Chapter 04
இன்னும் தான் முழுமையாக விடுபட்டு விடவில்லை என்பது ராதாவிற்கு புரிந்துதான் இருந்தது..
அறைக்கதவு மூடியது மூடியதாகவே இருந்தது.. யதுநந்தன் கைகளை மட்டும்தான் விலக்கிக் கொண்டான்.. நகர்ந்து நிற்கவில்லை.. அவன் கண்களில் தெரிந்த கோபமும் மறையவில்லை..
“பதிலுக்குப் பதில்னு நீங்கள் நினைத்தால் அதே கரிப் பொடியை அள்ளி என் முகத்தில் பூசிவிடுங்கள்.. நான் அதே முகத்துடன் இந்தக் கல்யாண மண்டபத்தில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வருகிறேன்.. நீங்க சிரித்து மகிழ்ந்துக்கங்க.. உங்கள் மனம் சரியாகிவிடும்.. அதை விட்டுவிட்டு.. இது என்ன நடவடிக்கை சொல்லுங்க..?”
“செய்வதையும் செய்துவிட்டு.. என்னமாய் எனக்கு பிளான் போட்டுக் கொடுக்கிற..? ம்ம்.. கெட்டிக்காரித்தான்.”
அவர்கள் வழக்காடிக் கொண்டு இருந்தபோது.. அறைக்கதவு.. படபடவென்று தட்டப்பட்டது.. ராதா முகம் வியர்த்தாள்..
“பார்த்தீங்களா.. நீங்கள் யோசிக்காமல் உள்ளே வந்து கதவைத் தாழ்போட்டு விட்டீங்க.. இப்ப என்ன நடந்து கொண்டிருக்கிறது.. பாருங்க..? நான் கதவை எப்படித் திறப்பேன்..? நீங்களும் நானும் பூட்டிய கதவிற்குப் பின்னால் இருப்பதை மத்தவங்க பார்த்து விட்டால் நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்க..? இப்படிச் செய்து விட்டீங்களே..”
“புலம்பாதே.. நான் ஏதாவது வழி கண்டு பிடிக்கிறேன்..”
யோசனையுடன் அறையைச் சுற்றுமுற்றும் பார்த்த யதுநந்தனின் முகம் பளிச்சிட்டது..
“நான் பாத்ரூமிற்குள் போய்க் கதவைத் தாழ் போட்டுக்கறேன்..”
“கதவைத் தாழ்போடுவதில் தான் நீங்கள் கில்லாடியாச்சே..”
“திரும்பவும் வாய் விட்டாயானால் நான் போட்ட தாழ்ப்பாளை நானே திறந்து.. வெளியே கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறவங்களுக்கு ‘பேட்டி’ கொடுத்து விடுவேன்.. செய்யவா..? எப்படி வசதி..?”
“நான் பேசியது தப்புதான் சாமி.. கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்.. நீங்கள் பாத்ரூமுக்குள் போய் பத்திரமாய் இருங்க..”
“அது.. அந்த பயம் மனதில் இருக்கட்டும்..”
விரலை நீட்டி எச்சரித்தவன்.. பாத்ரூமிற்குள் சென்று கதவை அடைக்கப் போனான்.. ஏதோ நினைத்தவனாய்..
“ஒரு விஷயம்..” என்றான்..
“என்ன..?”
“உள்ளே யார் இருக்கிறாங்கன்னு வந்திருப்பவங்க கேட்டால் என்ன சொல்வாய்..?”
“உங்கள் பெயரையா சொல்ல முடியும்..?”
“ஏன்.. சொல்லித்தான் பாரேன்..”
“கடவுளே.. என் சொந்த பந்தங்களில் யாராவது ஒருவரின் பெயரைச் சொல்லி சமாளித்துக் கொள்கிறேன்..”
“வெரிகுட்.. பை..”
பாத்ரூமிற்குள் ஒளிந்து கொள்வதற்கு எதற்கு இவன் ‘பை…’ போடுகிறான் என்று மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்ட ராதா.. அறைக் கதவைத் திறந்து விட்டாள்..
“இவ்வளவு நேரம் கதவைத் திறக்காமல் என்ன பண்ணிக் கொண்டிருந்த..?” என்று கேட்டபடி.. சுபா உள்ளே வந்தாள்..
“தூங்கிட்டேண்டி..”
“தூக்கமா..? கல்யாண மண்டபத்திலா..? நல்ல வேலை செய்கிற போ.. கீழே நானும்.. லாவண்யாவும் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகி விட்டது..”
“ஏன்.. என்ன விஷயம்..?”
“உனக்கு விஷயமே தெரியாதில்லையா..? காலையில் நம்முடன் தகராறுக்கு வந்தானே அந்தக் குரங்கு மூஞ்சி வில்லன்..”
பாத்ரூமிற்குள் இருக்கும் யதுநந்தனின் முகம் இதை கேட்டதும் எப்படி மாறுமோ.. என்ற கவலையுடன் ராதா ஒருமுறை பாத்ரூமை திரும்பிப் பார்த்துக் கொண்டாள்..
“ஏண்டி.. அவருக்கென்ன..?”
“அவராமே.. அவர்.. குட்டிச் சுவர்.. நீ ஒருத்திதாண்டி காலையிலிருந்து அவனை.. ‘அவர்’ போடுகிற..” சுபா சலித்துக் கொண்டாள்..
பாத்ரூமில் இருந்த யதுநந்தனுக்கு சுபா பேசியது தெளிவாகக் காதில் விழ.. அவன் நெற்றியில் சிந்தனை ரேகை படிந்தது..
“விடுடி.. இப்ப அவரைப் பற்றி ஏன் பேசுகிற..?”
“நம்ம மூஞ்சியெல்லாம் ஒரு மூஞ்சியான்னு கேட்டானில்ல.. அவன் மூஞ்சியில் நாங்க கரியைப் பூசிட்டோம்..”
“என்னடி.. செய்து தொலைத்தீங்க..?”
“பாராட்டுவதைவிட்டுவிட்டு திட்டு.. மாடிப்படிக்கு அடியிலிருக்கிற பாத்ரூமிற்கு.. நம் வில்லன் சார் வந்தார்.. நாங்க மாடிப்படி மேலேயிருந்து கரித்தூளை அவன் முகத்தில் கொட்டி விட்டோம்.. அவன் முகமெல்லாம் கரி அப்பி.. ஹா.. ஹா.. ஹா.. பார்க்கவே சகிக்கவில்லை.. ஹா..ஹா.. ஹா..”
ராதா அவசரமாய் எழுந்து பாத்ரூமின் கதவை வெளியே தாழிட்டாள்..
“போதும் சிரித்தது..”
ராதா நிம்மதியுடன் பாத்ரூமை பார்த்துக் கொண்டாள்.. இதைச் செய்தது அவளில்லை என்பதை அவன் புரிந்து கொண்டிருப்பான் என்று நினைக்கும் போதே..
‘அவன் நினைவைப் பற்றி நீயேன் இவ்வளவு கவலைப்படுகிறாய்..?’ என்று கேட்டது.. அவளுடைய மனது..
‘அதுதானே.. அவன் என்னைப் பற்றி என்ன நினைத்தால் எனக்கென்ன..? சுபா சொல்லியபடி அவன் வில்லன் போலத்தானே என்னிடம் நடந்து கொண்டான்..?’ என்று நினைக்கும் போதே.. அவளுடைய பேச்சைக் கேட்டு.. விலகி நின்ற அவனுடைய செயல் அவளுக்கு நினைவிற்கு வந்தது..
சுபா.. கொஞ்ச நேரம் தான் கரி பூசிய சம்பவத்தை சொல்லிச் சிரித்துவிட்டு.. எழுந்து சென்று விட்டாள்.. ராதா அவசரமாய் பாத்ரூம் கதவைத் திறந்து விட்டாள்.. யதுநந்தன் அவளைப் பார்த்தபடி வெளியே வந்தான்..
“நான்தான் உள்ளே தாழ் போட்டிருந்தேனே.. அப்புறம் எதுக்கு.. நீயும் வெளியே தாழ் போட்ட..? என்னை உள்ளே வைத்து பூட்டிவிட திட்டம் போட்டிருந்தாயா..?”
“சத்தியமாய் இல்லை.. எதற்கும் இருக்கட்டும்ன்னு தான் நான் வெளியே தாழ்போட்டேன்..”
“உண்மையான காரணம் என்னன்னு நான் சொல்லவா..?”
“சொல்லுங்க..”
“அந்த சுபா.. நடந்ததைச் சொல்லி விட்டாள்.. நான் கோபத்தில் வெளியே வந்து அவளை எதுவும் செய்து விடுவேனோங்கிற பயம் உனக்கு..”
ராதா மௌனம் சாதித்தாள்.. யதுநந்தன் குற்ற உணர்வுடன் அவளுடைய முகத்தைப் பார்த்தான்.
“ஐ ஆம் ஸாரி..”
“இதற்கு ‘பரவாயில்லை’ன்னு நான் பதில் சொல்வேன்னு நினைத்தீங்களா..? நான் அப்போதே இதைத்தான் கேட்டேன்.. கோபத்தில் நீங்க முறை தவறியிருந்தால்.. இப்போது உண்மை தெரிந்ததும்.. அதை சீர் பண்ணிவிட உங்களால் முடியுமா..?”
உணர்ச்சி வயப்பட்டதால் ராதாவின் முகம் செக்க செவேலென்று சிவந்திருந்தது.. அந்தச் சிவந்த முகத்தை பார்த்தபடி யதுநந்தன் நிதானமான குரலில் கூறினான்.
“நிச்சயம் சீர் பண்ணிவிட என்னால் முடியும்..!”
“எப்படி..?”
“உன் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டிவிட்டால்.. நடந்த தவறு.. சரியாகி விடாதா..?”
ராதா பேச்சிழந்தாள்.. ‘இது என்ன இவன் இப்படி சொல்கிறானே..’ என்று இருந்தது அவளுக்கு..
“தட்ஸ் குட்.. ஒரு பெண்ணை விருப்பமில்லாமல் ஒருவன் பலவந்தப்படுத்திவிட்டு.. அவள் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா…? எந்த ஊர் நியாயம் இது..?”
“நம்ம ஊர் நியாயம்தான்.. அதுசரி.. என் மேல் உனக்கு விருப்பமில்லையா.. என்ன..?”
அவன் சிரித்துக் கொண்டே அறையைவிட்டு வெளியேறிவிட்டான்.. ஒரு வினாடி உறைந்து நின்ற ராதா.. அவசரமாய் மாடிப் படிகளின் அருகே ஓடிச் சென்று பார்த்தாள்.. படிகளில் இறங்கிக் கொண்டிருந்தவன் சட்டென்று திரும்பி அவளைப் பார்த்து கை அசைத்து விட்டுச் சென்றுவிட்டான்..
‘என் மனதைத் திருடிச் சென்று விட்ட கள்வன்..’
‘யார் அவன்..?’
அவளது இதயம் கேள்வி கேட்டது.. அவள் அவசரமாய் கீழே இறங்கிச் சென்றாள்.. யதுநந்தன் யாரோடோ பேசிக் கொண்டிருந்தவன்.. இவளது வருகையை எதிர்பார்த்தவன் போல் ரகசியப் புன்னகை பூத்தான்.. ராதாவிற்கு வெட்கமாகி விட்டது..
‘கண்டு கொண்டானே..’
அவள் வேலையிருப்பது போன்ற பாவனையில்.. மணப்பெண்ணின் அருகே சென்று… அவளது காதோரம் குனிந்து.. எதையோ கேட்டுவிட்டு.. உள்ளே சென்றாள்.
அவள் போகும் திசையெல்லாம் யதுநந்தனின் பார்வையும் போனது.. அவன் முரளியின் அருகே சென்று உட்கார்ந்து கொண்டான்..
“இவ்வளவு நேரமாய் எங்கேடா போயிருந்த..?”
“ம்ம்.. புதையல் ஒன்றைக் கண்டுவிட்டேனா.. அதைத் தோண்டி எடுக்கப் போயிருந்தேன்..”
“நீ செய்தாலும் செய்வ.. வா.. போகலாம்..”
“எங்கே..?”
“இது என்னடா கேள்வி.. கல்யாணத்திற்கு வந்தோம் கல்யாணம் முடிந்து விட்டது.. இனி அவரவர் வீட்டிற்குப் போக வேண்டியதுதானே..”
“பொறுடா.. போகலாம் எனக்கு இந்தக் கல்யாண வீட்டின் கலகலப்பு பிடித்திருக்கிறது..”
“யது.. நீயாடா பேசுகிறாய்..? கல்யாணம் பண்ணிக் கொள்கிறவர்களைக் கண்டாலே உனக்கு கொலைவெறி வருமேடா..?”
“இப்போ கள்வெறி வருகிறது..”
அவனைக் கடந்து போன ராதாவைப் பார்த்தவாறு அவன்கூற.. அவள் மின்னலென ஒரு பார்வையை அவன் மீது பாய்ச்சிவிட்டுச் சென்றாள்.. முரளி.. ‘ஆ’ வென்று வாய் பிறந்தான்..
“மச்சான்.. இது எப்போதிருந்துடா நடக்குது..”
“கொஞ்ச நேரமாகத்தான்..”
“உனக்குக் கூடக் காதல் வருமாடா..?”
“இது காதலான்னு தெரியலை..”
“முதலில் அப்படித்தான் இருக்கும்..”
“நீ இதில் கரை கண்டவனாச்சே..”
‘என்னத்தை கரை கண்டேன்.. இதுவரை ஐந்து பெண்களுடன் காதல் வந்தது.. எல்லோரும் கடைசியில் கல்யாண இன்விடேசனைக் கையில் கொடுத்துவிட்டு.. ‘டாட்டா’ காண்பித்து விட்டுப் போய் விட்டாங்க..’
“உன்னைக் காதலித்தால்.. அவங்களுக்கு கல்யாணம் சீக்கிரம் நடந்து விடும்ன்னு யாராவது ஜோஸியம் சொல்லியிருப்பாங்க போல்.. என்ன ராசியான ஆள்டா நீ..”
“நானே நொந்து நூடுல்ஸாகியிருக்கேன்.. நீ வேறு கரண்டியைப் போட்டுக் கிளறாதே..”
முரளி கடுப்புடன் கூறிக் கொண்டிருந்ததை கவனிக்காதவனாய் யதுநந்தன்.. அருகில் அமர்ந்திருந்த சுபாவை அழைத்தான்..
Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.