Chapter 09

0Shares

“என்ன ஆகாஷ்.. வாக்குக் கொடுக்க மாட்டாயா..?” தொண்டைமானின் நலிந்த குரல் அவனை உலுக்கியது.

அவன் முன்னால் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் மேல் அவன் பார்வை ஓடியது.. இவளை மறக்க முடியுமா..? அவன் முடிவெடுத்து விட்டான்.. தொண்டைமானின் கையில் தன் கையை வைத்து சத்தியம் செய்தான்..

“வாக்குக் கொடுக்கிறேன்.. ஐயா உங்கள் பேத்தி அனுராதாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன்..”

தன் கைக்குள் இருந்த அவன் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டார் தொண்டைமான்.. தன் காலடியில் இருந்த அனுராதாவைப் பார்த்தார்.. விழிகளால் அவளை அருகே அழைத்தார்.. அவள் தாத்தாவின் அருகே நகர்ந்து அமர்ந்தாள்..

“நீயும் வாக்குக் கொடு ராதா..”

ஆகாஷ் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.. என்ன சொல்லப் போகிறாளோ..? அவன் இதயம் தவித்தது..

“வாக்குக் கொடுக்கிறேன் தாத்தா.. நான் அவரைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்..” அவள் மெல்லிய குரலில் வாக்களித்தாள்.

‘அதுதானே பார்த்தேன்.. இவளாவது.. இவள் வாயால் என்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்வதாவது.. இப்போதும் என்னைத் தவிர வேறு ஒருத்தனை திருமணம் பண்ணிக் கொள்ள மாட்டேன் என்றுதானே சொல்கிறாள்.. பாதகி..’

தன் கரத்தின் மேலிருந்த இருவர் கரங்களையும் ஒன்றாக இணைத்து தன் கரத்தில் அடக்கி முத்தமிட்டார் தொண்டைமான்.. மெதுவாக அனுராதாவின் முகம் பார்த்தான் அவன் கரம் பற்றியிருக்கும் உணர்வே அவள் முகத்தில் இல்லை..

‘சை.. என்ன பெண் இவள்..’

அவன் எழுந்து கொண்டான்.. ஜன்னலோரம் சென்று வேப்பமரத்தைப் பார்த்தான்..

“தாத்தா..” அடிவயிற்றிலிருந்து அனுராதா ஓலம் எழுப்பினாள்.. தொண்டைமானின் மேல் விழுந்து கதறினாள்.. அவரது குடும்பத்தார் கட்டிலைச் சுற்றிக் கொண்டார்கள்.. ஆகாஷ் பேச்சிழந்தான்.. இப்போதுதானே அவனிடம் பேசினார்.. அவனிடம் வாக்குக் கேட்டார்..? அவன் கரத்தையும் அவள் கரத்தையும் இணைத்து முத்தமிட்டார்..? அதற்குள் அவர் ஆவி பிரிந்து விட்டதா..?

இமைக்காமல் இறந்து விட்ட தொண்டைமானின் உடலையே பார்த்துக் கொண்டு நின்றான் ஆகாஷ்..

ஆய்வுக்காக அவர் உதவியை நாடி வந்தான்.. அன்புடன் அரவணைத்துக் கொண்டார்.. அவன் மனதில் காதல் பிறந்தது இந்த இடத்தில்தான்.. அவன் மனக் கதவைத் திறந்து தன் காதலை தொண்டைமானிடம் சொல்லி வேதனைப்பட்டதும் இந்த இடத்தில்தான்.. எந்த ஒரு தருணத்திலும் தன் காதலை அனுராதாவிடம் சொல்லி விடக்கூடாது என்று அவரிடம் அவன் வாக்குறுதி கேட்டதும் இந்த இடத்தில்தான்.. தன் வாழ்வின் கடைசி நிமிடங்களில் அவன் கைபிடித்து அவனது காதலியையே அவன் மணக்க வேண்டும் என்று பதிலுக்கு ஒரு வாக்குறுதியை அவர் கேட்டுப் பெற்றுக் கொண்டதும் இந்த இடத்தில்தான்.. இப்போது அவர் ஆவி அவரை விட்டுப் பிரிந்து காற்றில் கலந்து விட்டதும் இந்த இடத்தில்தான்.. இந்த இடம் அவனைப் பொறுத்தவரை ஓர் நினைவுச் சின்னம்..

அணையப் போகும் விளக்குத்தான் சுடர் விட்டுப் பிரகாசிக்குமோ..? தன் மூச்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவர் அவனுக்காக காத்திருந்தது போலல்லவா ஆகிவிட்டது..? இப்படி ஓர் இனிய நிர்பந்தத்தை அவனுக்கு உருவாக்குவதற்காகவா அவர் அவனைத் தன் கடைசி விநாடிகளில் அழைத்தார்..?

அனுராதாவின் துயரம் சொல்லில் அடங்காததாக இருந்தது.. தொண்டைமான் பெற்ற மகன் கோவிந்தசாமி கூட அவ்வளவு வருந்தவில்லை.. இது இயற்கையின் நியதி என்பது போல் இயல்பாய் காரியங்களை நடத்தினார்.. மற்றவர்கள் காலா காலத்தில் எல்லாம் முடிந்தால் அவரவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாமே என்று அவசரம் காட்டினர்.. தொண்டைமானின் காலடியிலேயே அமர்ந்து கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தவள் அனுராதா மட்டும் தான்..

மரணப் படுக்கையில் இருப்பவரைக் காண வந்தவன்.. அவரது இறுதிக் காரியங்களில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட.. ஓர் பெருமூச்சுடன் ஆகாஷ் வாசலுக்கு வந்தான் வேப்ப மரத்தடி நிழலில் நாற்காலிகள் போடப்பட்டிருக்க அவற்றில் ஒன்றில் அமர்ந்தான்.. பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்..

“நல்ல மனுசன் பாவம்.. இழுத்துக்காம பறிச்சுக்காம பட்டுன்னு போய் சேர்ந்து விட்டார்.. இந்த ஒரு வாரம்தான் படுத்த படுக்கையாம்..”

“அவரோட கடைசி பேத்திதான் தஞ்சாவூரிலிருந்து வேலைக்கு லீவு போட்டுவிட்டு இந்த ஒரு மாதமாய் அவர்கூட வந்து இருக்குதாம்..”

“இந்த மூன்று நாட்களாய் அந்தப் பொண்ணு சாப்பிடாமல் கிடக்குதாமே..”

“ம்ம்.. பாசக்காரப் பிள்ளை.. இந்தக் காலதில் யார் இப்படி இருக்கிறாங்க..?”

அன்று மாலை அவன் அன்னலட்சுமிபுரத்தில் தொண்டைமானின் மோட்டார் தோட்டத்திலேயே குளித்து விட்டு ஈர உடையுடன் வீட்டிற்குள் வந்தான்.. கோவிந்தசாமியின் மனைவி திலகவதி அவனை சாப்பிட அழைத்தாள்..

“இல்லைங்க.. நான் கிளம்பணும்..”

“காலையில் வந்தவங்க.. சாயந்திரம் வரைக்கும் பசியோடு இருந்திருக்கீங்க.. சாப்பிடாமல் எப்படி காரோட்டுவீங்க.. வாங்க..”

“எனக்கு மனசு வரவில்லைங்க..”

“இங்கே எல்லோருடைய மனதிலும் துக்கம் இருக்கு.. அதுக்காக பட்டினி கிடந்து நாமளும் போனவர் கூட போய் சேர்ந்துவிட முடியுமா..? மிச்சமிருக்கிற வாழ்க்கையை 

வாழ வேண்டாமா..? இதை உங்களுக்கு மட்டும் சொல்லவில்லை தம்பி.. நீங்க கல்யாணம் பண்ணிக்கிறேன்னு என் மாமனாரின் கை பிடித்து சத்தியம் பண்ணித் தந்தீங்களே.. உங்க வருங்காலப் பெண்டாட்டி.. அவளுக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.. பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்காமல் குத்துயிரும் குலையுயிருமா கிடந்தால் பெத்தவ மனசு தாங்குமா..? கட்டிக்கப் போகிறவளிடம் நீங்கதான் சொல்லனும்..”

இன்று காலை வரை எட்டாக் கனியாக இருந்தவள் இப்போது அவனுக்குக் கிட்டிய கனியாகி விட்டாள்.. தொலை தூரத்தில் நின்று கண்சிமிட்டியவள்.. இப்போது அவன் கைப்பிடியில்.. இதை நடத்திக் கொடுத்தவர் போட்டோவின் பிரோமிற்குள் சிரித்துக் கொண்டே அவனைப் பார்க்க அவர் முன்னால் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது..

அவன் மௌனமாய் அவள் அருகே சென்று நின்றான்.. தூணில் சாய்ந்து கொண்டு மௌனமாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவள் ஈரத் தலையில் நீர் சொட்ட அமர்ந்திருந்தாள்..

விரித்து விடப்பட்டிருந்த கூந்தல் தரையில் விழுந்து கிடந்தது..

என்ன சொல்வது..? எப்படிச் சொல்வது..? ‘இவன் இங்கு வந்தால் நான் வரமாட்டேன்..’ என்று சொல்லி அவனை வெளியேற்றியவள் இவள்.. இவளிடம் எப்படிப் பேசுவது..?

அவன் மனப் போராட்டத்திலிருந்து அவனை மீட்க வந்தவர் போல் கோவிந்தசாமி அங்கே வந்தார்..

“அடடா.. ஈர டிரஸ்ஸுடன் இருக்கிறீர்களே.. வரதா.. கைலி எடுத்துக் கொடு.. போங்க போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கொண்டு சாப்பிட வாங்க..”

“அதெல்லாம் வேண்டாம் சார்..”

“சாரா..? மாமான்னு கூப்பிடுங்க.. இனி நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை.. மூன்றாம் மனிதன் மாதிரி எதற்கு கூச்சப்படுகிறீர்கள்..? போங்க.. டேய் வரதா.. மாப்பிள்ளையைக் கவனி..”

“வந்துவிட்டேன் அப்பா.. வாங்க மாப்பிள்ளை..” அனுராதாவின் பெரிய அவண்ணன் வரதன் அழைத்தான்..

“இல்லை.. இவங்க.. சாப்பிடவில்லையென்று..”

“யாரு… ராதாவையா..? நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.. ராதா எழுந்திரு.. உனக்காக மாப்பிள்ளை கவலைப்படுகிறார் பார்..”

அனுராதாவின் கைப்பிடித்து எழுப்பி கோவிந்தசாமி உள்ளே அழைத்துச் சென்று விட்டார்.. வீடு கழுவி விடப்பட்டிருந்தது.. உள்ளறை ஒன்றில் வரதராஜன் எடுத்துக் கொடுத்த கைலி.. டி.சர்ட்டிற்கு மாறியவன் ஈர உடைகளை அங்கிருந்த பேன் காற்றில் காய வைத்து விட்டு வெளியே வந்தான்..

சூடான இட்லிகளை பரிமாறி சட்னி, சாம்பார் ஊற்றினாள் திலகவதி.. பசி வயிற்றைக் கிள்ள பரபரவென்று சாப்பிட்டு முடித்தவன்.. திலகவதியிடம் தயங்கித் தயங்கி..

“உங்கள் மகள் சாப்பிட்டாகி விட்டதா..?” என்று கேட்டான்..

திலகவதியின் முகம் மலர்ந்து விட்டது.. தன் மகள் மேல் வருங்கால மாப்பிள்ளை காட்டும் அக்கறை கண்டு மகிழ்ந்து போனவள்,

“கவலைப்படாதீங்க.. உங்கள் பெண்டாட்டியை அவளுடைய அக்காள்கள் அதட்டி உருட்டி சாப்பிட வைத்து விட்டார்கள்..” என்றாள்..

‘பெண்டாட்டி..’

அறைக்குள் பாதி காய்ந்தும் காயாமலும் இருந்த தன் உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிப் போனான்..

“உங்கள் பெண்டாட்டி கிட்டச் சொல்லவில்லையா..” அனுராதாவின் அக்கா சொர்ணலதா கிண்டலாய் கூறினாள்.

அவன் தயங்கி நின்று அனுராதாவின் முகம் பார்த்தான்.. அவள் நிலம் பார்த்தாள்..

‘என் முகத்தைப் பார்க்க என்றுதான் உனக்குப் பிடித்தது..’ முகம் இறுகிப் போனவனாய் அவளிடம் கூறினான்..

“கிளம்புகிறேன்..”

அவள் பதில் சொல்கிறாளா.. இல்லையா என்பதைக் கூடக் கவனிக்காமல் அவன் வீட்டை விட்டு வெளியேறி காரில் ஏறிவிட்டான்..

அன்று இரவு எதிர்பாராமல் வந்து நின்ற மகனின் வருகை கண்டு மகிழ்ந்து போன மருதநாயகமும், வசுந்தராவும் மகன் எதற்காக வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் அதிர்ந்து போயினர்..

“என்னடா.. திடீர்ன்னு வந்திருக்கிறாய்.. உடம்பு சரியில்லையா..?”

“அதெல்லாம் ஒன்றுமில்லைம்மா..”

“வேறு என்னடா.. காலேஜ் லீவா..”

“இல்லைப்பா.. நான்தான் லீவ் போட்டு விட்டு வந்தேன்..”

“ஏண்டா.. உன் முகமே நன்றாக இல்லையே.. எனிதிங் ராங்..?”

“அப்பா.. தொண்டைமான் ஐயா இறந்து விட்டார்..”

“அடடா.. என்றைக்கு இறந்தாராம்..”

“இன்றைக்குத்தான் அப்பா.. மதியமிருக்கும்..”

மருதநாயகத்தின் முகத்தில் குழப்பம் நிலவியது..

“உனக்கு எப்படித் தெரியும்..? அருகிலிருந்து பார்த்தவன் போலக் கூறுகிறாயே..?”

“அருகிலிருந்துதான் பார்த்தேன்..”

“என்ன..?”

“ஆமாம் அப்பா இன்று அதிகாலையில் அவருடைய மகன் எனக்குப் போன் பண்ணினார்..” என்று தொடங்கிய ஆகாஷ் நடந்தவற்றை விளக்கமாகச் சொன்னான்..

“என்னடி வசுந்தரா.. இவன் இப்படி ஓர் குண்டைத் தூக்கிப் போடுகிறான்..”

“அதுதானே.. ஆகாஷ்.. நீ அந்தப் பெண்ணின் மேல் ஆசைப் படுகிறாய் என்று சொல்லு.. அதில் ஓர் அர்த்தம் இருக்கும்.. இது என்னடா புதுக் கதையாய் இருக்கிறது.. வாக்குறுதியாம்.. மண்ணாங்கட்டியாம்.. உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது..?”

“அம்மா.. நான் தீர்மானமாய் சொல்லுகிறேன்.. இந்த ஜென்மத்தில் என் மனைவி என்று ஒருத்தி வருவதாக இருந்தால் அது அந்த அனுராதா மட்டும்தான்.. நான் வாக்குக் கொடுத்து விட்டேன்.. அப்புறம் உங்கள் இஷ்டம்.”

திருமணத்தை விரும்பாமல் தள்ளிப் போட்டு வந்த மகன் திருமணம் பண்ணிக் கொள்ள இசைந்து விட்டான்.. என்ன.. பெண்ணை அவனே பார்த்து விட்டான்.. காதல் திருமணம் என்றால் ஒத்துக் கொள்ள மாட்டோமா.. பலவாறாய் சிந்தனை செய்த வசுந்தராவும், மருத நாயகமும் ஓர் முறை திருமங்கலத்தில் இருந்த கோவிந்தசாமியின் வீட்டிற்குச் சென்று வந்தனர்.. அனுராதா வார இறுதியென்று திருமங்கலம் வந்திருக்க பெண்ணையும் பார்த்து விட்டனர்.. அவளின் அழகும், படிப்பும் அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.. கோவிந்தசாமியின் பொருளாதார நிலையும் திருப்திகரமாய் இருக்க அவர்களது மனக் குறை மறைந்து விட்டது..

ஒரு வருடம் கழித்து திருமணம் செய்வதென்று தீர்மானித்தனர்.. திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ள முடிவும் செய்தனர்.. இரு வீட்டாரும் ஒரு மனதாய் இணைந்து நின்று திருமண ஏற்பாடுகளைக் கவனித்தனர்..

இதோ.. அந்தத் திருமண நாளும் வந்து விட்டது.. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விடிந்தால் திருமணம்.. ஆனால் வாக்குக் கொடுத்தேன் பேர்வழி என்று காதலித்த வளையே கை பிடிக்கப் போகும் மணமகன்தான் மனநிம்மதி இல்லாமல் தவிக்கிறான்.. பரசுராம் சமாதானம் செய்ய ஒரு வழியாய் தூக்கத்தில் விழுந்தவன் விடியலில் பரசுராம் உலுக்க எழுந்து வேண்டா வெறுப்பாய் குளித்து முடித்து பட்டு வேட்டி பட்டுச் சட்டையுடன் மாலையும் கழுத்துமாய் மணமேடையில் வந்து அமர்ந்தான்..

0Shares

Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link