கிறா..”

“வாட் எ கிரேட் சேன்ஜ்..”

ராதிகாவின் கண்கள் பனித்தன.. அவளது அருமை மகளின் மகள்.. தாயில்லாத பேத்தி.. தாத்தா பாட்டியின் அரவணைப்பில் இருப்பவள்.. கோடிக்கணக்கான சொத்துக்களின் வாரிசு.. அவள் முகத்தில் சிரிப்பில்லை.. எதையோ தொலைத்து விட்ட சோகம் மட்டும் சொந்தமாக நிராசையை கண்களில் பிரதிபலித்துக் கொண்டிருந்தாளே.. பணமிருந்தால் மட்டும் மனதிற்கு சந்தோசம் கிடைத்து விடுமா..? பணத்தினால் எதை வேண்டுமானாலும் வாங்கி விடலாம்.. உண்மையான சந்தோசத்தையும், மனநிம்மதியையும், அன்பையும் விலைக்கு வாங்கி விட முடியுமா..?

சிறுவயதிலேயே தாயை இழந்து விட்ட பேத்திதான் சத்தியமூர்த்திக்கும், ராதிகாவுக்குமான பற்றுகோல்.. அவர்களது வாழ்க்கை அனுராதா மட்டுமே.. இனியாவின் மறைவை அவளது மகளின் முகம் பார்த்துத்தான் அவர்கள் தாங்கிக் கொண்டிருந்தார்கள்.. அந்தப் பேத்தி தாயும் இல்லாமல்.. தகப்பனையும் அணுக முடியாமல் ஊட்டி கான்வெண்டில் வளர நேர்ந்த கொடுமையை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. பேத்தி நன்முறையில் படிக்க வேண்டும் என்பதற்காக பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார்கள்.. விடுமுறை நாள்களில் அனுராதா தாத்தா, பாட்டியிடம் வருவாள்.. அந்த நாள்கள்தான் அந்த வயோதிகத் தம்பதிகளின் சொர்க்கம்..

அனுராதா கல்லூரிப் படிப்பை சென்னையிலேயே படிக்கட்டும் என்று பீம்சிங் சொன்னபோது அவர்களின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.. அந்த ஒருவருடமும் அனுராதா எவ்வளவு சந்தோசமாக இருந்தாள்..! அந்த சந்தோசம் ஒர்நாள் தொலைந்து போனது.. சிறகொடிந்த பறவையாக அவள் ராதிகாவின் மடியில் விழுந்து கதறி அழுத போது சத்தியமூர்த்தியும் ராதிகாவும் துடித்துப் போனார்களே.. சென்னையை விட்டுத் தூரமாக போய் விட வேண்டும் என்று அனுராதா தவித்தபோது.. அதற்க்கென்ன என்று பேத்தியுடன் வெளிநாட்டிற்குப் பறந்தார்கள்.. அதன் பின்னால் அவள் எங்கோ.. அங்கேதான் அவர்களும் இருந்தார்கள்..

“இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..” சத்தியமூர்த்தி ராகம் பாட..

“அனுவின் கம்பெனியில் புதிதா ஒரு சீஃப் என்ஜினியர் ஜாயின் பண்ணியிருக்கானேமே..” என்று ராதிகா கேட்டாள்..

“உனக்குத்தான் தெரிந்திருக்கே..”

“அந்த நந்தகுமாரா..?”

“ம்ம்ம்…”

தோட்டத்துப் பூக்களுடன் ஒரு பூவாக நின்றிருந்த பேத்தியைப் பார்த்தபோது இவளது ஆனந்தம் அந்த நந்தகுமார்தான் என்று நினைத்துக் கொண்டாள் ராதிகா..

0Shares

Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link