Chapter 04

0Shares

“ஐயா.. நான் பி.எச்.டி பண்ணப் போகிறேன்.. அதற்கு உதவியாக சில நூல்களைத் தேடியபோது என் அப்பாதான் உங்கள் பெயரைக் கூறினார்.. தொண்டைமான் ஐயாவிடம் இல்லாத புத்தகம் எதுவுமில்லையென்றார்.. அதனால்தான் உங்கள் உதவியை நாடி வந்தேன்..” மிக பவ்யமாய் கூறினான் ஆகாஷ்..

“அப்படியா..? ரொம்ப சந்தோசம்.. என்னிடமிருக்கும் புத்தகங்கள் உனக்கு உதவுமானால் அது எனக்கு மகிழ்ச்சிதான்.. எழுந்து என்னுடன் வாப்பா..” தொண்டைமான் எழுந்து வீட்டிற்குள் சென்றார்.. ஆகாஷ் அவரைப் பின் தொடர்ந்தான்..

முன்னாலிருந்த அகன்ற நீண்ட தாழ்வாரத்தை அடுத்து சின்ன நடை வராண்டா இருந்தது.. அதை அடுத்து நடுவே முற்றம் விட்டு நாற்புறமும் அறைகள்.. முன்னாலிருந்த வராண்டாவின் வலது பக்க ஓரமாய் மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள்..

மருதநாயகம் அதில் ஏறினார்.. ஆகாஷ் உள்ளே அனுராதா எங்கேனும் தென்படுகிறாளா என்று விழிகளால் துழாவிய வண்ணம் மாடிப் படியேறினான்.. மாடி ஹாலைக் கண்டதும் வியந்து நின்று விட்டான்..

சுவர்கள் பூராவும் அலமாரிகளாய் தடுக்கப்பட்டிருந்தன.. போதாத குறைக்கு மரத்தினால் செய்த ரேக்குகள் வேறு.. எல்லாவற்றிலும் வரிசையாய் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.. ஒவ்வொரு அடுக்கின் மேலும் அந்தப் புத்தகங்களைப் பற்றிய விவரம் எழுதி ஒட்டப் பட்டிருந்தது.. ஹாலின் ஓரமாய் ஜன்னலை ஒட்டி 

பெரிய மேஜையும் சுற்றி நான்கு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.. வேப்ப மரத்துக் காற்று சிலுசிலுவென வந்து கொண்டிருந்தது.. அந்த இடத்தில் நிலவிய அமைதியும் குளுமையும் அவனை மிகவும் கவர்ந்தது..

“படிப்பதற்கு ஏற்ற சூழல்..” என்றான் ஆகாஷ்..

தொண்டைமான் கண்களில் ஓர் ஒளியோடு அவனைப் பார்த்தார்..

“ஆமாம்.. தம்பி.. இது படிப்பதற்கு ஏற்ற இடம் தான்.. அது உங்களுக்குப் புரிந்ததில் எனக்கு நிம்மதி..”

“எதனால் ஐயா இப்படிச் சொல்லுகிறீர்கள்..?”

“தம்பி.. என் சொத்து சுகமென்று நான் நினைப்பது இந்தப் புத்தகங்களைத்தான்.. இதுவரை இவற்றைப் பாதுகாத்து வந்திருக்கிறேன்.. இனிமேலும் என் காலம் 

வரை இவை இப்படியே இருக்க வேண்டம் என்று ஆசைப் படுகிறேன்..”

“நான் உங்கள் புத்தகங்களை பாதுகாப்பாய் கையாள்வேன் ஐயா..”

“நிச்சயமாய் அதை நீ செய்வாய்.. எனக்குத் தெரியும்.. அதை இங்கே என் வீட்டிலேயே நீ செய்யலாமே..”

“புரிகிறது ஐயா.. புத்தகங்களை என்னுடன் எடுத்துப் போவதில் உங்களுக்கு விருப்பமில்லை.. இல்லையா..?”

“ஒரு வகையில் அப்படித்தான்.. இங்கே நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம்.. எத்தனை நாள் வேண்டு மானாலும் இருக்கலாம்.. நான் சாப்பிடும் சாப்பாட்டை நீயும் சாப்பிடலாம்.. என் தனிமையைக் குறைக்க ஒரு ஆள் வந்திருக்கிறாயென்று சந்தோசமே படுவேன்.. நிச்சயம் இடைஞ்சலாய் நினைக்க மாட்டேன்.. உனக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்து அமைதியாய் இங்கு உட்கார்ந்து படிக்கலாம்..”

ஆகாஷிற்கு அந்த ஏற்பாடு மிகவும் பிடித்து விட்டது.. அவன் வார இறுதியில்தான் இங்கு வர முடியும்.. அதே நாளில்தான் அவளும் இங்கு வருவாள்.

அடுத்த வாரம் மிகவும் சந்தோசத்துடன் தன் காரை அன்னலட்சுமிபுரத்திற்கு செலுத்தினான் ஆகாஷ்.. வாசலில் காரை நிறுத்திவிட்டு சென்ற முறை செய்தது போல் கதவின் தாழ்ப்பாளை ஆட்டினான் ஆகாஷ்..

கொலுசு சத்தம் ஒலிக்க அவள் வந்தாள் கதவு திறந்தாள்..

“காது கேட்காது.. வாய் பேசாது.. கண் பார்வை எப்படி..? குறைபாடு இல்லையே..?” அவனை அலட்சியப் பார்வை பார்த்தபடி அவள் கேட்டாள்..

‘கொழுப்பு..’

அவன் அவளை லஜ்ஜையில்லாமல் மேலும் கீழும் ஓர்முறை பார்த்தான்.. அவள் உதடு கடித்தாள்..

‘என்னமாய் லுக் விடுகிறான் பார்.. பெரிய ரோமியோன்னு நினைப்பு..’

“பார்வையிட்டு முடித்தாகி விட்டதா..?” கிண்டலாய் கேட்டாள்..

“இதெல்லாம் ஓர் நாளில் முடிகிற விஷயமில்லை..” அவன் கண்களில் விஷமம் வழியக் கூறினான்..

“என்னவோ.. பெண்கள் பேச்சுக்கு பதில் பேசக்கூடக் கூச்சம்ன்னு எங்க தாத்தாகிட்ட போன வாரம் கதை அளந்தீங்க.. இப்ப அவர் இங்கே இல்லையென்றதும் இந்த சைட் அடிக்கறீங்க..”

“ஹை.. அப்ப உன் தாத்தா வீட்டில் இல்லையா..?”

“உன்’..? ஹலோ.. லேடிஸ் கிட்ட மரியாதையாய் பேசத் தெரியாதா..?”

“அது லேடிஸ்கிட்ட.. உன்னைப் போல் டீன் ஏஜ்கிட்ட இல்லை..”

“இது வேறா..? போன வாரம் தாத்தா முன்னால் வாங்க.. போங்கன்னு மரியாதையாய் பேசினதாய் நினைவு..”

“அது தாத்தாவுடைய பேத்தியிடம் பேசினது..”

“இப்போது சார் யாரிடம் பேசுகிறீர்களாம்..”

“அனுவுடன்..”

“அனுவா..? என் பெயர் அனுராதா சார்..”

“அதை சார்ட்டாய் கூப்பிட்டேன்..”

“அப்படியென்றால் ராதா என்று கூப்பிட வேண்டியது தானே..? ‘அனு’ என்று கொஞ்சலாய் அழைப்பு என்ன வேண்டிக் கிடக்கு..?”

“‘ராதா’ என்பது எல்லோரும் கூப்பிடும் பெயராயிற்றே.. எனக்கு நீ ‘அனு’தான்..”

“நான் பார்த்தாலும் பார்த்தேன்.. உங்களைப் போல் தைரியசாலியைப் பார்த்தது இல்லை.. நீங்கள் மட்டும் என்ன.. ‘ஸ்பெஷல்..?’ ம்ம்..”

“உனக்கு நான் ஸ்பெஷலோ இல்லையோ.. எனக்கு நீ ஸ்பெஷல்தான் ஸோ.. நான் அப்படித்தான் கூப்பிடுவேன்.. அது சரி, நான் வந்தவுடன் என் கண் பார்வையைப் பற்றி ஏதோ சந்தேகப்பட்டாயே.. அது ஏன்..?”

“பக்கத்திலேயே காலிங் பெல் இருக்க.. கதவைப் போட்டு ஏன் உடைக்கறீங்க.. கண் தெரியவில்லையான்னு கேட்க நினைத்தேன்.. ஆனால் முட்டைக் கண்ணை முழிச்சுக்கிட்டு மேலும் கீழும் என்னை நீங்கள் பார்த்து வைத்த கள்ளப் பார்வையைப் பார்த்த பின் அந்தச் சந்தேகம் பறந்தே போச்சு..”

ஆகாஷ் ஏதோ சொல்ல வாயெடுத்தான்.. அந்நேரம் வாசல் பக்கம் சத்தம் கேட்டது.. திரும்பிப் பார்த்தான்.. தொண்டைமான் வந்து கொண்டிருந்தார்.. ஆகாஷின் நடை உடை பாவனைகளால் ஓர் மாற்றம் வந்தது.. மரியாதையான முகபாவனையுடன் நிமிர்ந்து நின்றான்.. அனுராதாவின் உதடுகளில் ஏளன முறுவல் ஒன்று உதித்தது.. அதைக் கடைக் கண்ணால் கண்டும் காணாதவன் போல் நின்று கொண்டிருந்தான்.. தொண்டைமான் உள்ளே வந்ததும்..

“வாப்பா.. தொலைவிலேயே வீட்டு வாசலில் உன் கார் நிற்பது தெரிந்து விட்டது.. வேகமாய் வந்தேன்.. வந்து ரொம்ப நேரமாகி விட்டதா..?” என்று அன்பாய் வினவினார்.

“எதற்கு அவசரமாய் வந்தீங்க ஐயா.. மெதுவாய் வரலாமே.. நான் நீங்கள் வரும் வரை காத்திருக்க மாட்டேனா..?” பணிவுடன் கூறினான் ஆகாஷ்..

“எதற்காகக் காத்திருக்க வேண்டும்..? நீ தயங்கவே வேண்டாம்.. நேராய் மாடிக்குப் போய் படிக்க ஆரம்பித்து விடலாம்.. ஏம்மா ராதா.. நீ தம்பியிடம் இதைச் சொல்ல வேண்டாமா..? வாசலிலேயே நிற்க வைக்கலாமா..? வளர்ந்து விட்டாய்.. இன்னும் விவரம் தெரியவில்லையே..” பேத்தியை கண்டித்தார் தொண்டைமான்..

ஆகாஷின் விழிகளில் குறும்பு கூத்தாடியது.. தொண்டைமான் அவன் பக்கம் திரும்ப கண நேரத்தில் விழிகளில் மரியாதையைக் கொண்டு வந்தான்..

“அவங்க மேல் தவறு இல்லை ஐயா.. நான் படிக்கப் போக வேண்டுமென்று சொல்லியிருந்தால் தடுத்திருக்கவா போகிறார்கள்..? இப்போதுதான் உங்கள் அனுமதி எனக்குக் கிடைத்து விட்டதே.. இனிமேல் பாருங்கள்..” ஆகாஷ் அனுராதாவைப் பார்த்துக் கொண்டே கூறினான்.. 

அவள், ‘என்ன செய்வாய்..?’ என்பது போல் புருவங்களை உயர்த்தினாள்..

“வாப்பா.. மாடிக்குப் போகலாம்..” தொண்டைமான் செல்ல லேசாய் தாமதித்து நின்ற ஆகாஷ் அனுராதாவிடம்,

“எதையோ சொல்ல விரும்புவதுபோல் இருக்கிறதே..” என்று வம்புக்கு இழுத்தான்..

“இல்லை.. தாத்தாவின் முன் தாங்கள் காட்டிய மரியாதையைப் பார்த்து வியந்து நின்று விட்டேன்..” என்றாள் அவள் நாடக பாணியில்..

“அதுதான் சொல்கிறேனே.. உன் தாத்தா வருவதற்கு முன் நீ எனக்கு அனு.. அவர் வந்தவுடன் நீ அவருடைய பேத்தி..”

“என்ன ஓர் தந்திரம்..” அவள் பல்லைக் கடித்தாள்..

அவன் சிரித்துக் கொண்டே அவளுக்கு கை அசைத்து விட்டு மாடிக்கு ஏறினான்..

அவனுக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்ளும்படி கூறிய தொண்டைமான் அவனைத் தனிமையில் விட்டு விட்டு கீழே இறங்கிச் சென்று விட்டார்.. ஆகாஷ் தன் வேலையில் ஆழ்ந்து விட்டான்.. தன்னிடமிருந்த நோட்டில் குறிப்புக்களை எழுதிக் கொண்டிருந்தவனின் தவத்தை கொலுசு சத்தம் கலைத்தது.. நிமிர்ந்து பார்த்தான்..

தன் கால் கொலுசுகளை சப்தமெழுப்பியபடி அனுராதா நின்றிருந்தாள்.. குறிப்பெடுத்துக் கொண்டிருந்த நோட்டை மூடி வைத்து விட்டு நாற்காலியைத் தள்ளிப் போட்டு அமர்ந்து மேஜையில் கை வைத்து அதில் முகவாயைத் தாங்கிக் கொண்டு அவளை மோகப் பார்வை பார்த்தான்..

“ஹலோ.. என்ன பார்க்கிறீர்கள்..?” அவள் எரிச்சலுடன் வினவினாள்..

“இல்லை.. விசுவாமித்திரனின் தவத்தை மேனகை கலைத்தது போல் என் தவத்தை நீ கலைத்து விட்டாயே..” அவன் கண்களில் சிரிப்பு இருந்தது..

“தேவைதான் எனக்கு… தாத்தா உங்களைக் கீழே கூப்பிட்டார்..”

“எதற்கு..?”

“வந்து பார்த்தால் அல்லவா தெரியும்..?”

அவள் முன்னே கிடந்த பின்னலை அலட்சியமாய் பின்னால் தூக்கிப் போட்டுக் கொண்டு திரும்பினாள்.. அவள் பின்னல் ஆகாஷின் முகத்தில் பட்டு விலக அவன் மெய் மறந்தான்.

“அனு..” என்று மயங்கிய குரலில் அழைத்தான்.

அவன் குரலில் மாற்றத்தை உணர்ந்தவள் புரியாமல் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.. அவன் பார்வையிலிருந்த ஏதோ ஒன்று அவளைப் பேச்சிழக்கச் செய்ய மின்னலென மாடிப் படிகளில் இறங்கி ஓடி மறைந்தாள்..

ஆகாஷ் அவள் பின்னாலேயே விரைந்து இறங்கினான்.. ஆனாலும் அவன் பார்வையில் அவள் தென்படவில்லை..

“வாப்பா.. ஆகாஷ்..” என்று வரவேற்றார் தொண்டைமான்..

“கூப்பிட்டீர்களா ஐயா..” மரியாதையுடன் அவர் முன் சென்றான்..

“ஆமாம் ஆகாஷ்.. சாப்பிட்டு விடலாமே..”

“உங்களுக்கு ஏன் வீண் சிரமம்..”

ஆகாஷ் தயக்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்தபோது,

“தாத்தாவுக்கென்ன சிரமம்..? பேத்திக்குத்தான் சிரமம்..” உள்ளேயிருந்து அனுராதாவின் குரல் வந்தது..

புன்னகையுடன் சாப்பிடும் அறைக்குச் சென்றார் தொண்டைமான்.. ஆகாஷ் அவர் பின்னால் தொடர்ந்தான்.

சாப்பாட்டு மேஜையில் பாத்திரங்களை வைத்துக் கொண்டிருந்த அனுராதா நிமிர்ந்து ஆகாஷைப் பார்த்துச் சொன்னாள்..

“நான் வந்து விட்டால் தாத்தாவுக்கு என் சமையல் தான்.. செல்லி மேல் வேலையை மட்டும் பார்த்துவிட்டுப் போய் விடுவாள்..”

“ஓஹோ.. அப்படியென்றால் உங்களுக்கு ஏன் வீண் சிரமம்..? உங்களிடமே சொல்லி விட்டேன்.. சரிதானே..”

“சிரமம்தான்.. எங்களிரண்டு பேருக்குமென்றால் சிம்பிளாய் சமைத்திருப்பேன்.. விருந்தாளி வந்திருக்கிறாராம்.. ஸ்பெஷல் சமையல் பண்ண வேண்டியதாகி விட்டது..”

“கஷ்டம்தான்.. மாட்டேன் என்று சொல்லியிருக்கலாமே..”

“சொல்லியிருப்பேன்.. ஆனால் அது அதைவிடக் கஷ்டமாச்சே..”

“எப்படி..?”

“உங்களைப் பார்க்க வைத்துக் கொண்டு நாங்கள் இருவர் மட்டும் சாப்பிட வேண்டும்.. வயிறு வலிக்காதா..?”

“ச்ச்.. உண்மைதான்.. நீங்கள் வயிற்று வலியிலிருந்து தப்பிக்க என் வயிற்றுக்கு சாப்பாட்டைப் போடுகிறீர்கள்..”

“தெரிந்தால் சரி.. உட்காருங்கள்..”

அவள் தட்டுக்களைப் போட்டுப் பரிமாறினாள்.. தொண்டைமான் ஆகாஷுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டார்.. உலக அரசியல், இந்திய அரசியல், விளையாட்டு, ஆன்மிகம் எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை..

கை கழுவும் இடத்தில் அனுராதா இருந்தாள்.. அருகில் தொண்டைமான் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு,

“உன் கைச் சமையல் பிரமாதம்.. எப்போதையும் விடக் கூடுதலாகவே சாப்பிட்டேன்.. தேங்க்ஸ்..” என்றான் ஆகாஷ்..

“உங்களுக்கும் தேங்க்ஸ்..”

“எதற்கு..?”

“உங்களுடன் சேர்ந்து சாப்பிட்டதால் என் தாத்தாவும் எப்போதையும் விடக் கூடுதலாகவே சாப்பிட்டார்.. அதற்கு..”

அவள் முகம் கனிந்திருந்தது..

0Shares

Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link