Chapter 06

0Shares

 ‘ஒரு பாக்கம் பார்க்கிறா..

ஒரு கண்ணைச் சாய்க்கிறா..

அவ.. உதட்டைக் கடிச்சுக்கிட்டு..

மெதுவா சிரிக்கிறா.. சிரிக்கிறா..

காலாலே.. நிலத்திலே..

கோலம் போட்டுப் பார்க்கிறா..’

போன வாரத்தில் – சின்னத் திரையில் போட்ட ‘தேன் கிண்ணம்’ நிகழ்ச்சியில் பார்த்த பழைய பாடல் சுபாவிற்கு நினைவிற்கு வந்தது..

“ராதா..” அதட்டினாள் அவள்..

“ம்ம்.. என்னடி..?” உலுக்கிப் போட்டவளாய் தன்னிலைக்கு வந்தாள் அவள்..

“இப்படி உட்கார்..”

ராதா தயக்கத்துடன் அவளருகே அமர்ந்தாள்.. அவளுடைய அடிப்பார்வை.. அடிக்கடி.. ஆவலுடன் யதுநந்தனின் பக்கம் பாய்வதையும், அவனது பார்வையை உணர்ந்து அவள் முகம் சிவக்க.. அவசரமாய் பார்வையை தாழ்த்திக் கொள்வதையும் கண்ட சுபாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது..

‘போயும்.. போயும்.. இந்த வில்லனின் மூஞ்சியைத் தானா இவளுக்குப் பிடித்துப் போக வேண்டும்..’ என்ற கடுப்புடன் யதுநந்தனை முறைத்தாள்.

“முரளி.. இவங்க ஏன் கண்ணகியைப் போல் என்னைப் பார்க்கிறாங்கன்னு கேட்டு வை..!”

சுபாவிற்கு இன்னும் கோபம் அதிகரித்தது..

“அதைக் கேட்க அவர் யார்..?”

“ஏன்டா.. இவ்வளவுதானா நீ.. இன்னும் உன் பெயர் ஊரை இவங்க கிட்டே சொல்லவில்லையா..?”

“இதோ.. இந்த நொடியில் சொல்லி விடுகிறேன்டா..” என்று நன்றியுடன் நண்பனைப் பார்த்த முரளி..

“ஹாய்.. ஐ’யாம் முரளி.. பி.ஈ சாஃப்ட்வேர் என்ஜினீயர்.. சோனா கம்ப்யூட்டர் சொலுஷனில் 

வொர்க் பண்ணுகிறேன்.. நீங்க என்ன பண்ணிக் கொண்டிருக்கிறீங்க..?” என்று முடியை ஸ்டைய்லாய் கோதியபடி சுபாவிடம் கேட்டான்..

‘பரவாயில்லையே.. வெட்டியாய் சுற்றாத ரகம் போல இருக்கே..’ என்று மனதில் வியந்தபடி..

“வேறு என்ன பண்ணிக் கொண்டிருக்கிறேன்..? நீங்கள் போடும் அறுவையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்..” என்று வெளியே முறைப்பாய்.. மூக்கை உடைப்பது போல் பதில் கொடுத்தால் அவள்..

“ஹா.. ஹா.. குட் ஜோக்..”

“இது.. ஜோக்..? ம்ஹூம்.. ராதா நான் போகிறேண்டி..”

சுபா.. ராதாவிடம் சொல்லியபடி முரளியை நோக்கி ஒரு பார்வைக் கணையை வீசிவிட்டு நகர.. அவன் அவசரமாய் எழுந்த அவளைப் பின் தொடர்ந்தான்..

யதுநந்தன் இப்போது.. ராதாவின் அருகேயிருந்த நாய்காலிக்கு மாறி உட்கார.. அவள் சங்கடத்துடன் எழுந்து கொள்ள முயன்றாள்..

“ஸ்ஸ்.. இப்போது எங்கே போகப் பார்க்கிற.. உன்னை இங்கே வரவழைக்க.. உன் ஃப்ரெண்டின் மூஞ்சியைப் பார்த்து நான் பேச வேண்டியதாய்ப் போய் விட்டது.. பேசாமல் அடங்கி உட்கார்..” என்று அடிக்குரலில் சினந்தான் யதுநந்தன்..

அவனது ஆளுமை உரிமையான அதட்டலைக் கேட்டு அவள் மனம் பரவசம் கொண்டது… ஆனால் நெருங்கிய உறவினர் தவிர.. மற்றவர்கள் வெளியேறிருந்த திருமண மண்டபத்தில்… அங்கொருவரும்… இங்கொருவருமாய் ஆள்கள் உட்கார்ந்திருக்க.. ரதாவின் மனதில் பயம் கவிழ்ந்தது..

“யாராவது பார்த்தால் தப்பாக எடுத்துக் கொள்வார்கள்..”

“ஈஸிட்..? கொஞ்ச நேரத்திற்கு முன்னால் பூட்டிய ரூமிற்குள் என்னிடம் மாட்டிக் கொண்டாய்.. அப்போது கூட நீ இந்த பயம் பயப்படவில்லை.. நிதானமாய் எனக்கு நீதி போதனை பண்ணிக் கொண்டிருந்தாய்.. இப்போது, இத்தனை பேர் சுற்றியிருக்கும்.. வெளி ஹாலில் என்னுடன் சும்மா உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்க இப்படி பயப்படுகிறாயே.. இதை நான் என்னான்னு சொல்வது..?”

ராதா சற்று இயல்பாகி அவன் முகம் பார்த்தாள்.. மாநிறத்தில்.. வரிசைப் பற்கள் தெரிய புன்னகைத்தவனிடம் தெரிந்த வசீகரம் அவளை மயங்கச் செய்தது.. அவள் மயங்கிப் போனாள்.. தன் மயக்கத்தை அவன் உணர்ந்து விடக் கூடாது என்று கவலை கொண்டாள்..

“சொல்லு..”

“என்ன சொல்ல..?”

“என்னிடம் சொல்ல உனக்கு எதுவுமேயில்லையா..?”

அவள் சட்டென்று அவனைப் பார்த்தாள்.. அவனது பார்வையில் இருந்த ஏதோ ஒன்று அவளை அவன் பக்கம் ஈர்த்தது..

‘என்ன மாதிரியான பார்வை இது..? குறும்பு கொப்பளிக்கும் பார்வை.. மனதை ஊடுருவிப் பார்க்கும் எக்ஸ்ரே பார்வை.. பார்த்தே என்னை மயக்குகிறானே இந்தக் கள்வன்… என்மேல் உனக்கு விருப்பமில்லையான்னு கேட்டானே.. என் விருப்பம் தெரிந்தால் என்ன செய்வானாம்..? பிருத்விராஜன்.. சம்யுக்தையை குதிரை மேல் வைத்துக் கொண்டு போய் விட்டது போல.. என்னையும் கொண்டு போய் விடுவானா..?’

‘அப்படி அவன் கொண்டு போய் விடக் கூடாதா..’ என்று அடிமனம் ஆசைப்படுவதை வியப்புடன் உணர்ந்தாள் ராதா..

‘இருந்திருந்து.. இவனைச் சந்தித்து.. அரைநாள் கூட ஆகவில்லை.. அதற்குள் இப்படி என்னை இவன்மேல் பைத்தியமாக்கி விட்டானே.. இவன் மாயக் கண்ணனேதான்.. அந்தக் கள்வனேதான்..’

அந்த மாயக் கள்ளன் அவளது தவிப்பை உணர்ந்தது போல் வாய்விட்டுச் சிரித்தான்.. அவன் சிரிக்கும் போது அவன் கண்களும் கூடச் சேர்ந்து சிரிக்கும் அழகை அவள் ரசித்துக் கொண்டிருந்தாள்..

‘இப்படி ஒரு சிரிப்பைச் சிரிக்க இவனால் மட்டும் தான் முடியும்..’

காலையில் அவனைக் கண்டதும் மோதியவள்.. இப்போது மனதில் அவன் மேல் ஏற்பட்டுவிட்ட எல்லையற்ற பிரேமையைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் தவித்தாள்..

“ராதா..?”

“ம்ம்..”

“என் பெயரென்னன்னு உனக்குத் தெரியுமா..?”

“தெரியாது..”

அவள் விழிகள்.. அவன் விழிகளைச் சந்தித்தன.. ‘பெயர் கூடத் தெரியாமலா நீ என்னை இந்த அளவுக்கு விரும்புகிறாய்..?’ என்று அவன் விழிகள் கேட்டன..

“என் பெயர் யதுநந்தன்.. முரளியைப் போல.. நானும் பி.ஈ. முடித்துவிட்டு சோனா கம்ப்யூட்டர் சொலுஷனில் சாஃப்ட்வேர் என்ஜினீயராய் வேலை பார்க்கிறேன்..”

“அப்படியா..?”

“என்ன.. அப்படியா’ன்னு சாதாரணமாக கேட்கிறாய்..?”

“வேறு எப்படிக் கேட்க..?”

அவள் புரியாமல் வினவினாள்.. முரளி அவனைப் பற்றி சொல்லியதைக் கேட்டதும்.. சுபாவின் விழிகள் காட்டிய ஆச்சரியத்தையும் மரியாதையையும் அவள் விழிகள் காட்டவில்லை..

‘இவள் என்னை.. எனக்காகவே விரும்புகிறாள்..’

இந்த எண்ணம் மனதில் எழ.. அவன் மனதில் தென்றல் அடித்தது..

“படித்துக் கொண்டிருக்கிறாயா..?” மென்மையாய் வினவினான்..

“ம்ம்ம்..?”

“என்ன படிக்கிறாய்..?”

“எம்.எஸ்ஸி.. ஃபர்ஸ்ட் இயர்.. பயோ கெமிஸ்டரி..”

“வெல்.. அப்பாம்மா என்ன பண்ணுகிறாங்க..?”

அவன் வினவிக் கொண்டிருக்கும் போதே.. மகள் யாருடனோ அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்டுவிட்ட மந்தாகினி அங்கே வந்தாள்..

“ராதா.. யாரோடு பேசிக்கிட்டு இருக்க..?” என்று வினவியபடி யதுநந்தனைப் பார்த்தவள்..

“நீங்க.. ரோகிணியின் மகன்தானே தம்பி..?” என்று விசாரித்தாள்..

“ஆமாம் ஆன்ட்டி..” என்று கூறும்போதே..

‘கடவுளே.. இவங்க என்னை என்ன முறை சொல்லிக் கூப்பிடப் போகிறாங்களோ.. தெரியவில்லையே..’ என்று யதுநந்தனின் மனம் அடித்துக் கொண்டது..

“என்ன தம்பி யாரோ போல் பதில் சொல்றீங்க.. ரோகிணி என் ஒன்று விட்ட மாமாவின் மகள்..”

‘பரவாயில்லை.. இங்கே.. ஒரே ஒரு ‘ஒன்றுவிட்ட’ தான் வருகிறது.. ஆனால் என் அம்மா.. இவங்களுக்கு மாமன் மகள்ன்னா.. இவங்க மகள் எனக்கு என்ன உறவு முறையாக வேண்டும்..?

இந்த உறவு முறையைக் கண்டுபிடிக்க யதுநந்தன் கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தபோது..

“அண்ணன் செயக்கியமா தம்பி..?” என்று கேட்டு யதுநந்தனின் வயிற்றில் பால்வார்த்தாள் அந்த மகராசி..

விட்டால் மந்தாகினிக்கு கோவில் கட்டி விழாவே எடுத்துவிடும் உத்தேசத்துடன்.. நன்றி கலந்த பார்வையை பார்த்தபடி.. எதற்கும் இருக்கட்டுமென்று..

“அண்ணன்னு… என் அப்பாவைத்தானே சொல்கிறீங்க அத்தை..” என்று கேட்டு.. உறவு முறையை உறுதிப்படுத்தி கொண்டான் யதுநந்தன்..

‘அடேங்கப்பா.. அதற்குள்.. ஆன்ட்டி.. அத்தையாகி விட்டாங்களா.. இவன் இருக்கிறானே.. பலே.. கில்லாடி..!’

மனதிற்குள் கூறிக் கொண்ட ராதா.. மெச்சுதலாய் யதுநந்தனை பார்த்தாள்..

“உங்க அப்பாவை என் அண்ணன்னு சொல்லாமாமல் வேறு யாரைச் சொல்வேன்..? அவர் என் பெயரிப்பா மகளின்.. சின்னம்மா மகனாச்சே..” என்று மந்தாகினி பாசத்துடன் கூற..

‘ம்ஹூம்.. இவங்களும் ஆரம்பித்து விட்டாங்களா..’ என்று அரண்ட பார்வை பார்த்தான் யதுநந்தன்..

“என்ன தம்பி முழிக்கிறீங்க.. இன்னும் விவரமாய் சொல்லணுமா..” என்று மந்தாகினி விச்ராந்தியாய் அங்கே உட்கார்ந்துவிட..

“ஐயோ அத்தை.. அதெல்லாம் வேண்டாம்.. நீங்கள் சொன்னால் போதாதா..? விளக்கம் வேறு வேண்டுமா..?” என்று கையெடுத்து கும்பிடாத குறையாய் அவன் வேண்டி கொண்டதும், போனால் போகிறது என்று மந்தாகினி அந்தப் பேச்சை அத்துடன் விட்டு விட்டாள்..

“என்னங்க.. இங்கே கொஞ்சம் வாங்க..” என்று வாசல் பக்கமிருந்து வந்த கணவரை அழைத்தாள் மந்தாகினி..

“என்ன மந்தாகினி..” என்றவாறு அருகில் வந்தார் ஆனந்தன்..

“இந்தத் தம்பி யாரு தெரியுமா..?” மந்தாகினி ஆரம்பிக்க.. யதுநந்தன் ராதாவிற்கு மட்டும் கேட்கும்படி சன்னமாய் முணுமுணுத்தான்..

“உன்னை யார்.. குலம் கோத்திரத்தில் பிறந்து வைக்கச் சொன்னது..? வேறு மதம்.. வேறு இனம்னு இருந்திருந்தால்.. இப்படி.. அண்ணன்.. தங்கை உறவு முறை வந்து விடுமோன்னு அரண்டு போகத் தேவையில்லையே.. இதில் வேறு உன் அம்மா.. உறவு முறையின் வரிசைச் சங்கிலியைச் சொல்லி மிரட்டிக்கிட்டு இருக்காங்க..”

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்.. நேரம் கிடைத்தால்.. அடிக்கடி வீட்டுக்கு வந்து போகச் சொல்லி ஆனந்தன் அழைப்பு விடுக்குமளவிற்கு அவர்களது குடும்ப ஜோதியில் ஐக்கியமாகி விட்டான் யதுநந்தன்..

0Shares

Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link