Chapter 11
எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டுத் தனத்துடன் எதிர்கொள்ளும் யதுநந்தன்.. இவ்வளவு தீவிரமான முகபாவத்துடன் பேசவும்.. முரளிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை..
“சரி.. சரி.. விடு.. ஏதோ.. தெரியாமல் பேசிவிட்டேன்.”
முரளி சமாதானமாகக் கூறினாலும்.. யதுநந்தனின் மனம் சமாதானம் அடையவில்லை..
‘இவன் எப்படி, அப்படியொரு வார்த்தையைச் சொல்லலாம்..’
கம்பெனி வாசலில் காரை நிறுத்தி விட்டு இறங்கிய யதுநந்தன் ஆச்சரியப்பட்டுப் போனான்.. அங்கே சுபாவும்.. ராதாவும் நின்றிருந்தார்கள்..
“ஏய்ய்.. என்ன இது.. இங்கே வந்துவிட்ட..?” அவன் உற்சாகமாக விசாரித்தபடி ராதாவின் அருகே சென்றான்.
“ஹலோ.. இங்கே நானும்தான் நிற்கிறேன்.. அவளை மட்டும்தான் உங்க கண்ணுக்குத் தெரியுமா.. என்னைத் தெரியாதா..?” சுபா, பொய்க் கோபத்துடன் கேட்டாள்..
“ஏன் தெரியாமல் போகிறது..? உங்களைப் பார்த்தவுடன் அடடா.. இன்றைக்கு கார் வாங்கிட்டோமுன்னு ஹெல் மெட்டை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டோமே..’னு கவலையில்லை வந்துவிட்டது..”
“யார் கவலைப்படுவது..? நீங்களா..? கவலைப்படும் மூஞ்சிகளே வேறு.. உங்கள் மூஞ்சி.. என்ன மாதிரியான மூஞ்சி..!”
சுபாவின் குரலில் மர்மமான கேலி இருந்தது.. யதுநந்தன் சிரித்துக் கொண்டே..
“சரியான குரங்கு வில்லன் மூஞ்சி..” என்றான்.
“நினைவிருக்கிறதா..?” சுபா விழி மலர்த்தி சிரித்தாள்..
“பின்னே… ஹெல்மெட்டை ஏன் தேடினேன்னு நினைத்தீங்க… நீங்க வீசும் கரிப்பொடியிலிருந்து தப்பிக்கத்தான்..”
இப்போது ராதாவும் அவர்களின் சிரிப்பில் சேர்ந்து கொள்ள.. சிரித்து முடிந்த யதுநந்தன் கேட்டான்..
“எங்கே இந்தப் பக்கம்..? மிச்சம் மீதி இருக்கிற கரித்தூளை வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு பொட்டலம் போட்டு எடுத்துக்கிட்டு என்னைத் தேடி வந்தீங்களா..?”
அதுவரை.. ஸ்டைலாக போஸ் கொடுத்து நின்றபடி சுபாவை காதல் பார்வை பார்த்துக் கொண்டிருந்த முரளிக்கு கோபம் வந்துவிட்டது..
“அது என்னடா.. யாரைக் கண்டாலும்.. அவங்க உன்னைத் தேடித்தான் வந்தாங்கன்னு.. நீயாய் நினைத்துக் கொள்கிற.. சுபா.. என்னைத்தேடி வந்திருக்கிறாங்க.. இல்லையா சுபா..?”
“யெஸ்.. யு ஆர் கரெக்ட்.. நான் உங்களையும் தான் பார்க்க வந்தேன்..”
“அது என்ன.. ‘உங்களையும்தான்’னு ஒரு இக்கன்னா போடுகிறீங்க.. உங்களைத்தான் பார்க்க வந்தேன்னு.. தெளிவாய் சொல்லுங்க..”
“நான் தெளிவாகத்தான் சொல்கிறேன்.. எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிவிட்டது.. இன்விடேஷன் கொடுக்கத்தான் நான் இங்கே வந்தேன்.. யதுநந்தன் எங்களுக்கு உறவுக்காரர்.. அவருக்கு இன்விடேஷன் வைக்க ராதாவை துணைக்கு கூப்பிட்டுக்கொண்டு வந்தேன்.. இங்கே நீங்களும் இருக்குறீங்க.. உங்களுக்கும் ஒரு இன்விடேஷனைக் கொடுத்து விட்டுப் போகலாம்ன்னு நினைத்தேன்.. அதைத்தான் சொன்னேன்..”
“அடடா.. முரளி.. உன் ராசி.. இங்கேயும்வொர்க் அவுட் ஆகிவிட்டதா..?”
யதுநந்தன் முரளியின் காதில் சன்னமாக வினவ.. அவன் முகம் போன போக்கைப் பார்க்க.. யதுநந்தனுக்கே சகிக்கவில்லை..
“நீங்கள் கட்டாயம் வரவேண்டும்..” சுபா கல்யாண அழைப்பிதழை முரளியிடம் நீட்டினாள்..
அவன் வாங்காமல் நிற்க.. யதுநந்தன் இயல்பாக வாங்குவது போல்.. அதையும் வாங்கிக் கொண்டான்..
“ஹலோ.. ஹலோ.. சிக்னல் கிடைக்கவில்லையே..” என்றபடி முரளி அந்த இடத்தை விட்டு விலகி விட்டான்.
“அப்புறம்.. எப்போது.. நீங்களும்.. ராதாவும் எங்களுக்கு கல்யாணச் சாப்பாடு போடப் போறீங்க..?” சுபா உரிமையுடன் வினவினாள்..
“இப்போதுதானே படித்து முடித்திருக்கிறாள்.. முதலில் ஒரு வேலையைத் தேடிக் கொள்ளட்டும்..”
“ஏன் சார்.. வேலைக்குப் போனால்தான் நீங்கள் கல்யாணம் பண்ணிக் கொள்வீங்களா..?”
“அதற்குள் சண்டைக்கு வர வேண்டுமா..? சும்மா வீட்டில் இருந்தால் தேவையில்லாத சிந்தனைகள் வரும் அது எதற்கு..? படித்த படிப்பு வீணாகாமல் வேலைக்குப் போவது நல்லதுதானே.. பெண்கள் தன் காலில் நிற்பது அவசியம்ங்க..”
“ஏண்டி.. ராதா.. நீ இப்போது உன் காலில் தானே நிற்கிற..?”
சுபா ராதாவின் காலைப் பார்க்க..
“சந்தேகமிருந்தால் நன்றாகப் பார்த்துக் கொள்.. நான் என் காலில் தான் நிற்கிறேன்..” என்று அவள் கால் மாற்றி நின்று காட்டினாள்..
அவர்கள் மூவரும் சிரித்த சிரிப்புச் சத்தம் முரளியின் காதில் நாராசமாய் வந்து விழுந்தது..
அவன் மறைவில் நின்று கவனித்தான்.. ராதாவின் பார்வை.. ஆசையுடன் யதுநந்தனின் மீது படிந்து விலகுவதையும்.. அவளது பார்வைக்கு சளைக்காமல் யதுநந்தன் பதில் பார்வை கொடுப்பதையும் பார்த்து முரளி முகம் கடுத்தான்..
‘இவனுக்கு மட்டும் எல்லாமே கைகூடி விடுகிறது..’
பொறாமை என்பது.. மற்றவரை மட்டுமல்ல.. பொறாமை கொள்பவரின் மனத்தையும் பொசுக்கி விடும் தன்மை வாய்ந்தது..
முரளியின் மனதில் தோன்றிய பொறாமையில் யதுநந்தனின் மேல் அவன் கொண்டிருந்த நட்பு பொசுங்கிக் காணாமல் போய்விட்டது..
சுபாவின் திருமணத்திற்கு யதுநந்தன் வந்திருந்தான்.. ராதா, திருமண மண்டபத்தில் ஓடி.. ஆடி.. வேலை செய்யும் சாக்கில் அவனைக் கண்குளிர பார்த்துக் கொண்டிருந்தாள்..
முகூர்த்த நேரத்தில் சுபாவின் கழுத்தில் தாலி ஏறியபோது.. ‘தன் கழுத்தில் என்று யதுநந்தன் தாலி கட்டுவான்..’ என்று அவளுக்கு ஏக்கம் தோன்றியது..
அதே நினைவுடன் அவள் யதுநந்தனைப் பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. இருவரின் விழிகளும் சந்தித்துக் கொண்டன.. ராதாவின் ஏக்கம் யதுநந்தனைத் தாக்கியது..
‘சீக்கிரமாய்.. யாமினிக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும்..’ என்று நினைத்துக் கொண்டான்..
மாலையில்.. அதே மண்டபத்தின் தோட்டத்தில் திருமண வரவேற்பு நடந்தது..
மெல்லிசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.. மேடையில் ராதாவின் வயதையொட்டிய உறவுக்காரப் பெண்கள் பாட, ராதாவையும் பாடச் சொல்லி.. விழிகளால் சமிக்ஞை செய்தான் யதுநந்தன்..
அன்று முழுவதும் அவனது அருகாமை கிடைத்து விட்ட சந்தோஷத்தில் ராதாவின் மனம் பொங்கித் ததும்பியது.. அவள் மேடையேறி பாட ஆரம்பித்து விட்டாள்..
“நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்..
நீ வர வேண்டும்..
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்..
நீ வர வேண்டும்..
கடந்த வருடம் நடந்ததெல்லாம்..
மனதின் ஏட்டிலே..
கனிந்து வரும் புது வருடம்..
புதிய பாட்டிலே..”
ராதாவிற்கு சங்கீத ஞானம் கிடையாது.. ஆனால் சங்கீதத்தை ரசிக்கும் கேள்வி ஞானம் உண்டு.. மெல்லிய குரலில் அவள் பாடிக் கொண்டிருக்க.. அது தனக்கான பிரத்யேக பாட்டு என்பதால்.. யதுநந்தன் கால்மேல் கால் போட்டுக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தமர்ந்து ரசிக்க ஆரம்பித்தான்..
“மாதா கோயில் மணியோசை..
நம்மை வாழ்த்தும் அருளோசை..
தேவா.. நீயும்.. வா..
உருகும் மெழுகில் ஒளியுண்டு..
ஒளியின் நிழலில் உறவுண்டு..
உயிரே.. தேடி வா..
வருங்காலம் பொன்னாக..
வாழ்நாளில் ஒன்றாக..
எதிர்பார்த்த நேரத்தில்..
எனைத் தேடி வாராயோ..
நெஞ்சே என்னிடம்..
நினைவோ உன்னிடம்..”
ராதாவின் குரலில் ஒருவித சோகம் இழையோடுவதை யதுநந்தன் கவனிக்கத்தான் செய்தான்.. அவன் மேலிருக்கும் அளவு கடந்த காதலால்.. அவள் மனத்துயரம் கொள்வதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.. ராதா.. அவன்மேல் பார்வையைப் பதித்து.. தொடர்ந்து பாடினாள்..
“இதயம் எனது காணிக்கை..
இணைவோம் என்ற நம்பிக்கை..
அழைத்தேன்.. ஓடிவா..
ஓடும் காலம் ஓடட்டும்..
இளமை நின்று வாழட்டும்..
அழகே.. தேடிவா..
உனக்காக பெண்ணுண்டு..
உறங்காத கண்ணுண்டு..
தனக்காக வாழாமல்..
தவிக்கின்ற நெஞ்சுண்டு..”
அவளைப் பிரிந்து செல்லும் வேளை வந்து போது.. வழக்கம் போல்.. ராதா கண் கலங்கினாள்..
வழக்கத்திற்கு மாறாக.. யதுநந்தன்.. அன்று அவளிடம் இணக்கமாக பேசினான்..
“கொஞ்ச நாள்தான்.. பொறுத்துக் கொள்.. எல்லாம் சரியாகிவிடும்..”
“எனக்கு கல்யாணத்தின் மூலம் வரும் உறவின் மீது ஆர்வம் இல்லை நந்து.. என் ஆர்வமெல்லாம் உங்கள் மீதுதான்.. நம் கல்யாணம் முடிந்தால்.. நான் உங்களின் பக்கத்திலேயே இருப்பேன்.. உங்கள் முகத்தைக் கண்ணாரப் பார்த்து ரசிப்பேன்.. உங்கள் பேச்சைக் காதுகுளிர கேட்டுக் கொண்டிருப்பேன்.. இருபத்தி நான்கு மணி நேரமும்.. நீங்கள் என் சொந்தமாக என் பக்கத்தில் இருப்பீர்கள்..”
ராதாவிற்கு.. ஏனோ.. அன்று அழுகை பொங்கி வந்தது..
Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.