Chapter 14

0Shares

ஆகாஷின் அருகே அமர்ந்திருந்த இளம் பெண் கூந்தலை அழகாக கொண்டையிட்டிருந்தாள்.. காதோரமாய் ஒற்றை ரோஜா ஒன்றை செருகி இருந்தாள்.. அவள் மேல் இனிய நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது.. வார்த்தைக்கு வார்த்தை குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.. ஆகாஷ், அனுராதா என்ற ஒருத்தி இருப்பதையே மறந்தவனாய் அவளுடன் வெகு சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டு வந்தான்..

“அப்புறம்.. எப்படித்தான் அந்த மேட்டரை ஹேண்டில் பண்ணினீங்க..?” என்று ஆகாஷ் வினவ,

“வேறு என்ன செய்வது..? அவனிடம் பேசித்தான் சரி பண்ணினேன்.. ஆக்சுவலி.. ஹி இஸ் எ வெரிகுட் பாய்.. பட் ஏதோ ஒரு இம்ப்ரெஸ்ஸன் என் மேல் விழுந்து விட்டது.. நல்லது கெட்டதை எடுத்துச் சொன்னதும் சரியென்று ஏற்றுக் கொண்டு விட்டான்..” என்று அவள் பதில் கூறினாள்..

“சொல்கிறவங்க சொன்னால் கேட்டுக் கொள்ளத் தானே செய்வார்கள்..” என்று அவளிடம் கண்சிமிட்டிய ஆகாஷ்..

“டோண்ட் மிஸ்டேக் மி..” என்று வேறு கூறினான்..

“இது ஒரு வார்த்தையை ஆண்கள் நீங்கள் எல்லோரும் கண்டுபிடித்து வைத்திருக்கிறீர்கள்.. இசகு பிசகாய் எதையாவது பேசி வைக்க வேண்டியது.. அப்புறம் டோன்ட் மிஸ்டேக் மி என்று சொல்வது.. கெட்டிக் காரர்கள்..” அவள் உதடு பிதுக்கினாள்..

“பட் ஒன் திங் மிஸ் சொப்னா.. நீங்கள் இம்ப்ரெஸ் பண்ணும் அழகோடுதான் இருக்கிறீர்கள்..” ஆகாஷ் புகழ்ந்தான்..

“கேலி பண்ணுகிறீர்கள் என்று தெரிகிறது.. ஒரு வகையான ஈர்ப்பு மிஸ்டர் ஆகாஷ்.. நமக்கு ஒருவரை அதிகமாய் பிடித்திருக்கும்.. உடனே அதைக் காதல் என்று சொல்லி விடுவோம்..” அவள் இலகுவாய் கூறினான்..

“அதிகம் பிடித்திருந்தால் அது காதல் தானே..” ஆகாஷ் தன் முன்னாலிருந்த கண்ணாடி வழி பின் சீட்டிலிருந்த அனுராதாவைப் பருகுவது போல் பார்த்துக் கொண்டே சொப்னாவிடம் கூறினான்..

வெறுப்பாய் ஜன்னல் வழி வெளியே பார்த்துக் கொண்டு வந்த அனுராதா அதைக் கவனிக்கவில்லை.. அவள் மனதில் சூறாவளி சுழன்று கொண்டிருந்தது..

“அதற்காக ஒரு ஸ்டூடண்ட் லெக்சரர் மேல் காதல் கொள்வதா..?” சொப்னா கோபமாய் கேட்டாள்..

“அவன் மனதில் காதல் வந்து விட்டது.. அதற்கு மேல் அவன் என்ன செய்வான் பாவம்.. உங்களிடம் ஒன்று சொல்லவா சொப்னா.. என் சின்ன வயதில் போர்த் ஸ்டாண்டர்டு என்று நினைக்கிறேன்.. எனக்கு இங்கிலீஷ் கிளாஸ் எடுக்க ரோஸி என்று ஆங்கிலோ இண்டியன் டீச்சர் ஒருத்தங்க வருவாங்க.. ரொம்ப ஸாப்ட் லேடி.. எனக்கு அவங்களை மிகவும் பிடிக்கும்.. தினமும் அவங்களுக்கு ரோஸ் கொண்டு போய் கொடுப்பேன்.. இந்தப் பையனுக்கு உங்கள் மேலிருக்கும் ஈர்ப்பும் அது போலதான்..”

ஆகாஷ் அந்த நாள் நினைவில் ஆழ்ந்து போய் கூறினான்..

அனுராதா பல்லைக் கடித்துக் கொண்டாள்.. ஒரு நாள் ஒரு பொழுதாவது இந்தக் கதைகளையெல்லாம் 

இவன் தன்னிடம் சொல்லியிருப்பானா..? இவளிடம் எப்படியெல்லாம் இழைகிறான்..

“எல்லாம் சரிதான் சார்.. நீங்கள் ரோஸ் கொடுக்கும் போது நீங்கள் சைல்ட்.. ரோஸி மிஸ் உங்கள் அம்மா ஏஜில் இருந்திருப்பார்கள்.. இவன் காலேஜ் ஸ்டூடன்ட்.. நான் அன்மேரிட் வுமன்.. இதை எப்படி நான் அலோவ் பண்ண முடியும்..?” சொப்னா தலையில் அடித்துக் கொண்டாள்..

“ஈஸி.. ஈஸி.. எத்தனை தடவைதான் தலையில் அடித்துக் கொள்வீர்கள்.. தலை வீங்கி விடப் போகிறது..” ஆகாஷ் அக்கறையாய் கூற,

‘ஏன் நீ போய் தடவி விட வேண்டியதுதானே..’ என்று அனுராதா கடுப்புடன் நினைத்துக் கொண்டாள்..

கார் அவர்கள் வீட்டு வாசலில் போய் நின்றது.. ஆகாஷ்.. “அனு இறங்கிப் போய் கேட்டைத் திறந்து விடு..” என்றதும் அனுராதாவின் மேனி பற்றியெரிந்தது..

‘இவன் பக்கத்தில் ஒருத்தியிடம் கொஞ்சிப் பேசிக் கொண்டு வருவானாம்.. நான் பின் சீட்டில் ஒடுங்கி உட்கார்ந்து விட்டு இப்போது இறங்கி கேட்டைத் திறந்து விட வேண்டுமாம்.. இவன் என்னை என்ன வேலைக்காரி யென்று நினைத்து விட்டானா..?’

கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இறங்கி கேட்டைத் திறந்து விட்டாள்.. அப்படியே கதவைத் திறந்து கொண்டு வீட்டிற்குள் போய் விட்டாள்..

மாடியறைக்குள் சென்றவன் ஹேன்ட்பேகை தூக்கியெறிந்து விட்டு கட்டிலில் விழுந்தாள்.. கதவு திறக்கும் சத்தம் கேட்டது.. ஆகாஷ் உள்ளே வந்தான்..

“வாட் இஸ் திஸ் அனு.. வீட்டிற்கு கெஸ்ட் வந்திருக்காங்க.. நீ இங்கே வந்து படுத்துக் கொண்டிருக்கிறாய்.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை உனக்கு வா.. வந்து டிபன் காபி தயார் பண்ணு.. கமான்.. கமான்.. கமான்..”

‘நான் என்ன ரேஸ் குதிரையா..? நீ விரட்ட விரட்ட ஓடுவதற்கு வேறு ஆளைப்பார்.. அவள் உன்னுடன் உட்கார்ந்து பல்லைக் காட்டிப் பேசிக் கொண்டிருப்பாள்.. நான் அடுப்படியில் அவளுக்கு டிபன் காபி செய்து கொண்டிருக்க வேண்டும்.. எவ்வளவு அராஜகம் பண்ணுகிறாய்..’

மனதிற்குள் பொறுமிக் கொண்டே எழுந்தவள் பேசாமல் சமையலறைக்குப் போய்விட்டாள்.. பத்து நிமிடங்களில் மணக்க மணக்க ரவா கேசரியும், வடையும் செய்து வைத்துவிட்டு காபி போட ஆரம்பித்தாள்..

“ஹாலுக்கு வாசனை வருதுன்னு சொப்னா சொல்கிறாங்க.. பரவாயில்லை.. அவங்களை அசத்திட்டே..” ஆகாஷ் உள்ளே வந்து பாராட்டுதலாய் கூறினான்..

‘உன்னிடம் வழியும் பெண்ணரசிகளுக்கு சமைத்துப் போட்டு பெயர் வாங்கத்தான் நான் பிறந்திருக்கிறேன்..’

அனுராதா பதில் கூறாமல் தட்டுக்களில் வடையையும் கேசரியையும் பரிமாறி அவன் பக்கம் நகர்த்தினாள்..

“ஏன் நீயே கொண்டு வந்து கொடுக்கலாமே.. சொப்னாவிற்கு சந்தோசமாக இருக்குமே..” ஆகாஷ் யோசனை கூறினான்..

‘பேசாமல் எடுத்துக் கொண்டு போ.. இல்லாவிட்டால் எல்லாவற்றையும் குப்பைக் கூடையில் கொட்டி விடுவேன்.’

தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு காபி கலக்குவது போல் குனிந்து கொண்டாள்..

“ஓ.. நீ காபி கலக்குகிறாயா..? அப்போ சரி.. நானே எடுத்துக் கொண்டு போகிறேன்..” உதவி செய்யும் பாவனையில் கூறிக் கொண்டு அவன் டிபன் டிரேயை தூக்கிக் கொண்டு போனான்..

அனுராதா காபியை கோப்பைகளில் ஊற்றி வைத்து விட்டுச் சமையல் மேடையை சுத்தம் பண்ணி பாத்திரங்களை சின்க்கில் போட்டுக் கொண்டிருந்தாள்.. ஆகாஷ் காலி டிபன் தட்டுக்களோடு திரும்பி வந்தான்..

“காபியை ஊற்றி வைத்து விட்டாயா..? சரி.. வேலை தான் முடிந்து விட்டதே.. நீயும் முன் ஹாலுக்கு வாயேன்.. பேசிக் கொண்டிருக்கலாம்..” ஆகாஷ் கூறிக் கொண்டிருக்கும் போதே அது காதில் விழுகாதது போல் பின்பக்க கதவைத் திறந்து கொண்டு காய வைத்திருந்த துணிகளை எடுக்கப் போய் விட்டாள்..

அவளது ஒதுக்கம் ஆகாஷின் கவனத்திலேயே படவில்லை.. அவன் காபிக் கோப்பைகளை டிரேயில் அடுக்கிக் கொண்டு ஹாலுக்குப் போய்விட்டான்..

பின்பக்கம் நின்றிருந்த அனுராதாவிற்கு துக்கம் பொங்கியது.. எப்போதும் இதுதான் அவள் விதியா..? கடைசிப் பெண்ணென்று செல்லமாய் வளர்ந்தவள்.. இரண்டாம் முறையாக ஆகாஷால் அவமானப்படுத்தப் படுகிறாள்..

“அனு.. அனு.. இங்கே இருக்கிறாயா.. கமான்.. கமான்.. சொப்னா கிளம்பிக் கொண்டிருக்கிறாங்க.. உன்கிட்ட சொல்லிட்டுப் போகணுமாம்..” ஆகாஷ் அழைத்துக் கொண்டே வந்தான்..

‘இரண்டு மணி நேரமாய் கடலை போட்டு முடித்து விட்டு ஒரு வழியாய் கிளம்பிவிட்டாளா..?’

அனுராதா முன் ஹாலுக்கு வந்தாள்.. அந்த சொப்னா ஒயிலாய் எழுந்து நின்றாள்..

“நான் கிளம்புகிறேன் மிஸஸ் ஆகாஷ்..”

அனுராதா மௌனமாய் தலை அசைத்தாள்..

“உங்க டிபன்.. காபி பிரமாதம்..”

“ம்ம்..”

“ஆகாஷ்.. உங்க வொய்ப் எவ்வளவு அமைதியாய் இருக்கிறாங்க.. யு ஆர் வெரி லக்கி..”

“இவளா அமைதி..? என்னை முதன் முதலாய் பார்த்தபோது என்னமாய் என்னை ராகிங் பண்ணினாள் தெரியுமா..? ஹா.. ஹா..”

“ஈஸிட்..? என்ன மிஸஸ் ஆகாஷ்.. இதெல்லாம் உண்மையா..?” சொப்னா லேசாய் நகர்ந்து ஆகாஷின் அருகே நின்று கொண்டு வினவினாள்..

“ஒரே தலைவலி..” என்றாள் அனுராதா.. அவள் முகம் ஒரு விதமாய் மாறியிருந்தது.. ஆகாஷிற்கு அன்னலட்சுமி புரத்தில் அவனை வெளியேற்றியபோது இருந்த அனு ராதாவின் முகம் நினைவில் வந்தது..

0Shares

Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link