Chapter 03
“ஏன் வசுந்தரா.. நிச்சயதார்த்தத்தை முதலிலேயே ஏன் பண்ணவில்லை..?” மண்டபத்திலிருந்த ஒரு பெண் மணி கேட்டாள்..
“கல்யாண நாள் கிட்டத்தில் இருந்தது.. அதுக்குன்னு தனியாய் ஒரு தடவை செய்யாவிட்டால் என்ன..? பந்தக் காலிலேயே பரிசம் போட்டு விடலாமென்று விட்டு விட்டோம்..”
“கல்யாண நாள் கிட்டத்தில் இருந்துச்சா..? யார் கிட்ட கதை சொல்கிறாய்..? தொண்டைமான் பெரியப்பா செத்து ஒரு வருஷம் ஆகி விட்டதே.. அவர் சாகும்போது உன் மகன் வாக்குக் கொடுத்துச்சாமே.. அதனால்தான் இந்தக் கல்யாணமே நடக்குதாமே.. ஏன் வசுந்தரா.. தெரியாமல்தான் கேட்கிறேன்.. உன் மகனுக்கு பொண்ணு கொடுக்க நீ.. நான்னு.. ஆயிரம் பேர் வரிசை கட்டி நிற்கிறாங்க.. உங்க வீட்டுக்காரர் ரிட்டயர்டு தாசில்தார்.. உன் மகன் காலேஜ் லெக்சரர்.. மதுரையில் காரும் பங்களாவுமாய் வளமாய் வாழ்க்கை நடத்தறே.. வைகைடேம் பாசனத்தில் வற்றாத தண்ணீர் சுரக்கும் கிணற்றோடு வயல் வரப்பு சிந்துபட்டியில் இருக்கு.. வருஷத்துக்கு ஆறு நூறு மூட்டை நெல் அடிக்கிறே.. நீ போய் இந்த இடத்தில் சம்பந்தம் பண்ணனும்னு விதியா.. உன் மகனுக்குத்தான் என்ன வந்தது..? யாரோ.. எவரோ.. சாகப்போகிற சமயத்தில் கையை நீட்டினா டபக்குன்னு கை அடிச்சுக் கொடுத்து விடறதா.. நான் கண்டாலும் கண்டேன்.. இப்படி ஓர் கூத்தை எங்கேயும் கண்டதில்லை..”
வாயைத் திறந்த பெண்மணிக்கு வாய் மூடும் நினைவில்லை.. வசுந்தரா வாசலில் யாரையோ வரவேற்கப்போவது போல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்..
“என்னம்மா.. இப்படி வேகமாய் வருகிறீங்க..?” எதிரே வந்து கொண்டிருந்த பரசுராம் வினவினான்..
“உன் பிரண்ட் பண்ணி வச்சிருக்கிற வேலைக்கு நான் ஒரு இடத்தில் நின்று ஓர் ஆளோடு பேச முடிகிறதா..?” வசுந்தரா சலித்துக் கொண்டாள்..
“ஏம்மா.. அவன் என்ன பண்ணினான்..?”
“என்னன்னு சொல்வேன் பரசு..? இந்தக் கல்யாணம் எப்போது முடியும்.. இந்த ஜனக் கூட்டத்திலிருந்து எப்போது விடுபடுவேன் என்று இருக்கிறது.. ஒற்றை மகனின் கல்யாணம்.. என் வீட்டில் நடக்கும் முதல் கல்யாணம்.. இப்படியா நடக்க வேண்டும்..?”
“என்னம்மா.. நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி..? இந்த இடத்தில் பெண் எடுப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா..?”
“பெண் அழகானவள்.. படித்தவள்.. எல்.ஐ.ஸி.யில் வேலை பார்க்கிறாள்.. எனக்கு அதைப் பற்றியெல்லாம் குறை இல்லை..”
“வேறு என்னம்மா..? ஆகாஷின் வேலைக்கும் உங்கள் வீட்டு அந்தஸ்திற்கும் இன்னும் அதிகச் சீர் வரிசையோடு பெரிய இடமாய் பெண் பார்க்க நினைத்தீர்களா..?”
“ச்சு.. ஒருத்தி கொண்டு வந்துதான் பிழைக்க வேண்டுமென்று ஆகாஷிற்கு தலைவிதி இல்லைடா.. அவனும் சரி.. அவனின் அப்பாவும் சரி.. வரதட்சணை சீர் என்று அதிகம் எதிர்பார்ப்பவர்கள் இல்லை.. ஆகாஷின் அப்பா தாசில்தார்.. நான் என்ன சீர் வரிசையோடு வந்தேன்..? இவருடைய குடும்ப வசதிக்கு என் பிறந்த வீட்டு வசதி ரொம்பக் கம்மிதான்.. என் மேல் ஆசைப்பட்டு இவர் வீட்டில் சொன்னாராம்.. என் மாமனார் வீட்டில் பெரிய மனதுடன் பெண் கேட்டு வந்து என்னை இவருக்குக் கல்யாணம் பண்ணி வைக்கவில்லையா..? என் பிறந்த வீட்டு வசதிக்கு இந்தப் பெண்ணின் வீட்டு வசதி அதிகம்தான்.. பெண்ணோட அப்பா பேங்க் மேனேஜர்.. அண்ணன்கள் இரண்டு பேருமே என்ஜினியர்கள்.. அக்காக்களையும் நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காங்க.. திருமங்கலத்தில் சொந்த வீட்டில் இருக்கறாங்க.. அன்னலட்சுமிபுரத்தில் வயல்.. தோட்டம்.. வீடுன்னு இருக்கிறவங்க.. இதிலெல்லாம் குறை இல்லை.”
“வேறு எதில் மனக்குறை..?”
“சரியாச் சொன்னேடா பரசு.. என் மனதில்தான் குறை.. ஆகாஷ் ஆசைப்பட்டான்னு பொண்ணு கேட்கப் போனால் அந்தக் கதையே வேறு.. இல்லை நாங்களாய் நல்ல குடும்பத்துப் பொண்ணு.. அழகு, படிப்பு.. வேலையென்று இருக்கும் பொண்ணுன்னு பெண் கேட்டு இந்தக் கல்யாணத்தை நடத்தி வைத்திருந்தால் அதுவும் நன்றாக இருந்திருக்கும்.. இப்போது அப்படியெல்லாம் இல்லையேப்பா.. அந்தப் பெரியவர் வாக்குக் கேட்டார்.. இவனும் வாக்குக் கொடுத்தான்.. தட்ட முடியாமல் அவங்களும் பெண் கொடுக்கிறாங்க.. நாங்களும் பெண்ணைக் கட்டுகிறோம் என்றல்லவா ஆகிவிட்டது..? கேள்வி கேட்கிற ஜனங்களுக்கு பதில் சொல்லி முடியவில்லை.. எதற்குத்தான் இப்படி ஒரு வாக்கைக் கொடுத்தானோ..” வசுந்தரா அலுத்துக் கொண்டாள்..
அப்போது மாப்பிள்ளையின் அறையிலிருந்த கட்டிலில் படுத்து கைகளை தலைக்குக் கீழ் அண்டை கொடுத்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த ஆகாஷும் அதையேதான் நினைத்துக் கொண்டிருந்தான்.
‘நான் வாக்குக் கொடுத்திருக்கக் கூடாது..’
நிச்சயதார்த்த மேடையில் அவள் விரல் தொட்டு மோதிரம் போடுகிறான்.. ஒரு நாணம்.. ஒரு சிலிரிப்பு.. ஒரு புன்னகை.. எதுவும் இல்லாமல் உணர்ச்சியற்ற ஜடம் போல் அமர்ந்திருக்கிறாள்.. இவள் கழுத்தில் தாலியைக் கட்டி எப்படிக் குடும்பம் நடத்துவது..? என்றுதான் அவள் இவனது உணர்வுகளைப் புரிந்து கொண்டிருக்கிறாள்..? இன்று புரிந்து கொள்ள.. என்றுமே அவளுக்கு அவன் மேல் ஓர் அலட்சியம்தான்.. அன்று முதன் முதலாய் பார்த்தாளே ஓர் அலட்சியப் பார்வை..! இன்றும் நெஞ்சைச் சுடுகிறதே..
“ச்ச்.. இந்த வாய்தானே வேண்டாம் என்கிறேன்.. வந்திருப்பவர்கள் யாரென்று விசாரிப்பதை விட்டுவிட்டு அவர்கள் முன்னிலையிலேயே அலட்சியமாய் பேசுவதா..? முதலில் இவரிடம் மன்னிப்புக் கேள்..” பெரியவர் அன்று அவளைக் கடிந்து கொண்டார்..
“நான்தான் ஒருமுறைக்கு பலமுறை கேட்டேன் என்கிறேனே தாத்தா.. இவர் பதிலே சொல்லாமல் நின்றால் வேறு என்ன சொல்வது..?” அவள் ஆகாஷை முறைத்தாள்.
“சார்.. இவங்க சொல்வது உண்மைதான்.. இவங்க கேட்டாங்க.. எனக்கு லேடிஸ் கிட்டப் பேச கொஞ்சம் சங்கோஜமாய் இருந்தது.. அதனால் நான்தான் பதில் சொல்லவில்லை..” அவன் பார்வையால் அவளை விழுங்கிக் கொண்டே பெரியவருக்குப் பதில் சொன்னான்..
‘ஆஹா.. பெண்களைக் கண்டால் நாணமாம்.. வெட்கமில்லாமல் தாத்தா முன்னாலேயே என்னை சைட் அடித்துக் கொண்டு பேச்சைப் பார் பேச்சை.. ஜெகஜ்ஜாலக் கில்லாடிதான்..’
அவள் அலட்சியமாய் தன் பின்னலை விசிறி பின்னால் தூக்கிப் போட்டுக் கொண்டு பின்னலாட வீட்டின் உள்ளே சென்று மறைந்தாள்.. தாழ்வாரத்தில் போட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றைக் காட்டி..
“உட்காருங்க..” என்று கூறியபடி இன்னொரு நாற்காலியில் அமர்ந்த கொண்டார் பெரியவர்..
பின்னலாட சென்றவளின் பின்னே மனம் ஓட அவள் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவர் எதிரே அமர்ந்தான்…
“தம்பி யாரு..?”
“ஐயா.. நான் உங்க ஸ்டூடன்ட் மருதநாயகத்தோட சன்..”
“யாரு.. தாசில்தாரா இருக்கானே.. அந்த மருதநாயகமா..?”
“ஆமாம் சார்..”
“நல்லது நல்லது.. மருதநாயகம் படிப்பில் கெட்டிக் காரன்.. எனக்கு விருப்பமான மாணவன்.. பட்டப் படிப்பை என்னிடம் படித்தான்.. இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறான்.. ஒரு ஆசிரியனுக்கு என்ன வேண்டும்..? அவனிடம் படித்த மாணவன் பெயரோடும், புகழோடும் வாழ வேண்டும்.. அதை கண்குளிர அவன் பார்க்க வேண்டும்.. அந்த வகையில் மருதநாயகம் எனக்கு மன நிறைவைத் தந்த மாணவன்.. நீ என்ன படிக்கிறாய் தம்பி..?”
“நான் எம்.பிஃல் முடித்துவிட்டு தஞ்சாவூரில் காலேஜ் லெக்சரராக இருக்கிறேன் ஐயா..”
“ராதா.. ராதா..” பெரியவர் உள்ளே திரும்பி அழைத்தார்.. ஆகாஷ் ஆவலுடன் அவள் வரும் வழியைப் பார்த்தான்..
கொலு சத்தம் முதலில் கேட்க.. பின்னாலேயே அவள் ஒரு தட்டில் இரண்டு பெரிய நீண்ட தம்ளர்களோடு வந்தாள்..
“தம்பிக்கு.. மோர்.. அடடே.. நான் சொல்லும் முன்னாலேயே குறிப்பறிந்து கொண்டு வந்து விட்டாயா..? கெட்டிக்காரப் பெண்..”
“இதில் குறிப்பறிய என்ன இருக்கிறது தாத்தா.. நீங்கள் வெளியாள்களோடு பகல் நேரத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது என்னை எதற்குக் கூப்பிடுவீர்கள் என்று எனக்குத் தெரியாதா..? நான் சர்வர் மாதிரி வந்து ஆர்டரைக் கேட்டுக் கொண்டு போவதற்கு நான் கையோடு கொண்டு வந்து விடுவது பெட்டர் இல்லையா..?”
“இதுக்கும் ஓர் விளக்கமா..? தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் தம்பி.. இது என் கடைக்குட்டி பேத்தி.. அனுராதா.. பி.எஸ்.ஸி., இரண்டாம் வருடம் படிக்கிறாள்..”
“எந்தக் காலேஜ்..?” மோர் தம்ளரை எடுத்துக் கொண்டே வினவினான் ஆகாஷ்..
“விருதுநகர் காலேஜ்..” பெரியவரே பதில் சொன்னார்
“இங்கேயிருந்து காலேஜ் போய் வருகிறாங்களா..?”
“இங்கேயிருந்தா..? இல்லை தம்பி.. அவளுடைய தகப்பன்.. அதுதான் என் மகன்.. திருமங்கலத்தில் பேங்க் மேனேஜர்.. அங்கேயே வீடுகட்டி அவன் குடும்பத்தோடு இருக்கிறான்.. இவளுக்கு மூத்தது இரண்டு அண்ணன்.. இரண்டு அக்காக்கள் இருக்கிறார்கள்.. எல்லாம் படித்து முடித்துக் கல்யாணம் ஆகி ஆளுக்கொரு திசையில் பிரிந்து செட்டிலாயிட்டாங்க.. இவள் படித்துக் கொண்டிருக்கிறாள்.. திருமங்கலத்தில் இருந்து தினமும் பஸ்ஸில் போய் வருவாள்..”
“அப்போ.. இங்கே யார் உங்களுடன் இருக்கிறார்கள்..?”
“யாரும் ஏன் இருக்க வேண்டும்..? இது என் வீடு.. நான் பிறந்து வளர்ந்த பரம்பரை வீடு.. என் ஓய்வுக் காலத்தை தோட்டம் வயல்ன்னு பார்த்துக் கொண்டு கிராமத்தில் தான் கழிக்க வேண்டுமென்று முடிவு பண்ணியிருந்தேன்.. கொஞ்சக் காலம் என் மனைவி என்னோடு இருந்தாள்.. அவளும் போன பின்னால்.. விவசாயம்.. புத்தகங்கள் என்று மீதி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. மருமகள் டவுனில் இருந்த பழகி விட்டாள்.. மகன் லீவு நாளில் காலையில் வருவான்.. இரவு வரைக்கும் இருந்து விட்டுப் போய் விடுவான்.. வீடு பெருக்கித்துடைத்துச் சமையல் பண்ணி வைக்க நம்ம தோட்டத்தைப் பார்த்துக் கொண்டு தோட்டத்து வீட்டிலேயே குடியிருக்கும் சின்னானின் மனைவி செல்வி வருவாள்.. காலையில் வந்து எல்லா வேலைகளையும் முடித்து விட்டு மூன்று நேரத்திற்கும் சமையல் பண்ணி எடுத்து வைத்துவிட்டுப் போய் விடுவாள்.. துணிகளையும் துவைத்துப் போட்டு விட்டுப் போய் விடுவாள்.. எனக்கென்ன தம்பி.. நிம்மதியான.. தனிமையான வாழ்க்கை..”
“அப்புறம் உங்கள் கடைசிப் பேத்தி மட்டும் இங்கே எப்படி..?”
“அதுக்கு தாத்தா மேல் பாசமும் ஒட்டுதலும் அதிகம்.. சின்ன வயதில் இருந்து காலாண்டு.. அரையாண்டு… மே மாதம் லீவிற்கு எல்லாம் இங்கே வந்து என்னுடன் தான் இருக்கும்.. மற்ற நாட்களில் சனி, ஞாயிறு விடுமுறைக்கு என்று வந்து விடும்.. வருடத்தில் பாதி நாட்கள் இங்கேயே இருப்பதால் அதன் துணிகள், புத்தங்கள் எல்லாம் இங்கே பாதி.. திருமங்கலத்தில் பாதியென்று இருக்கும்..” பெரியவர் விவரித்துக் கொண்டிருக்கும் போது..
“நம் வரலாறு அவருக்கு எதற்குத் தாத்தா.. அவர் வந்த வேலையென்னவென்று விசாரிப்பீர்களா.. அதை விட்டுவிட்டு நம் வீட்டுக் கதையை ஒப்பித்துக் கொண்டு இருக்கிறீர்கள்..” என்று கடிந்து கொண்டாள் காலி மோர் தம்ளர்களை எடுக்க வந்த அனுராதா..
“ஆமாம்.. ஐயா.. அவங்க சொல்வதும் சரிதான்.. உங்கள் வீட்டுக் கதையைக் கேட்டு அதை நான் நாவலாக எழுதி எழுத்தாளன்னு பெயர் வாங்கி விட்டால் என்ன செய்வது..?” எரிச்சலுடன் கூறினான் ஆகாஷ்..
“தாத்தா.. வீட்டுக்கு வீடு வாசல்படி.. நம் வீட்டில் மட்டுமா நாவல் எழுத கதை கிடைக்கும்..? அவர் வீட்டுக் கதையை விசாரியுங்கள்.. அதில் ஆயிரம் நாவல்களை நான் எழுதுகிறேன்.. யாருகிட்ட…. ம்?” என்றபடி பின்னலாட உள்ளே சென்று விட்டாள் அவள்..
“கொஞ்சம் குறும்புக்காரி தம்பி.. என் பேத்தி..”
“நான் ஒன்றும் தவறாக நினைக்கவில்லை ஐயா.. அவங்க சொன்னதும் சரிதானே.. நான் வந்த வேலையை மறந்து விட்டுப் பேசிக் கொண்டிருக்கிறேனே..”
ஆகாஷ் தான் வந்த வேலையைக் கூறினான்.. ‘தன் மாணவனின் மகன்’ என்ற வாத்சல்யம் கொண்ட பெரியவரும் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.. விளைவு..?
ஆகாஷ் அனுராதாவை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது.
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.