Chapter 10

0Shares

மணமேடையிலிருந்த ஹோமப் புகையில் ஆகாஷிற்கு லேசாய் கண்கள் எரிந்தன.. மாலையும் கழுத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த பட்டு அங்க வஸ்திரமும் கசகசப்பாய் இருக்க வியர்க்க ஆரம்பித்து விட்டது.. ஐயர் மந்திரங்களைச் சொல்லச் சொல்ல திருப்பிச் சொல்லிக் கொண்டே அவர் கொடுத்தவற்றை அக்கினியில் இயந்திர கதியில் போட்டுக் கொண்டிருந்தான் அவன்..

“பொண்ணை அழைச்சுட்டு வாங்கோ..”

ஐயர் உத்தரவிட மணப்பெண் அலங்காரத்திலிருந்த அனுராதா மணமேடைக்கு அழைத்து வரப்பட்டாள்..

அருகில் அமர்ந்தவளை ஜாடையாகப் பார்த்தான் ஆகாஷ்.. ஊஹூம்.. அவளிடம் ஓர் அசைவுமில்லை.. நிலம் நோக்கியவள்.. நிலம் நோக்கியவள்தான்.. தலை நிமிரவில்லை..

‘திமிர்..’ பல்லைக் கடித்துக் கொண்டான் ஆகாஷ்..

‘இவள் என்ன நிலத்துக்குள் புதையலைக் கண்டு விட்டாளா என்ன..? இப்படித் தரையை உற்று உற்றுப் பார்க்கிறாளே.. கொஞ்சமாவது கல்யாணப் பெண்ணுக்குரிய நாணம்.. மகிழ்வு.. முகத்தில் தெரிந்தால்தான் என்ன..? ஜாடையாய் ஓர் பார்வை பார்த்தால்தான் என்ன..? குறைந்தா போய் விடுவாள்..?’

கெட்டி மேளம் முழங்க நாதஸ்வரம் ஒலிக்க அவள் கழுத்தில் தாலியை எடுத்துக் கட்டும்போது அவன் இதயம் சிலிர்த்தது.. மனதில் நினைத்தவளையே அடைந்து விட்டான்.. அவள் கரம் பிடித்து அக்கினியை வலம் வரும்போது வேண்டுமென்றே அவள் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டான்..

‘என்ன விளையாட்டா காட்டுகிறாய்..?’

புது மணமக்களை குலதெய்வம் கோவிலை தரிசிக்க வைக்க சிந்துபட்டிக்கு காரில் அழைத்துச் சென்றார்கள்.. அவன் இயல்பாய் செய்வது போல் அவள் தோள் மேல் கையைப் போட்டு சாய்ந்து அமர்ந்து கொண்டான்.. அவள் உடல் ஒடுங்கினாள்.. அவன் கண்டு கொள்ளவே இல்லை..

‘உன் திமிரையெல்லாம் காட்ட நான் பழைய ஆகாஷ் இல்லை.. நான் உன் புருசன்டி.. உன் கழுத்தில் தாலியைக் கட்டியவன்..’

முதல் நாளிரவு வரை அவன் இதயத்தில் சூழ்ந்து நின்ற சோகம் இப்போது காணாமல் போயிருந்தது.. திமிறிக் கொண்டிருந்தவளின் திமிரை ஒரு மூன்று முடிச்சில் அடக்கிவிட்ட கர்வம் மனதில் குடிகொண்டிருந்தது..

‘யாருகிட்ட..ம்..?’ அன்று அவள் பின்னலாட முறைத்துக் கொண்டு போனது அவன் நினைவில் வந்தது.. இன்று அவள் அவனருகில்.. காலமெல்லாம் இனி அவன் நிழலில்தான் அவள் வாழ்ந்தாக வேண்டும்.. ஓட முடியாது.

அவன் நகர்ந்து அவளுடன் ஒட்டி அமர்ந்து கொண்டான்.. அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது.. அவனுக்குப் புரிந்தது.. ஒரு வகையில் அது அவனுக்குத் திருப்தியாக இருந்தது.. அவளை வெற்றி கொண்ட பெருமிதம் அவன் மனதில் எழுந்தது..

‘யாருகிட்டடி உன் திமிரைக் காட்டுகிறாய்.. ம்..?’

இவனும் அவள்போல் மனதில் சொல்லிக் கொண்டான்.. முன் சீட்டில் அமர்ந்திருந்த ஆனந்தி திரும்பி தன் புது அண்ணியைப் பார்த்துக் கூறினாள்..

“அண்ணி.. இதுதான் சிந்துபட்டி.. எங்கள் சொந்த ஊர்..”

‘திமிர் பிடித்தவள்..’ என்று ஆகாஷ் நினைத்துக் கொண்டிருந்தவள் மென்மையாய் அவன் தங்கையைப் பார்த்துப் புன்னகைத்தாள்..

“அப்படியா..?”

“அதோ தெரிகிறது பாருங்கள் அண்ணி.. கோவில் கோபுரம்.. அதுதான் சிந்துபட்டி வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்.. இந்தக் கோவிலின் சிறப்பு என்ன தெரியுமா..?”

“என்ன..?”

“திருப்பதியில் பிடி மண் எடுத்து வந்து இந்தக் கோவிலை கட்டி இருக்கிறார்கள்.. திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டிய வேண்டுதல்களை இந்தக் கோவிலில் நிறைவேற்றலாம்.. அதை ஏழுமலையான் ஏற்றுக் கொள்வாரென்பது ஐதீகம்.. ஆனால் இந்தக் கோவிலில் வேண்டும் வேண்டுதல்களை இந்தக் கோவில்தான் நிறைவேற்ற வேண்டும்.. வேறு எந்தக் கோவிலில் நிறை வேற்றினாலும் எங்கள் சிந்துபட்டிப் பெருமாள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்..”

“ஐ ஸீ..”

ஆனந்தியிடம் சிரித்த முகம் மாறாமல் பேசிக் கொண்டு வந்தாள் அனுராதா..

கோவில் வாசலில் கார் நின்றது.. புது மணமக்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போனார்கள்.. வெங்கடாஜலபதி பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து விட்டு.. அவர்களின் பூர்விக வீட்டிற்கு மணமக்களை அழைத்துப் போனார்கள்..

கிராமத்து மக்கள் வந்து போய்க் கொண்டே இருக்க.. சிமெண்ட் போட்ட அந்த வீட்டின் உள்ளறையில் மின்விசிறியின் அடியில் ஆகாஷும், அனுராதாவும் 

அமர்ந்து இருந்தார்கள்.. ஆனந்தி அனுராதாவிடம் ஒட்டிக் கொண்டாள்..

“இதுதான் எங்கள் அப்பாவின் பிறந்த ஊர் அண்ணி, அப்பா பாதி நாள் இங்குதான் இருப்பார்.. காலையில் காரை எடுத்துக் கொண்டு வந்து விட்டு இரவு தான் மதுரைக்கு வருவார்.. இங்கே நமக்கு தென்னந் தோப்பெல்லாம் இருக்கு.. அதில் ஓரமாய் நானும்.. அண்ணனும் இரண்டு மாஞ்செடிகளையும் கொய்யாச் செடிகளையும் நட்டு வைத்தோம்.. அவையெல்லாம் இப்போது பெரிய மரங்களாகி விட்டது.. கூடை கூடையாய் காய் காய்க்கும்.. இன்றைக்கு நாம் போக முடியாது.. இன்னொரு நாள் பார்க்கலாம்.. சரியா..?”

என்னவோ உடனே அந்தத் தோப்பையும் வயல்களையும் பார்க்க வேண்டும் என்று அனுராதா அடம் பிடித்தது போல ஆனந்தி சமாதானம் சொல்ல அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு,

“சரி..” என்றாள் அனுராதா..

‘இதைப் பார்றா.. இவளுக்கு என்னைக் கண்டால் தான் ஆக மாட்டேன் என்கிறது போல.. என் தங்கையுடன் இந்த இழை இழைகிறாளே.. ஊரில் எல்லாம் நாத்தனாரைக் கண்டால்தான் ஒரு பெண்ணுக்கு பிடிக்காது என்பார்கள்.. இங்கே எல்லாமே தலை கீழாய் இருக்கிறதே..’

“நல்ல நேரம் முடிவதற்குள் அன்னலட்சுமிபுரத்திற்கு போய் சாமி கும்பிட்டு விட்டு மதுரைக்குப் போக வேண்டும்..”

வசுந்தரா மருதநாயகத்திடம் கூறினாள், புதுமண மக்கள் அன்னலட்சுமிபுரத்திற்குச் சென்றார்கள்.. தொண்டைமானின் வீட்டிற்கு போய் அவர் படத்தின் கீழ் ஆகாஷும், அனுராதாவும் வணங்கி எழுந்தபோது ஆகாஷின் கண்கள் கலங்கியிருந்தன.. அனுராதா விசும்பினாள்.. ஆனந்தி அவளை அணைத்துக் கொண்டாள்.

“இன்றைக்கு உங்கள் கல்யாணநாள் அண்ணி.. அழக்கூடாது..”

இதமான நறுமணம் அறையில் கமழ்ந்து கொண்டிருந்தது.. அறையின் உள்ளே ஆகாஷ் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான்.. அவன் இதயம் சஞ்சலத்தில் இருந்தது.. சற்று நேரத்தில் அனுராதா வந்து விடுவாள்.. இதுவரை மற்றவர்கள் முன்னிலையில் அவளைத் தொடவும்.. நெருங்கி அமரவும் அவன் தயக்கம் காட்டவில்லை.. விரும்பிச் செய்தான்.. ஆனால் இப்போது.. தனிமையில் அவளை எப்படி எதிர்கொள்வது..?

அறைக்கு வெளியே கொலுசு சத்தம் கேட்டது.. அவன் திரும்பாமல் அவளுக்கு முதுகு காட்டி நின்றான்.. கொலுசுச் சத்தம் சமீபித்தது.. மெதுவாய் திரும்பிப் பார்த்தான்.. அவள் உள்ளே வந்து நின்றாள்.. அறைக் கதவு திறந்திருந்தது.. அவனுக்குக் கோபம் வந்தது..

“ரூமை லாக் பண்ணிவிட்டு வர மாட்டாயா..? இதைக் கூட சொல்ல வேண்டுமா..?”

அவள் மௌனமாய் நின்றாள்.. அவனே போய்க் கதவை அடைத்து விட்டு வந்தான்..

“நின்று கொண்டேதான் இருப்பாயா..? உட்கார வேறு சொல்ல வேண்டுமா..?”

அவள் பேசாமல் கட்டிலின் நுனியில் அமர்ந்தாள்..

“ஒழுங்காய் உட்காருவதற்கு என்ன..? விழுந்து, கை, கால் உடைந்து போனால் உன் வீட்டாருக்கு யார் பதில் சொல்வது..? இல்லை.. வேண்டுமென்றே அவர்களிடம் பாட்டு வாங்கி வைக்க வேண்டுமென்ற திட்டம் ஏதாவது வைத்திருக்கிறாயா..?”

அவள் நகர்ந்து சரியாய் அமர்ந்து கொண்டாள், ஆகாஷ் அவள் முகத்தையே பார்த்தான்.. அவள் பார்வை தரையில் பதிந்திருந்தது..

‘சண்டித்தனம் செய்கிறாள்..’ அவனுக்கு சினம் மூண்டது..

“தரையை ஏன் பார்த்துக்கிட்டு உட்கார்ந்து இருக்கிறாய்..? அங்கே யார் இருக்கிறார்கள்..?”

அவள் தலை நிமிரவில்லை.. அவன் பல்லைக் கடித்தான்..

“ஏய்ய்.. உன்னைத்தாண்டி சொல்லுகிறேன்.. காதில் விழுகிறதா இல்லையா..? நீ யென்ன செவிடா..?”

அவள் உதடு கடித்துக் கொண்டாள்..

‘இன்று இவன் முறையா..?’

“பதில் சொல்ல மாட்டாயா..? பேச வராதா..? நீ செவிட்டூமையா..?”

அனுரதாவிற்கு தெளிவாய் விளங்கி விட்டது..

‘இவன் பதிலுக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.. தாலிகட்டி விட்ட தைரியம்..’

அதற்குள் பதிலின்றி அவள் முகம் திருப்பிக் கொள்ள அவனுக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது..

“ஏண்டி.. நான் ஒருத்தன் இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன்.. அங்கே யாரோ இருப்பது போல அங்கே என்ன பார்வை..? என்னை கண்ணுக்குத் தெரியவில்லையா..?”

அவள் பார்வையைத் திருப்பவில்லை..

“அது சரி.. நான் பேசினால் காதில் விழாத செவிடு.. பதில் சொல்ல முடியாத ஊமை.. பத்தாத குறைக்கு கண் பார்வையும் சரியில்லை.. உன்னை உன் தாத்தா என் தலையில் கட்டிவிட்டு அவர் நிம்மதியாகப் போய் சேர்ந்து விட்டார்.. என் நிம்மதிதான் போய் விட்டது..”

இப்போது பதில் சொல்லாமலிருக்க அவளால் முடியவில்லை.. “தேவையில்லாமல் என் தாத்தாவைப் பேசும் வேலையெல்லாம் வேண்டாம்..” அவனுக்குள் மகிழ்ச்சி குமிழ் விட்டது.. ‘பேசிவிட்டாள்..’ கோபத்தைக் கைவிடாதவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு,

“தேவையில்லாமல் பேசுகிறேனா..? ஏண்டி சொல்ல மாட்டாய்..? இது பர்ஸ்ட் நைட்.. அவனவன் முதலிரவை என்னமாய் கொண்டாடி இருப்பான்..? நான் உன்னிடம் மல்லு கட்டிக் கொண்டு இருக்கிறேன்.. எனக்கென்ன தலை விதியா..?” என்று சலித்துக் கொண்டான்..

“இதை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்..? நானா உங்களை என் தாத்தாவிடம் வாக்குக் கொடுக்கச் சொன்னேன்..?”

“பின் நானாகவா தஞ்சாவூரிலிருந்து பறந்து வந்து வாக்கு கொடுத்தேன்..?”

“நான் உங்களை வரச் சொல்லவில்லை..”

“உன் அப்பாதான் வரச் சொல்லிச் சொன்னார்.. சும்மாவும் இல்லை.. ரொம்பவும் வேண்டிக் கேட்டுக் கொண்டார்..”

“அவர் கேட்டுக் கொண்டதற்கு நானென்ன பிணையா..?”

“நான் மட்டும் ஏன் பிணையாக வேண்டும்..? உன்னுடன் கல்யாணம் என்பது எப்பேர்பட்ட போராட்டத்தை எனக்குக் கொடுக்கும் என்பதை நான் தெரியாதவனல்ல..”

“இதோ பாருங்கள்.. இதில் என்னைக் குற்றவாளி ஆக்காதீர்கள்.. எனக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை..”

“கெட்டிக்காரி.. நீ.. என்னவோ சம்பந்தமில்லாதவள் போல் என்னமாய் பேசுகிறாய்.. ஏண்டி.. கல்யாணம் என்றால் உனக்கு விளையாட்டாய் போய் விட்டதா..? வாழ்க்கைடி.. உன் கழுத்தில் காலையில்தான் மூன்று முடிச்சு போட்டு உன் கையைப் பற்றி அக்கினியை வலம் வந்து இப்போது பர்ஸ்ட் நைட் ரூமிற்குள் வந்தும் உட்கார்ந்து விட்டேன்.. நீ நியாயவாதி போல உனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்கிறாய்.. எனக்கு ஒரு விசயம் தெரிய வேண்டும்.. நீ சம்பந்தமில்லையென்று எதைச் சொல்லுகிறாய்.. உனக்கும் எனக்கும் சம்பந்தமிலையென்று சொல்கிறாயா..? சம்பந்தமில்லாதவள் எதற்குடி நான் கட்டிய தாலியை கழுத்தில் போட்டக் கொண்டிருக்கிறாய்..?”

அனுராதா அழுது விட்டாள்.. அவளது விம்மல் ஒலியைக் கேட்டதும் அவன் இதயம் வலித்தது.. அதிகமாய் பேசி விட்டோமோ.. மனதில் குற்ற உணர்வுடன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.. அவள் கண்ணீரோடு பேச ஆரம்பித்தாள்..

“எப்படி நீங்கள் என் தாத்தாவிற்கு கொடுத்த வாக்குறுதிக்கு கட்டுப்பட்டு என் கழுத்தில் தாலியைக் கட்டினீர்களோ… அது போல்தான் நானும் என் தாத்தாவிற்குக் கொடுத்த வாக்குறுதிக்குக் கட்டுப்பட்டே கழுத்தை நீட்டினேன்..”

“இப்போது என்ன சொல்ல வருகிறாய்..? பாதிக்கப் பட்டது என் வாழ்வு மட்டுமில்லை.. உன் வாழ்வும்தான் என்கிறாயோ..?”

அவள் மௌனமாய் கட்டிலில் சுருண்டு படுத்து விட்டாள்.. ‘இப்போது என்ன செய்வது..? அவள் என் பெண்டாட்டிதான்.. தொட்டால் அவள் தடுக்கப் போவதில்லை.. ஆனால் என் தாத்தாவிற்கு கொடுத்த வாக்குறுதிக்கு கட்டுப்பட்டுத்தான் உனக்குக் கழுத்தை நீட்டினேன் என்பவளை எப்படித் தொடுவது..?’

அவனும் எதுவும் பேசாமல் அவளருகில் படுத்து விட்டான்.. காலையிலிருந்து மணமக்களாய் நின்ற களைப்பில் அவர்கள் இருவருமே அயர்ந்து தூங்கி விட்டார்கள்..

தூக்கத்தில் ஆகாஷிற்கு கனவு வந்தது.. மேகக் கூட்டங்களின் இடையே தேவதை போல் அனுராதா மிதந்து வந்தாள்.. ‘உனக்குத்தான் என்னைப் பிடிக்காதே..’ என்று ஆகாஷ் முகம் திருப்பிக் கொண்டான்.. அவள் தோள் தொட்டுத் திருப்பிய தொண்டைமான் தாத்தா பேத்தியின் கரம் பிடித்து அவன் வசம் ஒப்படைக்கிறார்.. அவன் 

அவள் கரம் பிடித்து இழுக்கிறான்.. அவள் அவன் மேல் பூமாலையாய் விழுகிறாள்..

0Shares

Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link