Chapter 08
அனுராதா கேட்ட அந்தக் கேள்வி ஆகாஷை மிகவும் பாதித்து விட்டது.. அநாகரிகமாய் நடந்து கொள்வது அவனல்ல.. ராகினி..! அவளை அவனுக்குத் தெரியாது.. அவள் தொண்iடானின் உறவுக்காரப் பெண்.. அவளாக வந்தாள்.. அவளாகப் பேசினாள்.. அவளது செயல்களை ஒரு நாளும் ஆகாஷ் ஆதரித்தது இல்லை.. அப்படியிருக்க பொதுவாய் அனுராதா ‘அசிங்கம்’ என்று குறிப்பிட்டு விட்டாளே.. அவன் வாய் திறக்கு முன் ராகினி வாய் திறந்து விட்டாள்..
“யாரை அசிங்கம் என்கிறாய்..? இவர் எவ்வளவு மரியாதையானவர் தெரியுமா..?”
“உன்னிடம் அன்றைக்கே சொல்லி விட்டேன்.. நீ கொஞ்ச வேண்டுமானால் இந்த ஆளை உன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் வைத்துக் கொஞ்சு.. என் வீட்டிற்குள் இந்த அசிங்கம் வேண்டாம்..”
“‘இந்த ஆளா..’ இவரையா ‘இந்த ஆள்’ என்கிறாய்..?”
“ஆமாம்டி.. உன் இவரைத்தான் சொன்னேன்.. இந்த ஆள்.. அந்த ஆள்.. போன ஆள்.. வந்த ஆள்.. ஆள்.. ஆள் போதுமா..?”
“பார்த்தீங்களா..? இந்த மாதிரி மரியாதை கொடுக்கத் தெரியாதவர்கள் வீட்டிற்கு வந்து போகிறீர்களே..”
“ஏய்ய்.. மரியாதையைப் பற்றி நீ பேசாதே.. உன் பல்லை உடைத்து விடுவேன்.. யாருக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.. யாருக்கு மரியாதை கொடுக்கக் கூடாது என்று எனக்குத் தெரியும்..”
“அப்படியென்றால் நீ இவருக்கு மரியாதை கொடுக்க மாட்டாய்..”
“ஆமாம்டி.. கொடுக்க மாட்டேன்..”
ஆகாஷ் தாங்க மாட்டாமல் கண்களை மூடிக் கொண்டான்.. இங்கு என்ன நடக்கிறது..? அன்று இவனைப் பிடிக்கவில்லை என்று சொன்னாள்.. இன்று இவனை ஏகவசனத்தில் ‘இந்த ஆள்’ என்று பேசி விட்டாள்.. இனியும் என்ன நடக்க வேண்டும்..?
அதற்குள் தொண்டைமான் குறுக்கிட்டார்..
“ராதா.. இது என்னம்மா இவ்வளவு கோபப்படுகிறாய்..? பெண்கள் பூமாதேவி மாதிரிம்மா.. அவர்கள் கோபப்பட்டால் பூமி தாங்காது..”
“தாங்கத்தான் முடியவில்லை தாத்தா.. இங்கு நடக்கும் நாடகத்தைப் பார்த்து என்னால் தாங்கிக் கொள்ளத்தான் முடியவில்லை தாத்தா.. எனக்கு இரண்டில் ஒன்று தெரிய வேண்டும்..”
“என்னம்மா..?”
“உங்களுக்கு நான் வேண்டுமா.. இல்லை இந்த ஆள் வேண்டுமா..? நான் வேண்டுமென்றால் இந்த ஆள் இங்கே ஒரு கணம் கூட நிற்கக் கூடாது.. இந்த ஆள்தான் வேண்டுமென்றால் நான் இந்த வீட்டை விட்டுப் போய் விடுகிறேன்.. இனி எப்போதும் இங்கே வரமாட்டேன்..”
ஆகாஷ் அடுத்து ஒரு கணம் கூட அங்கே நிற்கவில்லை..
“ஆகாஷ்.. ஆகாஷ்..” என்று தொண்டைமான் அழைத்துக் கொண்டே வர அவன் திரும்பியே பார்க்காமல் காரில் ஏறிப் பறந்து விட்டான்..
அதன் பின் மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டன.. அவன் பி.எச்.டி. பட்டம் வாங்கி விட்டான்.. தங்கை ஆனந்திக்கு மாப்பிள்ளை பார்க்க வீட்டில் ஆரம்பிக்க அவள் அண்ணி வந்த பின்னால்தான் தனக்குத் திருமணம் என்று பிடிவாதம் பிடித்தாள்.. தஞ்சாவூரில் லோன் போட்டு சொந்தமாய் ஓர் வீடு கட்டி முடித்தான்.. இடைப் பட்ட காலங்களில் எப்போதாவது அன்னலட்சுமி புரத்தின் நினைவு எழும்பும்.. கூடவே அவள் ‘அந்த ஆளை வெளியே போகச் சொல்லுங்க..’ என்றதும் நினைவில் வரும்.. இதயத்தின் சாளரத்தை இறுக மூடிக விடுவான்.. அவன் இதயத்தில் ஒருத்தி இருப்பது அவனது நண்பன் பரசுராமிற்கு மட்டும்தான் தெரியும்..
“ஏண்டா.. அம்மா புலம்புகிறார்களே.. ஒரு கல்யாணத்தைப் பண்ணிக் கொண்டால்தான் என்ன..?”
“எப்படிடா பரசு.. அவளை மறக்க முடியலையே..”
“ஏண்டா.. அவளோ திமிர் பிடித்தவள் என்கிறாய்.. உன்னை அவமானப்படுத்தியவள் என்கிறாய்.. அவள் பின்னால் உன் இதயம் போனால்.. உன்னை என்னவென்று நான் சொல்வது..?”
“என்னவோ சொல்லிக் கொள்.. எனக்குக் கல்யாணத்தில் இன்ட்ரெஸ்ட் இல்லை.. ஆனந்திக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொல்.. அவள் கல்யாணமாவது அம்மாவின் மனம் குளிர நடக்கட்டும்..”
இப்படிச் சொன்னவன் தன் கல்யாணத்தை தானே முடிவு செய்ததும் அதைத் தந்தை தாயிடம் வந்து சொன்னதும் ஓர் நாள் நிகழத்தான் செய்தது..
தஞ்சையில் அகாஷ் கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டிருந்தான்.. அந்த வீட்டின் மாடியறைக்கு வெளியே படி வைத்துக் கட்டப்பட்டிருந்தது.. அவன் அந்த அறையில் தங்கி இருந்தான்.. விடுப்பு நாட்களில் மதுரைக்குப் போய் விடுவான்.. அன்று அதிகாலை தூக்கத்தில் அவன் இருக்கும்போது செல்போன் அலறியது.. எடுத்துப் பார்த்தான் அறிமுகமில்லாத எண்.. ‘யாராக இருக்கும்’ என்ற யோசனையோடு எடுத்துப் பேசினான்..
“ஹலோ ஆகாஷ் ஸ்பீக்கிங்..”
“நான் கோவிந்தசாமி பேசுகிறேன்..”
“கோவிந்தசாமி..? எனக்கு யாரென்று தெரியவில்லையே..”
“நான் திருமங்கலத்தில் பேங்க் மேனேஜராக இருக்கிறேன் தம்பி.. என் அப்பா பெயர் தொண்டைமான்.. எங்க பூர்விக கிராமம் அன்னலட்சுமிபுரம்..”
ஆகாஷின் தூக்கம் பறந்தே விட்டது.. அவசரமாய் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான்..
“என்ன விஷயம் சார்..?”
“நீங்கள் உடனே கிளம்பி அன்னலட்சுமிபுரத்திற்கு வர முடியுமா..?”
“என்ன ஆச்சு சார்..” என்றவனுக்கு அந்த நினைவு தோன்றியது..
‘அப்படியும் இருக்குமா..?’ அதிர்ந்து எழுந்தவன்,
“ஐயா.. ஐயாவுக்கு.. எதுவும் அவர் நன்றாகத்தானே இருக்கிறார்..?”
“இல்லை தம்பி..”
“என்ன சொல்கிறீர்கள்..?”
“அப்பா மரணப் படுக்கையில் இருக்கிறார்.. கடைசியாய் உங்களை ஓர்முறை பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்.. நீங்கள் உடனே கிளம்பி வரமுடியுமா..?”
“இப்போதே கிளம்பி விட்டேன்..”
அடுத்த ஒரு மணி நேரத்தில் கல்லூரிக்கு விடுப்புச் சொல்லிவிட்டு காரில் ஏறி அன்னலட்சுமிபுரத்திற்கு பறந்தான் ஆகாஷ்.. புழுதி கிளம்ப தொண்டைமானின் வீட்டிற்கு முன்னால் அவனது கார் நின்றது..
வீடு முழுவதும் ஆட்கள் நிறைந்திருந்தார்கள்.. தொண்டைமானின் பேரன், பேத்திகள் அவர்களின் குடும்பத்தோடு வந்து இறங்கியிருந்தனர்.. ஆகாஷ் வாசல்படி ஏறியபோது ஐம்பத்தி ஐந்து வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்து,
“மிஸ்டர் ஆகாஷ்..?” என்று வினவினார்..
“யெஸ்..”
“ஐ ஆம் கோவிந்தசாமி.. உள்ளே வாங்க..”
முற்றத்தைச் சுற்றியிருந்த வராண்டாவில் நாற்காலிகள் போடப்பட்டு அதில் ஆண்கள் அமர்ந்திருந்தனர்.. அந்தச் சூழ்நிலையிலும் ஆகாஷின் கண்கள் அனுராதாவைத் தேடின.. அவள் தென்படவே இல்லை..
“இப்படி வாங்க..” கோவிந்தசாமி மாடியேறினார்..
“ஐயா.. மாடியிலா இருக்கிறாங்க..?”
“ஆமாம் தம்பி.. அவர் உருவாக்கிய நூலகத்தில்தான் அவரது உயிர் போகணும்னு சொல்லி விட்டார்.. மாடியறையில் கட்டில் போட்டு படுக்க வைத்திருக்கிறோம்.. நேற்றிலிருந்து உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. கடைசியாய் உங்களைப் பார்க்க வேண்டுமென்று சொன்னார்.. அதனால்தான் உங்களுக்குப் போன் பண்ணினேன்..”
மாடியில் ஏறியதும் ஆகாஷிற்கு மெய் சிலிர்த்தது.. அதே நூலகம்.. அந்த ஜன்னலோரம் இருந்த மேஜையில் அவன் அமர்ந்திருந்தபோதுதான் அவள் கால் கொலுசுகளை சப்தமெழுப்பி அவன் கவனத்தை ஈர்த்தாள்..
‘விசுவாமித்திரரின் தவத்தைக் கலைத்த மேனகை..’
தவத்தைக் கலைத்து விட்டு அவள் நிம்மதியாக இருக்கிறாள்.. அவன் தான் நிம்மதியை இழந்து தவிக்கிறான்..
“யாரு..?”
தொண்டைமானின் குரலில் அவன் தன்னிலைக்குத் திரும்பினான்..
கட்டிலில் தளர்வாய் படுத்திருந்தவரின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தவன் துக்கத்துடன்..
“ஐயா..” என்று அழைத்தான்..
அந்த அழைப்பிற்குத்தான் எத்தனை சக்தி..!
“ஆகாஷ்.. ஆகாஷா வந்திருக்கிறது..?” அவர் அவசரமாய் எழுந்து அமர முயன்றார்..
அவரது மனதின் வேகத்திற்கு உடல் ஒத்துழைக்க வில்லை..
“வேணாங்க ஐயா.. அப்படியே படுத்திருங்க..”
“ஆகாஷ்.. என்னை மறந்து விட்டாயா..?”
“எப்படி என்னால் மறக்க முடியும் ஐயா..” அவன் மனக் கண்ணில் பின்னலை முன்னால் விட்டுக் கொண்டு அனுராதா தோன்றினாள்..
“மறக்கவில்லை இல்லையா.. ஆகாஷ்.. எதையும் நீ மறக்க வில்லை இல்லையா..? இதை உறுதியாகச் சொல்லு..”
“என்னங்க ஐயா.. என் வார்த்தைகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..? நான் எதையும் மறக்கவில்லை.. ஐயா..”
ஆகாஷின் இதயத்தில் அவள் சிரித்தாள்..
“அப்படியென்றால் எனக்கு ஒரு வாக்குறுதி தருவாயா..?”
ஆகாஷ் திகைத்தான்.. வாக்குறுதியா..? என்ன வாக்குறுதி..? தொண்டைமான் கோவிந்தசாமியை அழைத்தார்.. கோவிந்தசாமி வந்து அவர் முகத்தருகே குனிந்தார்..
“என்னப்பா..”
“கீழேயிருக்கும் எல்லோரையும் வரச் சொல்லு.. எல்லோரையும் என்றால்.. உன் பெண்டாட்டி.. பிள்ளைகள் எல்லோரும்.. இங்கே இப்போது வரவேண்டும்..”
அடுத்த நிமிடம் கீழேயிருந்தவர்கள் அனைவரும் மாடியறைக்கு வந்து குழுமி நின்றனர்..
“அப்பா.. எல்லோரும் வந்து விட்டார்கள்..”
“ராதா.. ராதா வந்து விட்டாளா..”
ஆகாஷின் இதயத்தின் சாளரக் கதவு படபடவென்று அடித்துக் கொண்டது.. அவன் காதுகளில் தேன் பாய்ந்தது போல் அந்த மெல்லிய குரல் கேட்டது..
“நான் இங்கேதான் இருக்கிறேன் தாத்தா..”
ஆகாஷின் தலை திரும்பியது.. அந்தக் கூட்டத்தில் அவள் குரல் வந்த திக்கைப் பார்த்தான்.. அவள் நின்றிருந்தாள்.. இந்த மூன்றாண்டுகளில் நன்றாக வளர்ந்திருந்தாள்.. சேலை கட்டியிருந்தாள்.. முகத்தில் குறும்பு காணாமல் போயிருந்தது.. நிதானமும், அறிவுக்களையும் தெரிந்தது..
“ராதா.. கிட்ட வாம்மா..”
அவள் தொண்டைமானின் அருகே வந்தாள்.. கட்டிலில் அவர் காலடியில் அமர்ந்தாள்.. அவள் கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன.. முகம் வீங்கியிருந்தது..
தாத்தாவிற்குப் பிரியமான பேத்தி.. அவருடன் கடைசி வரை இருந்தவள்.. அவள் துயரத்திற்கு அளவிருக்காது தான்..
“ஆகாஷ்..” தொண்iடான் அவனிடம் கரம் நீட்டினார்..
“என்னங்க ஐயா..”
“இவள் என் பேத்தி அனுராதா.. இவளை உனக்குத் தெரியும்..”
“ஆமாங்க ஐயா..”
‘இவர் என்ன சொல்ல வருகிறார்..’
“அழகானவள்.. படித்தவள்.. இப்போது எல்.ஐ.ஸி யில் வேலை பார்க்கிறாள்.. எந்தப் பிராஞ்ச் தெரியுமா..?”
“தெரியாதுங்க ஐயா..”
‘வேலை பார்க்கிறாளா..? எந்த ஊரில்..?’
“தஞ்சாவூரில்தான்.. அது உனக்குத் தெரியாது இல்லையா..”
“ஆமாங்க ஐயா..”
“ஆகாஷ்.. நான் உன்னிடம் கேட்கும் வாக்குறுதி இதுதான்.. நீ என் பேத்தி அனுராதாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்.. எனக்கு வாக்குக் கொடு..”
ஆகாஷின் இதயம் ஒர் கணம் நின்று அடித்தது..
“ஐயா..”
“வாக்குக் கொடு ஆகாஷ்..”
“அப்பா.. என்ன இது..” கோவிந்தசாமி ஆட்சேபித்தார்..
“மாமா.. வாக்கு கேட்டுத் தள்ளி விடும்படி என் மகளிடம் என்ன குறையிருக்கு..?” திலகவதி மனத்தாங்கல் பட்டாள்..
“தாத்தா..” அனுராதாவின் கூடப் பிறந்தவர்கள் கசமுசவெனக் கத்தினார்கள்..
தொண்டைமான் அவர்கள் யாரையும் பார்க்கவில்லை.. அவர் பார்வை ஆகாஷின் மேல் நிலைத்திருந்தது.. நீட்டிய அவர் கரம் நீட்டியபடியே இருந்தது..
ஆகாஷின் இதயம் துடித்தது..
‘என்ன செய்வது..? அவள் என் இதயத்தில் இருக்கிறாளே அவளையே திருமணம் செய்து கொள்ள என் இதயம் அறிந்த இந்தப் பெரியவர் வாக்குக் கேட்கிறார்.. வாக்குக் கொடுத்து விட்டால்..? அவள் என் சொந்தமாகி விடுவாள்.. ஆனால் அவள் அன்று சொன்ன வார்த்தைகள்.. அவை அப்படியேதானே இருக்கின்றன..’
ஆகாஷ் தவித்தான்.
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.