Chapter 07

0Shares

நீலக் கடலின் மேல் வெள்ளைச் சிறகுகள் முளைத்தது போல்.. அலைகள் புரண்டு வந்தன.. கரைமீது காதலுடன் மோதிவிட்டு நாணித் திரும்பி ஓடின..

அலையில் கால் நனைத்தவாறு.. யதுநந்தனோடு இணைந்து நடந்து கொண்டிருந்தாள் ராதா.. வெள்ளை நிறத்தில் தங்கநிற ஜரிகை வேலைப்பாடுகள் செய்த சுடிதார் அணிந்திருந்தாள்.. கரியநிற முடியை.. ‘கிளிப்’ பால் அடக்கி விரிய விட்டிருந்தாள்.. முகம் கொள்ளாத சிரிப்புடன் யதுநந்தனின் விரல்களோடு தன் விரல்களைப் பிணைத்திருந்தாள்..

முரட்டு ஜூன்ஸூம்.. கார்கோ சர்ட்டும் அணிந்திருந்த யதுநந்தன்.. தன் போக்கில் எதையோ கிண்டலாகக் கூறிவிட்டு வரிசைப் பற்கள் தெரிய சிரித்தான்.. அந்தச் சிரிப்பில் மயங்கி நின்றவளைப் பார்த்து கண்சிமிட்டி..

“என்னடி.. அப்படிப் பார்க்கிற..” என்று கேட்டான்.

வழக்கம்போல அவனது அந்த அழைப்பில் கிறங்கிப் போனாள் ராதா..

“நீங்கள் சிரிக்கும் போது எப்படியிருக்கிறது தெரியுமா..?”

“எப்படி இருக்கிறது..?”

“முல்லைப் பூக்களை வரிசைகட்டி வைத்திருப்பது போல் பளீர்னு இருக்கிறது..”

“ஊஹூம்..?”

“எப்படித்தான் இப்படி ஒரு அழகான பல்வரிசை உங்களுக்கு அமைந்ததோ..”

பேசியவாறு ராதா கரையோரமாய் மணல் திட்டின் படகோரம் அமர.. அருகே அமர்ந்த யதுநந்தன்.. முடிகோதியவாறு அவளைப் பார்த்தான்.

ஏனோ.. அவனை மடி சாய்த்து முடி கோதிவிட வேண்டும் என்ற தாபம் ராதாவுக்குள் எழுந்தது.. அவளது பார்வையிலிருந்து அதைக் கண்டு கொண்டவனாய்..

“என்ன..?” என்றான் அவன் காதலுடன்..

“ஒன்றுமில்லை..”

“நீ ஒன்றுமில்லைன்னு சொன்னால்தான், ஓராயிரம் இருக்கிறதுனு அர்த்தம்.. சும்மா சொல்லு..”

“வந்து..”

“அதுதான் வந்து விட்டோமே..”

“நந்து..”

“ம்ம்.. நந்துதான்.. ஊருக்கெல்லாம் யதுநந்தன்.. சொந்த பந்தம்.. நண்பர்களுக்கு யது.. உனக்கு மட்டும் நந்து..”

“என் நந்து..”

“உன் நந்துதான் போதுமா..? இப்ப எதுக்கு அந்தப் பார்வை பார்த்த.. அதைச் சொல்லு..”

“என் மடியில்..”

அவள் தடுமாறிச் சொல்ல முடியாமல் பாதியில் நிறுத்தியபோது.. யதுநந்தன்.. அவள் மடிசாய்த்தான்.. மனம் நிறைய ஆசையில்.. அவன் கழுத்தை வளைத்தது ராதாவின் கரம்.. அவளது வளையல்களை.. நிரடியவாறு அவன் கதை பேச.. அவன் முடி கோதியவாறு ஊம் கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தாள் ராதா..

மாலையில் வந்தவர்கள்.. இருள் சூழ்ந்ததும் எழுந்து நின்றார்கள்.. பிரிய வேண்டுமே என்ற ஏக்கத்துடன்.. ராதா மௌனமாய்.. கடற்கரை மணலில்.. கால்கள் புதைய.. எதுவும் பேசாமல் நடந்து வந்தாள்..

“என்ன.. உம்முன்னு வருகிற..?”

“ம்ச்ச்..”

“இதுதான் உன்னிடம் எனக்குப் பிடிக்காத குணம்.. தினமும் தான் உன்னுடன் நேரம் செலவழிக்கிறேனே.. அதற்கு மேல் என்ன உனக்கு மனக்குறை..? கூட இருக்கும் போது சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிற.. கிளம்பும் நேரம் வந்தால்.. முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்கிற.. ஒரு நாளாவது முழுமனதோடு.. ‘போய் விட்டு வா..’ன்னு நீயாய் சொல்லியிருக்கிறாயா..? இல்லை.. ‘நேரமாகி விட்டது கிளம்பலாம்..’ன்னு கிளம்பியிருக்கிறாயா..? ஒருநாளும் இல்லை.. ஏன் இப்படி இருக்கிறாய் ராதா..?”

இதற்கு என்ன பதில் சொல்வது..? அலைகடலாய் பொங்கும் மனது.. அவனது அருகாமையில் மட்டும் அமைதியடைவதையும்.. அவன் பிரிந்து விட்டால் ஏக்கத்துடன் மீண்டும் பொங்கி எழுவதையும் எப்படி அவனுக்குப் புரிய வைப்பது..?

இத்தனை நாள்களாய் அவனில்லாமல் எப்படி வாழ்ந்தோம் என்று புரியாமல் மனம் திகைப்பதையும் அவனில்லாமல் வாழவே முடியாது என்ற நிலைமைக்குத் தான் தள்ளப்பட்டிருப்பதையும் எப்படி அவனுக்குப் புரிய வைப்பது..?

அவனருகில் இருக்கும் போது ஒரு நாள்கூட ஒரு நொடியில் மறைவதையும்.. அவன் அருகில் இல்லாத போது ஒரு நொடி கூட ஒரு யுகமாய் தோன்றுவதையும் எப்படி அவனுக்குப் புரிய வைப்பது..?

இருபத்தி நான்கு மணிநேரத்தின் ஒவ்வொரு மணித்துளியும் அவன் நினைவால் அவள் கழிக்கும் போது அந்த இருபத்தி நான்கு மணிநேரத்தின் சில மணித்துளிகளை அவளுக்காக அவன் செலவிட வேண்டும் என்று அவள் ஏங்குவதை எப்படி அவனுக்குப் புரிய வைப்பது..?

பொங்கி எழுந்த பேரலையாய் காதல் அவளை அடித்து செல்வதையும்.. அதில் துரும்பாக சிக்கி அவள் துடித்துக் கொண்டிருப்பதையும் எப்படி அவனுக்குப் புரிய வைப்பது..?

காணக் கிடைக்காத வைரமொன்று கையில் கிடைத்து விட்டால்.. மனித ஜீவன் அதைக் காப்பாற்றி தக்க வைத்துக் கொள்ள நினைப்பது இயற்கைதானே..

ராதாவும் அதைப் போல்தான்.. தனக்குக் கிடைத்த யதுநந்தனின் காதலைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்று தவித்தாள்..

ஒருநாள் அவனைப் பார்க்கமுடியாவிட்டாலும்.. உடைந்து போவாள்.. பைத்தியக்காரி போல்.. வேறு சிந்தனை எதுவுமின்றி.. படிக்காமல்.. சாப்பிடாமல்.. தூங்காமல்.. விடியும் வரை விழித்திருப்பாள்..

மறுநாள் மாலை வரை காத்திருக்க இயலாமல் மனம் தவிக்கும்.. போராடும்.. மாலையில் அவன், முகமெல்லாம் சிரிப்பாய் அருகில் வரும்போது மனம் பொங்கும்..

தான் அனுபவிக்கும் அந்த உணர்வை யதுநந்தன் அனுபவிக்க வில்லையோ என்ற சஞ்சலம் ராதாவுக்குள் வேர் விட்டது..

“என்ன பேசாமல் நிற்கிற..? நீ ஊமையா..?”

‘என் மனம் பாடும் ராகம் உங்களுக்கு கேட்காதபோது நான் வாய் திறந்து பேசி என்ன பயன்..? நான் ஊமைதான்.’

“பேசேண்டி.. பேசாமல் ஏன் என்னை.. இந்தப் பாடுபடுத்துகிற..?”

‘உன்னைக் கண்டுகொண்ட நாள் முதலாய்.. நான்படும் பாடும்.. என் மனம் படும் பாடும்.. உனக்குப் புரிகிறதா என்ன..?’

“இந்தக் கருமத்திற்குத்தான் காதல் என்ற வார்த்தையை நான் நினைத்தே பார்த்ததில்லை..”

யதுநந்தன் எரிச்சலுடன் கூற.. ராதாவின் மனம் புண்ணானது.. துக்கம் தொண்டையை அடைக்க.. பதில் பேசாமல் அவனது வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.. யதுநந்தனின் அப்பாச்சி சீறிப் பாய்ந்தது.. அவளது வீடிருக்கும் தெருமுனையில் இறங்கிக் கொண்டவளைப் பார்த்து..

“பை..” என்றான்..

ராதா.. பதில் சொல்லாமல்.. இறுகிய முகத்துடன் தலையை அசைத்தாள்.. யதுநந்தனுக்குக் கோபம் வந்து விட்டது..

“ஹலோ.. ‘பை’ சொன்னால்.. சிரித்த முகத்துடன் பதிலுக்கு ‘பை’ சொல்லணும்..” என்றான்..

“நீ பிரிவைச் சொல்வாய்.. நான் சிரித்துக் கொண்டே எப்படி உனக்கு விடை கொடுக்க..!”

தாயின் மடியைப் பிரிய முடியாத மழலையாய் அவள் மனம் மறுகினாள்..

“உன் கூட நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்தாலும் உனக்குத் திருப்தியே வராதா ராதா..?”

“பை..”

“இப்படி அழுது வடிந்து கொண்டு ‘பை’ சொல்லு.. ஒரு மனுசனை எண்ணெய்ச் சட்டியில் போட்டு வறுத்தெடுப்பதற்குப் பெயர்தான் காதலா..?”

ராதாவின் இதயத்தில் ஈட்டி பாய்ந்ததை உணராமல் அவன் போய்விட்டான்.. இருளில்.. மெதுவாக நடந்து.. வீடு வந்து சேர்ந்தாள் ராதா..

இரவின்மடியில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது.. அவள் விழிகள் உறங்காமல் தலையணையை நனைத்தன.. சத்தமில்லாமல் அழ வேண்டி நேர்வதும் பெரும் துயரம்.. மற்றவர்கள் பார்க்க அழுது மனதின் சுமையை இறக்கி வைக்க முடியாமல்.. மனதிற்குள் அழுது கொண்டு.. வெளியில் சிரித்துக் கொண்டு இருப்பது கொடுமை..

‘சொல்லி அழுதால் தீர்ந்துவிடும் – அதைச்

சொல்லத்தானே வார்த்தையில்லை..’

கண்ணதாசன் எப்பேர்பட்ட கவிஞன் என்று ராதாவிற்கு இப்போது புரிந்தது..

“சும்மா.. எப்போப்பார்த்தாலும்.. கண்ணதாசன்.. கண்ணதாசன்னு.. பழைய பாட்டையே போட்டுப் பார்க்கறீங்க..” என்று மந்தாகினியிடம் மல்லுக்கு நிற்பாள்..

“கட்டவிழ்ந்த கண்ணிரண்டும்

உங்களைத் தேடும் – பாதிக்

கனவினிலே இமையிரண்டும்

கண்களை மூடும்..

பட்டு நிலா.. வான் வெளியில்..

காவியம் பாடும் – கண்ட

பள்ளியறைப் பெண் மனது

போர்க் களமாகும்..”

பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ராதாவின் மனதும் போர்க்களமானது எந்நேரமும் அவன் அருகிலிருக்க வேண்டும் என்று அவள் துடித்தாள்.. உடலும்.. மனமும்.. அவனைத்தேட.. அதை, அவனுக்கு உணர்த்தும் வகை தெரியாமல் தவித்தாள்..

“என் தங்கைக்கு முதலில் கல்யாணம் ஆக வேண்டும் ராது.. நீ இப்போதுதானே எம்.எஸ்.ஸி 

ஃபர்ஸ்ட் இயர் படிக்கிற.. முதலில் உன் படிப்பை முடி.. அதற்குப் பின்னால் நம் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கலாம்..”

யதுநந்தன் என்னவோ எளிதாகக் கூறிவிட்டான்.. ஆனால் காத்திருப்பது ராதாவிற்கு எளிதானதாக இல்லை.. அவள் அவன் கரம் பிடிக்க ஆவல் கொண்டாள்.. வெறும் ராதாவாக இருக்கும் தன்னை..

“ராதா யதுநந்தன்..” என்று ஊர் அழைக்க வேண்டும் என்று பேராசை கொண்டாள்.. அவனோடு கலந்து அவனில் ஐக்கியமாகிவிட வேண்டும் என்று கனவு கண்டாள்..

0Shares

Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link