Chapter 13
நான்கு வருடங்களுக்கு முன் அவன் இதயத்தில் குடியேறிய பாவாடை தாவணி அணிந்த அந்தச் சிறுமி காரணத்தைக் கூறாமல் அவனை வெறுத்தாள்.. அவனிருக்கும் இடத்தில் தானிருக்க மாட்டேனென்று கூறி அவனை அவமானப்படுத்தி வெளியேற்றினாள்.. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவளை அவன் வளர்ந்து விட்ட இளம் பெண்ணாகச் சந்தித்தான்.. எப்போதும் அவள் குடியிருந்த இதயத்தின் சாளரத்தை அவள் மெல்லத் திறந்து எட்டிப் பார்த்தான்.. இப்போது அவளை மணக்க வேண்டிய வாக்குறுதியைக் கேட்டார் அவனது மதிப்பிற்குரிய வயோதிகர்.. அவமரியாதை பண்ணியவளை காதலித்து விட்ட காரணத்திற்காக அவர் கோரிக்கையை தட்டாமல் ஏற்றுக் கொண்டு அவள் கரம் பிடித்தான்.. வாழ்க்கையில் துணையாய் வந்த பின்னாலும்
அவளது செயல்களில் மாற்றமில்லை.. வெறுப்பைக் காட்டியவளிடம் விருப்பத்தைச் சொல்ல அவனாலும் முடியவில்லை..
இன்றோ.. ஒரு பாடல் அவன் மனதை அவளுக்கு உணர்த்தி விட்டது.. தீயாய் அன்று பார்த்தவள் தென்றலாய் நாணி முகம் மறைத்துக் கொள்கிறாள்.. மோகம் கொண்ட ஆகாஷ் அவள் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு சென்றான்.. வெட்கத்துடன் அவனைத் தள்ளி விட்டாள் அனுராதா..
“அனு.. ப்ளீஸ்..”
“முதலில் இது என்ன இடம் என்று பாருங்கள்.. மெயின் ரோடு..”
“அப்போ.. வீட்டுக்குப் போய் விடலாமா..?”
“ராமா.. உங்களுக்கு ரொமான்ஸ் பண்ண நேரம் காலம் கிடையாதா..? இத்தனை நாள் லீவ் போட்டுவிட்டு வீட்டில்தானே இருந்தேன்..?” உங்களை யார் காலேஜிற்கு ஓடச் சொன்னார்கள்..?
“ஆமாண்டி.. நான் காலேஜிலேயே குடியிருந்தது போல் பேசுகிறாள் பார்.. சாயந்திரம் வீட்டிற்கு வரவில்லையா..? இப்போது நீ சொல்லும் இரவு நேரம் தினமும் வந்து போகவில்லையா..?”
“என்னைக் கேட்டால்..? இப்போது போட்ட பாடலை அப்போது போட்டிருக்க வேண்டியதுதானே.. யார் கைப்பிடித்துத் தடுத்தார்கள்..?”
“பிளேட்டைத் திருப்பிப் போடுகிறாள் பார்.. ஏண்டி.. மனுசன் மேலே இரண்டு டிப்பர் தண்ணீரை ஊற்றிக் கொண்டு வருவதற்குள் கும்பகர்ணி மாதிரி தூங்கி விட்டு.. என் மேல் பழி போடுகிறாள்..”
“கண்களை மூடிப் படுத்திருந்தேன்.. ஏற்றுக் கொள்கிறேன்.. தூங்கினேன் என்று உங்களுக்குத் தெரியுமா..?”
“தூங்காமல் என்ன பண்ணிக் கொண்டிருந்தாய்..?”
“நீங்கள் விடிய விடிய நடை பழகுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்..”
“யு.. யு.. யு..” ஆகாஷ் அவள் காதைப் பிடித்துத் திருக்கினான்..
“ஆ.. வலிக்குது..” அவள் பொய்யாய் அலறினாள்..
அவளது அலுவலக வாசலில் இறங்கிக் கொண்டு கை அசைத்தவளுக்கு பதிலுக்கு கை அசைத்த ஆகாஷின் மனம் நிறைந்திருந்தது..
‘சின்னப் பெண்.. பாவம்.. அறியாத வயதில் தெரியாமல் பேசி விட்டாள்.. இப்போது மனைவி என்றான பின்னால் மனம் இசைந்து வாழத்தான் பிரியப்படுகிறாள்..’
நீண்ட பின்னால் ஆட அலுவலகப் படியேறியவளைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தவனை அவளும் ஓர் முறை திரும்பிப் பார்த்து மீண்டும் கை அசைக்க அவன் மனம் உல்லாச வானில் சிறகடித்தது..
‘இப்படியே இவள் திரும்பி வந்து விட்டால்தான் என்ன..?’
ஏக்கத்துடன் காரைக் கிளப்பிக் கொண்டு போனான் ஆகாஷ்..
“ஹாய் ராதா.. என்ன ஹனிமூன் டிரிப்பெல்லாம் முடிந்து விட்டதா..?” எமிலி கண்சிமிட்டினாள்..
பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே ஜாயினிங் ரிப்போர்ட் கொடுத்து விட்டுத் தன் சீட்டிற்குப் போய் விட்டாள் அனுராதா..
மனதில் தாபத்துடன் முகம் நெங்கிய ஆகாஷின் முகம் தோன்றியது.. அவள் உடல் சூடானது..
‘பேசாமல் லீவ் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய் விட்டால் தான் என்ன..?’
ஒரு கணம் தான் லீவ் சொல்லி விட்டு அதை அவனுக்கு போனில் தெரிவித்தால் எப்படிப் பரபரத்துப் போவான் என்று யோசித்தாள்..
‘ஏய்.. நிஜமாகவா சொல்கிறாய்.. ஒரு நிமிடத்தில் பறந்து கொண்டு வந்து விடுகிறேன் பார்..’
பறந்து வந்தாலும் வந்து விடுவான்.. கன்னம் சிவக்க சிரித்துக் கொண்டாள்.. பைலை எடுத்து பிரித்தாள்.. அதிலும் அவன் முகமே தெரிய,
“ஸ்வீட் ராஸ்கல்..” என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.. அவளது செல்போன் ஒலித்தது.. எடுத்து நம்பரைப் பார்த்தாள்.. அவளுடைய ‘ஸ்வீட் ராஸ்கல்’ தான்..
அவனே போனில் தெரிவது போல் உதடு கடித்துக் கொண்டாள்..
‘என்னவாம்..’
போனை எடுத்துப் பேசினாள்.. அவன் குரலில் துள்ளல் தெரிந்தது..
“காலேஜ் வாசலில் நின்று பேசுகிறேண்டி..”
“ஏன் காலேஜ் லீவா..”
“அதெல்லாமில்லை.. நான் லீவ் போட்டு விட்டு வந்துவிடவா..”
“நான் டியூட்டியில் ஜாயின் பண்ணி விட்டேனே..”
“லீவு போட்டு விட்டு வா..”
“அது முடியாதே..”
“ஏண்டி என்னை வதைக்கிறாய்..?”
“ச்ச்.. பெரிய வார்த்தையெல்லாம் சொல்லக்கூடாது.. சமர்த்தாய் இறங்கி காலேஜ் போய் கிளாஸ் எடுத்து விட்டு சாயங்காலம் சீக்கிரம் வந்து விடுவீர்களாம்.. என் தங்கமில்லை..”
“என்ன சொன்னே.. திரும்பச் சொல்லு..”
அவன் பரபரப்பு குரலில் தெரிந்தது.. அனுராதா பாகாய் உருகினாள்.. எதிரே அவனிருந்தால் அவளுக்கு நாணம் வந்திருக்கும்.. இப்போது போனில் பேசுவதால் தடையில்லாமல் அவளால் பேச முடிந்தது..
“என்ன சொல்வதாம்..”
“நீ இப்போது சொன்னதைச் சொல்லுடி..”
“மறந்து விட்டேனே டியர்..”
“என்னவென்று சொன்னாய்..”
“நீங்களென்ன செவிடா மை ஸ்வீட் ஹார்ட்..?”
“அனு.. ஐ லவ் யூ டி..”
“ஐ லவ் யூ ஸோ மச்.. ஆகாஷ்..”
“எனக்கு இது போதும் அனு.. ஈவினிங் சீக்கிரமே வந்து விடுவேன்.. ரெடியாய் இரு..”
அவன் என்னவோ அவளது அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு தயாராய் இருக்க வேண்டுமென்ற அர்த்தத்தில் தான் சொன்னான்.. ஆனால் அவளுக்கு கட்டவிழ்ந்த கன்றாக உற்சாகம் தோன்றியிருந்தது.. எனவே, “எதற்கு..?” என்றாள் குறும்பாக..
மறுமுனை ஓர் கணம் மௌனமானது..
“ஏய்ய்.. ஏண்டி மனுசனை லீவும் போடவிட மாட்டேன் என்கிறாய்.. வேலையும் பார்க்க விட மாட்டேன் என்கிறாய்.. உனக்கு இப்படிக்கூடப் பேசத் தெரியுமா..?”
“போதும் சார்.. முகத்தில் வழியும் ஜொள்ளை துடைத்துக் கொண்டு போய் வேலையைப் பாருங்கள்..”
“யாரிடம் ஜொள்ளு விடுகிறேன் என் பெண்டாட்டியிடம் தானே.. இந்த ரோட்டையே கழுவி விடும் அளவுக்கு ஜொள் விடுவேன் தெரியுமா..?”
அவள் சிரித்துக் கொண்டே போனை அணைத்து விட்டாள்.. அன்று முழுவதும் அவள் மனம் உல்லாசத்தில் மிதந்தது.. வாய்க்குள் ஏதாவது ஓர் பாடலை ஹம் பண்ணிக் கொண்டே வேலையில் ஈடுபட்டிருந்தாள்.. மாலையானதும் அவசரமாய் பாத்ரூம் சென்று முகம் கழுவி தலையை சீர் செய்து கொண்டு கண்ணாடியைப் பார்த்துக் கொண்டாள்.
‘நன்றாக இருக்கிறேனா..?’
அவள் நன்றாக இருக்கிறாள் என்பதை அவளைவிட ஆகாஷ் நன்கு அறிவான் என்பதை அறியாத அனுராதா கவலைப்பட்டுக் கொண்டாள்.. கைப்பையை எடுத்துக் கொண்டு அலவலக வாசலுக்கு வந்தவள் கைக்கடிகாரத்தில் மணி பார்த்துக் கொண்டாள்..
‘காலையில் அப்படிப் பறக்கத் தெரிகிறது.. சாயந்திரமானால் ஓடி வரவேண்டாமா.. இவ்வளவு நேரமா..?’
பொறுமையிழந்தவளாய் சாலையைப் பார்த்தாள்.. தூரத்தில் அவனது கார் தெரிந்தது.. அவள் கண்களில் ஒளிவந்தது.. உடலின் அனைத்து செல்களும் பரபரத்தன.. தாளமாட்டாமல் உதடு கடித்தாள்..
‘வந்து விட்டான்..’
கார் அவளருகில் வந்து நின்றது.. ஆவலாக காரின் முன் பக்கம் ஓடிக் கார் கதவில் கை வைத்தவள் திகைத்து நின்றாள்..
காரில் ஆகாஷின் அருகே ஓர் அழகிய இளம் பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள்..
ஆகாஷ் காரை விட்டிறங்காமல் அவளருகே சாய்ந்து அனுராதவை சுட்டிக் காட்டி,
“ஷி இஸ் மை வொய்ப் அனுராதா..” என்றான்..
அவளும் சீட்டை விட்டிறங்காமல்..
“கிளாட் டு மீட் யு..” என்றாள்..
“அனு.. காரில் ஏறு..” என்றான் ஆகாஷ்..
பொங்கி வந்த உணர்வுகள் பொசுங்கிப் போய்விட ஒரு ஜடம் போல் உணர்ச்சிகளற்ற மரக்கட்டை போல் காரின் பின் பக்க சீட்டில் ஏறிக் கொண்டாள் அனுராதா..
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.