Chapter 12
வெண்மையாய் நுரையுடன் பால் பொங்கியது.. கைப்பிடியைப் பிடித்துத் தூக்கி இறக்கி வைத்தாள் அனுராதா..
“அப்படியே ஜீனி போட்டு பூஜையறைக்கு கொண்டு வாம்மா..” என்றாள் திலகவதி.. அனுராதா கொண்டு போனாள்..
பூஜையறையில் விளக்கேற்றி வைத்து விட்டுக் கண்மூடிக் கடவுளிடம் வேண்டிக் கொண்டு ஒரு நிமிடம் அப்படியே நின்றாள் அனுராதா..
‘என்ன வேண்டிக் கொள்கிறாள்..?’ யோசனையுடன் பார்த்தான் ஆகாஷ்..
எல்லோருக்கும் தம்ளர்களில் பாலை ஊற்றிக் கொண்டு போய் கொடுத்தாள் அனுராதா.. ஆகாஷ் மட்டும் அவளை ஒரு மார்க்கமாய் பார்த்துக் கொண்டே வாங்கிக் கொண்டான்..
‘பால் காய்ச்சிப் புதுக்குடித்தனம் வந்து விட்டதை கொண்டாடுகிறாளே.. உண்மையிலேயே சந்தோசப்படு கிறாளா..? இல்லை சாஸ்திரத்திற்கு இதையெல்லாம் செய்கிறாளா..?’
அவன் சந்தேகம் அவனுக்கு.. அவள் அமைதியாய் உள்ளே போய் விட்டாள்.. கோவிந்தராஜன் தம்பதியினரும்.. மருதநாயகம் தம்பதியினரும் இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டுக் கிளம்பி விட்டனர்.. ஆகாஷ் மறுநாளே கல்லூரிக்குப் போய்விட.. அனுராதா மட்டும் லீவிலேயே இருந்தாள்..
“ஏம்மா நீ லீவைக் கேன்சல் பண்ணப் போகிறதாச் சொன்னாயே..” கோவிந்தசாமி வினவினார்..
“இன்னும் ஒரு வாரம் தானே அப்பா.. லீவை அவைல் பண்ணிவிட்டு ஜாயின் பண்ணுகிறேன்.. வீட்டை ஒழுங்கு பண்ண வேண்டுமே அப்பா..” அனுராதா காரணம் சொன்னாள்..
எல்லோரும் கிளம்பும்போது,
“ஆனந்தி கொஞ்ச நாள் எங்களுடன் இருக்கட்டுமே..” என்று வசுந்தராவைப் பார்த்துக் கூறினாள் அனுராதா..
“வேண்டாம்மா.. கல்யாண வேலைகளில் கலகலப்பாய் இருந்த வீடு.. கல்யாணம் முடிந்து நீங்கள் இரண்டு பேரும் கிளம்பி வந்த பின் வெறிச்சென்று இருக்கும்.. ஆனந்தியும் கூட இல்லாவிட்டால் எங்கள் இருவருக்கும் பைத்தியம் பிடித்து விடும்..” வசுந்தரா கூறியபோது அனுராதாவால் ஏற்காமல் இருக்க முடியவில்லை..
வீடு நிறைய ஆட்கள் இருந்தபோது இருந்த கலகலப்பு அவர்கள் கார் ஏறிப் போனபோது கூடவே போய்விட.. ஆகாஷ்.. அனுராதா மட்டும் இருந்த வீட்டில் அமைதி குடி கொண்டது..
அமைதியிலிருந்து தப்பிக்க ஆகாஷ் கல்லூரிக்குப் போய்விட அனுராதா மட்டும் வீட்டையே சுற்றிச் சுற்றி வந்தாள்.. பர்னிச்சர்களை அழகுறப் போட்டாள்.. தோட்டத்தில் புதிய செடிகளை நட்டாள்.. எது செய்தாலும் மாலை ஐந்து மணிக்குள் செய்து முடித்துவிட்டுக் குளித்து உடைமாற்றி பூ மணக்க வந்து ஆகாஷிற்கு கதவு திறந்தாள்.. அவன் முகம் கழுவி வரும்போது டைனிங் டேபிளில் சூடாக டிபன் காபியை வைத்துக் கொண்டு காத்திருந்தாள்.. டிபன் சாப்பிட்டு விட்டு அவன் சற்று நேரம் டி.வி. பார்த்துக் கொண்டு இருக்கும்போது அவள் இரவுச் சமையலில் ஈடுபட்டிருப்பாள்.. அவன் சாப்பிட வரும்போது பக்கத்தில் நின்று கொண்டு பார்த்துப் பார்த்துப் பரிமாறுவாள்.. இரவு அவன் குளித்து விட்டுப் படுக்கைக்கு வரும்போது மட்டும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பாள்..
‘என்னடா வாழ்க்கை இது..’ சலித்துப் போய் விட்டது ஆகாஷிற்கு..
‘பேசாமல் நானுண்டு.. என் காலேஜுண்டு என்று இருந்தேன்.. மகராசியைப் பெற்ற அப்பன் தேடிப் போன் பண்ணி இவளை என் தலையில் கட்டி வைத்து புண்ணியம் தேடிக் கொண்டு விட்டார்.. நானல்லவா இப்போது அவஸ்தைப்படுகிறேன்..’
தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி தூங்காமல் இரவைக் கழிப்பான் ஆகாஷ்..
“நான் இன்றைக்கு டியூட்டியில் ஜாயின் பண்ண வேண்டும்..” ஆகாஷ் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும்போது அனுராதா கூறினாள்..
“பண்ணு.. அதை என்னிடம் ஏன் சொல்கிறாய்..” விட்டேற்றியாய் பதில் சொன்னான் ஆகாஷ்..
“உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வார்கள்..?” அனுராதா எரிச்சலுடன் கேட்டாள்..
“ஆமாண்டி.. இப்படி வக்கணையாய் கேள்வி கேட்பதில் ஒன்றும் குறைச்சல் இல்லை..” கழுத்தைச் சுற்றி டையைக் கட்டிக் கொண்டே ஆகாஷ் கூறினான்..
“வேறு எதில் குறைச்சல்..?” சண்டைக் கோழியாய் தலையை சிலுப்பிக் கொண்டாள் அனுராதா..
டையின் முடிச்சை சரி செய்து கொண்டே அவள் விழியோடு விழி பார்த்தான் ஆகாஷ்..
“ஏன் உனக்குத் தெரியாதா..?” அவன் பார்வை அவளைக் குற்றம் சாட்டக் கேட்டான்..
“எனக்குத் தெரியாததால்தானே உங்களைக் கேட்கிறேன்..”
“நீ எந்தக் குறையும் எனக்கு வைக்கவில்லை..?” ஆகாஷ் உள்ளே செல்லத் திரும்பியவளின் தோள் பிடித்து நிறுத்தி அவளை உஷ்ணமாய் பார்த்தபடி கேட்டான்..
அவள் மெதுவாக அவன் கைகளை விலக்கியவாறு பதில் கூறினாள்..
“நான் எதையும் மறுக்கவில்லை..”
அவள் உள்ளே போய் விட்டாள்.. ஆகாஷ் அசையாமல் நின்றான்..
‘புத்திசாலிதான்.. போட்டாளே ஒரு போடு.. நீ எதைக் கேட்டாய்.. நான் மறுத்தேன்.. என்று கேட்டாளே ஒரு கேள்வி.. உண்மைதானே.. நான் தொட்டு அவள் விலகினாளா..? நான் தான் தொட்டு முயற்சி பண்ணவே இல்லையே.. நான் அழைத்து அவள் மறுத்திருந்தால் நான் குற்றம் சொல்லலாம்.. நான் அழைக்கவே
இல்லையே.. ஆனால் எப்படித்தான் அவளை அழைப்பது..? வெறுப்பை வேலியாகக் கொண்டவள் தன் தாத்தாவின் கோரிக்கைக்காக என்னை மணந்தவள்.. இவளைப் போய் எப்படி நான் தொட்டு அழைப்பேன்..?’
டைனிங் டேபிளுக்கு வந்தான்.. அனுராதா பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தாள்.. அவனுக்கும் அவளுக்கும் மதிய உணவை கேரியர்களில் எடுத்து வைத்திருந்தாள்.. காலை டிபனை தட்டுக்களில் வேகமாய் பரிமாற ஆரம்பித்தாள்..
“ஆபிஸிற்கு எப்படிப் போவாய்..?”
“என் ஸ்கூட்டியில்..”
பால் காய்ச்சி வைக்க அனுராதாவின் பெற்றோர் வந்திருந்தபோது அவர்களின் துணையுடன் தான் தங்கியிருந்த லேடிஸ் ஹாஸ்டலுக்குச் சென்று அறையைக் காலி பண்ணி விட்டு தன் உடைமைகளை கொண்டு வந்து விட்டிருந்தாள் அனுராதா.. ஆனால் யாருக்கு வந்த விருந்தோ என்று வீட்டின் நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் கல்லூரிக்குப் போய் விட்ட ஆகாஷிற்கு அந்த விவரம் தெரியாது..
“இன்றைக்கும் அப்படித்தான் போக உத்தேசமா..?”
“இது என்ன கேள்வி..? வேறு எப்படிப் போவது..?”
“என்னுடன் வருவது..” ஆகாஷ் சப்பாத்தியை விண்டு கொண்டே பதில் கூறினான்..
“உங்களுடனா..?” அவள் யோசித்தாள்..
“என்னடி யோசனை பலமாய் இருக்கிறது.. யாரோ ஒரு மூன்றாம் மனிதன் கூப்பிட்டு விட்டது போல் இப்படி யோசிக்கிறாய்.. நேற்று வரை நீ தனியாக ஸ்கூட்டியில் போனால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.. இன்று போனால் ஏதாவது சொல்வார்கள்..”
“இன்று மட்டும் புதிதாய் என்ன வந்து விட்டது..?”
“உன் கழுத்தில் தாலி வந்து விட்டது.. தொட்டுப் பார்.. தெரியும்.. கேள்வி மட்டும் உணக்கையாய் கேட்டுவிடு.. எதை நான் மறுத்தேன் என்று.. கழுத்தில் விழுந்த தாலியையும்.. நீ என் வொய்ப் என்பதையும் மறந்து விடு..”
“அபாண்டமாய் பேசாதீங்க.. ஒரே வீட்டில் குடித்தனம் பண்ணுகிறோம்.. நான் உங்கள் வொய்ப் என்பதைத் தெரியாமலா ஒன்றாய் வாழ்கிறேன்..?”
“என்ன சொன்னாய்..? ஒன்றாய் வாழ்கிறாயா..? என்னுடனா..? அதுவும் நீயா..? குட் ஜோக்.. ஏண்டி இதுவாடி வாழ்க்கை..”
“எனக்கு இதுதான் வாழ்க்கை..”
“நீ உன்னிலேயே இரு.. என்னைப் பற்றி யோசிக்காதே.. அது சரி.. இதுதானே உன் பிறவிக்குணம்.. அதைத் தெரிந்து கொண்டே உன்னோடு வாதாடிக் கொண்டிருக்கிறேன் பார்.. நான் ஒரு மடையன்..”
“நீங்கள் ஒரு லெக்சரர்.. அதனால் ஸ்டூடன்ஸிற்கு முன் உதாரணமாய் இருக்க காலேஜிற்கு கரெக்ட்டயத்தில் போக வேண்டும்.. தெரிந்ததா..? கிளம்புங்கள்.. கிளம்புங்கள்..”
“விரட்டுகிறாயா..?”
“அதுவும் என் வேலை.. ஐ மீன்.. உங்கள் வொய்பின் வேலைதானே நானும் காலாகாலத்தில் டியூட்டிக்குப் போக வேண்டாமா..?”
அனுராதா சாப்பிட்ட தட்டுக்களை சிங்க்கில் போட்டு விட்டு வந்தாள்.. கை கழுவி துடைத்துக் கொண்டே அவளை பார்வையிட்டான் ஆகாஷ்..
இளம் மஞ்சள் நிற காட்டன் புடவையில் இருந்தாள் அவள்.. கழுத்தில் தாலிக் கொடி.. உள்ளங் கழுத்தில் ஒரு சிறு அட்டிகை.. காதுகளில் கம்பிகளால் பூப்போல் பிணைக்கப்பட்ட தோடு வலது கையில் பொன் வளையல்கள்.. இடது கையில் வாட்ச்.. நீண்ட பின்னலில் முல்லைச்சரம்..
‘தங்கப் பதுமை..!’ தாகத்துடன் அவளைப் பார்த்தான் ஆகாஷ்.. அவன் பார்வையை உணராதவளாய் தன் ஹேண்ட் பேகை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு அவனைப் பார்த்தாள் அனுராதா..
“போகலாமா..?”
ஆகாஷ் திரும்பி யாரையோ தேடுவது போல் பார்த்தான்..
“யாரைத் தேடுகிறீர்கள்..?” அவள் புரியாமல் விழித்தாள்..
“நீ யாரிடம் ‘போகலாமா’ என்று கேட்டாய்..?”
அவள் உதடு கடித்தாள்.. ‘இவன் கிண்டல் பண்ணுகிறான்..’
பதில் கூறாமல் வாசல் கதவைப் பூட்டிவிட்டு அவன் கார் கதவைத் திறந்து முன் பக்க சீட்டில் ஏறி அமர்ந்தாள்..
ஆகாஷின் உதடுகளில் திருப்தியான முறுவல் தோன்றியது.. ‘இதைப் போலவே இவள் எல்லா விதத்திலும் குறிப்பறிந்து செயல்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?’
அவன் காரைக் கிளப்பினான்.. அவளிடமிருந்து வந்த இதமான பூ வாசம் கலந்து வந்த நறுமணம் அவனை கிளர்ச்சியுறச் செய்தது.. காரில் அவன் தயாராக எடுத்து வைத்திருந்த கேசட்டைப் போட்டு டேப் ரிகார்டரை ஆன் பண்ணினான்..
என்றாவது ஒரு நாள் அவள் காரில் தனியாக தன்னிடம் மாட்டும்போது போட வேண்டும் என்று அவன் யோசித்து பதிவு பண்ணி வைத்திருந்த பாடல் ஒலித்தது..
‘நான் கவிஞனும் இல்லை..
நல்ல கலைஞனும் இல்லை..
காதலெனும் ஆசையில்லா
பொம்மையும் இல்லை..’
அனுராதா உதடு கடித்தாள்.. அவன் வேண்டுமென்று தான் இந்தப் பாடலைப் போட்டு விட்டிருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.. அவளையறியாமல் பாடலின் இனிமையும் கருத்தாழமும் அவளை ஈர்த்தது..
‘இரவு நேரம் பிறரைப் போலே
என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை என்று போனால்
ஊரென்ன சொல்லும்..’
தொடர்ந்து ஒலித்த வரிகளை அவள் கேட்கவில்லை.. பாடலில் தென்பட்ட கோரிக்கை அவள் மனதை என்னவோ செய்தது.. பட்டென்று டேப் ரிகார்டரை அணைத்து விட்டாள்.. ஆகாஷ் அவளை கேள்வியாகப் பார்த்தான்..
“ஏன் ஆப் பண்ணி விட்டாய்..?”
“நான் வேலைக்குப் போக வேண்டாமா..?”
“உன்னை உன் ஆபிஸில் விட்டு விட்டுத்தானே காலேஜ் போகப் போகிறேன்.. அப்புறம் நான் வேலைக்குப் போக வேண்டாமா என்று ஏன் கேட்கிறாய்..?”
ஆகாஷ் பாடலைப் போடப் போனான்.. அனுராதா அவன் கை பிடித்துத் தடுத்தாள்.. அவளின் ஸ்பரிசம் பட்டவுடன் ஆகாஷின் உடல் சூடேறியது.. அவளை ஓர் பார்வை பார்த்தான்.. அவள் கையை அவசரமாய் விலக்கிக் கொண்டாள்..
‘முதன் முதலாய் தொடுகிறாள்..’ ஆகாஷின் இதயம் துள்ளியது..
“இப்போது இந்தப் பாட்டு வேண்டாமே..” அவள் தடுமாறினாள்..
“வேறு எப்போது வேண்டும்..?” ஆகாஷ் சரசமாய் வினவினான்..
“அதைத்தான் பாட்டே சொல்கிறதே..” அவள் கை லேசாய் நடுங்கியது..
“என்ன சொல்கிறது..” அவனுக்கு உண்மையிலேயே புரியவில்லை..
“இரவு நேரம்ன்னு சொல்கிறதே..” அவள் முகம் குங்குமாய் சிவந்து விட்டது..
“ஏய்ய்..” ஆகாஷ் சாலையோரமாய் காரை நிறுத்தியே விட்டான்..
“என்ன இது காரைக் கிளப்புங்கள்..”
“கிளப்பலாம்.. முதலில் இதற்கு பதில் சொல்லு.. இரவு நேரமென்றால் ஓகேதானா..?”
“ப்ளீஸ்.. நான் இறங்கி ஓடியே விடுவேன்..”
“நான் விட்டால்தானே ஓடுவாய்..? நான் கேட்டதற்குப் பதில் சொன்னால்தான் காரை எடுப்பேன்..”
“ஓகே..” அவள் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள்.. தன் காதுகளையே நம்ப முடியாமல் ஆகாஷ் அவளை ஆவலுடன் பார்த்தான்..
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.