Chapter 15
அப்போதுதான் அது உறைத்தது ஆகாஷிற்கு..
‘ஒரே தலைவலியாய் போயிற்று உன்னோடு..’ என்று சொல்வது போல் அல்லவா அனுராதாவின் குரலும் வார்த்தைகளும் இருக்கின்றன..?
‘ஏன் இவள் இப்படிச் செய்கிறாள்..? வீட்டுக்கு வரும் விருந்தாளியிடம் பேசும் முறையா இது..?’
ஆகாஷிற்கு ஒன்று தெள்ளத் தெளிவாய் விளங்கியது.. அனுராதாவிற்கு சொப்னாவைப் பிடிக்க வில்லை.. அதனால்தான் வேண்டுமென்றே சொப்னாவுடன் அமர்ந்து உரையாடுவதை தவிர்த்திருக்கிறாள்.. இப்போது இப்படி ஒரு கடுமையான வார்த்தையை பிரயோகிக்கிறாள்..
சொப்னாவிற்கு இது புரியாமல் இருக்க வேண்டுமே என்று அவன் கவலைப்பட்டான்.. அவள் பாவம்.. அவளது வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் அவள் மீது காட்டிய அதீதமான அன்பைக் கவனிக்காமல் சிரித்துக் கொண்டே பழகிவிட.. அது இப்போது காதலாக மாறிவிட்டதால் நொந்து போயிருக்கிறாள்.. ஒரு வழியாய் அந்த மாணவனுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைத்ததை கூறிக் கொண்டிருந்தாள்.. ஆகாஷ் தன் புது மனைவியைப் பற்றி பேச்சினூடே சொல்ல.. அவனது காதல் மனைவியைப் பார்க்கும் ஆவலில் வீட்டுக்கு வருகிறேனென்று சொல்லிக் கூடவே கிளம்பி வந்து விட்டாள்.. அவளிடம் இப்படியா பேசுவது..?
அன்றும் அப்படித்தான்.. அன்னலட்சுமிபுரத்தில் மிகக் கடுமையான மொழிகளைக் கொட்டினாள்.. அன்று அவள் நாவினால் சுட்ட தீக்காயத்தின் வடு இன்றும் மாறாமல் மறையாமல் அப்படியே அல்லவா நெஞ்சில் நிற்கின்றது..? இன்று காலை இன்முகம் காட்டி அவனை வழியனுப்பி விட்டு இப்போது வன்முகம் காட்டினால் என்ன அர்த்தம்..?
நல்லவேளையாக சொப்னா சுருதி பேதத்தை உணர வில்லை.. அனுராதாவின் வார்த்தைகளின் மறைபொருள் அவளது அறிவிற்கு எட்டவேயில்லை.. எனவே..
“அடடே.. தலைவலியா.. டேப்லெட் போட்டுக் கொண்டு ரெஸ்ட் எடுங்கள்..” என்று உண்மையான கவலையுடன் கூறினாள்..
“இந்த வீட்டில் நானெங்கே ரெஸ்ட் எடுப்பது..?” அனுராதா முகம் திரும்பிக் கொண்டாள்.. அவள் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது..
“ஏன்.. பெட்ரூமில்தான் ரெஸ்ட் எடுக்க வேண்டும்.. ஆனால் அதுதான் உங்களுக்கு கஷ்டமான விசயம் போல இருக்கிறது.. ஆகாஷ் ரெஸ்ட் எடுக்க விட மாட்டாரே..”
சொப்னா குலுங்கிச் சிரிக்க அனுராதா கோபத்தை அடக்க வழி தெரியாமல் தவித்தாள்..
‘பேசாமல் போய்விடு.. நான் பேச ஆரம்பித்தால் நீ தாங்கமாட்டாய்.. பெட்ரூம் என்பது கணவன், மனைவி இருவரின் அந்தரங்க இடம்.. அதைப் பற்றி பேசிச் சிரிக்கும் உனக்கு நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாதா..? பாங்காய் உடை உடுத்தத் தெரிந்தால் மட்டும் போதாது.. பண்பாடும் தெரிய வேண்டும்..’
நல்லவேளையாக ஆகாஷ் அவசரமாய் குறுக்கிட்டு சொப்னாவை மேலே பேசவிடாமல் அழைத்துச் சென்று விட்டான்..
“அனு.. சொப்னாவை அவங்க வீட்டில் டிராப் பண்ணிவிட்டு வருகிறேன்.. நீ கதவைப் பூட்டிக் கொள்..”
‘ஏன் அவளைக் கையைப் பிடித்து வீட்டுக்கு கூட்டிப் போய் விட்டு விட்டுத்தான் வரவேண்டுமா..? அவளாகப் போய் கொள்ள மாட்டாளா..?’
காரின் முன்பக்கக் கதவை சொப்னாவிற்கு ஆகாஷ் திறந்து விடுவதைக் கண்ட அனுராதாவின் மனம் வலித்தது..
‘இன்னும் நீ எவ்வாறெல்லாம் என் மனம் உடைக்கக் காத்திருக்கிறாய்..? இதற்காகவா என்னைத் தேடி வந்து என் மன அமைதியைக் குலைத்தாய்..?’
மௌனமாய் மனம் அழுக கதவைச் சாத்திவிட்டு உள்ளே சென்று பூஜையறையில் அமர்ந்து கடவுள் முன் கண்ணீர் விட்டாள் அனுராதா.. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ.. வாசல் அழைப்பு மணி விடாமல் ஒலிக்க பதறிப்போய் எழுந்து வாசல் கதவைத் திறந்தாள்..
ஆகாஷ் அவளை சிவந்த விழிகளால் உறுத்துப் பார்த்த வண்ணம் உள்ளே நுழைந்தான்..
“எவ்வளவு நேரமாய் காலிங்பெல்லை அழுத்து கிறேன்.. கதவைத் திறக்காமல் எங்கே போனாய்..? அலட்சியமா..?”
‘ஆரம்பித்து விட்டானா..?’ என்றிருந்தது அனுராதாவிற்கு.. இவனுக்கு இவன் செய்வது மட்டும் நியாயம்.. அனுராதா செய்வது எல்லாமே குற்றம்..
பதில் சொல்லாமல் கதவை அடைத்துவிட்டு உள்ளே சென்றாள் அனுராதா.. ஆகாஷ் பல்லைக் கடித்தான்.
“ஏய் நில்லுடி.. நான் ஒருவன் இங்கு நின்று கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.. நீ இவனுக்கென்ன கணக்கென்று பதில் சொல்லாமல் அலட்சியமாய் உள்ளே போகிறாய்.. என்னடி திமிரா..?”
பொறுத்தது போதுமென்று அனுராதா பொங்கி வெடித்தாள்..
“ஆமாம்.. நீங்கள் போட்ட சோற்றை உட்கார்ந்து சாப்பிட்டதால் வந்த திமிர்.. வார்த்தைக்கு வார்த்தை என்னைத் திமிர் பிடித்தவள்ன்னு பட்டம் கட்டும் தகுதி நிச்சயமாய் உங்களுக்கு கிடையாது..”
“வாட் டு யூ மீன்..?”
“ஐ மீன் வாட் ஐ ஸே.. உலக மகாத்திமிர் பிடித்தவரென்ற பட்டத்தை உங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும்.. நீங்கள் என்னைத் திமிர் பிடித்தவளென்று சொல்கிறீர்களா..?”
“எனக்குத் திமிரா..? குட் ஜோக்.. நீ ஒருத்தி தான் இப்படிச் சொல்கிறாய்.. வேறு யாரும் இப்படி ஓர் வார்த்தையை என்னைப் பார்த்துச் சொன்னதில்லை..”
“எப்படிச் சொல்வார்கள்.. உங்களிடம் வழிகின்ற பெண்ணரசிகள் வாய் திறந்து உங்களைப் போய் திமிர் பிடித்தவரென்று சொல்வார்களா..? நான்தான் சொல்வேன்..”
“அப்படி என்னிடம் யார் யார் வழிந்தது..”
“அன்று ராகினி.. அதன் பின்னால் யார் யாரோ..”
“ஓஹோ.. அப்படியானால் நீ என்னிடம் வழியவேயில்லை..?”
ஆகாஷ் அவளையே பார்த்துக் கொண்டு கேட்டான்.. அனுராதா உதடுகடித்துத் திரும்பிக் கொண்டாள்..
‘வழியவே இல்லையா.. நான் உன்னைப் பார்த்து மயங்கவே இல்லையா..? மயங்கினேனே..’ அவள் உயிர் தவித்தது.. நெஞ்சம் ஓர் திரைப்படப் பாடலை நினைத்துப் பார்த்தது..
‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்..
உன்னை விரும்பினேன் உயிரே..
தினம் தினம் உன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே..
இங்கு நீயில்லாத வாழ்வும் வாழ்வாமோ..’
அனுராதா பதில் சொல்லாமல் உள்ளே செல்லப் போனாள்.. ஆகாஷ் அவள் முன்னால் இரு கைகளையும் விரித்து மறைத்து நின்றான்..
“இதற்காகத்தான் இதுவரை நீயும் நானும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.. ‘இவனென்ன கேட்பது.. நானென்ன பதில் சொல்வது..’ என்ற அலட்சியத்தை விடு.. நீ என்னிடம் மயங்கவில்லையா..?”
அனுராதா அதை விட்டுவிட்டு வேறு கதைக்குத் தாவினாள்..
“யார் பேசினாலும் அவர்களிடம் வழிந்து கொண்டு பேசுபவர்கள்.. எவர் கூப்பிட்டாலும் அவர்கள் பின்னாலேயே போகிறவர்கள் எல்லாம் இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது..”
“என்ன சொன்னாய்.. இதே போல்தான் நம் கல்யாணத்திற்கு மறுநாள் ஆனந்தியிடமும் கூறினாய்.. யார் கூப்பிட்டாலும் உன் அண்ணன் பின்னாலேயே போகிறவர்தானென்று.. அப்படி யார் பின்னால் போனேன்..? எவளிடம் வழிந்தேன்.. என்னிடம் நீ சொல்லியே தீர வேண்டும்..”
“அப்படியென்ன கட்டாயம்..?”
“கட்டாயம் தாண்டி.. கட்டாயம் தான்.. மனிதனை கலங்கடிக்கவென்று பிறந்து வந்திருக்கிறாய்.. உன்னை என்று முதன் முதலாய் கண்டேனோ.. அன்று என் நிம்மதி பறிபோய் விட்டதடி.. உன்னுடன் போராடிப் போராடியே என் மீதி வாழ்நாள் எல்லாம் வீணாகக் கழியப் போகிறது.. எப்போது நீ சிரிப்பாய்.. எப்போது முறைப்பாய் என்றே எனக்குத் தெரியவில்லையடி.. ஆழ்கடலின் ஆழத்தைக் கூடக் கண்டுபிடித்து விடலாம்.. ஆனால் உன் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க ஒருவராலும் முடியாது.. என்னாலும் முடியவில்லைடி..” ஆகாஷ் மூச்சு வாங்கினான்..
அனுராதா எல்லையற்ற துயரத்துடன் தொண்டைமானை நினைத்துக் கொண்டாள்..
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.